Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 55

ருஹானாவின் அடையாள அட்டையை பயன்படுத்தி ஆர்யன் தன்னை என்ன செய்ய ஆணையிடுகிறான் என்பதை புரிந்து கொண்ட ரஷீத் ஆர்யனை நம்ப முடியாமல் பார்த்தான். “நிஜமா தான் சொல்றீங்களா, ஆர்யன்? என்ன இருந்தாலும் அவ இவானோட சித்தி! “

“அப்படி நினைச்சி அவளை மாளிகைக்குள்ள விட்டது தான் என் தப்பு. இப்போ காலம் கடந்து போச்சி” என்று சொன்ன ஆர்யன் ரஷீத்தின் பார்வையை சந்திக்க முடியாமல் நாற்காலியில் இருந்து எழுந்து அவனுக்கு பின்னால் போய் நின்று கொண்டான்.

“இந்த நொடில இருந்து இவானுக்கு சித்தின்னு யாரும் இல்ல.  நான் சொன்னதை செய், ரஷீத்!” என்று சொல்லிவிட்டு ஆர்யன் ரஷீத்க்கு முன்பாகவே அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

ரஷீத்துக்கு ஒப்புதலே இல்லாவிட்டாலும் எஜமான் சொல்லை மீற முடியாமல் ருஹானாவின் அடையாள அட்டையை கையில் எடுத்துக் கொண்டான்.

                                            ————

தூங்கும் இவானின் தலையை கோதியபடி அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள், ருஹானா.

“என்னை மன்னிச்சிடு செல்லம். உன் சின்ன இதயம் இதெல்லாம் தாங்காதுன்னு எனக்கு தெரியும். உன் வீடு, உன் பெரியப்பா, சாரா ஆன்ட்டி..” என சொல்லி நிறுத்தியவள் “உன் சித்தப்பா… எல்லாரையும் நீ அதிகம் தேடுறே. ஆனா நான் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல. இப்படி நடக்கணும்னு ஆசைப்படவும் இல்ல” என அவள் கண்ணீர் விட, லேசாக தூக்கம் கலைந்த இவான் “சித்தப்பா!” என்றான்.

ருஹானா அவனை தட்டிக் கொடுத்து தூங்க வைக்க, “சித்தப்பா, நான் இங்க இருக்கேன்” என தூக்கத்தில் உளறியபடியே இருந்தான். அவனின் தவிப்பு காண சகியாமல் ருஹானாவின் உள்ளம் பரிதவித்தது.

——-

காலையில் எழுந்ததும் இவான் ஜன்னலோரம் நின்றுக்கொண்டு கன்னத்தில் கை வைத்தபடி வெளியே பார்த்துக்கொண்டே இருந்தான். வாகிதாவுக்கு காலை உணவு தயாரிப்பில் உதவி செய்துவிட்டு வரவேற்பறைக்கு வந்த ருஹானா அவனை பார்த்து மேலும் கவலையடைந்தாள்.

“வா அன்பே! சாப்பிடலாம்”

“சித்தி! என்னை விட்டு பிரிய மாட்டேன்னு  சித்தப்பா வாக்கு கொடுத்தாரே! ஆனா ஏன் இன்னும் அவர் வரல? சொல்லுங்க சித்தி, இன்னைக்கு வந்துடுவார் தானே?”

ருஹானா பதில் சொல்லாமல் அழ, “சித்தி! கவலைப்படாதீங்க. நான் வருத்தமா சொல்லல. நானும் சித்தப்பா போல உறுதியானவன் தான். நான் காத்திருப்பேன். இன்னைக்கு வரலனா, சித்தப்பா நாளைக்கு கண்டிப்பா வந்துடுவார். எனக்கு தெரியும்” என ஆறுதல் சொன்னவனின் பார்வை, வெளியே இருந்து உள்ளே வரும் பாதையை விட்டு அகலவில்லை.

இழப்புகளில் இருந்து 

மீளும் சிறு வண்டு

அறிந்ததெல்லாம் காக்கும்

அரண் அவனை தான்..!

அன்பின் அரவணைப்பில்

ஆறுதலாய் இருப்பினும்

பாதுகாப்பவன் உரைத்த

சத்திய வாக்கு

அவனின் வரவை

உறுதியாய் நம்ப செய்ய..

வாசலில் விழி பதித்திருக்கும்

அக்னி சிறகு..!

