Advertisement

“காலை இன்னும் கொஞ்சம் அகலமா வச்சிக்கோ, சிங்கப்பையா. காலை தரையில நல்லா அழுத்தமா வை. நெஞ்சு நேரா இருக்கட்டும். இப்போ அம்பை விடலாமா?” என்று ஆர்யன் கேட்க இவான் தலையாட்டினான்.

“ம்… வேகமாக இழுத்து விடு” என ஆர்யன் சொல்ல இவான் அவன் சொன்னபடி அம்பை செலுத்த, அது இரண்டாவது வட்டத்தில் போய் செருகியது.

“ஹை! சித்தப்பா நான் சரியா அடிச்சிட்டேன்” என இவான் குதிக்க தள்ளி நின்ற ருஹானா பெருமையாக சிரித்தாள்.

“ஆமா இவான்! நீ சீக்கிரம் கத்துக்கறே” ஆர்யன் சொல்லவும் பூரித்துப்போன இவான் “சித்தி! பார்த்தீங்களா, நான் எப்படி விட்டேன்னு” என கேட்க “ஆமா செல்லம்! நீ அருமையா எய்ததை நானும் பார்த்தேன்” என அவளும் சொன்னாள்.

“சரி வாங்க இப்போ உங்க முறை” என்று சொல்ல, புருவங்களை சுருக்கிய ருஹானா “என்ன! நானா?” என வினவினாள்.

ஆர்யன் குறும்புடன் பார்த்திருக்க, இவான் “சித்தி! ஒரே தடவை தான் ப்ளீஸ்! இன்னைக்கு ஒருநாள் நான் சொல்றதை நீங்க கேளுங்க” என்றான்.

“நாம இன்னைக்கு அவனை வருத்தப்பட வைக்க கூடாது” என ஆர்யனும் அழைக்க, ருஹானா தயக்கத்துடன் முன்வந்தாள்.

“சரி ஒரே தடவை தான்” என்று சொன்ன ருஹானா வில்லில் அம்பை பொருத்தி குறி பார்த்தாள்.

அதை பார்த்த இவான் “சித்தப்பா! சித்தி நீங்க செய்றது போலவே செய்றாங்க” என்று ஆச்சரியப்பட, “அவங்க நல்லா கத்துக்கிட்டாங்க, இவான்” என்று ஆர்யன் சொல்ல, இருவருக்கும் தோட்ட பிக்னிக் அன்று ஆர்யன் ருஹானாவிற்கு வில் பயிற்சி அளித்தது நினைவுக்கு வந்தது.

அந்த நினைவு தந்த தடுமாற்றத்தில் ருஹானா செலுத்திய அம்பு அவள் காலடியிலேயே விழுந்தது.

வெட்கப்பட்ட ருஹானா “நான் இதை உடைக்கறதுக்கு முன்ன இந்தா நீ வாங்கிக்கோ” என வில்லை இவானிடம் கொடுத்தாள்.

“அதுனால ஒன்னும் இல்ல” என ஆர்யன் அவளை தேற்ற, காவலன் ஒருவன் ஆர்யன் அருகே வந்து “ருஹானா மேம் சகோதரர் போலீஸ் ஆபிசர் வந்திருக்கார். அவங்களை பார்க்கணும்னு சொல்றார்” என்று சொல்ல, “அவரை வரவேற்பு அறையில் உட்கார வை” என ஆர்யன் சொல்லியனுப்பினான்.

“உன் சகோதரன் வந்திருக்கான். வரவேற்பு அறையில் இருக்கான். நீ போய் பார்” என ஆர்யன் ருஹானாவிடம் சொல்ல, அவளுக்கு வியப்பு தாளவில்லை.

தன்வீரையும், வாசிமையும் ஆர்யன் முறைத்த முறைப்பு என்ன! இன்று மாளிகையின் கதவு திறந்து அவனை உள்ளே அனுமதிப்பது, தன்னிடம் பேச வைப்பது அவளுக்கு வியப்பை தந்தது. ஆர்யன் சூறாவளியை தென்றலாக மாற்றிய பெருமை அவளுக்கே என்பதை அவள் உணரவில்லை.

ஆர்யனுக்கு நன்றி சொல்லி ருஹானா உள்ளே செல்ல, அவளையே பார்த்திருந்த ஆர்யனின் கவனத்தை இழுத்தான் இவான்.

