Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 59

தன்வீரின் மேசையின் எதிரே இரு முக்காலிகளில் அமர்ந்து ருஹானாவும் ஆர்யனும் காத்திருந்தனர்.

தன்வீரும் அவன் உதவி அதிகாரியும் ஹுசைனிடம் வாக்குமூலம் வாங்க உள்ளே அழைத்து சென்றிருக்க, ருஹானா அமைதியற்று அங்கே எட்டி பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தை முகத்தை பார்த்தவாறு ஆர்யன் அவளிடம் உண்மையை சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

ஒருவாறு தைரியத்தை திரட்டிக்கொண்டு “நான் தான் இதை செய்தேன். நீ குற்றவாளியாக நான் தான் காரணம். ஹுசைன் மூலமா உன்னை மாட்டிAவிட்டேன்” என்று சொல்லி முடித்துவிட்டான்.

கண்களில் நீர் துளிர்க்க வேகமாக எழுந்த ருஹானா “ஏன் அப்படி செஞ்சீங்க? சொல்லுங்க, ஏன்?” என கத்தினாள்.

ஆர்யனும் எழுந்தவன் “இவானை நீ என்கிட்டே இருந்து பறிச்சிட்டே ன்னு நான் நினைச்சேன். உனக்கு தண்டனை கொடுக்க நினைச்சேன். இது மன்னிக்கக்கூடிய தப்பு இல்ல. ஆனா…..” என அவன் முடிக்கும்முன் ருஹானாவின் கோபம் எல்லை கடந்திருந்தது.

“எப்படி உங்களால முடிஞ்சது? எப்படி? என்ன மனுஷன் நீ? உன்னால நான் இவானை விட்டு நிரந்தரமா பிரிஞ்சிருப்பேன். உன்னை நான் வெறுக்கிறேன். உன்னை வெறுக்கிறேன்” என அவள் அவனை பிடித்து உலுக்கியபடி ஓங்கி குரலெடுத்து கத்த, ஆர்யன் ஆணியடித்து போல் அசையாமல் அமர்ந்திருந்தான். ‘வெறுக்கிறேன்’ என்ற வார்த்தை அவனை திரும்ப திரும்ப மோதியது.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் விசாரிப்பாங்களோ?” எனும் ருஹானாவின் முணுமுணுப்பு கேட்கவும் தான் இப்போது நடந்தது அவன் கற்பனையே என அவனுக்கு புரிந்தது.

இன்னமும் தாங்கள் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருப்பதை கவனித்து பார்த்தான்.

’அவளது வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமோ, அவளை இழந்து விடுவோமோ’ என பயந்துவிட்டான்.

அவனால் அவள் முணுமுணுப்புக்கு பதில் சொல்லவும் முடியவில்லை. அவளை ஏறெடுத்தும் பார்க்க இயலவில்லை.

தன்வீர் அங்கே வரவும் ஆவல் தாங்காமல் எழுந்த ருஹானா “தன்வீர் என்ன நடந்தது?” என கேட்டாள்.

“ஹுசைன் எல்லாத்தையும் ஒத்துகிட்டான். உனக்கும் அந்த கும்பலுக்கும் தொடர்பு இல்லன்னு சொல்லிட்டான். உன் மேல சுமத்தப்பட்ட குற்றம் பொய்னு நிரூபணமும் ஆகிடுச்சி. உனக்கு விடுதலையும் கிடைச்சிடுச்சி” என தன்வீர் சொல்ல ருஹானா மகிழ்ச்சியில் வாயடைத்து நின்றாள்.

தன்வீரை பார்த்து தலையாட்டியவள் உட்கார்ந்திருந்த ஆர்யனிடம் திரும்பினாள்.

“உங்களுக்கு என்னோட நன்றிகள். என் உயிரை நீங்க காப்பாத்தி இருக்கீங்க. நான் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுருக்கேன்”

“நீ எந்த கடனும் படல. சீக்கிரம் உன் உடம்பை சரியாக்கு” என்று சொன்னவன் பின்னும் அசையாது அங்கேயே அமர்ந்திருந்தான். அவள் விடுதலை அடைந்த மகிழ்ச்சியை அவனால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

நின்றிருந்த ருஹானாவும், தன்வீரும் அவனை பார்க்க, மெல்ல எழுந்தவன் “வா போகலாம்” என அவளை அழைத்தான்.

ஆர்யன் வாசலில் போய் ருஹானாவிற்காக காத்திருக்க, அவள் தன்வீருக்கு நன்றி சொல்ல, தன்வீர் ஆர்யனை மதிப்புடன் பார்த்தான். ருஹானா இணையவும் இருவரும் கிளம்பி விட்டனர்.

