Advertisement

சல்மா அறையினுள் வேகமாக நுழைய, பின்னால் வந்த கரீமா கதவை பூட்டினாள்.

“என்னால இனிமே தாங்கமுடியாது அக்கா. மாளிகையோட சாவி அவ கைல கொடுக்கறான்னா என்ன அர்த்தம்? ம்.. அவ ஆர்யனை முழுசா மயக்கிட்டாளா? ம்ஹீம்.. அவளுக்கு தெரியாதுல ஆர்யன் தான் அவளை ஜெயிலுக்கு போக வச்சான்னு. தெரிஞ்சா என்ன செய்வா? இந்த நன்றிக்கடனும், கருணையும் எங்க போகும்னு நானும் பார்க்கறேன்”

“முட்டாள் மாதிரி பேசாதே சல்மா! யோசிக்காம நாம எதும் செய்ய கூடாது. அது நமக்கு ஆபத்து”

“எதுவரைக்கும் யோசிக்கணும் அக்கா? அந்த பட்டிக்காட்டு ருஹானா இந்த மாளிகையோட எஜமானி ஆகற வரைக்குமா?”

“இப்படி கத்தாதே! உன்னை அமைதியா இருக்க சொல்லி சொல்லி எனக்கு அலுத்து போச்சி. போ.. நேரா போ.. ருஹானாட்ட போய் சொல்லு. உனக்கு ஆர்யன் தான் குழி பறிச்சான்னு. ஆதாரம் இல்லாம அப்படி சொல்றது தற்கொலைக்கு சமம். நம்மை உயிரோட புதைச்சிடுவான் ஆர்யன்”

“சரி, அப்போ ஆதாரம் நான் தேடி கொண்டு வரேன்”

   ——-

ருஹானா சோப்பு கரைசலை குச்சியில் தொட்டு எடுத்து ஊத அது பலவித வண்ணங்களான நீர்க்குமிழிகளாக பறந்தன. இவான் அவளுக்கு முன்னே நின்று ஒவ்வொரு குமிழியையும் பிடிக்க குதித்துக் கொண்டிருந்தான்.

“சித்தி! இன்னும் விடுங்க…  இங்க பாருங்க. நான் பிடிச்சிட்டேன்” எனும் அவனது உற்சாக குரல், வீட்டின் முன்னே இருக்கும் சிறிய குளம் அருகே ஆர்யனையும் வர வைத்தது.

முன்னே செயற்கை நீருற்று பொங்க ருஹானா முகத்திலும் சிரிப்பு பொங்க, ஆர்யன் தோட்டத்தில் விளையாடும் இருவரையும் ரசித்துக்கொண்டே வீட்டு வாசலிலேயே நின்றான். அவளும் நீல ஸ்கெர்ட்டும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தாள். கண்ணுக்கு இதமாக இருந்தாள்.

“எல்லாத்தையும் பிடிச்சிட்டியா, அன்பே? இப்போ பார் பபுள் மழை பொழிய போகுது. ரெடியா இரு”

இவான் பாய்ந்து பாய்ந்து குமிழிகளை பிடித்துக்கொண்டே “விட்டுட்டே இருங்க சித்தி. நிறுத்தாதீங்க” என்றான்.

ருஹானாவிடம் எப்படியும் பேசிவிட வேண்டும் என முடிவெடுத்த ஆர்யன் அதற்கான சந்தர்ப்பம் உருவாக்க முயன்றான்.

“செல்லம்! இது முடிஞ்சி போச்சி. நான் உள்ளே போய் நிரப்பிட்டு வரேன். நீ இங்க விளையாடிட்டு இரு” என ருஹானா சொல்ல “சித்தி! நான் போய் எடுத்துட்டு வரேன்” என இவான் அந்த குடுவையை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு ஓடினான்.

வழியில் நின்ற சித்தப்பாவிடம் “சித்தப்பா! நான் இதை நிரப்ப போறேன்” என சத்தமாக சொல்லிக்கொண்டே உள்ளே சென்றான். அப்போது தான் ஆர்யன் அங்கே நிற்பதை ருஹானா பார்த்தாள்.

நீருற்று குளத்தை சுற்றி அவள் அருகே வந்த ஆர்யன் “நீ இலகுவா இங்க இருப்பே ன்னு தான் நான் மாளிகையோட சாவியை உனக்கு கொடுத்தேன். ஆனா உனக்கு அப்படி இல்ல போல. உன் கண்ணுல கண்ணீர் வந்துடுச்சே! நான் ஏதாவது தப்பா செஞ்சிட்டேனா?” என கவலையுடன் கேட்டான்.