——–

மேல் மாடி தோட்டத்தில் நின்று விடியலை வெற்று பார்வையுடன் பார்த்திருந்த ஆர்யனை சகோதரிகள் இருவரும் அணுகினர். அவர்கள் காலை வணக்கத்திற்கு ஆர்யனிடம் எந்த அசைவும் இல்லை.

“இவான் பற்றி எதும் தெரிந்ததா?”

அவனிடமிருந்து தலையாட்டல் மட்டுமே.

“ஆர்யன் டியர்! நான் எதாவது செய்ய முடியுமா? எதுனாலும் சொல்லு, செய்றேன். நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா, ருஹானா கிட்டே…“ என கரீமா சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் ஆர்யன் “அதை நான் பார்த்துக்கறேன். அவள் பேர் இனி இந்த அர்ஸ்லான் மாளிகைல கேட்கக் கூடாது” என சத்தமாக சொன்னான்.

முன்னால் நின்ற கரீமா மகிழ்ச்சியை மறைத்துக்கொள்ள திணற, ஆர்யனுக்கு பின்னாலிருந்த சல்மா பல்லைக்காட்டி சிரித்தாள்.

“தப்பு செய்தவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும்” என ஆர்யன் சொல்ல “இப்படிலாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல” என கரீமா ஏற்றிவிட, சல்மா “நீங்க எவ்வளவோ நல்லது செஞ்சீங்க. இப்படி முகுதுல குத்தப்படும்போது தாங்க முடியாது, அது எனக்கு புரியுது. இது மன்னிக்க முடியாத செயல்” என தாளம் தட்டினாள்.

ஆர்யன் முகம் இறுகி அங்கேயிருந்து அகல, கரீமா “ஆர்யனுக்கு அந்த சூனியக்காரி பேர் கூட கேட்க பிடிக்கல, பார்த்தியா சல்மா. சாலையோட வளைவுக்கு நாம வந்துட்டோம். இனி எல்லாமே நாம விரும்பின காட்சிகள்தான் நம்ம கண்ணுக்கு புலப்படும்” என மகிழ்ந்தாள்.

“என்னால காத்திருக்க முடியல, அக்கா!”

“அம்பை ஏவியாச்சி. இனி அது இலக்கை தாக்குறது தான் நாம பார்க்க போறோம். அந்த குப்பை ருஹானாவை தூக்கி போட்டாச்சி. இனி அவ கனவுல கூட நம்ம மாளிகையை பார்க்க முடியாது”

———

ரொட்டியில் ஜாம் தடவி ருஹானா இவானுக்கு தர “சாரா ஆன்ட்டி செய்ற ப்ரூட்ஸ் ஜாம் ரொம்ப நல்லா இருக்கும்ல, சித்தி?” என இவானுக்கு மாளிகையின் உணவு மேசை ஞாபகம் வர, ருஹானா பதில் சொல்வதற்குள், தௌலத் “வாகிதா நீ செய்த ஜாம் குட்டி பையனுக்கு பிடிக்கல போல” என நக்கல் செய்தார்.

“இல்லல்ல..  அவன் அப்படி சொல்லல..” என ருஹானா பதற வாகிதா அவளுக்கு கண்களால் ஆறுதல் அளித்தாள். “உனக்கு நான் பால் கொண்டு வரேன்” என வாகிதா உள்ளே போக வாசிம் பணிக்கு செல்ல தயாராகி எதிரே வந்தான்.

“காலை உணவு தயாரா இருக்கு” என வாகிதா சொல்ல “இல்ல, எனக்கு வேலை இருக்கு. எதும் அவசரம்னா கூப்பிடு” என அவன் வெளியேற, “குடைமிளகாய் இல்லாம பாஸ்தா செய்து வைத்தேன்” என வாகிதா வருத்தத்துடன் முனகினாள்.

வெளியே வந்த வாசிம் சுற்றுமுற்றும் தேட, அப்போது அங்கே வந்த மிஷால் “என்ன தேடறீங்க கமிஷனர்?” என கேட்டான்.

“இங்க ஆர்யன் அர்ஸ்லான் ஆட்களை நிறுத்தி இருந்தான். அவங்க ஒருத்தனையும் காணோமே”

“வேற ஏதாவது திட்டம் போட்டுருப்பாங்க. உங்களுக்கு நேத்து நடந்தது தெரியாதா, கமிஷனர்?”

“இல்லயே, மிஷால். என்ன ஆச்சு?”