:சித்தப்பா! பாருங்க இதையும் நான் சரியா செலுத்திட்டேன்”

“வெல்டன் சிங்கப்பையா!”

——-

“தன்வீர்!”

“ருஹானா எப்படி இருக்கே?”

“நான் நல்லா இருக்கேன், தன்வீர். நீ பதட்டப்படாதே! எல்லாம் சரியா இருக்கு”

“நீ இங்க என்ன செய்றே? அந்த ஆர்யன் உன்னை வலுக்கட்டாயமாக இங்க கூட்டிட்டு வந்துட்டானா?”

“யாரும் என்னை எதுவும் செய்யல, தன்வீர். நான் என் விருப்பமா தான் இங்க வந்தேன்”

“அவன் இப்படி சொல்ல சொல்லி உன்னை மிரட்டி வச்சிருக்கானா?”

“தன்வீர்! நான் சொல்றதை நீ ஏன் கவனிக்க மாட்றே? யாரும் என்னை பயமுறுத்தல. என் விருப்பம் இல்லாம இங்க கூட்டிட்டும் வரல”

“அப்புறம் ஏன் நீ இங்க வந்தே? எல்லாம் நமக்கு சாதகமா தானே போயிட்டு இருந்தது! இவானும் உனக்கு கிடைச்சிட்டான் தானே!”

ஆதங்கப்படும் தன்வீரை அமைதிப்படுத்த ருஹானா முயல, ஆர்யன் வழக்கம் போல பின்னால் வந்து நின்றான்.

“இவான் அவன் சித்தப்பாவை அதிகமா தேடினான். இவானுக்கு என்னையும் அவன் சித்தப்பாவையும் தவிர வேற யாரும் இல்ல. எங்க ரெண்டு பேர் அன்பும் அவனுக்கு தேவை. நாங்க சண்டை போட அவன் காரணமா இருக்கக் கூடாது”

“ஆனா நீ ஆர்யன் அர்ஸ்லானை நம்ப முடியாது, ருஹானா. நீ தப்பு செய்றே”

“நீ நினைக்கிறது போல இல்ல, தன்வீர்” என்று ருஹானா சொல்ல, சலிப்புடன் தலையசைத்த தன்வீர் ஆர்யனை பார்த்துவிட்டான்.

“இன்ஷா அல்லாஹ் நீ நல்லா இருக்கே! உனக்கு எது தேவைனாலும் எப்பனாலும் எனக்கு கால் செய். மொத்த போலீஸ் படையும் நான் கொண்டு வருவேன்” என தன்வீர் அவளுக்கு சொல்வது போல ஆர்யனை மிரட்டினான்.

ருஹானா சம்மதிக்க தன்வீர் விடை பெற்றான். ருஹானா திரும்ப அங்கே ஆர்யன் நிற்பதைப் பார்த்து தர்மசங்கடமடைந்தாள்.

“எல்லாம் சரி தானே?” என ஆர்யன் கேட்க தலையாட்டியவள், “நான் இவானை போய் பார்க்கறேன்” என நகர்ந்தாள்.

“அதுக்கு முன்னே நான் ஒன்னு உன்கிட்டே சொல்லணும்” என பேசிக்கொண்டே அவளுடன் தோட்டம் வந்தான்.

“நீ நேத்து சொன்ன விஷயம் தான். ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்தாச்சி. நீயும் இவானும் அங்க தங்கி இருக்கிற மாதிரி ஆவணங்கள் தயாரிச்சிடலாம். சமூகசேவை நிறுவனத்தோட சிக்கல் தீர்ந்துடும். இவானோட உரிமை உன்கிட்டேயே பத்திரமா இருக்கும்” என ஆர்யன் விவரங்கள் சொல்ல ருஹானா கேட்டுக் கொண்டாள்.

“ஆனா யார் அங்க புகார் கொடுத்ததுன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல. அதுனால இந்த தனி வீடு, இவான் உரிமையோட நிபந்தனை எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்” என ஆர்யன் சொன்னதும் “நான் கவனமா இருப்பேன்” என சொன்ன ருஹானா அவனுக்கு நன்றி தெரிவித்தாள்.