——

சையத் திறந்தவெளி உணவகம்.

“எல்லாத்துக்கும் நன்றி. இந்த உணவுக்கும் சேர்த்து” என ருஹானா சொல்ல ஆர்யனிடம் மறுமொழி இல்லை.

“நீங்க வலுக்கட்டாயமாக என்னை இங்க கூட்டிட்டு வந்தது நல்லதா போச்சி. எனக்கு இப்போ எவ்வளோ பரவால்லை. அதுக்கும் என்னோட நன்றி” என சன்ன சிரிப்போடு அவள் சொல்ல “நீ அதிக சோர்வா இருந்தே. நீ நல்லா சாப்பிட்டு தெளிவாகனும்னு நான் நினைச்சேன்” என அவன் சொன்னான்.

“இவான் என்னை அப்படி பார்த்திருந்தா ரொம்ப கவலைப்பட்டு இருப்பான்” எப்பவும் இவளுக்கு இவான் நினைவே!

“எனக்காக போய் நீங்க ஆபத்துல இறங்கிட்டீங்க. நீங்க அவனை கண்டுபிடிச்சி கூட்டிட்டு வரலனா, நான் இன்னும் ஜெயில்ல தான் இருந்திருப்பேன். இவான் நிலைமை மோசமாகிருக்கும். என்னை விட அவனை பத்தின கவலை தான் எனக்கு. அதான் நீங்க எனக்கு செஞ்சது மிகப்பெரிய உதவி”

அவள் நன்றி சொல்ல சொல்ல ஆர்யன் கூனிக் குறுகி போனான்.

“நான் போய் கை கழுவிட்டு வரேன்” என்று அவள் எழுந்து காயம் இருக்கும் இடத்தை பிடித்துக் கொண்டே செல்ல, தேநீருடன் சையத் வந்து ஆர்யன் எதிரே அமர்ந்தார்.

“நீ ஏன் இப்படி நிலைகுலைந்து இருக்கே, மகனே!”

“அதே தான் என் மனநிலை, சையத் பாபா. போன முறை உங்ககிட்டே நான் மரியாதைக் குறைவா நடந்துகிட்டேன். நீங்க சொன்னது தான் சரி. அப்படித்தான் எல்லாமே நடந்தது”

சையத் தலையை கூட ஆட்டாமல் அவன் சொன்னதை கேட்டு இருந்தார்.

“இவான் சித்தி நான் நினைச்ச மாதிரி இல்ல. அவளை நான் அதிகமா துன்புறுத்திட்டேன்”

“மகனே! நீ உன்னோட கோணத்துல அவளை பார்க்காதே. எந்த அளவுகோல் கொண்டும் அளக்காதே. அவளை அவளாக பார். அவளோடு மனதால் நீ கட்டப்பட்டு இருக்கே”

சையத் பேசிக்கொண்டிருக்கும்போதே ருஹானா அங்கே வர “வா மகளே!” என அவர் எழுந்து கொள்ள “நீங்க உட்காருங்க” என அவள் சொல்ல “நீங்க பேசிட்டு இருங்க. எனக்கு வேலை இருக்கு” என்று அவர் திரும்பினார்.

“சையத் பாபா!” என்று ஆர்யன் கூப்பிட, அவர் நின்று ஆர்யனை பார்த்தார்.

“அன்னைக்கு இங்க ஒரு போலீஸ் ஆபிசர் இருந்தானே… கமிஷனர் வாசிம்.. அவனை எப்படி உங்களுக்கு தெரியும்?” என ஆர்யன் கேட்க ருஹானா பயத்துடன் பார்த்தான்.

இருவரையும் பார்த்த சையத் “நான் உனக்கு அப்புறம் ஒருநாள் சொல்றேன். நான் எப்பவும் உனக்கு சொல்வேன், இல்லயா.. காலம் வரும்போது தான் கனியும்” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

“அவர் என்ன சொல்லிட்டு போறார்? எனக்கு புரியலயே!” என ருஹானா கேட்க “எனக்கும் தான். ஆனா இதான் சையத் பாபா. அவர் சொல்றது உடனே புரியாது. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி.. எதாவது நடக்கும்போது… அவர் சொன்னதோட அர்த்தம் நமக்கு விளங்கும். அவர் சொன்னது போல பொறுத்து தான் இருக்கணும்” என ஆர்யன் விளக்கினான்.

“நீங்க ஏன் கமிஷனர் வாசிம் பத்தி கேட்டிங்க? இப்போ தான் எல்லாம் சரியாகிடுச்சே!”

