Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 57  

“நான்.. எனக்கு எதும் தெரியாது. ஏதோ தப்பு நடந்திருக்கு” என ருஹானா கதற, “நீங்க ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க” என காவல் அதிகாரி சொல்ல “நான் சொல்றதை கேளுங்க” என அவள் பாவமாக கேட்டும் அந்த அதிகாரி இணங்கவில்லை. “ப்ளீஸ் எங்க கூட வாங்க! எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க” என அவர் சொல்ல, ருஹானா ஆர்யனை பரிதாபமாக பார்த்தாள்.

அவன் எதும் சொல்லாமல் நிற்கவும் காவல் வண்டியை நோக்கி நடந்தவளை ஒரு கரம் தடுத்தது. தன் தோளில் ஆர்யனின் கையை உணர்ந்து ருஹானா திரும்ப “என்னைப் பார். எல்லாத்தையும் நான் சரிப்படுத்துறேன். பயப்படாதே. என்னவோ தப்பா போயிருக்கு. நான் பார்க்கறேன்” என ஆர்யன் நம்பிக்கை அளிக்க, “ஆமா.. தப்பு தான்!” என்றவளுக்கு இவான் நினைவில் வந்தான்.

“என் அக்கா பையன்.. சின்ன பையன். அவன் கிட்டே சொல்லிட்டு வரேன். இல்லனா என்னை தேடி அவன் ஏங்கிடுவான்” என்று ருஹானா காவல் அதிகாரியிடம் இவானை பார்க்க அனுமதி கேட்டு உள்ளே சென்றாள். 

போனை எடுத்துக்கொண்டு தள்ளி வந்த ஆர்யன் ரஷீத்துக்கு அழைத்தான். “ரஷீத்! எங்க இருக்கே? மாளிகைக்கு சீக்கிரம் வா. இங்க இவான் சித்தியை கூட்டிட்டு போக போலீஸ் வந்துருக்காங்க”

“இதோ வரேன்!” என கார் ஓட்டிக்கொண்டே சொன்ன ரஷீத், “அடச்சே!” என கோபமாக கையை திருப்பு சக்கரத்தில் அடித்தான்.

உள்ளே சென்ற ருஹானா பழங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த இவான் அருகே அமர்ந்தாள்.

“சித்தி! இந்த விதைகளை பார்த்தீங்களா? இது வளர்ந்து பூ பூக்க அதிக நாள் எடுக்கும்னு பெரியப்பா சொன்னாரே!” சங்கு வடிவத்தில் சற்று பெரியதாக இருந்த விதைகளை காட்டினான்.

“இவான் செல்லம்! சித்திக்கு வெளிய முக்கியமான வேலை இருக்கு. நான் முடிச்சிட்டு வரவா? கொஞ்ச நாள்ல திரும்பி வந்துடுவேன்”

சாரா பக்கத்தில் கண்ணீரை அடக்கிக்கொண்டு நிற்க, சமையலறை வாசலில் ஆர்யன் வந்து நின்றான்.

இவான் சோகமாக பார்க்க “என் வேலை முடிஞ்சதும் நான் வந்துடுவேன். நான் இல்லாதபோது நீ நேரத்துக்கு சாப்பிடணும். கவலைப்படக் கூடாது” என்று சொன்னவள் அங்கிருந்த விதைகளில் ஒன்றை கையில் எடுத்து “இந்த செடியை நட்டு தினமும் தண்ணீ ஊத்து. இது வளர்றதுக்குள்ள நான் வந்துடுவேன்” என்றாள்.

அதில் சிலவற்றை எடுத்து அவள் கைகளில் கொடுத்த இவான் “இதை நீங்க வச்சிக்கங்க சித்தி. நீங்க சீக்கிரம் வந்திட்டிங்கனா, நான் கவலைப்பட மாட்டேன்” என்றான்.