“இல்ல.. கண்டிப்பா இல்ல. உண்மையில எனக்கு சந்தோசமா இருந்தது” என அவள் அவனின் கவலையை போக்க, ஆர்யனின் சுருங்கிய நெற்றி விரிந்தது.

“நான் என் அம்மாவை பார்க்கவே இல்ல. அப்புறம் என் அக்காவை ஆறு வருஷமா பார்க்கல” என அவள் ஆரம்பிக்க அவன் முகம் இறுகினான். “உங்களுக்கே தெரியும்… அப்புறம் அவளோட மரணப்படுக்கையில தான் பார்த்தேன். அப்பாவையும் கல்லறைக்கு அனுப்பிட்டு என் வீட்டையும் நான் மூடிட்டேன். இவானை தேடி இங்க வந்திட்டேன்”

அவள் துக்கம் தன்னுடைய துக்கமாக அவன் உணர அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நின்றான்.

“நீங்க சாவியை கொடுத்ததும் எனக்கும் சொந்தமான ஒரு இடம் இருக்குன்னு எனக்கு நிம்மதியாச்சி. ஒரு வீட்டோட நெருக்கமா இருக்குறது மனசுக்கு நல்லா இருக்கு… முக்கியமா இவான் இருக்குற வீடு கூட”

ஆனந்த கண்ணீரோடு அவள் சொன்னதை கேட்டவனுக்கு தான் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்ததில் மன நிறைவு ஏற்பட்டது. தன் வீட்டு தொடர்பை பற்றி அவள் சொன்னதை பெருமையாகவும் உணர்ந்தான்.

      —–

வெளி வராண்டாவில் ஆர்யன் யோசனையுடன் அமர்ந்திருப்பதை பார்த்த அம்ஜத் அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

அண்ணனை திரும்பி பார்த்த ஆர்யன் “எப்படி இருக்கீங்க அண்ணா?” என கேட்டான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன். நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“ஒன்னுமில்ல அண்ணா”

“உன் கண்ணு எங்கயோ பார்க்குது. நீ இங்க இல்லவே இல்ல. என்ன பிரச்சனை?”

“ஒரு பிரச்சனையும் இல்ல அண்ணா”

“இருக்கு இருக்கு. சொல்லு என்கிட்டே. பிரச்சனையை பகிர்ந்துகிட்டா தீர்வு கிடைக்கும். சொல்லு ஆர்யன்”

“நான் ஒரு தப்பு செஞ்சிட்டேன் அண்ணா”

“என்ன மாதிரியான தப்பு?”

அம்ஜத் ஆர்யன் முகத்தையே பார்க்க சற்று நேரம் அமைதி.

“ஒருத்தங்க கிட்டே அநியாயமா நடந்துகிட்டேன். இப்போ அதை அவங்கட்ட சொல்லித்தான் ஆகணும். என்னால மறைக்க முடியல. ஆனா அதை கேட்டா அவங்க ரொம்ப கோபப்படுவாங்க. நான் போய் இப்படி மோசமா செஞ்சிட்டேனேன்னு அதிகமா வருத்தப்படுவாங்க”

“நம்ம கிட்டே.. ஒரு.. ஒரு.. பழைய ரேடியோ இருந்தது. அப்பா வாங்கினது. அவருக்கு அது ரொம்ப பிடித்தமானது. உனக்கு அது நியாபகம் இருக்கா, ஆர்யன்?”

“நான் உடைச்சிட்டேனே, அந்த ரேடியோ தானே?”

“ஆமா.. ஆமா.. அதே தான்.. நீ உடைச்சிட்டே.. அப்புறம் பயந்திட்டே.. அப்பா உன்மேல கோபப்படுவார்னு”

“அப்பாட்ட நீங்க உடைச்சதா சொன்னீங்க”

“ஆமா.. ஆனா நீ என்ன சொன்னே? இல்லப்பா.. அதை அம்ஜத் அண்ணன் உடைக்கல. நான் தான் உடைச்சேன்… நீ சொன்னே. அப்பா கோபப்படுவார், திட்டுவார்ன்னு தெரிஞ்சும் நீ பொய் சொல்லல. தப்பை ஒத்துக்கிட்டே”

ஆர்யனின் உள்ளம் தெளிவடைந்தது. யோசனையுடன் அண்ணனை பார்த்தான்.

“ஆர்யன் எப்பவும் உண்மையை தான் சொல்லுவான்… எப்பவும்..”

அண்ணன் காட்டிய வழி ஆர்யனுக்கு புரிந்தது. அதன்படியே நடப்பது என தீர்மானித்தான்.

