Advertisement

சாராவும், ஜாஃபரும் தூரமாக நின்று இவர்களை பார்க்க “யாரோட பேசுறாரு அம்ஜத் சார்?” என சாரா கேட்க “அன்னைக்கு வந்த போலீஸ் கமிஷனர் கூட” என்று ஜாஃபர் பதில் சொன்னான்.

“மாஷா அல்லாஹ்! வெளியாட்களோட இப்படி பழக மாட்டாரே. இந்த பையன்கூட பழகுனவர் மாதிரி பாசமா பேசிட்டு இருக்கார்” என சாரா வியப்படைய, ஜாஃபரும் “ஆச்சரியமா தான் இருக்கு” என்றான்.

இருவரும் கீழே விழுந்த மண்ணை அள்ளி தொட்டியை நிரப்ப, அம்ஜத் வாசிமிடம் “வேர் வலிமையான இருந்தா எங்கயும் பிடிச்சிக்கும். நிலமே அதிர்ந்தாலும் செடிக்கு ஒன்னும் ஆகாது. தன்னோட பழைய மண்ணோட இருந்தா வேற இடத்தில கூட வளரும்” என வேலை செய்து கொண்டே பேச வாசிமும் மண்ணை அழுத்திக் கொண்டே சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

மேலே தற்செயலாக தனது மடிக்கணினியில் கீழே நடப்பதை பார்த்த ஆர்யன் தன் சகோதரனுடன் வாசிம் சகஜமாக பேசுவதை பார்த்து அதிர்ந்து போனவன் வேகமாக கீழே ஓடி வந்தான்.

அம்ஜத் “யாருமே தான் பிறந்த இடத்தில இருந்து பிரியறது சிரமம். என்னால முடியாது. என்னால பிரிய முடியாது. உங்களால கூட தான். முடியாது தானே?” என கேட்க, வாசிம் “ஆமா” என்று தலையாட்டினான்.

கீழே வந்த ஆர்யன் இருவரும் சிரிப்புடன் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் “என் அண்ணனை விட்டு தள்ளி போ!” என வாசலில் இருந்தே கத்தினான்.

அப்போது தான் அம்ஜத் ஆர்யனின் அண்ணன் என புரிந்து கொண்ட வாசிம், அவன் வந்த காரியம் நினைவிற்கு வர, செடியை விட்டு எழுந்து நின்று ஆர்யனை முறைக்க, அருகே வந்த ஆர்யனும் அவனுடன் மோதும்படி வந்து நின்றான்.

அம்ஜத்தும் எழுந்து இவர்கள் இருவரும் சண்டைக்கோழியாய் சீறி நிற்பதை அதிர்ந்து பார்த்தான். மூவரும் முக்கோணமாய் நிற்க ஆர்யனும், வாசிமும் கண்ணோடு கண் கனல் வீசி நிற்க, அம்ஜத் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி புரியாது நின்றான்.

“இது என்னோட வீடு, ஆபிசர். உன் எல்லை தெரிஞ்சி நடத்துக்க. இங்கே நீ யாரையும் விசாரணை செய்ய முடியாது. என் அண்ணன் பக்கத்துல உன்னை இனி நான் பார்த்தேன்னா உன் உலகத்தையே அழிச்சிடுவேன்” என ஆர்யன் எகிற, “எல்லை தெரியாதவன் நீ தான், அர்ஸ்லான். என்னோட வீட்டுக்கு உன் அடியாட்களை அனுப்பற! என் விருந்தாளியை பயங்காட்றே! வா, நம்ம கணக்கை தீர்த்துக்குவோம்” என வாசிமும் கொதித்தான்.

ஆர்யன் ஆவேசமாக இன்னும் நெருங்க, அம்ஜத் அவன் கையை பிடித்துக் கொண்டான். “ஆர்யன்! நாங்க பேசிட்டு தான் இருந்தோம். கோபப்படாதே. ஒன்னும் தப்பா நடக்கல” என கெஞ்ச, வாசிம் அம்ஜத்தை பார்த்துவிட்டு சற்று குரலை தழைத்தவன் “உனக்கு பிரச்சனை வேணாம்னா என்னோட விருந்தாளி கிட்ட நெருங்காதே” என்றான்.