பதில் சொல்ல முடியாமல் தலையை ஆட்டிய ருஹானா, அவனை முத்தமிட்டு அங்கிருந்து நகர, சாராவும், நஸ்ரியாவும் அவள் பின்னால் வந்தனர்.

இவானை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு இருவரிடமும் ருஹானா கேட்டுக்கொள்ள, தலையாட்டிய சாரா “உன் முகத்தை பார்த்தாலே நீ குற்றம் செய்யாதவள்னு அவங்களுக்கு புரிஞ்சிடும். உன்னை உடனே விட்டுடுவாங்க” என அவளை தேற்றினார்.

ருஹானா வெளியே வர, கரீமா ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள். “சீக்கிரம் நீ திரும்பி வந்துடுவே. இன்ஷா அல்லாஹ்” என அவள் சொல்ல, ருஹானாவும் “இன்ஷா அல்லாஹ்!” என்றாள்.

“இவானுக்கு இது தெரியாம பார்த்துக்கங்க” என ஆர்யனிடம் சொல்லி நடந்த ருஹானாவை காவல் அதிகாரி வண்டிக்கு அழைத்து சென்றார்.

“யார் இதை செஞ்சிருப்பாங்க, ஆர்யன்? என்னால நம்பவே முடியல. வேணும்னே யாரோ இந்த சின்ன பொண்ணை மாட்டி விட்டுருக்காங்க, பாவம் அப்பாவி இவ” என கரீமா புலம்பினாள்.

ஆர்யன் அவளுக்கு பதில் சொல்லாமல் ருஹானாவிடம் விரைந்தான். “பயப்படாதே! கவலைப்படாதே! சீக்கிரமே உன்னை வெளிய கொண்டுவர நான் வழி கண்டுபிடிச்சிடுவேன்” என அவன் அழுத்தமாக சொல்ல, ருஹானா கண்ணீர் மல்க தலையாட்டினாள். கரீமாவின் முகம் மாறியது.

ருஹானாவை அழைத்து செல்லும் கார் வாசலை தாண்டும்வரை பார்த்திருந்த ஆர்யன் வேகமாக அறைக்கு வந்தான். தன் வழக்கறிஞர் குழுவை போனில் அழைத்து ருஹானாவின் விடுதலைக்கு தேவையானதை உடனே செய்ய சொன்னான்.

அப்போது ரஷீத் உள்ளே ஓடிவர “நீ என்ன சொன்னே என்கிட்டே? எல்லாம் ரத்து செஞ்சிட்டேன்னு சொன்னே தானே! அப்புறம் இது எப்படி நடந்தது?” என ஆர்யன் அவனிடம் இரைந்தான்.

“ஆர்யன்! நான் எல்லாம் ரத்து செய்தேன் தான்.. ஆனா…”

“என்ன குற்றத்துக்கு அவளை மாட்டி விட்டே? அதை சொல்லு முதல்ல”

“இவான் சித்தியோட அடையாள அட்டை வச்சி அவ பேர்ல ஒரு வங்கிக்கணக்கு தொடங்கினேன். அப்படியே ஒரு போன் வாங்கினேன். அதை பயன்படுத்தி போலீஸ் தேடிட்டு இருக்குற ஒரு மோசடி கும்பல் கூட தொடர்பு ஏற்படுத்தி விட்டேன். பண பரிமாற்றம் செய்தேன். போன் அழைப்புகளும் செய்தேன்” என்று சொன்ன ரஷீத் தலைகுனிந்து கொண்டான்.

ஆர்யன் திகைத்து பார்க்க “நீங்க ரத்து செய்ய சொன்னதும் அந்த வங்கிக்கணக்கை மூடினேன். போன் இயக்கத்தையும் நிறுத்திட்டேன். ஆனா அதுக்கு முன்னயே போலீஸ் அந்த தொடர்பை கண்டுபிடிச்சி வந்துட்டாங்க” என ரஷீத் சொல்லவும் ஆர்யனின் அதிர்ச்சி அதிகமானது.