இருவர் கண்களும் கவர்ந்து நிற்க, மேல் மாடியில் இருந்து அம்ஜத்தும், இவானும் எட்டி பார்த்தனர்.

“ருஹானா இங்க வாயேன்! உனக்கு நான் புது மலர்களை காட்றேன்”

“இதோ வரேன், அம்ஜத் அண்ணா!” என சொன்ன ருஹானா “நான் வரேன்” என ஆர்யனிடம் விடை பெற்றாள்.

அவள் பாதி படிகளில் ஏற “ஆர்யன்! நீயும் வா! மேல வா!” என அம்ஜத் அழைக்க, ருஹானா அங்கேயே நின்றாள்.

“ஆமா சித்தப்பா நீங்களும் வாங்க” என இவானும் பாசமாக கூப்பிட, ஆர்யனும் ருஹானாவோடு சேர்ந்து படியேற, அம்ஜத் இவர்களை மகிழ்வோடு பார்த்து சிரித்தான்.

பூந்தோட்டதுக்கு வந்தவர்களுக்கு மலர்ந்த பூக்களை அம்ஜத் காட்டினான்.

“இது நான் போன வாரம் நட்டது. அழகாக இருக்குல. மென்மையானது ஆனா அதே சமயம் வலிமையான செடி..“ என்று சொன்னவன் “ருஹானாவைப் போல” என சிரிப்புடன் சொல்ல ருஹானாவிற்கு வெட்கமானது.

அவள் பக்கத்தில் நின்ற ஆர்யனை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து கொள்ள, ஆர்யன் அந்த மலரையும் ருஹானாவையும் பார்த்தான்.

“நான் இன்னும் ஒன்னு உங்களுக்கு காட்டணும்” என்று சொல்லி காய்கள் போன்ற விதைகளை எடுத்து வந்த அம்ஜத் அவற்றை இவான் கையில் கொடுத்தான்.

“இதும் வளருமா? பூக்குமா?” என இவான் கேட்க “ஆமா விதைகள் என்றாலே நம்பிக்கை தானே!” என இவான் நெற்றியில் முத்தமிட்டான்.

“இது எல்லாமே எனக்கு தானா, பெரியப்பா?” என இவான் கேட்க “ஆமா! உனக்கு தான் வச்சிக்கோ. அப்புறமா நாம சேர்ந்து இதை நடலாம்” என சொல்லவும் “சரி பெரியப்பா! நான் என் செடிக்குலாம் தண்ணீ ஊத்திட்டேன். இப்போ நஸ்ரியா அக்காவுக்கு என் ட்ரைனை காட்ட போகவா?” என அனுமதி கேட்க, மீண்டும் அவனை முத்தமிட்ட அம்ஜத் “போ! போய் விளையாடு” என்றான்.

ஆனந்தமாக குதித்து ஓடும் இவானை ருஹானாவும் ஆர்யனும் சந்தோசமாக பார்த்திருக்க, அம்ஜத் மீண்டும் அழைத்தான் அவர்களை.

“ருஹானா! ஆர்யன்! இந்த செடியை நினைவு இருக்கா? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நட்டு வச்சீங்களே!”

ருஹானா ஆமென தலையாட்ட, ஆர்யன் முகம் சுருங்கியது. ருஹானாவின் மேல் இருந்த கோபத்தில் அந்த செடியை எட்டி உதைத்ததும், பூவை பிடுங்கி நசுக்கியதும் அவனின் அவசர புத்தியும், ஆவேசமும் கண்ணை மறைத்தது இப்போது வருத்தப்பட வைத்தது.

“நல்லா வளர்ந்து வந்திச்சி. பூனைன்னு நினைக்கிறேன், இதை சேதப்படுத்திடுச்சி. ஆனா நாம குணப்படுத்திடலாம். சீக்கிரம் இதுலயும் நிறைய பூ வரும்” என அம்ஜத் சொல்ல ருஹானா எதும் தெரியாமல் தலையாட்ட, கள்ளங்கபடத்துடன் நின்ற ஆர்யனுக்கு அம்ஜத்தின் வார்த்தைகள் முள்ளாய் குத்தியது.

“உடைஞ்சி போனதை சரிபடுத்துறது மிகுந்த சிரமம்” என அம்ஜத் சோகமாக சொல்ல, ஆர்யன் திரும்பி ருஹானாவை பார்த்தான்.

