Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 56

ருஹானா மீது நிலைத்திருந்த பார்வையை விடுத்து, இவானை கீழே இறக்கி விட்ட ஆர்யன் அவன் முன்னே மண்டியிட்டு “நல்வரவு அக்னிசிறகே!” என்று கனிவாக சொன்னான். இவான் தாவி வந்து திரும்ப அவன் கழுத்தை கட்டிக்கொள்ள இவனும் ஆனந்தமாக அணைத்துக்கொண்டான்.

“இவான் எந்த அளவு என்னை தேடுறானோ அந்த அளவு உங்களையும் தேடுறான்…. இந்த மாளிகையும்…” என ருஹானா மெல்லிய குரலில் உரைக்க, “நீ செய்தது சரியான செயல்” என ஆர்யன் சொல்ல, ருஹானா லேசாக தலையாட்டினாள்.

தகவல் கேள்விப்பட்டு அரக்கபரக்க அக்காவும் தங்கையும் ஓடி வந்தவர்கள் மாடிப்படி வளைவில் நின்று கீழே பார்த்த காட்சியில் நொந்து போனார்கள். திகைத்து போய் நின்ற கரீமாவை “அக்கா!” என சல்மா கூப்பிட அவளால் என்ன என்று கூட கேட்க முடியவில்லை.

ஆர்யன், இவான், ருஹானா நெருக்கமாக நிற்பதை காண சகிக்காமல் சல்மா ஆவேசமாக காலை உதைத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல, கரீமா கீழே ஓடிவந்து இவானை அணைத்துக் கொண்டாள்.

“என் செல்லம்! நான் உன்னை அதிகமா மிஸ் செய்தேன்” என சொன்னவள் ருஹானாவை பார்த்து “நெஜமாவே நீ திரும்ப வந்திட்டியா?” என தன் ஆதங்கத்தை மறைக்க முடியாமல் கேட்டாள்.

ருஹானா பதில் சொல்லாமல் ஆர்யனை பார்க்க, அவன் அப்போது தான் பூமிக்கு வந்தான். தாங்கள் ருஹானாவிற்கு வைத்த பொறி நினைவுக்கு வர திகைத்து போனவன் “நான் உடனே ரஷீத்தை பார்க்கணும். சிங்கப்பையா! நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என சொல்லி ஓட்டமாய் ஓடினான்.

ஆர்யன் வரவேற்பு அறை சோபாவில் அமர்ந்திருந்த ரஷீத், ஆர்யனை பார்த்ததும் வேகமாக எழுந்தான்.

“வேலை முடிஞ்சது, ஆர்யன். இவான் சித்தி செய்ததுக்கு அதிகமா அனுபவிக்க போறா”

“எல்லாத்தையும் நிறுத்து ரஷீத். உடனே திரும்ப வாங்கு” என ஆர்யன் வேகமாக சொல்ல ரஷீத் பேய்முழி முழித்தான்.

“ஆனா?”

“ஆனா.. கீனாலாம் இல்ல. அவளை கைது செய்ய நாம போட்ட திட்டத்தை ரத்து செய், உடனே” என்று ஆர்யன் சொல்ல ரஷீத் மறுத்து பேச முடியாமல் தலை குனிந்து கொண்டான்.

“இவான் திரும்ப வந்துட்டான்” என ஆர்யன் சொன்னதை கேட்டதும் வியப்பாக தலை தூக்கி பார்த்த ரஷீத் “என்ன! இங்கயா.. வந்துட்டானா?” என கேட்டான்.

“ஆமா, அவன் சித்தி கூட்டிட்டு வந்துட்டா” என சொன்ன ஆர்யன் ரஷீத்தின் பார்வையை சந்திக்காமல் திரும்பிக்கொள்ள, ரஷீத்தின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது.

“நான் அத்தனை அடாவடியா நடந்துகிட்ட பிறகும், கேவலமா பேசின பின்னும் திரும்ப வந்துட்டா….. இவானோட சந்தோசத்துக்காக அவனை கூட்டிட்டு வந்துட்டா” என ஆர்யன் உணர்ந்து கூறினான்.

‘நான் தான் அவளை பத்தி சொன்னேனே!’ என ரஷீத்தால் சொல்ல முடியவில்லை. ஆனால் பார்வையால் காட்டினான்.

“அவளோட ஒரு முடியை கூட யாரும் தொடக்கூடாது” என ஆர்யன் அழுத்தமாக சொல்ல, பெருமூச்சு விட்ட ரஷீத் “சரி, நான் பார்த்துக்கறேன்” என வேகமாக வெளியே சென்றான்.

