Advertisement

மிஷால் கமிஷனரின் வீட்டுக்கு செல்லும் வழியில் பர்வீனை பார்க்க “ஆன்ட்டி! நான் ருஹானாவை பார்க்க தான் போயிட்டு இருக்கேன். நீங்களும் என்னோட வரீங்களா?” என கேட்க “அவ இவானை கூட்டிட்டு அர்ஸ்லான் மாளிகைக்கு போயிட்டாளே!” என அவர் சொல்ல மிஷால் என்ன என விழித்து நின்றான்.

“இவானோட சந்தோசத்துக்காக அவ திரும்பி போயிட்டா. இவான் அவனோட சித்தப்பாவை ரொம்ப தேடினான்னு தௌலத் சொன்னாங்க” என பர்வீன் சொல்ல மிஷால் மனம் உடைந்து போனான்.

——-

“உங்க பழ ஜாமை தான் இவான் அதிகம் மிஸ் செய்தான்” என ருஹானா புன்னகையுடன் சாராவிடம் சொல்ல இவான் வாய் நிறைய உணவுடன் தலையாட்டினான்.

சாரா “இனிய உணவு லிட்டில் சார்! நீங்க இல்லாம வீடு வெறிச்சோடி இருந்தது. நீங்க திரும்ப வந்ததுக்கு அல்லாஹ்க்கு நன்றி” என மகிழ, ஜாஃபரும் “இப்போ தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு” என சொன்னான்.

சல்மா முகத்தை வெறுப்புடன் திருப்பிக் கொள்ள, கரீமா “நீ எங்க எல்லாருக்கும் சந்தோசத்தை கொடுத்திட்டே, ருஹானா டியர்! நாங்க எல்லாரும் இவானை ரொம்ப மிஸ் செய்தோம்” என வேறு வழி இல்லாமல் அவளும் கலந்து கொண்டாள்.

ஆர்யன் இவானையும், ருஹானாவையும் பார்த்திருக்க, அம்ஜத் “நீங்க இல்லாம மாளிகை காலியா இருந்தது, ருஹானா. வீடு மாதிரியே இல்ல. ஒரு கட்டிடம் வீடாக இருக்கணும்னா அதுல அன்பானவங்க இருக்கணும். அப்படித்தானே ஆர்யன்?’ என தம்பியை கேட்டான்.

அண்ணனின் பேச்சில் யோசித்திருந்த ஆர்யன் “ஆமா அண்ணா!’ என அம்ஜத்தை பார்த்து சொன்னவன் ருஹானாவை பார்த்து “அப்படித்தான்!” என்றான்.

அம்ஜத் எப்போதும் ஆர்யனின் உள்எண்ணங்களை ருஹானாவின் முன்னிலையில் போட்டு உடைத்து விடுகிறான். தம்பியை ஒப்புக்கொள்ளவும் வைக்கிறான்.

சங்கோஜமான ருஹானா “நன்றி அம்ஜத் அண்ணா! இங்க திரும்பி வந்ததுல எங்களுக்கும் சந்தோசம் தான்” என்றாள்.

“ருஹானா! இனி இங்க இருந்து போகாதீங்க” என அம்ஜத் வேண்ட, ருஹானா சம்மதிக்க, “போக மாட்டோம், பெரியப்பா. நானும் சித்தியும் இனி இங்க தான் இருப்போம்” என இவான் சொன்னான்.

கரீமாவின் முகம் கறுக்க, சல்மாவின் நாடிகள் வேகமாக துடிக்க துவங்கியது.

சாலட்டுக்கு உப்பு எடுக்க ருஹானா விழைய, அதே காரணத்திற்காக ஆர்யனும் அதே நேரத்தில் கை நீட்ட, இருவர் கைகளும் உப்பு சீசாவை தொடாமல் நீட்டியபடியே இருந்தன.

ஆர்யன் ‘எடுத்துக்கொள்’ என்பது போல தலையசைக்க, ருஹானா எடுத்து உப்பை போட்டுக்கொண்டு, அதை ஆர்யன் பக்கத்தில் வைத்து ‘நீங்க போட்டுக்கங்க’ என்று கண்ணால் கூறினாள்.

அவளின் கண்ணின் ஆழத்தில் மூழ்க போன ஆர்யன், சுதாரித்துக் கொண்டு உப்பை எடுத்தவன் வேகமாக திரும்பி மூச்சை இழுத்துவிட்டான்.