“எந்த பலமும் இல்லாத பெண்ணை மிரட்றியே, உனக்கு வெட்கமா இல்ல.. ருஹானாவை இனிமேலும் நீ பின்தொடர்ந்து வந்தீனா நடக்கறதே வேற, புரியுதா?” என வாசிம் எச்சரிக்க, ஆர்யனுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.

“வெளிய போ! என் அண்ணன் இங்க இருக்கறதால நீ தப்பிச்சே… இல்லனா..” என ஆர்யன் இரைய, அம்ஜத்தைப் பார்த்து பாசமாக சிரித்த வாசிம், ஆர்யனை ஏறிட்டு ஒரு ஏளன புன்னகையை சிந்திவிட்டு மிடுக்காக திரும்பி நடந்தான்.

அவன் பின்னாலேயே அடிக்க போன ஆர்யனை அம்ஜத் கையை பிடித்து இழுத்து வைத்துக் கொண்டான்.

வாசிம் காரை எடுக்க, இரு சகோதர்களும் அதை பார்த்தபடியே நின்றனர்.

“ஒன்னும் நடக்கலயே, ஆர்யன். ஏன் உனக்கு இத்தனை கோபம்? அவர் எனக்கு உதவி தான் செய்தார். என்னை நம்பு. அவரை எதும் செய்யாதே. உதவி தான் செய்தார்” என அம்ஜத் கெஞ்ச, ஆர்யனின் கோபம் சற்றும் தணியவில்லை.

——

கமிஷனர் வீட்டு தோட்டத்தில் இவான் ஒரு கயிறை மரத்தில் தூக்கி எறிந்தான். அது கீழே விழ, அவன் திரும்ப முயற்சி செய்ய அவனால் அதை மரத்தில் கட்ட முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோர்வடைந்தவன் கயிறை போட்டுவிட்டு தரையில் அமர்ந்து கவலையுடன் காலை கட்டிக் கொண்டான்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ருஹானா அருகே வந்தவள், கையிலிருந்த பாலை அவனுக்கு குடிக்க கொடுத்துக்கொண்டே “என்ன செய்றே, அன்பே!” என புன்சிரிப்புடன் கேட்க “மரத்தில ஊஞ்சல் கட்ட பார்த்தேன், சித்தி. என்னால முடியல. சித்தப்பா இருந்தார்னா நாங்க சேர்ந்து ஊஞ்சல் கட்டி இருப்போம்” என வருத்தமாக சொல்ல, ருஹானாவின் புன்சிரிப்பு மறைந்தது.

“நான் உனக்கு உதவி செய்றேன், செல்லம். அதுக்கு முன்ன தௌலத் ஆன்ட்டி கிட்ட அனுமதி கேட்கனும்” என கூறி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

பின் ஊஞ்சல் கட்டி அவனை ஆட வைத்தவள், “உனக்கு இப்போ சந்தோசமா? பிடிச்சிருக்கா?” என கேட்க, மகிழ்வோடு தலையாட்டிய இவான் “சித்தப்பாவை இங்க கூப்பிடலாமா, சித்தி?” என கேட்டான். ருஹானா பதில் சொல்லவில்லை.

ஊஞ்சல் ஆடிக்கொண்டே “நம்ம ஊஞ்சலை பார்த்தா சித்தப்பா ஆச்சரியப்படுவார்” என இவான் சொல்லவும் ருஹானாவின் போன் அடித்தது.

“ஹையா! சித்தப்பா கூப்பிடுறார்!” என போனை பார்க்காமலே சொன்னான், பள்ளிக்கூடமே போகாத இவான்.

ஆம்! அழைத்தது அவன் சித்தப்பா தான். ருஹானா “நீயே மெதுவா ஆடு. நான் இப்போ வந்துடுறேன்” என சொல்லி போனை எடுத்தவள் சற்று நகர்ந்து சென்று தயக்கத்துடன் “ஹல்லோ!” என்றாள்.

“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே? சாகறதுக்கு வழி தேடுறியா? நான் உன்னை எச்சரிக்கை செய்தேன். ஆனாலும் நீ அடங்க மாட்டேங்கற. விளிம்புல நிற்கறே நீ. இன்னும் ஒரு படி தான். தள்ளிவிட்டா முழுகி போய்டுவே!” என்று அந்த பக்கம் படபடவென ஆர்யன் பொரிந்து கொண்டே இருந்தான்.

