Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 58  

“என்ன சல்மா! ஏன் இந்த ராத்திரில என்னை எழுப்புறே?”

“லாக்அப்ல ருஹானாக்கு அடிபட்டுடுச்சாம், அக்கா”

“அடிபட்டுச்சா? எப்படி?”

எனக்கு தெரியல. நான் ஆர்யன் கூட பேசிட்டு இருந்தேன். அப்போ போன் வந்துச்சி. அவன் ஒரே ஓட்டமா ஓடிட்டான்”

“அப்படியா.. என்ன நடந்ததுன்னு தெரியலயே! சரி! உனக்கு என்ன ஆச்சு? நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே, சல்மா?”

“அவன் எப்படி ஓடினான் தெரியுமா, அவளுக்கு காயம்ன்னு தெரிஞ்சதும்? நான் கேட்டதுக்கு கூட அவன் பதில் சொல்லல. அம்பு போல பாயுறான். என்னவோ, இந்த நேரத்துல உலகத்துல அவ ஒருத்தி மட்டும் தான் இருக்கற மாதிரி”

“பின்னே! அப்படித்தானே நடந்துக்குவான்? அவனால தானே இதெல்லாம் நடந்தது? தப்பு செஞ்ச உறுத்தல்”

“இது குற்ற உணர்ச்சி இல்ல, அக்கா.. இது வேற… வேற ஏதோ இருக்கு.. ஏதோ பெருசா… நான் அவன் கண்ணுல பார்த்தேன். ஒருவேளை இவானுக்காக கூட அவன் இவ்வளவு பதறியிருக்க மாட்டான். ஒரு மனுஷன் அவன் காதலிக்கறவங்களுக்காக தான் இப்படி கவலைப்படுவான்”

“சரி.. நீ அதிகம் யோசிக்காதே”

“எல்லா திட்டமும் நாம போடுறோம். ஆனா அது திரும்பி நம்மையே தாக்குது. அவங்களை பிரிக்க நாம செய்றது எல்லாம் அவங்களை இன்னும் நெருக்கமாக்குது”

“சரி, நீ பதட்டப்படாதே! அமைதியா இரு”

“இல்ல.. அடுத்து புத்திசாலித்தனமான திட்டமா போடணும். இல்லனா நாம ஆர்யனை நிரந்தரமா இழந்துடுவோம். எனக்கு அவன் கிடைக்க மாட்டான்”

“சரி, சரி. நீ நிதானத்துக்கு வா. நான் பார்த்துக்கறேன்”

——-

தன்னை நம்புவதாக ருஹானா சொன்னதை நினைத்தபடியே காரை வேகமாக செலுத்திக்கொண்டு ஆர்யன் மருத்துவமனை வந்தடைந்தான். அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ருஹானா இருக்கும் அறையிலிருந்து வெளியே வர அவரிடம் வினவினான்.

“இப்போ எப்படி இருக்காங்க?”

“தையல் போட்டு கட்டு போட்ருக்கேன். வலிக்கு மாத்திரை கொடுத்துருக்கேன். தூங்குறாங்க”

“பெரிய காயமா, டாக்டர்? நிரந்தர பாதிப்பு எதும் இல்லயே?”

“வயித்துல தான் குத்து விழுந்துருக்கு. நல்லவேளையா உள்ளுறுப்புக்கள் எதும் பாதிக்கப்படல. அதிகம் கவலைப்பட வேண்டியதில்ல”

“எப்போ அவங்கள பார்க்கலாம்?”

“நீங்க யார் அவங்களுக்கு?”

ஏதோ சொல்ல வந்து தயங்கிய ஆர்யன் சற்று நிறுத்தி “சொந்தம் தான். என் அண்ணன் பையனோட சித்தி, அவங்க” என்றான்.

