Advertisement

“என்னை முட்டாளாக்க பார்க்காதே. நீயும் என்னைப் போல தான். இவான் உனக்கு கிடைக்க எது வேணும்னாலும் செய்வே தானே?” என ஆர்யன் கேட்க வெளியே கேட்டு கொண்டிருந்த சல்மா புன்னகைத்தாள்.

“இவானுக்காக நான் எதுவும் செய்வேன். நீயும் அப்படித்தானே?” என மீண்டும் ஆர்யன் வினவ, ருஹானா கண்ணீர் மல்க அவனையே பார்த்திருந்தவள் பதில் அளிக்கவில்லை.

“நீ ஏற்கனவே எல்லாம் செய்திட்டே. என்னை குற்றம் சொல்ற நீயும் அதே மாதிரி தானே இருக்கே!” என சொன்ன ஆர்யன் “இன்னும் ஒன்னு, ரெண்டு நாள்ல இவான் வீட்டுக்கு வந்துடுவான்…. எது அவனுடைய இடமோ அங்க….  என்கிட்டே” எனவும் சொல்ல, ருஹானா தொண்டையில் அடைத்ததை விழுங்கிக் கொண்டாள்.

“நீ உன்னை பத்தி நினைச்சு கவலைப்படு. உன் பின்னால ஒளிஞ்சி நிக்கறவங்க உனக்கு ஆபத்து வரும்போது எப்படி உன்னை காப்பாத்துறாங்கன்னு நானும் பார்க்கறேன்” என ஆர்யன் சவால் விட, எதுவும் சொல்ல முடியாமல் லேசாக தலையாட்டிய ருஹானா வெளியே சென்று விட்டாள்.

நினைத்ததை பேசிவிட்டாலும் ஆர்யன் மனம் திருப்தி அடையவில்லை. ருஹானாவின் கண்ணீர் முகம் அவன் கண்ணில் இருந்து அகலவில்லை.

———

ஆர்யன் சொன்னவற்றை நினைத்தவாறே வீடு வந்த சேர்ந்த ருஹானாவை தௌலத் கோபமாக வரவேற்றார்.

“ஒருவழியா வந்துட்டியா? சின்ன பையனை பார்த்துக்கற வயசா எனக்கு? நின்னாலே தலை சுத்துது”

“வாகிதா இல்லயா, ஆன்ட்டி?”

“அவளா? எப்பவோ வெளிய போனவ இன்னும் வீடு திரும்பல”

“என்னை மன்னிச்சிடுங்க, ஆன்ட்டி”

“குட்டி பையன் குச்சியை வச்சி விளையாடுறேன்னு கைல காயம் பட்டுக்கிட்டான்”

அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை, ருஹானா.

“இவான்!” என்று அழைத்தப்படியே படுக்கையறைக்கு ஓட, அங்கே ஜன்னலில் வாசலை பார்த்தப்படி இவான் நின்றிருந்தான்.

“எங்கே, கையை காட்டு” என அவள் பதற “லேசா சிராய்ப்பு தான் சித்தி. வில், அம்பு செய்ய முயற்சி செய்தேன்.  குச்சி கையை கிழிச்சிருச்சி” என இவான் அசராது சொன்னான். அவன் முகத்தில் கண்ணீர் கறைகள்.

“வலிக்குதா செல்லம்?” என அவள் கையை பிடிக்க “இப்போ இல்ல சித்தி. தௌலத் ஆன்ட்டி பேன்டேஜ் போட்டு விட்டாங்க” என பெரிய பையன் போல பேசினான்.

“கவலைப்படாதே கண்ணே! நாம ரெண்டு பேரும் சேர்ந்து வில் செய்யலாம்” என சொல்லி காயம் பட்ட அவன் விரல் பற்றி முத்தமிட்டாள்.

“சித்தப்பா வர்றதுக்கு முன்னாடி செய்திடலாமா, சித்தி?” என ஆவலோடு கேட்ட இவான் மீண்டும் வாசலை பார்த்து நிற்க, அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு ருஹானா வருத்தப்பட்டு நின்றாள்.

