Advertisement

“நீங்க இவானை பார்த்துக்கங்க. என்னை நினைச்சி அவன் வருத்தப்படாம கவனிச்சிக்கங்க. நீங்க அவன் பக்கத்தில் இருந்தா மட்டும் தான் நான் இல்லாத குறையை அவன் உணர மாட்டான்”

ஆர்யன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க “ஒருவேளை நான் திரும்பி வர முடியாம போனா….” என ருஹானா சொல்ல “அதெல்லாம் நடக்கவே நடக்காது. நான் சொல்றேன் தானே, நான் எல்லாம் சரி செய்றேன்னு” என வேகமாக சொன்னான்.

“நான் உங்களை நம்புறேன். இவானை விட்டு பிரிய மாட்டேன்னு அவனுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாத்த முடியலயேன்னு தான் எனக்கு கவலை”

அவள் வார்த்தைகள் அவன் நெஞ்சில் அம்புகளாய் வந்து குத்தியது.

“நீயும் இவானும் சீக்கிரமே ஒன்னு சேர்வீங்க. அதை மட்டும் நினைவில் நிறுத்து. வேற எதையும் யோசிக்காதே”

சந்திப்பு நேரம் முடிந்தது என பெண் காவலர் வந்து சொல்ல ஆர்யன் கிளம்பினான். 

“நான் இப்போ போகணும். ஆனா திரும்பி வருவேன்” 

ருஹானா இவானின் படத்தை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, ஆர்யன் வெளியே நடந்தவன் ருஹானா தந்த விதைகளை கையில் எடுத்து அவற்றை பார்த்துக்கொண்டே எட்டு வைத்தான்.

குனிந்து கொண்டே சென்றவன் வாசிமோடு எதிரெதிரே நின்றான்.

“ஆர்யன் அர்ஸ்லான்!”

ஆர்யன் நிமிர்ந்து பார்க்க அங்கே பார்வை பொறிகள் பறந்தன. இமைகள் இமைக்க மறந்தன.

“நீ செஞ்ச வேலை சரியா இருக்கான்னு நீயே பார்க்க வந்தியா?”

ஆர்யன் கண்களை பார்த்து குற்றம் சாட்டிய வாசிம் “ருஹானாவுக்கு நடந்ததுக்கு வேற யாரோ காரணம்ன்னு நான் நம்ப மாட்டேன். உன்னோட திட்டம் தான் இது. இதை நீ தான் நடத்தி இருக்கே! ருஹானாவுக்கு இவானோட கஸ்டடி கிடைச்சதுக்கு பழிவாங்க இதை செய்ற நீ!”

ஆர்யன் கோபமாக முறைக்க “உன்னோட பயமுறுத்தல் என்னை ஒன்னும் செய்யாது. உன்னோட இருட்டு உலகம் எனக்கு தெரியும்” என சொல்லிவிட்டு வாசிம் உள்ளே செல்ல, ஆர்யன் வேகமாக வெளியே சென்றான்.

நேராக தன்வீரிடம் சென்ற வாசிம் ருஹானாவின் கைது பற்றிய மற்ற  விவரங்கள் கேட்டு அறிந்தான். காவல்துறை தேடிக்கொண்டு இருக்கும் சமூக விரோதி ஹூசைனின் விவரங்கள் அடங்கிய கோப்பை தன்வீர் எடுத்துக் கொடுக்க வாசிம் அதை கையிலும் வாங்கவில்லை.

“ஹூசைனுக்கும் ருஹானாவுக்கும் துளியளவு கூட தொடர்பு இருக்காது. இது அந்த அர்ஸ்லான் செஞ்ச வேலை, தன்வீர்”

“ஆனா ருஹானா அப்படி இருக்காதுன்னு உறுதியா சொல்றா, கமிஷனர்”

“எப்படி இருக்க முடியாது, தன்வீர். இவானோட கஸ்டடிக்காக அவன் என்ன வேணும்னாலும் செய்வான். ஒரு கமிஷனர் வீட்டையே முற்றுகையிட்டவன் தானே, அவன்? அவன் எந்த வரைமுறைக்கும் அடங்காதவன்”

வாசிம் திட்டவட்டமாக சொன்னதை கேட்ட தன்வீர் ருஹானாவை சந்திக்க சென்றான். அவளது உணவு தொடப்படாமல் இருக்க இவானின் படத்தை பார்த்தபடி அவள் சோகமாக அமர்ந்திருந்தாள்.

“ருஹானா! நீ சாப்பிட்டுட்டு வா! நான் உன்கிட்டே பேசணும்”

“எனக்கு பசியில்ல, தன்வீர். நீ என்ன கேட்கணும்?”

“கமிஷனர் வீட்ல இருந்து நீ அர்ஸ்லான் மாளிகைக்கு போன பின்னாடி ஆர்யன் உன்னை எப்படி நடத்தினான்? உன்மேல கோபப்பட்டானா?”