“போன முறை நான் வந்தபோது அவனை இங்க பார்த்தேன். அதான் எனக்கு தெரிஞ்சிக்க ஒரு ஆவல். அவனுக்கு எப்படி சையத் பாபாவை தெரியும்ன்னு”

ருஹானாவின் பயம் இன்னும் விலகாமல் இருக்க “அவ்வளவுதான். வேற ஒண்ணுமில்ல. நீ கவலைப்படாதே” என அவன் கனிந்த குரலில் பேசினான்.

வாயில் இருந்து அத்தனை லேசில் முத்து உதிர்க்காதவன், ருஹானாவின் பயம் போக்க அத்தனை நீளமாக பேசுகிறான்.

இருவரும் தேநீர் அருந்த, பறவைகளின் ஒலியுடன் அந்த இயற்கை சூழ்நிலை அத்தனை அருமையாக இருந்தது.

   ——–

சல்மா மேல் மாடி ஜன்னலில் இருந்து கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு இரும்பு கேட்டையும் கவலையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள். ஆர்யன் கார் உள்ளே நுழையவும் அவள் முகம் மலர்ந்தது. காரினுள் ருஹானாவை பார்க்கவும் அதிர்ந்து போனாள்.

அவர்கள் பேசுவதை கேட்கும் தூரத்தில் அவள் இல்லாவிட்டாலும் உற்று நோக்கியபடியே நின்றாள்.

காரிலிருந்து இறங்கிய ருஹானா ஆர்யனிடம் “திரும்பவும் என் இவானோடு என்னை கொண்டு வந்து சேர்த்துட்டீங்க. மிகவும் நன்றி. நீங்க செஞ்ச இந்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன்” என்றாள்.

அவன் அமைதியாக இருக்கவும் வீட்டை நோக்கி நடந்தாள்.

“நீ தெரிஞ்சிக்க வேண்டியது ஒன்னு இருக்கு” என ஆர்யன் சொல்லவும் அவள் அப்படியே திரும்பி நின்றாள். ஆர்யன் அவள் அருகே வந்தான்.

“என்ன தெரியணும் எனக்கு?”

“மனிதர்கள் சிலசமயம் தப்பு செய்வாங்க…..”

ஆர்யன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே “சித்தி!” என கூச்சலிட்டபடி இவான் ஓடிவந்தான். பாய்ந்து வந்த அவனை ருஹானா கட்டிக்கொண்டாள்.

சல்மா எரிச்சலோடு அக்காவிடம் சொல்ல கீழே வேகமாக வந்தவள் அம்ஜத்தும் அவளுடன் இருப்பதை பார்த்து அப்படியே நின்றாள்.

“என்ன சல்மா?” என கேட்ட கரீமாவின் பார்வை வாசல்கதவு திறக்கும் சத்தம் கேட்டு அங்கே சென்றது. குற்றவாளியாக, அடிபட்டு  மருத்துவமனையில் இருப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் ருஹானா கண் எதிரே நடந்து வரவும் குழப்பமாகி சிலையாக நின்றாள்.

“கரீமா பார்த்தியா ருஹானா வந்துட்டா!” என அம்ஜத் ஆர்ப்பரிக்கவும் தெளிந்தவள் அவனோடு வாசலுக்கு விரைந்தாள்.

அம்ஜத் அவளை வரவேற்கவும் கரீமாவும், சல்மாவும் நல்வரவு சொல்ல நன்றியுரைத்த ருஹானா வயிற்று காயத்தை பிடிக்க, அதை கண்ணால் காட்டி கரீமா “எப்படி இருக்கே, ருஹானா டியர்?” என கேட்டாள்.

ருஹானா “நல்லா இருக்கேன்” என சொன்னதும் ஆர்யன் “சிங்கப்பையா! உன் சித்தி களைப்பா இருக்காங்க. அவங்களை மேலே கூட்டிட்டு போ” என சொன்னான்.

“சரி சித்தப்பா!” என இவான் ருஹானாவின் கையை பிடித்தான். சாரா, நஸ்ரியா, ஜாஃபர் மூவரும் அங்கே வந்து ருஹானாவை வரவேற்றனர். அவர்களுக்கும் நன்றி சொன்ன ருஹானா, ஆர்யனை நோக்கி பிரத்தியேகமாக நன்றியுரைத்தாள்.

ஆர்யனும் அவளை பார்த்து கனிவாக தலையசைக்க, சல்மா இருவரையும் பார்த்து பொசுங்கினாள்.

Advertisement