“எப்படி இத்தனை மோசமான குற்றதுல அவளை சிக்க வைப்பே?” என ஆர்யன் கத்த, ‘நீங்க தானே பாஸ் சொன்னீங்க!’ என்ற பார்வையை கொடுத்த ரஷீத் அதை தைரியமாக சொல்லவும் செய்தான், 

“நீங்க உத்தரவு கொடுத்தீங்க. சொன்னபடி நான் செய்தேன்”   

அன்று ஆர்யனின் வெளியே தெரிந்த கோபத்தை பார்த்து தப்பு கணக்கு போட்டுவிட்ட ரஷீத், உள்ளே மறைந்திருந்த அன்பை கவனிக்கவில்லை.

முன்பு அவளை மோசமான எதிரி என்று சொன்னவன் இப்போது அவளது ஒரு முடிக்கு கூட சேதம் ஏற்படக் கூடாது என துடிக்கிறான்.

ரஷீத்தை எதுவும் சொல்ல முடியாமல், தன் அவசர புத்தியை கடிந்துக்கொண்ட ஆர்யன் ஆ என கத்தியபடி கைமுஷ்டியால் சுவற்றில் குத்தினான்.

ரஷீத் அசையவும் இல்லை. அவன் பக்கம் திரும்பவும் இல்லை.

அவனாகவே அருகே வந்த ஆர்யன் “அந்த கூட்டத்தோட தலைவன் பேர் என்ன?” என கேட்டான்.

“ஹூசைன்!”

“அவனை உடனே கண்டுபிடி. போ!”

வேகமாக தலையாட்டிய ரஷீத் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். நான்கு விரல் முட்டிகளிலும் ரத்தம் வடிய ஆர்யன் நிலைகொள்ளாமல் நடக்க ஆரம்பித்தான்.

அவனுக்கு அவள் மேல் நிஜமான அன்பு இருந்தால் அவளை நிலைகுலைய செய்யும் செயலை எப்படி அவனால் செய்ய முடியும்? ‘உன் சித்தியை நான் எப்படியும் பாதுகாப்பேன்’ என இவானுக்கு வாக்குறுதி தந்தவன், அவனிடமிருந்தே அவளை பாதுக்காக்க முடியாதபோது மற்றவர்களிடம் இருந்து அவளை எப்படி காப்பான்?

——–

பலவகையிலும் போராடி வாசிம் வாகிதாவை குற்றமற்றவள் என நிரூபித்து விடுதலை செய்து அவளை வீட்டிக்கு அழைத்து வந்தான். அத்தை தௌலத்திடம் நடந்த உண்மைகளை கூறிய போதிலும், அவரால் வாகிதாவை முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

காலப்போக்கில் அத்தை மாறுவார் என வாகிதாவை தேற்றிய வாசிம், அவளது அண்ணன் அகாபா நகரிலேயே சுற்றிக் கொண்டிருப்பதால் வாகிதாவை கவனமாக இருக்க சொன்னான்.

—– 

கை விலங்கோடு ருஹானாவை காவல் நிலையத்தில் கண்ட தன்வீர் அதிர்ச்சியடைய, அவளுடைய கைதுக்கான ஆவணங்களை பார்த்தவன் “நீ எந்த பேப்பர்லயாவது கையெழுத்து போட்டியா?” என விசாரித்தான். 

தன்வீர் சொன்ன அவள் பெயரில் இருந்த வங்கிக்கணக்கு, தொலைபேசி பற்றிய தகவல் அவளுக்கு தெரியாததாக இருக்க “உன் அடையாள அட்டை இல்லாமல் இதெல்லாம் சாத்தியமே இல்லை” என சகோதரன் சொல்லவும் அவளுக்கு தொலைந்து போன அவளது பணப்பை நினைவுக்கு வந்தது.