“ஆனா நாம அன்பு காட்டி சிரத்தையாக வளர்த்தா அது சீக்கிரமே நல்லா வளர்ந்துடும். அப்படித்தானே ஆர்யன்?” என தம்பியையும் துணைக்கழைத்தான்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆர்யன் வாய் திறக்க முடியாமல் தலையாட்ட, சிரிப்புடன் அம்ஜத் “நான் போய் உரம் கொண்டு வரேன்” என உள்ளே சென்றான்.

அடிபட்ட செடியின் அருகே சென்று ருஹானா அதன் இலைகளை தடவி கொடுக்க, மாலை மஞ்சள் வெயில் அவளுக்கு தனி சோபையை கொடுக்க, அதை ஒருபக்கம் ரசித்தாலும் ஆர்யனுக்கு மறுபக்கம் ரஷீத்திடம் தாங்கள் விரித்த வலையை நீக்க சொன்னது கவனத்தில் வந்தது.

அப்போது ஜாஃபர் வந்து “போலீஸ் வந்துருக்காங்க. ருஹானா மேமை கேட்கறாங்க” என்று சொல்ல, ஆர்யனுக்கு தூக்கிவாரிப் போட்டது. செடியில் குனிந்திருந்த ருஹானாவும் குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

ஆர்யனுக்கு தொண்டை அடைக்க அவன் கருவிழிகள் வேகமாக உருண்டன.

“என்ன போலீஸா? என்னை தேடி வந்துருக்காங்களா? என்னோட சகோதரனா?” என கேட்க, ஜாஃபர் இல்லையென தலையாட்டினான்.

“அப்போ இவானுக்காக வந்துருக்காங்களா? அப்படி இருக்காதுல?” என பலி கொடுக்க திட்டம் போட்ட ஆர்யனிடமே ருஹானா பாவமாக கேட்க, ஆர்யன் நெஞ்சு குத்தி கிழித்தது.

“எதுக்கு வந்துருக்காங்கன்னு அவங்க சொல்லலையா?” என ருஹானா மீண்டும் கேட்க “அவங்க நேரா உங்களை தான் கேட்டாங்க” என ஜாஃபர் சொல்ல, ஆர்யனுக்கு அந்த குளிரிலும் வேர்த்தது.

“சரி, நானே போய் என்னன்னு பார்க்கறேன்” என ருஹானா செல்ல “நீ இங்கயே இரு, நான் போய் விசாரிக்கறேன்” என வார்த்தைகளை வலிய வரவழைத்துக் கொண்டு சொன்ன ஆர்யன் வேகமாக கீழே இறங்கினான்.

வாசலில் காவல்வண்டியும், சீருடை அணிந்த இரு காவலர்களும் நிற்க “என்ன?” என ஆர்யன் கேட்டான்.

“நாங்க ருஹானா மேமை தேடி வந்துருக்கோம். அவங்களை ஸ்டேஷன் கூட்டிட்டு போய் வாக்குமூலம் வாங்கணும்” என அதில் ஒருவர் சொல்ல “எதுக்காக?” என ஆர்யன் கேட்டான்.

“அவங்க இங்க இருக்காங்களா?”

“நீங்க முதல்ல சொல்லுங்க எதுக்குன்னு”

அதற்குள் ருஹானா ஓடிவந்து வாசலில் நின்றாள்.

“மோசடி செய்த குற்றத்திற்காக அவங்களை நாங்க கைது செய்ய வந்திருக்கோம்”

ஆர்யன் அதிர்ந்து நிற்க, ருஹானாவின் தலையில் இடியே விழுந்தது.

“நான்… நான் எதும் செய்யல” என அவள் கண்ணீர் ததும்ப கூற, அவள் குரல் கேட்டு திரும்பிய ஆர்யன் அவளை பார்த்து செய்வதறியாது நின்றான்.

“நான் எதும் செய்யல” என அவள் மீண்டும் ஆர்யனை பார்த்து சொல்ல, ‘உனக்கு கொடுமை செய்தது எல்லாம் நான் தான்’ என மனதில் சொன்னபடி ஆர்யன் கலங்கி நின்றான்.

 

(தொடரும்)  

Advertisement