Advertisement

ஆர்யன் இவானிடம் கண் காட்ட அவன் ருஹானாவின் கையை இழுத்துக் கொண்டு படிக்கட்டில் ஏறினான்.

“ஆர்யன்! ருஹானா நிஜமாவே குணமாகிட்டாளா?” என கரீமா அடக்க முடியாமல் கேட்க, ஆர்யனும் “ஆமா! சிறிது ஓய்வெடுத்தா போதும். நீங்க எல்லாரும் உதவியா இருங்க. மேலும் கீழும் நடக்க விடாதீங்க” என்றான்.

“சரி ஆர்யன்!” என கரீமா சொல்ல “நாங்க பார்த்துக்கறோம், சார்!” என்று சாராவும் சொன்னார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அம்ஜத் “என்னாச்சு ருஹானாக்கு? அவளுக்கு உடம்பு சரியில்லயா?” என கேட்டான்.

“ஒன்னும் பெருசா இல்ல, அண்ணா. அவ சோர்வா இருக்கா. அவ்வளவு தான். நீங்க கவலைப்படாதீங்க” என்று அண்ணனை ஆறுதல் படுத்தினான். சல்மாவும் கரீமாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

———

இவானோடு கட்டிலில் படுத்து ருஹானா அவனை தூங்க வைக்க முயற்சி செய்ய, அவனுக்கோ அவளிடம் பேச வேண்டியிருந்தது.

“நீங்க உங்க கிராமத்துக்கு போய்ட்டீங்கன்னு சாரா ஆன்ட்டி சொன்னாங்க”

அவள் அந்த பொய்யை ஆதரிக்காமல் பேச்சை மாற்றினாள்.

“சரி, சொல்லு நீ என்னை தேடினியா, அன்பே?”

“ரொம்ப ரொம்ப…. நீங்க திரும்பி வர மாட்டீங்களோன்னு பயந்து போயிட்டேன்”

“நான் வந்துட்டேனே, செல்லம் நாம சேர்ந்துட்டோமே! சீக்கிரம் வந்துடுவேன்னு உன்கிட்டே சொல்லிட்டு தானே போனேன்”

அவனை அணைத்து முத்தமிட்டு சொன்னாள். “பயப்படாதே என்னுயிரே! உன்னை விட்டு எப்பவும் நான் பிரிய மாட்டேன்”

“சத்தியமா?”

“சத்தியம்”

அவனை தன் மேல் சாய்த்துக்கொண்டு பாட ஆரம்பித்தாள்.

குற்ற உணர்ச்சியின் தாக்கத்தால் தூங்கும் எண்ணங்கூட இன்றி கட்டிலின் எதிரே இருந்த சோபாவில் கைகளில் கன்னம் தாங்கி அமர்ந்திருந்த ஆர்யன், அந்த பாட்டு கேட்டு நிமிர்ந்தான்.

ருஹானாவின் தாலாட்டு பாடல் திறந்திருந்த இவான் அறை தாண்டி ஆர்யன் அறைக்குள் நுழைந்து, அவன் காது வழியாக இதயத்தில் இறங்கி ஆன்மாவை தீண்டியது.

அவள் குயில்குரலின் இனிமையையும் மீறி அது சுமந்து வந்த சோகம் அவனை பலமாக தாக்கியது.

அன்பு கூடு ஆனந்த வீடு

தந்தை பறவையோடு

அழகு பெண்குஞ்சுகள் இரண்டு..

மகிழ்ந்து பறந்தோம்

சுற்றி திரிந்தோம்….

காதல் இணையுடன் 

மூத்த குருவி பறந்தது

இயல்பை தொலைத்தே

மீண்டிட முயன்றே

மகிழ மறந்தே…

பிரிவுத்துயரம் பறித்தது

தந்தையை மட்டுமல்ல

கூட்டையும் இழந்தே

நிழலின்றி பறக்கிறேன் நான் 

எதற்கு பிறந்தேன்? ஏனிந்த வாழ்க்கை?

ஏதோ ஒரு பயம்! எங்கோ ஒரு நிம்மதி!

எதற்கோ கவலை! எப்படியோ ஒரு சிரிப்பு!

யாரை கேட்பது? எப்படி கேட்பது?

ஆர்யன் கண்களில் மெல்லிய நீர் படலம். பாடல் வரும் திசை நோக்கி கழுத்தை திருப்பி இருந்தவன் அதற்கு மேல் அதன் அழுத்தம் தாளமுடியாமல் எழுந்தான்.