“கொஞ்ச நாள் முன்னே தான் என் அடையாள அட்டை இருந்த பர்ஸ்  தொலைஞ்சிடுச்சி, தன்வீர். இவான் கஸ்டடில என் கவனம் இருந்ததால நான் அதை பத்தி போலீஸ்ல புகார் கொடுக்க மறந்திட்டேன்” 

“அது தான் சேரக்கூடாதவங்க கையில அகப்பட்டு இருக்கு. பயப்படாதே. நான் இந்த கேசை பார்த்துக்கறேன்”

“அப்போ இவான்..? என்கிட்டே இருந்து அவனை வாங்கிடுவாங்களா?” என ருஹானா பதற “உன் மேல குற்றம் நிருபிக்கப்படாத வரை நீ நிரபராதி தான். கவலைப்படாதே” என தன்வீர் அவளை ஆசுவாசப்படுத்தினான்.

அப்போது ஒரு பெண் வக்கீல், மேலும் இரு வக்கீல்களோடு வந்து தாங்கள் ருஹானாவுக்காக வந்திருப்பதாகவும், ஆர்யன் அனுப்பி இருப்பதாகவும்   தெரிவிக்க, தன்வீர் ருஹானாவை கேள்வியாக பார்க்க “என்னை வெளிய எடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்னு அவர் சொன்னார்” என ருஹானா சொல்ல தன்வீர் நம்பாமல் பார்த்தான்.

——- 

கரீமா தங்கைக்கு போன் செய்து ருஹானாவின் கைது நிகழ்ச்சியை சொல்ல இருவரும் கொண்டாடினர். அப்போது ஆர்யன் காரை எடுக்க வர போனை வைத்த கரீமா “ருஹானா எப்போ வருவா?” என கவலையோடு கேட்க “தெரியாது” என ஆர்யன் பதில் சொன்னபடி காரில் ஏறினான். 

“இவானை நான் பார்த்துக்கறேன். நீ எப்படியாவது ருஹானாவை கூட்டிட்டு வந்துடு” என கரீமா சொல்ல ஆர்யனின் தலை அசைந்தது.

கார் நகர அவனுக்கு வக்கீலிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ருஹானா மேம் கிட்டே ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டாங்க. கோர்ட்க்கு கொண்டு போகற வரை அவங்க லாக்கப்ல இருப்பாங்க”

“நீங்க என்ன செய்றீங்க அங்க? உங்களால உடனே வெளிய கொண்டு வர முடியாதா?”

“கேஸ் மிக பலமாக இருக்கு. ஜாமீன் கிடைக்கறது கஷ்டம். ஆனாலும் நாங்க முயற்சி….”

போனை கோபமாக நிறுத்திய ஆர்யன் கையை காரில் குத்த போனவன் ஏற்கனவே புறங்கை முழுவதும் இரத்தமாக இருப்பதை பார்த்தான்.

—–

கம்பிகளுக்கு பின்னே தரையில் அமர்ந்து ருஹானா ஏங்கி ஏங்கி அழுதுக்கொண்டு இருந்தாள்.

உள்ளே வந்த ஆர்யனுக்கு உள்ளம் தவித்தது. அவன் காலணி கண்டு நிமிர்ந்தவளின் கண்ணீர் முகம் அவன் நெஞ்சை குத்தியது.

“அழாதே!” என அவன் சொல்ல, எழுந்தவளின் கையில் இருந்த விதைகள் கீழே விழுந்து சிதறியது. ஆர்யனும் ருஹானாவும் அவற்றை சேகரிக்க “என்கிட்டே இருந்து எல்லாம் எடுத்துட்டாங்க. என்னோட சங்கிலி உட்பட…. இது என் பாக்கெட்ல இருந்ததால அவங்க கவனிக்கல” அழுதுக்கொண்டே அவள் சொல்ல ஆர்யனுக்கு அவள் முகத்தை பார்க்க முடியவில்லை.