——–

சையத் திறந்த வெளி உணவகம்.

சையத் முன்னே அமர்ந்திருந்த வாசிம் “அவனுக்கு ஒரு அண்ணன் இருக்கார், சையத் பாபா. அவரை நீங்க பார்த்தா அசந்துடுவீங்க. இரண்டு பேரும் கறுப்பு, வெள்ளை போல வித்தியாசமா இருக்காங்க” என சொல்ல சையத்தின் முகம் எந்த பாவனையும் காட்டாமல் இருந்தது.

“ஒவ்வொரு முறையும் நான் அர்ஸ்லானை பார்க்கும்போதும் எனக்கு மண்டைக்குள்ள வெடிக்குது. நரம்பெல்லாம் துடிக்குது” கண்கள் அகல நெற்றி பொட்டில் கைவைத்து கோபமாக சொன்ன வாசிமின் முகம் உடனே மென்மையானது. “ஆனா அவன் அண்ணன் தண்ணீரை போல பரிசுத்தமானவர். அவரை ஒரு தடவை பார்த்தாலே அவரோட வெள்ளை மனசு தெரியுது. அவர் என்னை பார்க்கும்போதே என்னோட மனசுக்குள்ள ஊடுருவி போறார்”

வாசிம் சொல்லிக்கொண்டே போக சையத் தெரியாத கதையை கேட்பது போல கேட்டுக் கொண்டிருந்தார்.

“கெட்டவங்க கூட அவர் கூட பழகினா நல்லவங்களா மாறிடுவாங்க. ஆனா ஆர்யன் அர்ஸ்லான் வேட்டையாடுற மிருகம். ஒரு கறுப்பு பாகத்தையே தனக்குள்ள வச்சிருக்கான். அப்படியே கொடுமையானவனா இருக்கான்”

அப்போது இடையிட்ட சையத் “மகனே! உனக்கு தெரியாது. பலதரப்பட்ட மனிதர்கள் இந்த உலகத்தில இருக்காங்க. பலவிதமான துன்பங்களும் இந்த உலகத்தில இருக்கு. யார் எதை அனுபவிச்சாங்க, எப்படி மாறினாங்கன்னு நமக்கு எப்படி தெரியும்? நீ மனுஷங்களை புரிஞ்சிக்க கத்துக்கணும். ஆர்யன் அர்ஸ்லான்…” என சொல்லும்போது சலிப்புடன் வாசிம் இடையே புகுந்தான்.

“போதும் சையத் பாபா! அவன் ஆதரவற்ற பெண்ணை மிரட்றான். அவன் வாழ்க்கைல முன்னாடி எது நடந்திருந்தாலும் அவனோட செய்கையை நியாயப்படுத்த முடியாது. அவனைலாம் மனுஷங்க கூட உலாவ விடக்கூடாது. கூண்டுல அடைச்சி வைக்கனும். நல்லவங்களையும் அழிச்சிடுவான்” என்று வாசிம் சொல்லிக் கொண்டிருக்கும்போது இத்தனை நேரம் அவன் வசை பாடிய ஆர்யன் அவனுக்கு பின்னால் வந்து நின்றான்.

சையத்தும் ஆர்யனை பார்த்துவிட வாசிம் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தான். “இந்த உலகத்திலயே நான் புரிஞ்சிக்க விரும்பாத கடைசி ஆள் ஆர்யன் அர்ஸ்லான் தான்”

சையத் தனக்கு பின்னால் பார்ப்பதை பார்த்த வாசிம் திரும்பி பார்க்க அங்கே ஆர்யன் நிற்பதை பார்த்து வேகமாக எழுந்தான். இருவரும் வழக்கம் போல ஒருவரையொருவர் முறைத்து நின்றனர்.