“மன்னிச்சிக்கங்க.. குடும்பத்தினர் தவிர வேற யாருக்கும் பார்க்க அனுமதி இல்ல. அவங்களும் போலீஸ் அனுமதி வாங்கி தான் பார்க்க முடியும்”

சொல்லிவிட்டு அந்த மருத்துவர் சென்றுவிட, வாசலில் நின்ற காவலரை பார்த்துக்கொண்டே சற்று தூரம் சென்ற ஆர்யன் ரஷீத்துக்கு அழைத்தான்.

“என்ன தகவல், ரஷீத்? ஹுசைன் இருக்குற இடம் தெரிஞ்சதா?”

“நம்ம ஆட்கள் கிட்ட நெருங்கிட்டாங்க, ஆர்யன். அவன் போகக்கூடிய ரெண்டு மூணு இடங்கள் தெரிஞ்சிருக்கு. எல்லா இடத்துக்கும் ஆட்களை அனுப்பி இருக்கேன்”

“சரி, கண்டுபிடிச்சதும் சொல்லு. என் கையால அவனை தண்டிக்க விரும்புறேன்”

போன் பேசி முடித்துவிட்டு திரும்பவும் ருஹானா இருந்த அறை வாசலுக்கு எதிரே நின்று கொண்டான்.

தன்வீர் அப்போது வந்தவன் ஆர்யனை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனை பார்த்துக்கொண்டே தன்வீர் தனது போலீஸ் பேட்ச்சை காட்டி உள்ளே போக விழைய, ஆர்யன் தன்வீரை பார்த்ததை விட அவனை உள்ளே அனுமதித்த அந்த பேட்ச்சையே ஏக்கமாக பார்த்தான்.

கமிஷனர் வாசிமிடம் காட்டும் மூர்க்கத்தனத்தை, முறைப்பை ஏனோ ஆர்யன் காவல் அதிகாரி தன்வீரிடம் காட்டுவதில்லை. ருஹானாவின் சகோதரன் எனும் கனிவோ?

——-

மயக்கத்தில் இருந்து மெல்ல விழித்த ருஹானா அதிக வலியை உணர்ந்ததால் முகம் சுளித்தவாறே கண் விழித்தாள்.

தனது படுக்கைக்கு அருகே நாற்காலியில் தன்னை பார்த்தபடியே அமர்ந்திருந்த ஆர்யனை பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

“நீங்க.. எப்படி..?” என எழ முயற்சி செய்தவள் முடியாமல் தலையணையில் சாய்ந்தாள்.

“நீ எப்படி இருக்கே?” ஆர்யன் எழுந்து அவள் அருகே வந்தான்.

“நல்லா இருக்கேன். லேசான வலி தான்” என அவள் சொன்னாலும், அவளது முக பாவனைகள் அவள் கடுமையான வலியை மறைக்கிறாள் என்பதை எடுத்து சொன்னது.

“உனக்கு யார் இதை செய்தாங்களோ……“ சற்று நிறுத்திய ஆர்யன் “கண்டிப்பா இதோட பலனை அனுபவிப்பாங்க” என்று தலையாட்டி சொன்னான். அவனுக்கும் சேர்த்து சொல்கிறானா!

“அதுக்குலாம் அவசியமில்ல. இது விபத்து தான்” என்று உடனே மறுத்து சொன்ன ருஹானாவை அவன் பார்த்த பார்வை…!

‘உன்னை துன்புறுத்தியவர்களுக்கும் இரக்கப்படுவாயா..? நீ என்ன மனிதப்பெண்ணா…… இல்லை அயல்கிரகத்தை சேர்ந்தவளா?’ என்பது போல அவளை அதிசயமாக பார்த்தான்.

ஏன் அதிசயப்பட மாட்டான்? இத்தனை காலமாக பெண்களுக்கென அவன் வகுத்து வைத்த எந்த வரையறைக்கும் அவள் வரவில்லையே!   