ஓடி விளையாட தோட்டம் இருந்தது

ஓய்ந்து ஓய்வெடுக்க வீடு இருந்தது

மணல் வீடு கட்டி விளையாடினேன்

அந்த மணல்வீடு கூட இல்லையே இப்போது

இரவில் செல்கிறது நட்சத்திரம் தனியாக…

‘உனக்கு எல்லாமுமாக நான் இருப்பேன்’ என சொல்லும் துடிப்புடன் வேகமாக வந்த ஆர்யன், அவள் இவானை அணைத்து பிடித்தபடி தூங்கிவிட்டதை பார்த்து சிறிது நேரம் அங்கேயே நின்றபின் மெல்ல கதவடைத்து சென்றான்.

——-

காலையில் எழுந்து கிளம்பிய ஆர்யன் நேராக இவான் அறைக்கு சென்றான். அங்கே யாரும் இல்லை என்றதும் ருஹானா அறைக்கு சென்று கதவை தட்டினான்.

அதற்கு பதில் பின்னால் இருந்து வந்தது, ஜாஃபரிடமிருந்து. “ருஹானா மேம் லிட்டில் சாரோடு உணவு அறையில் இருக்காங்க” என சொன்ன ஜாஃபர் “இந்தாங்க சார்! நீங்க கேட்டது” என்று ஒரு சிறிய கருப்பு நிற பெட்டியை ஆர்யனிடம் கொடுத்தான்.

அதை வாங்கிக்கொண்ட ஆர்யன் அதை திறந்து பார்க்க அவனுக்கு இலேசான நிம்மதி கிடைத்தது.

——

உணவு மேசையின் நடுநாயகமாக இருக்கும் நாற்காலி மட்டும் காலியாக இருக்க, இடது புறம் அம்ஜத், கரீமா, சல்மா வரிசையாக அமர்ந்திருக்க, எதிரே அமர்ந்திருந்த இவானுக்கு பக்கத்தில் இருந்த ருஹானா ரொட்டியில் வெண்ணெய் தடவி கொடுத்தாள்.

“எல்லாரும் வந்தாச்சி. ஆர்யனும் வந்துட்டா நல்லா இருக்கும்” என அம்ஜத் இவானையும் ருஹானாவையும் பார்த்து மகிழ்ச்சியடைய “அம்ஜத் டியர்! சீக்கிரம் ஜூஸ் குடிங்க. அதுல இருக்குற விட்டமின் வீணா போய்டும்” என கரீமா அவனை முறைத்தாள்.

“உண்மையில உணவு மேசையில யாராவது இல்லாம இருந்தா எனக்கு குறையா இருக்கும். நல்லாவே இருக்காது. இப்போ எனக்கு சந்தோசமா இருக்கு. ஆர்யன் இப்போ வந்துடுவான். ருஹானாவும் வந்துட்டா. சந்தோசம். எனக்கு சந்தோசம்” என அம்ஜத் மகிழ ருஹானா அவனை பார்த்து புன்னகைத்தாள்.

சல்மா கரீமாவை இடிக்க, “ருஹானா! போன வாரம் நீ உன் நண்பர் உதவியால வீடு ஒன்னு பார்த்தியே, அது என்ன ஆச்சு? நீ அங்க போகலயா?”  என்று கரீமா ருஹானாவை சங்கடத்தில் ஆழ்த்தும் கேள்வியை கேட்டாள்.

சாப்பாட்டில் கவனமாக இருக்கும் இவானை திரும்பி பார்த்துவிட்டு ருஹானா “கொஞ்ச நாள் இங்க இருக்கலாம்ன்னு நினைச்சிருக்கேன், கரீமா மேம்! இவானுக்கும் அதான் நல்லது. உங்களுக்குலாம் நான் தொந்தரவு தர நான் விரும்பல. ஆனாலும்…“ என்றவளின் பேச்சை இடைமறித்த கரீமா “அப்படிலாம் எதுவும் இல்ல. நீ எங்க கூட நல்லா பழகிட்டே. நீ இல்லனா எங்களுக்கு தேடுது” என சொன்னாள்.

“ஆமா ஆமா ருஹானா! அதிகம் தேடுது” என அம்ஜத் சொல்ல ருஹானா பொதுவான ஒரு சிரிப்பை மட்டும் கொடுத்தாள்.

ஆர்யன் அங்கே வந்து அனைவருக்கும் காலை வணக்கம் சொல்ல, அவர்களும் திருப்பி சொன்னார்கள். சல்மா நாற்காலியின் முன்னே வந்து அவள் மட்டும் தனியாக சொல்லி “ஆர்யன்! இன்னைக்கு நீங்க லேட். நான் உங்களை கூப்பிட வரலாம்ன்னு இருந்தேன்” என அழகு சிரிப்புடன் சொன்னாள்.

“நான் வேலையா இருந்தேன்” என அவளை பார்க்காமல் சொன்ன ஆர்யன், தன் நடு நாற்காலியின் அருகே நின்று ருஹானாவிடம் அந்த பெட்டியை எட்டி நீட்டினான்.

“இது உனக்காக”

அவள் ஆச்சரியமாக பார்க்க அந்த உணவு மேசையில் இயக்கங்கள் நின்றன.