‘என்ன இப்படி அவசர முடிவு எடுத்து பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டோம்!’ என தன்னைத் தானே நொந்துக் கொண்டு ஆர்யன் அறையில் நடை பயில, ருஹானா கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் ஒரு கணம் தலை குனிந்த ஆர்யன், அவளிடம் விளக்கம் பெற முனைந்தான்.

“நீ ஏன் திரும்பி வந்தே?”

“நீங்க ஏன் இவானை வெளிநாட்டுக்கு அழைச்சிட்டு போகாம திரும்பி வந்தீங்களோ அதே காரணம் தான்”

ஆர்யன் அதிர்ந்து போனான்.

“ஏன்னா நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் உணர்ந்தோம்” அவள் சொல்ல அவன் யோசனையாக அவளை பார்த்தான்.

அவன் அவளுக்காகவுமே தானே திரும்பி வந்தான். அப்படியென்றால் அவளும் அவனுக்காகவுமா திரும்பி வந்தாள்?

“இவானுக்கு நாம ரெண்டுபேருமே வேணும். அவனால நான் இல்லாமலும் இருக்க முடியாது. நீங்க இல்லாமலும் இருக்க முடியாது” ஆர்யன் அவளை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருக்க “நான் நினைச்ச மாதிரி தான் நீங்களும் நினைச்சிருப்பீங்க, எனக்கு தெரியும்” என அவள் சொல்ல, அவன் தலை தன்னிச்சையாக ஆடியது.

“நான் இங்க உங்ககிட்ட பேச வந்தது வேற விஷயம். சமூகசேவை நிறுவனம் ஒரு நிபந்தனையோட என்கிட்டே இவானை ஒப்படைச்சாங்க” என ருஹானா சொல்லவும், ஆர்யன் அவள் பேசுவதை கூர்ந்து கவனித்தான்.

“அர்ஸ்லான் மாளிகைல இவான் தங்கக் கூடாதுன்னு அவங்க சொல்லிட்டாங்க. இங்க அவன் நல்லபடியா வளரக் கூடிய சூழல் இல்லங்றது அவங்க முடிவு. பெரிய ரிஸ்க் எடுத்து தான் நான் அவனை இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று தெளிவாக்கிய ருஹானா குரலை தணித்துக்கொண்டு “அவன் இங்க வந்தது அவங்களுக்கு தெரிஞ்சா, நாம இவானோட உரிமையை நிரந்தரமா இழந்துடுவோம்” என அவனையும் சேர்த்துக்கொண்டு சொல்ல, “அச்சோ! இவளையா நாம் தப்பாக நினைத்தோம்’ என ஆர்யனுக்கு மனது அடித்துக்கொண்டது.

அவன் வாய்பேச்சு இழந்து நிற்க “நான் கரீமா மேம் கிட்டே கூட இதை பத்தி சொல்லல. அவங்க வேற யாரிடமாவது சொல்லிட்டாங்கனா சிக்கலாகிடும்” என ருஹானா பயப்பட, ஆர்யனின் வாய்பூட்டு திறந்துக்கொண்டது.

“நீ சரியா தான் செய்திருக்கே. நமக்கிடையே இது ரகசியமா இருக்கட்டும்” என பாராட்டியவன் அவளை ஆழ பார்க்க, அவளின் கூந்தலின் அழகில் அவன் உள்ளம் சிக்கிக்கொண்டது.

அவள் மலர்ந்த முகம் அவனை ரசிக்க வைக்கிறது. புன்னகை ததும்பும் அவள் உதடுகள் அவனை ஈர்க்கிறது.

அவளையே தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவன் சில விநாடிகள் மறந்துவிட்டான். பின் சுய உணர்வுக்கு வந்தவன் தலையை ஆட்டி தன்னை தானே கண்டித்துக்கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.

 

அரும்பியது அறியும் முன்னே

மொட்டு விட்டு மலராது…

பூகம்பமாய் ஒரு தாக்குதலை

அவள் மீது இரக்கமின்றி ஏவிட..

பதிலாய் அவளோ கண்முன்னே

உடைமையை கொண்டு சேர்கிறாள்.

தவறாய் நினைத்து தவறிழைத்த

தன்னையே சாடிக்கொண்டு

அழகியவளை பாதுகாக்க

துடிக்கிறது ரசிக மனம்.

 

“நீ கவலைப்படாதே. இதை நான் பார்த்துக்கறேன். நீ இங்க வந்தது நல்லது” என சொன்னவன் உடனே “ம்.. வந்து.. நீங்க ரெண்டு பேரும், நீயும், இவானும்.. அதாவது.. இவான் இங்க தங்குறது தான் நல்லது” என்று ஒருவழியாக முடித்துவிட்டான்.