——–

இருள் படர்ந்த இரவிலும் இவான் ஜன்னல் வழியே வாசலை பார்த்து அமர்ந்திருக்க, தௌலத் ருஹானாவிடம் “எப்பவும் ஜன்னல் கிட்டயே உக்காந்து இருக்கான். அவன் முகத்தை பார்க்கவே பாவமா இருக்கு. சித்தப்பாங்ற வார்த்தையை தவிர வேற எதுவும் சொல்ல மாட்றான். ஒரு குழந்தையை இந்த அளவுக்கு அவன் வீட்டை தேட வைக்கிறது தப்பு. நான் அவனுக்கு பிடிச்ச மாதிரி ஜாம் செஞ்சி எடுத்துட்டு வரேன். அப்பவாது சிரிக்கிறானா, பார்க்கலாம்” என்று சொல்லி உள்ளே சென்றார்.

இவானையே பார்த்திருந்த ருஹானா அவனை அருகே அழைத்து கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.

——-

சையத் இருவருக்கும் இடையே வந்து நிற்க, வாசிம் “என்ன அர்ஸ்லான் என்னை விட மாட்டியா? இங்கயும் தொடர்ந்து வந்துட்டே!” என்று கிண்டலாக கேட்க, அதற்கு ஆர்யன் பதில் சொல்லாததால்,  “சையத் பாபா! இவனை மாதிரி ஆட்கள் உள்ள வரக்கூடாதுன்னு வாசல்ல எழுதி வைங்க” என சையத்திடம் சொன்னாலும் பார்வை ஆர்யனிடமே இருந்தது.

வாசிமும் பாபா என அழைப்பதை கேட்டு வியந்த ஆர்யன், வாசிமை இன்னும் நெருங்கி வந்து “சையத் பாபா இடத்தில இருக்கறதால நீ உயிர் பிழைச்சே” என்று காட்டமாக சொன்னான்.

ஆர்யனின் அழைப்பை கேட்டு வாசிமும் “பாபா! இவன் என்ன சொல்றான்? உங்களுக்கு இவனை தெரியுமா?” என்று கேட்டான்.

“பாபா! போலீஸ் பேட்ஜ் வச்சிருக்கிற இந்த ரவுடியை உங்களுக்கு தெரியுமா?” என ஆர்யனும் கேட்டான்.

இருவரையும் பார்த்து சையத் “உட்காருங்க! ரெண்டு பேரும் அப்படியே உட்காருங்க! நீங்க ரெண்டு பேரும்….“ என ஏதோ சொல்ல வந்தவர் அப்படியே நிறுத்திக்கொண்டார்.

இருவரும் விறைப்பாக இருந்தாலும் சையத்தின் சொல் பேச்சு கேட்டு எதிரெதிரே அமர்ந்தனர்.

அவர்கள் அமர்ந்ததும் சற்று தள்ளி போய் நின்றுக் கொண்டு அவர்களை பார்த்த சையத் ‘நீங்க ரெண்டு பேரும் சகோதர்கள், எதிரிகள் இல்ல’ என மனதில் சொல்லிக்கொண்டார்.

அப்போது இருவர் தொலைபேசியும் ஏக காலத்தில் அடித்தது.

இருவரும் நேர் பார்வையை விலக்கிக் கொண்டு ஒன்றுப்போல போனை கையில் எடுத்தனர்.

“சொல்லு ரஷீத்!”

“சொல்லு தன்வீர்”

“எல்லா ஏற்பாடும் செய்தாச்சி, ஆர்யன். இவான் சித்தியோட கதை முடிந்தது. நான் உங்களுக்காக மாளிகையில காத்திருக்கேன்”

“வாகிதாவை போலீஸ் கைது செய்திருக்காங்க, கமிஷனர்”

“நான் உடனே வரேன், ரஷீத்”

“நான் உடனே வரேன், தன்வீர்”

சையத் இருவரையும் பார்த்திருக்க, இருவரும் ஒன்றுப்போலவே எழுந்து, ஒருவரையொருவர் முறைத்து விட்டு, சையத்தை பார்த்து தலையை மட்டும் ஆட்டி விடைப்பெற்றனர்.