“அப்பா உன்னை திட்டல… மன்னிச்சிட்டார். நீ உண்மை சொன்னது நல்ல செயல்ன்னு பாராட்டினார். வெல்டன் மகனே! எப்பவும் இப்படித்தான் உண்மை பேசணும்னு தட்டி கொடுத்தார்”

ஆர்யன் பலமுறை தலையாட்டினான்.

“ஆர்யன் நினைச்சாலும், முயற்சி செய்தாலும் அவனுக்கு பொய் சொல்ல வராது. அவன் எப்பவும் சத்தியம் தான் பேசுவான். ஆர்யன் சத்தியம் பேசுவான்” என அம்ஜத் ஆர்யன் தோளை தட்டினான்.

சகோதரர்கள் இருவரும் புன்னகை செய்ய, “பெரியப்பா! நீங்க இங்கயா இருக்கீங்க?” என இவான் அங்கே வந்து இருவருக்கும் இடையே அமர்ந்தான்.

இருவரும் தங்கள் உயிரான சகோதரன் மகனை ஆசையாக பார்த்தனர்.

“என்ன செய்றே சிங்கப்பையா?” என ஆர்யன் கேட்க “பெரியப்பா என்கூட வண்ணம் தீட்ட வரேன்னு சொன்னார், சித்தப்பா. அதான் தேடி வந்தேன்” என சொன்ன இவான் “பெரியப்பா வரீங்களா?” என அம்ஜத்தை கேட்டான்.

“கண்டிப்பா.. இதோ வரேன்” என இவானை முத்தமிட்ட அம்ஜத், திரும்பவும் ஆர்யனின் தோளை தட்டி கண் சிமிட்டி இவானோடு சென்றான்.

மேலே இருக்கும் ருஹானா அறையை நிமிர்ந்து நோக்கியவன் இப்போதே அவளிடம் போய் நடந்த அனைத்தையும் சொல்லிவிடுவது என முடிவெடுத்தான்.

தந்தை போல பாராட்ட மாட்டாள் என உறுதியாக தெரிந்தவனுக்கு அவள் கோபத்தை தாங்கிக்கொள்ள தைரியம் பிறந்தது. அவளும் புண்படுவாளே என கவலையும் இருந்தாலும் எப்படியும் எல்லாவற்றையும் எதிர்கொள்ளவேண்டும் என எழுந்தான்.

———

மகிழ்வான புன்னகையோடு ஆர்யன் அளித்த சாவியை ஒரு சாவி கொத்தில் மாட்டிக்கொண்டிருந்த ருஹானா கதவு தட்டப்பட்டு ஆர்யன் எட்டி பார்க்கவும் மாறாத புன்னகையோடே அவனை பார்த்தாள்.

“உன்கூட பேசலாமா?”

“சொல்லுங்க, என்ன விஷயம்?”

உள்ளே வந்து அவள் எதிரே நின்றவன் மௌனமாக நிற்க ருஹானா கூர்ந்து கவனிப்பதை பார்த்ததும் “முன்ன நான் உனக்கு செஞ்சதெல்லாம்…. உனக்கே தெரியும்… அப்போ உன்னை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” என தொடங்கினான்.

“நானுமே இதைத்தான் உங்ககிட்டே சொல்ல நினைச்சேன். அதாவது.. எனக்கும் உங்களை தெரியாது. அன்னைக்கு உங்க கிட்டே கடுமையா நடந்துகிட்டதுக்கு மன்னிப்பு கேட்க விரும்புறேன். உங்களை அபாண்டாம பேசிட்டேன். உங்களை தப்பா நினைச்சிட்டேன்”

தான் சொல்ல வந்ததை அவள் சொல்லவும் ஆர்யன் திகைத்தவன் “நீ நினைச்சது சரியா கூட இருக்கலாம்” என தன்னை ஒப்புக்கொடுக்க முயன்றான்.

“இல்ல.. இல்ல.. நான் நினைச்சது சரியில்ல. நீங்க ஒரு கல்சுவர்ன்னு நினைச்சேன். ஆனா அது பின்னாடி நல்ல சிந்தனையுள்ள, பாதுகாக்கற மனிதன் இருக்குறது எனக்கு தெரியல. இப்போ அந்த மனிதரை நான் பார்த்துட்டேன்”

தன்னை பற்றி இத்தனை உயர்வாக எண்ணுபவளிடம் தான் செய்த கீழான செயலை எப்படி சொல்வது என ஆர்யன் திகைத்து நின்றான்.

(தொடரும்)

Advertisement