வார்த்தைகளற்ற இந்த பரிபாஷையை பார்த்துக்கொண்டிருந்த சல்மாவிற்கு வயிறு எரிந்து புகைந்தது. முள்கரண்டியின் கூர்முனையை உள்ளங்கையில் அழுத்தி தன்னை தானே காயப்படுத்திக் கொண்டாள்.

“அன்பே! ரொட்டி ஜாம் மட்டுமே சாப்பிட கூடாது. அதை முடிச்சிட்டு ஆம்லெட் சாப்பிடணும்” என ருஹானா சொல்ல, இவானும் தலையாட்ட, இருவரையும் ஆர்யன் கனிவாக பார்த்திருந்தான்.

அவன் கவனத்தை தன் பக்கம் இழுக்க, சல்மா வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் “ஆர்யன்! இன்னைக்கு கம்பெனில டெண்டர் திறக்கனும். அதைப்பற்றி பேசணுமே!” என அவள் சொல்லி முடிக்கும்முன் “நான் இன்னைக்கு ஆபீஸ் வரல” என அவன் முடித்துவிட்டான்.

“ஆனா உங்க கையெழுத்து வேணுமே!” என அவள் மீண்டும் ஆரம்பிக்க “நாளைக்கு பார்க்கலாம்” என்று ஆர்யன் சொல்ல, சல்மா முகம் கூம்பியது.

“சித்தப்பா அப்போ நீங்க இன்னைக்கு வீட்ல தான் இருப்பீங்களா?” என இவான் சந்தோசமாக கேட்க “ஆமா அக்னி சிறகே!” என ஆர்யன் சொன்னதும் “அப்போ நாம வில் பயிற்சி செய்யலாமா?” என ஆவலோடு கேட்டான்.

ஆர்யன் ருஹானாவை பார்க்க அவள் ‘சரின்னு சொல்லுங்களேன்’ என்பதுபோல் தலை சாய்க்க “கண்டிப்பா சிங்கப்பையா!” என ஆர்யன் இவானுக்கு உறுதி அளித்தான். இவானின் முகம் சிரிப்பால் அழகாக மலர்ந்தது.

சல்மாவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. “எனக்கு வயிறு லேசா வலிக்குது” என அவள் எழுந்து கொள்ள, “நான் அவளுக்கு மருந்து கொடுக்கறேன். இனிய உணவு” என கரீமாவும் அவள் பின்னாலேயே எழுந்து சென்று விட்டாள்.

மாடிப்படி இறுதியில் சல்மாவை பிடித்த கரீமா “உனக்கு என்ன பைத்தியமா? ஏன் இப்படி நடந்துக்கறே?” என பல்லை கடித்துக்கொண்டு கேட்டாள். “ஆமா அக்கா! பைத்தியம் தான் பிடிக்கப் போகுது. நேத்து அவ மேலே வெறுப்பா இருந்தவன், இன்னைக்கு அவ அழுக்கு முகத்தை தவிர வேற எங்கயும் பார்க்க மாட்றான்” என சல்மா கத்தினாள்.

“மெல்ல பேசு சல்மா! உனக்கு உன்னை கட்டுப்படுத்த தெரியணும். உன் கோபத்தை மத்தவங்க முன்னே காட்டாதே! இப்போ கிளம்பி ஆபீஸ் போ! அடுத்து புது திட்டம் போடலாம். இந்த மாளிகைல அந்த மாயக்காரிய நான் இருக்க விட மாட்டேன்” என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

——-

வாகிதாவை பார்க்க காவல் நிலையம் வந்த தௌலத் அத்தையின் மூலம் இவானுக்காக ருஹானா அர்ஸ்லான் மாளிகைக்கு திரும்பி சென்றதை தெரிந்துக்கொண்ட வாசிம், அவளது பாதுகாப்பை உறுதிசெய்ய தன்வீரை அவளிடம் பேசி வருமாறு அனுப்பி வைத்தான்.

———–

இத்தனை நாள் விடுபட்ட அலுவலக வேலைகளை தன் அறையில் அமர்ந்து மடிக்கணினியில் ஆர்யன் மும்முரமாக பார்த்துக்கொண்டிருக்க, கதவு தட்டப்படும் ஓசை கேட்டும் அவன் பதில் சொல்லவில்லை. ஆனாலும் கதவு திறக்கப்பட, அந்த சத்தம் கேட்டு முகம் சுருக்கிய ஆர்யன், இவானும் ருஹானாவும் உள்ளே வருவதை பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

பார்த்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவர்களை ஆவலாக ஆர்யன் பார்க்க, இவான் வந்த காரணத்தை சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு ருஹானாவின் விரலை பிடித்து ஆட்டினான்.