“அப்படிலாம் இல்லயே. நீ ஏன் அதை கேட்கறே?”

“உறுதியா தெரியாட்டாலும் உன்னை மாட்டிவிட்டது ஆர்யன் தான்னு நாங்க நம்புறோம்”

“கண்டிப்பா இல்ல. அவர் அப்படி செய்ய மாட்டார்”   

“உனக்கு அவன் வக்கீல் அனுப்புனதால அப்படி சொல்றியா, ருஹானா?”

“இல்ல தன்வீர். உனக்கு அவரை தெரியாது. அவரோட நடவடிக்கைகள்ல நேர்மை இருக்கும். அது வெளிய தெரியாது”

தன்வீர் இன்னும் ஒப்புக்கொள்ளாமல் பார்க்க “இவானோட ஒரு பாதி நான். மறுபாதி அவர். நிச்சயமா அவரால அப்படி செய்ய முடியாது” என ருஹானா அழுத்தமாக மறுத்தாள்.

——–

“ஹூசைனை கண்டுபிடிச்சிட்டியா, ரஷீத்?” என போனில் கேட்டபடி ஆர்யன் படியேற “அதான் போயிட்டே இருக்கோம், ஆர்யன்” என ரஷீத் சொல்ல, பேசியபடியே தன் அறைக்கதவை திறக்க முற்பட்டான்.

“சித்தி எங்க போயிருக்காங்கன்னு என்கிட்டே சொல்லவே இல்லயே. உங்களுக்கு தெரியுமா சாரா ஆன்ட்டி?” என இவான் குரல் கேட்கவும் அவன் அறை நோக்கி நடந்தான்.

“அவங்க சொந்த ஊருக்கு போயிருக்காங்க, மடாபா கிராமத்துக்கு”

“அது ரொம்ப தூரம் தானே, சாரா ஆன்ட்டி? ஏன் அங்கே போனாங்க?”

இவானின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் சாரா விழிக்க, ஆர்யன் உள்ளே சென்றான்.

“இதோ சிங்கப்பையா இது உன் சித்தி உனக்கு கொடுத்தாங்க” என ஆர்யன் விதைகளை நீட்டவும் படுத்திருந்த இவான் ஆவலோடு எழுந்து அமர்ந்தான்.

“ஆஹ்! இது அந்த பூக்களோட விதைகள் ஆச்சே!”

“ஆமா! அவங்க வரதுக்குள்ள உன்னை வளர்க்க சொன்னாங்க”

“நாளைக்கே நான் பெரியப்பா கிட்டே சொல்லி இதை நட்டு வைக்க போறேன்”

“நான் பார்த்துக்கறேன்” என ஆர்யன் சாராவை அனுப்பிவிட்டு இவான் அருகே கட்டிலில் அமர்ந்தான்.

“சித்தி எப்போ வருவாங்க, சித்தப்பா? எனக்கு அவங்களை ரொம்ப தேடுது”

“சீக்கிரம் வந்துடுவாங்க, அக்னி சிறகே!”

“நாங்க சாக்லேட் அக்கா வீட்டுல இருந்தோம்ல, அப்போ சித்தி சொன்னாங்க.. உன் சித்தப்பா உன்னை தேடுவார். நாம போகணும்ன்னு சொன்னாங்க”

ஆர்யனின் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“சித்தப்பா! இப்போ நான் அவங்களை தேடுறேன்னு அவங்களுக்கு தெரியுமா?”

தொண்டையில் அடைத்த ஏதோ ஒன்றை விழுங்கிக்கொண்ட ஆர்யன் “நேரமாகுது.. நீ தூங்கு” என்று சொல்லவும், இவான் அந்த விதைகளை தலையணையின் அடியில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டான்.

இவான் தூங்கவும் தன் அறைக்கு சென்ற ஆர்யன் தன்னிடமிருந்த ஒரு விதையை பார்த்துக்கொண்டே இருந்தான். கதவு தட்டப்படும் ஓசையை கேட்டதும் அதை வேகமாக கால்சட்டை பையில் மறைத்துக்கொண்டான்.

உள்ளே வந்த ரஷீத் “ஹுசைனை கண்டுபிடிச்சிட்டோம். பணம் கொடுத்தா தங்களுக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சொல்றேன்னு ஒத்துக்கிட்டான்” என சொல்ல ஆர்யன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“ஆனா பணத்தை வாங்கிட்டு இப்போ ஓடி ஒளிஞ்சிட்டான்”

“என்ன!” என அமர்ந்திருந்த ஆர்யன் வேகமாக எழுந்து விட்டான்.

“ஒரு குறிப்பும் எழுதி வச்சிட்டு போயிருக்கான்… அவ வாழ்நாள் பூராவும் ஜெயில்ல தான் கழிக்கணும்னு…”

முகம் கோபத்தால் கன்றிப்போக “ஏன் அவன் கேட்ட பணத்தை நீ கொடுக்கலயா?” என ஆர்யன் கேட்டான்.