அவன் நீட்டிக்கொண்டே நிற்க அவள் உட்கார்ந்தவண்ணம் அதை வாங்காமல் அவனை பார்க்க அவனும் அவளை பார்த்தபடி நீட்டிய கையை மடக்காமல் நின்றான்.

ருஹானா அதை வாங்கியவள் “என்ன இது?” என கேட்டாள்.

“திறந்து பாரேன்” என அத்தனை மென்மையாக சொன்னான்.

ருஹானா மெல்ல பெட்டியை திறக்க, அம்ஜத் புன்னகையுடன் ஆர்வமாக பார்க்க, சல்மாவும் கரீமாவும் வாய் பிளந்து பார்க்க, அதில் ஒரு சாவி இருந்தது.

அதை வெளியே எடுத்தவள் புரியாமல் நிமிர்ந்து ஆர்யனை பார்க்க, “இனிமேல் இது உன் வீடும் தான்” என அவன் சொல்ல அவள் நெக்குருகிப் போனாள்.

கரீமா விக்கித்து அமர்ந்திருந்தாள். சல்மாவின் கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடுவதை போல இருந்தது.

தன் இதயத்தின் சாவியையே அவளிடம் ஒப்படைத்ததைப் போல ஆர்யன் மன நிம்மதியுடன் சாப்பிட அமர்ந்தான். “நான் கவனிச்சேன். நீ வெளியே போயிட்டு வரும் ஒவ்வொரு முறையும் கதவு தட்டுறே. இனி அது தேவை இல்ல”

ருஹானாவுக்கு ஆனந்த கண்ணீர் பொங்க “மிக்க நன்றி!” என்றாள். அதுவரையிலும் அவளையே பார்த்திருந்தவன் மன பாரம் நீங்க தலையாட்டினான்.

அவன் செய்த தப்புக்கு பிராயச்சித்தம் செய்து அவன் பாணியில் மன்னிப்பு வேண்டுகிறானா?

இன்னும் ஆர்யன் பார்வை ருஹானாவின் மீதே இருக்க, அதை தாங்க முடியாத சல்மா அக்காவை கண்ணீருடன் முறைத்தாள். கரீமாவின் வாய் கோணியது. சிரமப்பட்டு தன்னை சமாளித்தவள் “நல்ல காரியம் செய்தே, ஆர்யன்!” என அவன் பார்வையை தங்கள் பக்கம் திருப்பினாள்.

“உன் காபி இன்னும் வரலயே! நான் போய் கிச்சன்ல பார்க்கறேன்” என்று எழுந்த கரீமா “உனக்கு காபி வேணுமா சல்மா டியர்!” என முறைத்துக்கொண்டு இருக்கும் தங்கையின் கவனத்தை திருப்ப பார்த்தாள். “எனக்கு எதுவும் வேணாம்” கண்களை கூட திருப்பாத தங்கையின் பதிலில் அவளின் கோபம் புரிய அமைதியாக உள்ளே சென்றாள்.

“இதையும் வச்சிக்கோ, சிங்கப்பையா!” என ஆர்யன் பன்னீரை இவான் தட்டில் வைக்க “சரி சித்தப்பா!” என இவானும் சாப்பிட்டான்.

ருஹானாவின் பார்வையை உணர்ந்த ஆர்யன் அவளை பார்க்க, கண்களில் கண்ணீரும், உதட்டில் புன்சிரிப்புமாக அவள் அவனையே கண் சிமிட்டாமல் பார்த்தாள். நீல உடையில் கண்ணை கவரும்வகையில் இருந்த ஆர்யன் இன்னும் அழகாகிப் போனான்.

இருவரையும் பார்த்து சல்மா வயிறெரிந்தாள்.

ஒரு பெட்டியில் சாவியை வைத்து, அதை அனைவர் முன்னிலையிலும் அவளுக்கு கொடுத்து, அதை அவளை திறக்க வைத்து, ‘இது உன் வீடு, நீயும் எங்கள் குடும்ப உறுப்பினர்’ என அங்கீகாரம் தந்து ஆர்யன் அவளின் உரிமையை நிலைநாட்டி விட்டான்.

‘இனி நீ தட்ட வேண்டாம். என் இதயம் திறந்து தான் இருக்கிறது. நீ நேரே உள்ளே வரலாம்’ எனும் சங்கேத மொழி அவனுக்கும் தெரியாமல் அங்கே சொல்லப்பட்டதோ!

அவளது குணத்தாலும், இவான் மேல் அவளுக்குள்ள அன்பாலும், அவளது அழகாலும் ஏற்கனவே அவன் இதயத்தை அவள் கவர்ந்துவிட்டாள். இப்போது திறவுகோல் தந்து அவள் இதயத்தை இவனும் திறக்க பார்க்கிறானா?

——-

Advertisement