“நேத்து நானும், ருஹானாவும் வீடு பார்த்துட்டு இருக்கும்போது அந்த ஆர்யன் அர்ஸ்லான் வந்து ருஹானாவை மிரட்டிட்டு போனான்”

“என்ன துணிச்சல் அவனுக்கு? முதல்ல இங்க வந்து மிரட்டினான். இப்போ அவங்களை பின்தொடர்ந்து போய் வம்பு செய்றான். என்னோட விருந்தாளியை அவமதிக்க அவனுக்கு எப்படி தைரியம் வந்தது? அவனை ஒரு வழி செய்றேன்” என கோபமாக பேசிய வாசிம் காரை எடுத்துக் கொண்டு வேகமாக செலுத்தினான்.

——-

“என்ன ரஷீத் இன்னும் வேலையை தொடங்காம இருக்கே? சீக்கிரம் செய். இவானோட சித்தி எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகனும். நான் அடுத்த கால் செய்றதுக்குள்ள நீ வேலையை முடிச்சிருக்கனும்” என ஆர்யன் போனில் இரைந்து கொண்டிருந்தான்.

பணியாள் வந்து அன்று வந்த கமிஷனர் அவனை தேடி வந்திருப்பதாக தெரிவித்தான். அவனை காத்திருக்க சொல்லி ஆர்யன் கூற, பணியாளும் “சார் பிசியா இருக்கார். காத்திருங்க” என்று வாசிமிடம் சொல்லி விட்டு சென்று விட்டான்.

வீட்டிற்கு முன் இருக்கும் செயற்கை நீரூற்று அருகே வாசிம் கோபமாய் நடக்க, முகத்தை மறைக்கும் ஒரு பெரிய செடி தொட்டியை தூக்கிக்கொண்டு அம்ஜத் அங்கே வந்தான்.

“அலோ! யாரோ இருக்கீங்க! அப்படித்தானே! என்னால உங்கள பார்க்க முடியல, இந்த செடி மறைச்சிட்டு இருக்கு. ஒரு நிமிடம்” என்று அம்ஜத் பேச, வாசிம் கோபம் விடுத்து வியப்படைந்தான்.

செடியை ஒருபக்கமாய் நகர்த்திய அம்ஜத், வாசிமை பார்த்துக் கொண்டே இருக்க, வாசிமாலும் கபடமற்ற அம்ஜத்தின் முகத்திலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.

வாசிமை ஏற இறங்க பார்த்த அம்ஜத்” உங்களை எனக்கு தெரியலயே!” என்று குழப்பமானவன் “ஆனா நீங்க எங்க விருந்தாளி. நல்வரவு உங்களுக்கு” என்று புன்னகைத்தான்.

வாசிமும் “நன்றி, நான் உங்களுக்கு தெரியாதவன் தான். ஆனா விருந்தாளி இல்ல” என சொல்ல, அம்ஜத் யோசிக்க அவனுடைய கையிலிருந்த செடி நழுவ பார்த்தது.

“இது கனமா இருக்கும் போல. நான் உதவி செய்யவா?” என வாசிம் கேட்க அம்ஜத் அவனுக்கு நன்றி சொல்லி மறுப்பு தெரிவிக்கும்போதே தொட்டி கீழே விழுந்து விட்டது.

அம்ஜத் சங்கடமாய் சிரிக்க வாசிமுக்கும் லேசாக சிரிப்பு வந்தது. இருவரும் தரையில் மண்டியிட்டு தொட்டியை நிமிர்த்த முயன்றனர்.

“நாம சேர்ந்து செய்யலாமா?” என வாசிம் கேட்க, “இல்ல, இல்ல.. உங்க மேல அழுக்காகிடும்” என அம்ஜத் சொல்ல,  “பாருங்க, இதோட ஒரு வேர் வெளிய வந்துடுச்சே!” என வாசிம் வருத்தப்பட்டான்.

“அதுக்கு அடிபடலனா ஒன்னும் ஆகாது. பலமா தான் இருக்கு” என அம்ஜத் நம்பிக்கையாய் சொன்னான்.

வாசிம் வியப்பாக பார்க்க “இந்த செடி வலிமையானது. பலவிதமா வேர் பரப்பி இருக்கு. கீழ விழுந்துடுச்சி தான். ஆனா மண்ணோட தான் இருக்கு. அதை திரும்ப நட்டு வச்சிட்டோம்னா காப்பாத்திடலாம்” என அம்ஜத் பேச பேச செடிகொடிகள் மீது இத்தனை அன்புள்ளம் கொண்ட அம்ஜத், வாசிமின் மனதை மிகவும் கவர்ந்தான்.

Advertisement