ருஹானா எட்டி இருந்த அவள் குளிராடையை எடுக்க கை நீட்ட, ஒரு கையில் ட்ரிப்ஸ் மாட்டியிருக்க அவளால் அதை எட்ட முடியவில்லை. ஆர்யன் அவளுக்கு அதை எடுத்துக்கொடுக்க, அதை அவளால் அணியவும் முடியவில்லை.

ஆர்யன் அருகில் வந்து “நான் செய்றேன்” என்று அவள் கட்டிலின் தலைப்பாகத்தை உயர்த்தினான். பின் அவனே குளிராடையை அவளுக்கு அணிவிக்க, அவனது மிக நெருக்கமான அண்மை அவளை ஏதோ செய்தது. 

அவள் முகத்தின் அருகே தெரிந்த அவன் கண்களை அவள் பார்க்க, அவனோ கடமையாய் அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். அவளது வலி வேதனை அவனுக்கு துயரத்தைத் தந்தது. அதை குறைக்க என்ன வழி என்று பார்த்தானே தவிர அவளது அருகாமை உணர்ந்து உள்ளம் உவகை கொள்ளவில்லை.  

மறுகியபடி மருத்துவமனை செல்கிறான்

அருகிருந்து அரவணைக்கிறான்

இளமை செல்கள் பூ பூக்கவில்லை

மாறாய் அவளது வேதனையையும்

அதை விளைவித்த தனது மடமையையும்

எண்ணியெண்ணி வேதனைப்படுகிறான்.

அவள் கண்களால் அவனுக்கு நன்றியுரைக்க, நிமிர்ந்த அவனுக்கு நெற்றியெல்லாம் வியர்த்திருந்தது. 

‘இவானுக்காக தான் ருஹானாவுக்கு முக்கியத்துவம்!’ என்ற நிலை மாறி அவன் மனதில் அவளுக்கென்று தனி இடம் ஒன்றை உருவாக்கி கொண்டது.. அவன் இதயம்… அவனுக்கும் தெரியாமல். 

ஆர்யன் அவளுக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க, உள்ளே நுழைந்த செவிலிப்பெண் ருஹானாவின் காலை உணவை பக்கத்தில் வைத்தாள்.

“சார்! நீங்க ஹாஸ்பிடல் கேண்டீன்ல போய் சாப்பிட்டு வாங்க. நேத்து ராத்திரில இருந்து இங்கயே இருக்கீங்களே!” என்று செவிலி சொல்ல, ருஹானாவின் அகன்ற கண்கள் ஆர்யன் மேல் ஒட்டிக்கொண்டன.

“இல்ல.. நான் பார்த்துக்கறேன்” என ஆர்யன் சொல்லவும் தலையை ஆட்டிவிட்டு அந்த பெண் செல்ல, ருஹானாவின் பார்வை மாறவில்லை.

அவள் கண்களை சந்திக்கும் துணிவில்லாத ஆர்யன் “நான் போன் பேசிட்டு வரேன்” என நகரப் போனான்.  

அப்போது காலையில் பணிக்கு மாறி வந்த வேறொரு காவல் அதிகாரி உள்ளே வந்து “நீங்க யார்? எப்படி உள்ளே வந்தீங்க?” என கேட்டான்.

ஆர்யன் பதில் சொல்லாமல் நிற்க, ருஹானா “அவர் என்னோட சொந்தக்காரார்…. அதாவது என் அக்கா பையனின் சித்தப்பா” என்று வேகமாக சொன்னாள். 

ஆர்யன் அவளை பார்க்க, அந்த அதிகாரி “எப்படி இருந்தாலும் குடும்பத்தினர் மட்டும் தான் உள்ளே வரணும்” என்று சொல்ல, ஆர்யன் வெளியேறினான்.

“என்னோட பாஸ் தன்வீர் உங்ககிட்டே பேசணுமாம்” என அந்த அதிகாரி போனை ருஹானாவிடம் கொடுக்க ருஹானா நன்றி சொல்லி வாங்கிக் கொண்டாள்.