எதிரெதிர் திசையில் நடந்து காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டி சென்றுவிட்டனர்.

——–

ஜாஃபர் வாசல் கதவை திறக்க, வேகமாக உள்ளே வந்த ஆர்யன் “ரஷீத் எங்கே?” என கேட்டான்.

ஜாஃபர் “உங்களுக்காக ஒரு விருந்தாளி காத்திருக்காங்க, ஆர்யன் சார்!” என புன்னகையுடன் சொன்னான்.

ஆர்யன் சட்டென்று திரும்பி பார்க்க அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

அங்கே சிரித்த முகத்துடன் இவானும், உணர்ச்சி காட்டாத முகத்துடன் ருஹானாவும் நின்றிருந்தனர்.

“சித்தப்பா!” என இவான் அழைக்க, அந்த ஒரு சொல் அமுதமென ஆர்யன் காதை வந்தடைந்தது.

ஓரிரு விநாடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்ற ஆர்யன் “சிங்கப்பையா!” என அவன் அருகே ஓடி மண்டியிட்டு அவனை அணைத்துக் கொண்டான்.

இவான் சித்தப்பா என அழைத்த பாசக்குரலும், ஆர்யன் பார்வையில் இருந்த அன்பும் அவன் பாய்ந்தோடி வந்து அணைத்ததும் கவிதையாய் இனிமையாய் இருந்தது.

ஆர்யன் எத்தனை மூர்க்கமாக நடந்துக்கொண்டாலும், என்ன தவறு செய்தாலும், இவான் மேல் அவன் வைத்திருக்கும் அன்பு உயரியது. அண்ணன் மகன் என்றால் வெண்ணெய் போல உருகி விடுவான்.

இவானும் அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொள்ள, இந்த பாசப்பிணைப்பை ருஹானா கண்ணீர் திரையுடன் நிம்மதியாக பார்த்து நின்றாள்.

அப்போது தான் ருஹானாவை ஏறிட்டு பார்த்த ஆர்யன் அவள் அருகே வரவும், இவானை அப்படியே தூக்கிக்கொண்டு எழுந்து நின்றான்.

இருவருக்கும் மாலையில் ஆர்யன் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதம் மனதில் ஓடியது.

‘இந்த சண்டையை முடிக்கத்தான் நான் விரும்புறேன்’ என ருஹானா கெஞ்சியதும் அதை நம்பாமல் ‘இவான் கிடைக்க நீ என்ன வேணும்னாலும் செய்வே. நீயும் என்னை போல தான்’ என ஆர்யன் இரைந்ததும் நினைவில் வந்தது.

ஆர்யனை இன்னும் நெருங்கிய ருஹானா “நான் உங்களை போல எப்பவும் இருக்க மாட்டேன்” என்றாள்.

அவள் சொன்னதை புரிந்துக்கொண்ட ஆர்யன் அவளுக்கு பதில் சொல்லமுடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ருஹானா மட்டுமே அவன் முன்னே நின்று மாற்று கருத்து சொல்லக் கூடியவள், சொல்ல முடிந்தவள்.

கடைசி வார்த்தை எப்போதும் அவளுடையதே. அதை மனதில் போட்டு சிந்திப்பதே எப்போதும் அவன் வேலை

இவானை அணைப்பிலேயே வைத்திருந்த ஆர்யனின் மனநிலை, கடும்புயலால் தாறுமாறாக ஆடிய கப்பல், கடல் அமைதியானதும் சீராக பயணம் செய்வதைப் போல அமைதியானது.

ஆர்யனது உடைந்து போன உள்ளத்தை ஒட்டவைக்க ருஹானா ஒருத்தியால் தான் இயலும் போலும். அவள் திரும்பி வந்ததுமே அவன் மனம் லேசாகி பறந்தது.

(தொடரும்)

Advertisement