“இல்ல.. அதை விட அதிகமா கொடுத்தேன். அவன் உங்களை பழிவாங்க இப்படி செய்றான்”

“நம்ம கூட அவனுக்கு என்ன பகை, ரஷீத்?”

“அஞ்சு வருஷம் முன்னே ஸ்கூல், காலேஜ் பசங்களுக்கு போதைப் பொருள் வித்த ஒரு கும்பலை நீங்க போலீஸ்ட்ட பிடிச்சி கொடுத்தீங்க தானே?”

“ஆமா”

“அந்த கும்பலோட ரகசிய கூட்டாளி இந்த ஹுசைன் போல. அப்போ நடந்ததுக்கு இப்போ பழி தீர்க்கறான்”

“டேமிட்” என்று கத்தியபடியே நடந்த ஆர்யன் எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் தெரியும் அவனை பார்த்தான்.

தன்னையே வெறுத்துக்கொண்டவன் முஷ்டி பிடித்து தன் உருவத்தை குத்தினான். கண்ணாடி சில்லு சில்லாக நொறுங்க அத்தனை ஆர்யன் பிம்பங்கள் அதில் தெரிய அவன் ஆத்திரம் இன்னும் அதிகமானது.

ஏற்கனவே கையில் இருந்த காயங்களில் இருந்து இரத்தம் உடைப்பெடுத்தது. ரஷீத் அதிர்ந்து நின்று விட்டான். 

——-

ருஹானா தூங்காமல் இவானின் படத்தை பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்க, அந்த அறையில் மேலும் இரு பெண்களை ஒரு பெண் காவல் அதிகாரி கொண்டு வந்து அடைத்தார்.

இருவரும் ஓயாது ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருக்க, அவர்கள் கூச்சல் எதுவும் ருஹானாவின் காதில் சென்று சேரவில்லை. ‘இரவு நேரமாகி விட்டது. சத்தம் போடக்கூடாது’ என அதிகாரி வந்து அதட்டி சென்றும் அவர்கள் அடங்கவில்லை.

—— 

ஆர்யன் மேல்மாடி தோட்டத்தில் தானும் ருஹானாவும் வைத்த செடியை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.

அழகான சிவப்பு குட்டை கவுனில் லேசாக அலங்கரித்திருந்த சல்மா அவன் பின்னால் வந்து நின்றாள்.

“தூக்கம் வரலயா, ஆர்யன்?”

ஆர்யனிடம் எந்த அசைவும் இல்லை.

“எனக்கும் தான். ருஹானாவை நினைச்சா பாவமா இருக்கு”

ஆர்யன் வானத்தை பார்த்தபடியே நின்றான்.

“ஆனாலும் அவ லக்கி தான். நீங்க ஒரு மலையை போல எப்பவும் அவளை பாதுகாக்கறீங்க. அவளுக்கு ஆதரவா இருக்கீங்க. இன்ஷா அல்லாஹ்! அவ சீக்கிரமே திரும்பி வந்துடுவா”

அவனிடம் இலேசான அசைவு

“எல்லாரையும் பாதுகாக்க உங்களுக்கு எப்படி இத்தனை வலிமை கிடைக்குதோ? உங்க கூட இருக்கிற யாரும் அதிக பாதுகாப்பா உணருவாங்க. இது ரொம்ப அபூர்வமானது” என சல்மா உணர்ந்து சொன்னாள். 

“நம்பிக்கையானவங்க கூட இருக்குறதும், அவங்க நம்மை ஏமாற்றாம இருக்குறதும் தான் முக்கியம்” என ஆர்யன் அவள் புறம் திரும்பி பார்க்காவிட்டாலும் வாய் திறந்து பேசினான்.

அவன் தன்னோடு பேசியதற்கு புளங்காகிதம் அடைந்த சல்மா, அவனுடன்  பேச்சை மேலும் வளர்க்க முயல, ஆர்யன் தொலைபேசி அடிக்க அவள் முகம் சுருக்கினாள்.

“ஹலோ! என்ன!”

“எங்க நடந்தது இது? ஜெயில்லயா?”

“அடிபட்டுடுச்சா? அவங்க சண்டைல இவளுக்கு எப்படி?”

“பீங்கான் தட்டு உடைச்சி வயித்துல குத்திட்டாங்களா? அதுவரைக்கும் போலீஸ் என்ன செஞ்சிட்டு இருந்தாங்க?”

“ரொம்ப ரத்தமா? எந்த ஹாஸ்பிடல்?”

“நான் உடனே வரேன்”

எதிர்முனையிலிருந்து வந்த ஒவ்வொரு பதிலுக்கும் அதிர்ந்து போன ஆர்யன் வேகமாக வெளியே செல்ல “ருஹானாவுக்கு என்ன ஆச்சு?” என சல்மா கேட்டுக்கொண்டே பின்னே வர, அவளை ஒரு கோபப் பார்வை பார்த்தவன் ஓடோடி சென்று விட்டான்.

(தொடரும்)

Advertisement