“ஹலோ தன்வீர்!”

“எப்படி இருக்கே ருஹானா?”

“நான் நல்லா இருக்கேன் தன்வீர்”

“நேத்து நைட் நான் வந்தேன். நீ தூங்கிட்டு இருந்தே. டாக்டர்ட்ட பேசினேன். பயப்பட ஒன்னும் இல்லைன்னு சொன்னார். உனக்கு எதும் வேணுமா?”

“நன்றி தன்வீர். எனக்கு ஒன்னும் இப்போ தேவையில்ல. என் சிக்கல் தீர எதும் வழி தெரிஞ்சதா?”

“நாங்க அந்த கும்பலை தேடிட்டு தான் இருக்கோம் ருஹானா. சீக்கிரம் பிடிச்சிடுவோம். நீ கவலைப்படாதே. நான் உன்னை அப்புறம் வந்து பார்க்கறேன். உடம்பை பார்த்துக்கோ”

வருத்தமான பெருமூச்சை விட்ட ருஹானா “சரி தன்வீர்” என்று போனை வைத்தாள்.

  ——-

ருஹானாவை பார்க்க வந்த மிஷால் அங்கே ஆர்யனை பார்த்து ஆத்திரமடைந்தான். அவனை நெருங்கி “ருஹானா என்னைக்கு உன்னை பார்த்தாளோ, அன்னைலேர்ந்து அவளுக்கு பிரச்சனை தான்” என்றான். 

ஆர்யன் பதில் சொல்லாமல் முறைக்க “எனக்கு தெரியும், இதுலயும் நீ தான் சம்பந்தப்பட்டுருப்பே” என்று மிஷால் அவன் கோபத்தை தூண்டிக்கொண்டே போனான்.

மிஷால் முகத்தை பார்க்க பிடிக்காமல் ஆர்யன் நகர்ந்து வர, அவன் பின்னாலேயே வந்த மிஷால் “அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ தான் பொறுப்பு” என்று சொன்னான்

ஒரு விநாடி அதை உள்வாங்கிய ஆர்யன், திரும்பி மிஷால் சட்டையை பிடித்தவன் அவனை தள்ளிக்கொண்டு போய் சுவரோடு நிறுத்தி “அவளுக்கு எதுவும் ஆகாது. நான் அப்படி ஆக விட மாட்டேன். உனக்கு முன்னே அதை நான் தடுத்து நிறுத்துவேன்” என்று பிடியை இறுக்கினான்.

அங்கே காவலுக்கு வந்த அதிகாரி “என்ன செய்றீங்க?” என அருகே வரவும் மிஷால் ஆர்யனை தூர தள்ளினான்.

“என்ன பிரச்னை?” என காவலன் வினவ “ஒன்னுமில்ல, ஆபிசர்” என மிஷால் ஆர்யனை முறைத்தபடியே சொல்ல, ஆர்யனின் பார்வையும் அனல் கக்கியது.

வேகமாக ஆர்யன் அகல, மிஷால் ருஹானாவை பார்க்க அனுமதி கோரினான். “நீங்க அவங்க குடும்பத்தினரா?” என அதிகாரி கேட்க “இல்ல.. தோழன்” என்று மிஷால் சொல்ல அதிகாரி அனுமதிக்கவில்லை.

——

கோபமாக வெளியே வந்த ஆர்யன் ரஷீத்தின் எண்ணை தட்டினான்.

“ரஷீத் இன்னுமா நீ ஹுசைனை கண்டுபிடிக்கல?”

“சரியா தெரியாம உங்களுக்கு சொல்ல வேண்டாம்னு பார்த்தேன், ஆர்யன். இப்போ திட்டவட்டமா ஒரு முகவரி கண்டுபிடிச்சிருக்கோம். அங்க தான் நம்ம ஆட்கள் போயிட்டு இருக்காங்க”

“பசங்களை திருப்பி வர சொல்லு. எனக்கு அந்த முகவரியை அனுப்பு. நானே போறேன்”

“ஆர்யன்! தனியாவா போக…?”