அவன் ஆழ் மனதில் உள்ளது வாய் தவறி வெளியே வந்துவிட்டது, அவனே எதிர்பாராமல்.

அவள் மேல் ஆர்யன் கோபப்படலாம், எரிந்து விழலாம். ஆனால் அடி மனதில் அவள் மீது அன்பு நீறு பூத்த நெருப்பு போல மறைந்திருக்கிறது

எந்த காற்று வந்து அதை பற்றி எரிய வைக்குமோ, அப்போது ருஹானாவும் அவனுக்கு இவானை போல இன்றியமையாதவள் என அவன் புரிந்து கொள்வான்.

ருஹானாவிடம் அவன் தகவல் கேட்க தொடங்கும்போது அதட்டலான குரல், மிடுக்கான உடல்மொழியோடு இருந்தவனுக்கு, அவளுடைய நிர்மலமான பேச்சில் மிகுந்த குற்றயுணர்ச்சி மேலிட்டது. பேசி முடிக்கும் தருணம் கனிவான குரல், குழைவான உடல்மொழி என மென்மையாக மாறிப்போனான்.

அவளும் என்ன நடந்தது என உடனே சொல்லி அவனுக்கு புரியும்படி தெளிவான விளக்கம் தந்திருந்தால் இவ்வளவு தூரம் சிக்கலாகி இருக்காது. சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அவளுக்கு எதிராக அமைந்தது. அவனும் விரைந்து தவறாக அனுமானம் செய்து இத்தனை ஆபத்தான முடிவு எடுத்திருந்திருக்க தேவையில்லை.

எது எப்படி நடந்திருப்பினும் அவளை பற்றி ஆர்யனுக்கு தெள்ள தெளிவாக புரிந்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

——–

வாகிதாவின் சகோதரன் அளித்த பொய்யான புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த வாகிதாவை விடுதலை செய்ய வாசிம் சாட்சிகளையும் ஆதாரங்களையும் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தான். அவன் அளித்த ஆறுதலில் வாகிதா காவல்நிலைய லாக்அப்பில் இருந்தாலும் நிம்மதியாக உணர்ந்தாள்.

——–

காலையில் அறை விட்டு வெளியே வந்த ஆர்யன் “என்னுயிரே! எத்தனை அழகா இருக்கே நீ!” எனும் மயக்கும் குரலில் அப்படியே நின்றுவிட்டான்.

கால்கள் தன்னை போல அவனை இவான் அறைக்கு இழுத்து சென்றது. அவன் மனம் பூரித்தது.

“இரு, உன் காலரை சரி செய்றேன்” என ருஹானா இவானுக்கு சட்டையை மாட்டியவள் அவன் கையை பிடித்துக்கொண்டு “வா அன்பே! சாப்பிட கீழே போகலாம்” என கூப்பிட்டாள்.

வாசலில் அவர்களை பார்த்துக்கொண்டு நின்றிருந்த ஆர்யனை பார்தததும் அவள் முகமும் மலர, அதை பார்த்துக்கொண்டே இவானை நோக்கிய ஆர்யன் “சிங்கப்பையா! சீக்கிரமாவே எழுந்திட்டியா?” என கேட்டான்.

சித்தியிடம் அவன் ஒரு கை இருக்க, ஆர்யன் அருகே வந்து மற்றொரு கையால் சித்தப்பாவின் விரல்களை பற்றிக்கொண்டான்.

“முன்ன மாதிரி நாம சேர்ந்து உட்கார்ந்து காலை உணவு சாப்பிடறதுக்கு அவன் ஆசையா இருக்கான்” என சின்ன சிரிப்புடன் ருஹானா கூற, இவான் வேகமாக பலமுறை தலையாட்டினான்.

“இனி எப்பவும் அப்படித்தான் சாப்பிட போறோம்” என இவானிடம் சொன்ன ஆர்யன் ருஹானாவையும் பார்த்தான்.

மூவரும் கை கோர்த்தபடி ஒன்றாக உணவு மேசையை அடைய, பற்பல ஆசைக் கோட்டைகள் கட்டி வைத்திருந்த சகோதரிகள் இருவரும் மனம் வெதும்பி போயினர்.

அம்ஜத் அவர்களை ஆவலுடன் வரவேற்க, ஜாஃபர், சாரா, நஸ்ரியாவின் முகங்களிலும் சிரிப்புக்கு பஞ்சமில்லை.

—–

Advertisement