ருஹானா சிரிப்புடன் “எப்போ அம்பு விடலாம்ன்னு இவான் ஆர்வமா இருக்கான். நீங்க இல்லாம அவனே அம்பு செய்ய முயற்சி செய்தான். இப்போ உங்க கூட விளையாட ஆசைப்படறான்” என விளக்கி சொல்ல இவானின் ஆவலான முகத்தை பார்த்து ஆர்யனின் முகம் மென்மையானது.

“அம்பு செஞ்சி பார்த்தியா, இவான்?” என ஆர்யன் கேட்க, இவான் சிரிப்புடன் தலையை ஆட்டினான்.

“வில் பயிற்சி ஒரு சாக்கு தான். அவன் உங்க கூட நேரம் செலவழிக்க விரும்புறான்” என அதில் மறைந்திருந்த பாசமிகு காரணத்தை ருஹானா கூற, ஆர்யன் அகமகிழ்ந்து போனான்.

நாற்காலியை விட்டு எழுந்தவன் “அப்போன்னா இப்பவே நாம விளையாடலாம்” என்று சொல்ல “இப்பவேவா?” என இவான் ஆச்சரியத்துடன் ஆனந்தமும் அடைந்தான்.

“ஆமா, நீ இவ்வளவு ஆர்வமா இருக்கியே, இப்பவே கத்துக்கோ” என ஆர்யன் சொல்ல, இவான் ஆர்யனின் கையை பிடித்துக்கொள்ள இருவரும் வெளியே போக நான்கு அடி எடுத்து வைக்க, ருஹானா மென்னகையுடன் செல்லும் அவர்களை பார்த்திருந்தாள்.

திரும்பி பார்த்த இவான் ஓடி வந்து “சித்தி!” என அவள் கையை பிடித்து இழுத்தான். “நீங்களும் எங்களோட வாங்க”

ஆர்யனும் அவளை திரும்பி பார்க்க “நானா? நான் உங்களுக்கு இடைஞ்சலா இருப்பேன்” என ருஹானா சொல்ல, பட்டென்று ஆர்யனிடம் இருந்து மறுப்பு வந்தது.

“அப்படியெல்லாம் நீ இருக்க மாட்டே!”

ருஹானா ஆச்சரியமாக ஆர்யனை நோக்க, ‘நான் உண்மையை தானே சொன்னேன்’ என்பது போல அவன் பார்க்க, ருஹானாவை கைப்பிடித்து அழைத்து வந்த இவான் இன்னொரு கையால் சித்தப்பாவையும் பிடித்துக்கொண்டான்.

மூவரும் சேர்ந்து படியேற, ஆர்யன் இருவருக்கும் கதவை திறந்து விட்டு பின்னால் சென்றான்.

——-

கரீமாவின் போனில் சல்மா அழைக்க, கரீமா சலிப்போடு போனை எடுத்தாள்.

“இப்போ என்ன சல்மா?”

“அக்கா உனக்கு ஒரு நல்ல தகவல் சொல்ல போறேன்”

“என்ன சொல்லு”

“நம்ம இடைஞ்சல்கள் எல்லாம் நாம ஒன்னும் செய்யாமலே அதுவாவே தீரப் போகுது”

“என்ன சொல்றே, சல்மா? புரியற மாதிரி சொல்லு”

“ரஷீத் போன்ல பேசினதை நான் ஒட்டு கேட்டேன். நீ சொன்னது சரி தான். நமக்கு புது ஆரம்பம் தான்”

“என்ன தான் சொல்ல வர்றே? சீக்கிரமா சொல்லு”

“சித்திக்காரி மாளிகைக்கு திரும்பறதுக்கு முன்னாடி அவளை போலீஸ்ல மாட்டிவிட ஆர்யன் பள்ளம் தோண்டியிருக்கான். இப்போ அந்த பிளானை இவங்களால திருப்பி எடுக்க முடியல. அவ நல்லா மாட்டிக்க போறா”

கரீமாவின் முகம் விளக்கு போட்டது போல பளீரென பிரகாசமானது.

——–

Advertisement