“ரஷீத்! சொன்னதை செய்” என ஆணை பிறந்தது, ஆர்யனிடமிருந்து.

——-

மருத்துவமனை வாயிலில் நின்று மிஷால் ருஹானாக்கு கைத்தொலைபேசியில் அழைத்தான்.

“நான் உன்னை பார்க்க வந்தேன், ருஹானா. என்னை உள்ள விடல. நீ எப்படி இருக்கே?”

“நன்றி மிஷால். நான் நல்லா இருக்கேன். உனக்கு ஏன் இந்த சிரமம்?”

“என்ன பேசுறே நீ? உன்னை பத்தி எனக்கு கவலை இருக்காதா? உனக்கு மாத்தி மாத்தி ஏதோ ஒன்னு வருது. அதுக்கு எல்லாம் அவன் தான் காரணம். ஆர்யன் அர்ஸ்லான்”

“அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அதுக்கு எதிர்பதமா அவர் தான் எனக்கு உதவி செய்றார். இந்த கேஸ்ல இருந்து நான் வெளிய வர அவர் தான் தீவிரமா வேலை செய்றார்”

“யாரு? இவானை பார்க்க உன்னை அனுமதிக்காதவனா? அவனா உனக்கு உதவி செய்றான்?”

“உனக்கு அவரை தெரியாது மிஷால். உங்க ரெண்டுபேருக்கும் எப்பவும் முட்டிக்குது. நீ நல்லபடியா அவரை எப்பவும் பார்க்கல. நீ நினைக்கிற மாதிரி அவர் கெட்டவர் இல்ல. நான் பார்த்தவரையில அவர் தன் குடும்பத்தை பாதுகாக்க தான் எல்லாம் செய்றார்ன்னு புரிஞ்சிக்கிட்டேன். முன்னே என்கிட்டே நடந்துகிட்டதும் இவானுக்கு பாதுகாப்பு செய்ய தான்” என ருஹானா நீளமாக ஆர்யனுக்கு ஆதரவாக பேச, மிஷால் அயர்ச்சி அடைந்தான்.

——-

“உன்னோட வண்டி இப்போ கிளம்பிடும். அங்க இருந்து துபாய்க்கு எளிதா போய்டலாம். உன்னோட பயணச்சீட்டுலாம் இதுல இருக்கு” என அவன் கூட்டாளி தர, ஹுசைன் மகிழ்வோடு அதை வாங்கிக் கொண்டான்.

அப்போது கதவை படாரென காலால் உதைத்துக்கொண்டு ஆர்யன் அதிரடியாக உள்ளே வந்தான்.

“ரெடியாகிடு ஹுசைன். நாம போலீஸ் ஸ்டேஷன் போறோம்”

ஹுசைன் திடுக்கிட்டு நிற்க, அவன் ஆட்கள் இருவரும் ஆர்யனோடு மோதினர். அதை பயன்படுத்திக்கொண்டு ஹுசைன் ஜன்னல் வழியே வெளியே குதித்து தப்பியோடினான்.

ஆளுக்கு இரண்டு கராத்தே அடிகளை பரிசளித்து அவர்களை கீழே சாய்த்த ஆர்யன் வெளியே ஓடி வந்தான். சாலையின் இருபுறமும் பார்த்தவனுக்கு ஹுசைன் ஓடிய தடம் தெரியவில்லை.

அப்போது ஒரு கார் கிளம்பும் ஓசை கேட்க அந்த திசையில் ஓடிய ஆர்யன் ஹுசைன் காரில் வேகமாக செல்வதை பார்த்தான். இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்து காரின் சக்கரங்களை குறிபார்த்து சுட்டான்.