“இந்த செடி வளர்க்கறது கஷ்டம்ன்னு அம்ஜத் அண்ணன் சொன்னார். அப்படியே வளர்ந்தாலும் நாலு வருசத்துக்கு அப்புறம் தான் பூ பூக்குமாம். இவான்ட்ட அதை நட்டு வளர்க்க சொல்லிட்டு வந்தேன். அது பூ பூக்கும்போது தான் நான் வெளியே வருவேன் போல” என தேம்பினாள்.

“நான் இங்கயே இருந்துட்டா இவான் என்ன ஆவான்?” என அவள் கேட்ட நொடி “அப்படி எதுவும் நடக்காது. எப்பாடுபட்டாவது உன்னை இங்கிருந்து நான் வெளியே எடுப்பேன்” என ஆர்யன் வேகமாக சொன்னான்.

இலேசாக மன அமைதியடைந்த ருஹானா “நீங்க வக்கீலை அனுப்பினதுக்கு நன்றி. இது எல்லாம் என் தப்பு தான்” என ருஹானா சொல்லவும் ஆர்யன் புரியாமல் அவள் முகத்தை பார்த்தான்.

“என்னோட கவனக்குறைவால வந்தது. என் பர்ஸ் காணாம போனதை நான் லேசா விட்டுட்டேன். இப்போ நான் வருத்தப்பட்டு தான் ஆகணும்” என அவள் அழ, ஆர்யன் மறுத்து சொல்ல போனவன் மௌனமாக நின்றான்.  

“நீங்க சொன்னது சரி தான். எனக்கு இவானை வச்சிக்க தகுதி இல்ல. நாம ரெண்டுபேரும் இவான் கூட இருப்போம்ன்னு நான் அவன் கிட்டே சொன்னேன். ஆனா என் வாக்குறுதியை என்னால காப்பாத்த முடியல. எல்லாம் என் முட்டாள்தனத்தால வந்தது. என்னால தான்” 

“உன்னோட தப்பு எதும் இல்ல” என சொல்லி நிறுத்தியவன் அவள் இருகைகளாலும் கண்ணீரை துடைப்பதை பார்த்து மனம் தாங்காமல், தன் பணப்பையை எடுத்து அதிலிருந்து ஒரு சிறிய புகைப்படத்தை உருவி அதை பார்த்துக்கொண்டே அவளிடம் நீட்டினான்.

அழகு குழந்தையின் படத்தை பார்த்தவள் “இது?” என கேட்டாள்.

“இவான்.. அவன் பிறந்த சில நிமிடங்கள்ல எடுத்தது” என ஆர்யன் சொன்னதும் ருஹானா முகம் மலர்ந்தாள்.

“அவனோட முதல் புகைப்படம். என் அண்ணன் இறந்த பிறகு அதை என் வாலட்ல இருந்து நான் வெளிய எடுத்ததே இல்ல. நீ வெளிய வரவரை இது உன்கிட்டே இருக்கட்டும்”

ருஹானா இவான் புகைப்படத்திற்கு முத்தமிட்டாள்.

“இதை பார்த்தா இவானை நீ மிஸ் செய்ய மாட்டே” 

தலையாட்டிய ருஹானா “இவானோட உரிமையை திரும்ப வாங்கிட்டாங்கன்னா என்ன செய்றது?” என கவலைப்பட்டாள்.

“அப்படி எதும் நடக்காது. நான் நடக்கவும் விட மாட்டேன்” 

எல்லை காவலனின் சிறு பிசகு

அவன் மனச்சிறையும் மீறிய 

சிறையறையில் அவள்….!

தவறும் ஒவ்வொரு முறையும்

சிட்டுவை பிரியும் துயரம்….

மீட்டுவிடுவேன் விரைவில்

இணைந்திருப்போம் இவானுடன்..

வாக்கு நிறைவேறுமா?

கண்களை சந்திக்க தைரியம் இல்லை

இதயம் தனது எஜமானரை

இனம் கண்டு கொண்டதால்..!

Advertisement