வில்வித்தையை விளையாட்டாய் செய்பவனின் குறி தப்புமா? கார் டயர் வெடித்து கார் நின்றுவிட ஹுசைன் இறங்கி ஓடினான் உண்மை சொல்ல அவன் உயிரோடு வேண்டும் என்ற காரணத்தால் அவனை சுடாமல் ஆர்யன் அவனை பின்தொடர்ந்து ஓடினான்

அந்த பகுதியில் பழக்கமான ஹுசைன் சந்துபொந்துகளில் புகுந்து ஓட, ஆர்யனும் விரட்டிக்கொண்டே சென்றான்.

——

ஹுசைனின் இருப்பிடத்தை தேடிக்கொண்டிருந்த தன்வீரின் உதவி அதிகாரி “தன்வீர் பாஸ்! ஹுசைன் போலி பாஸ்போர்ட் மூலமா நாட்டை விட்டு வெளியே போய்ட்டான்” என்ற அதிர்ச்சிகரமான செய்தியை சொல்ல, தன்வீர் கையிலிருந்த கோப்பை ஓங்கி மேசையில் அடித்தான்.

“எப்படி அவனை நாம தவற விட்டோம்?” என தன்வீர் மேசையை கையால் அடித்தவன் “இதை எப்படி நான் ருஹானாட்ட சொல்ல போறேன்?” என்று கத்த வாசலில் அரவம் கேட்டது.

ஒரு பெண் காவல் அதிகாரியோடு வாசலில் நின்றிருந்த ருஹானா காதில் விழுந்த செய்தியை நம்ப முடியாமல் இடமும் வலமுமாக தலையை அசைத்தாள்.  

அவள் அருகே ஓடி வந்த தன்வீர் “இது இதோட முடிஞ்சிடாது ருஹானா. வெளிநாட்டுக்கு போய் கண்டிப்பா ஹுசைனை நாங்க சீக்கிரமே பிடிச்சிடுவோம். அவன் எங்க கிட்டே இருந்து தப்பிக்க முடியாது”  என்று சமாதானம் சொல்ல “உங்களால பிடிக்க முடியலனா?” கண்களில் நீர் நிறைய ருஹானா கேட்டாள்.

“இவானோட நிலைமை என்ன ஆகும்?” ருஹானா வினவ தன்வீரிடம் பதில் இல்லை.

அங்கிருந்த பெண் காவல் அதிகாரி “ருஹானா மேம் இப்போ என்கூட வரணும்” என திரும்ப சிறைக்கூடத்திற்கு கூப்பிட “நான் கூட்டிட்டு வரேன்” என தன்வீர் சொன்னான்.

ருஹானாவின் பரிதாப தோற்றத்தில் கலங்கிய தன்வீர், ‘எப்படி அவளுக்கு ஆறுதல் சொல்ல?’ என யோசிக்க, அந்த நேரம் அழுத்தமான காலடியோசை கேட்டது. 

ருஹானாவும் தன்வீரும் மற்ற காவல் அதிகாரிகளும் வாசலை நோக்க ஆர்யன் ஹுசைனை இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

ருஹானா புரியாமல் பார்க்க, தன்வீர் பிரமிப்பாக பார்க்க, ஹுசைனை தன்வீரிடம் தள்ளிய ஆர்யன் “இவன் தான் அந்த சமூக விரோத கும்பலோட தலைவன், ஹுசைன். இவன் உங்ககிட்டே ஏதோ சொல்லணுமாம். அப்படித்தானே ஹுசைன்?” என கேட்க, முகத்தில் அடிவாங்கிய காயங்களோடு இருந்த ஹுசைன் அதை தலையாட்டி ஆமோதித்தான்.

ஆர்யன் ருஹானாவை கடமையை முடித்த நிறைவோடு பார்க்க, ருஹானாவிற்கு உடல் சிலிர்த்தது. அவளின் கண்ணீர் சுமந்த கண்களும் அவனை தேவதூதனாய் நன்றியுடன் பார்த்தன.

(தொடரும்)

Advertisement