எல்லா பிரச்சனைகளுக்கும் அவன் ருஹானாவை தான் காரணமாக நினைக்கிறான். அவனுக்கு அவள் மேல் அத்தனை அன்பு இருப்பதே இத்தனை கோபம் வர காரணம்…….. அவன் மனம் அவளையே சுற்றி வருகிறது…. என அவனுக்கு எப்போது புரியும்?

ஆடிக்கொண்டிருந்த இவானை பார்த்தபடி ருஹானா வாயடைத்துப் போய் நிற்க “உன்னோட நாய்களைலாம் இங்க அனுப்பாதே. இல்லனா அவங்க சாவுக்கு நீ தான் காரணமா இருப்பே!” என்று அவளுக்கு திகிலூட்டிவிட்டு போனை வைத்துவிட்டான்.

முகம் வெளுத்துப்போன ருஹானா அதிர்ந்துப்போய் நிற்க, அங்கே வந்த பர்வீன் “மகளே ருஹானா! என்ன நடந்தது? உனக்கு உடம்பு சரியில்லயா?” என அவளை உலுக்கினார்.

“ஒன்னுமில்ல, பர்வீன் அம்மா! ஏதோ யோசனை” என அவருக்கு சலாம் சொல்லி வரவேற்றவள் அவர் தௌலத்தை பார்க்க செல்ல, தன்வீருக்கு போன் செய்தாள்.

“தன்வீர்! என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா? ஏன்னு தெரியல, இவான் சித்தப்பா எனக்கு போன் செய்து கோபமா கத்துறார்”

“ருஹானா! கமிஷனர் வாசிம் அர்ஸ்லான் மாளிகைக்கு போய் ஆர்யனுக்கு எச்சரிக்கை கொடுத்துட்டு வந்தார், உனக்கு தொல்லை கொடுக்க கூடாதுன்னு. அதான் ஆர்யன் உன்கிட்டே காட்றான்”

“ஒஹ் அப்படியா? நான் உனக்கு அப்புறமா போன் செய்றேன்” என போனை வைத்தவள் வாகிதாவிடம் வந்தாள்.

“வாகிதா! நான் உடனே முடிக்க வேண்டிய வேலை ஒன்னு இருக்கு. நீ கொஞ்ச நேரம் இவானை பார்த்துக்கறியா? நான் வெளிய போயிட்டு வந்துடறேன்” என கேட்க அவளும் சம்மதித்தாள்.

ருஹானா சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு உணவு தயாரிக்க வாசிமுக்கு பிடித்த பன்னீர் வாங்கி வர வாகிதா சென்று விட பர்வீன் பாட்டியுடன் இவான் பேசிக் கொண்டிருந்தான்.

     ——

ஆர்யனின் அலுவலக அறையில் சல்மா ஏதோ ஆவணங்களை காட்டி ஆர்யனுடன் பேசிக் கொண்டிருக்க வெளியே அவனது காரியதரிசி சத்தமாக பேசுவது உள்ளே கேட்டது.

“மேம்! மேம்!! நீங்க இப்படி உள்ள போக முடியாது. சொல்றதை கேளுங்க”

ஆர்யனும், சல்மாவும் திரும்பி வாசலை பார்க்க, காரியதரிசி பின்னே ஓடிவர ருஹானா வேகமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். அவன் அறைக்கு வருவது போல அலுவலக அறைக்கும் நேரே வந்திருந்தாள்.

“சார்! நான் இவங்களை தடுத்தேன். என்னை மீறி உள்ள வந்துட்டாங்க” என காரியதரிசி, மேசைக்கு பின்னே நாற்காலியில் அமர்ந்திருந்த ஆர்யனிடம் மன்னிப்பு கேட்க, மேசை முன்னே விரைப்பாக வந்து நின்ற ருஹானாவை பார்த்தவாறே ஆர்யன் “சரி, இருக்கட்டும்.. நீங்க போங்க” என்று சொல்ல காரியதரிசி வெளியே சென்று விட்டாள்.

ருஹானா ஆர்யனின் பக்கத்தில் நின்ற சல்மாவை பார்த்துவிட்டு ஆர்யனை பார்த்தாள். அந்த கோபத்திலும், அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட ஆர்யன் சல்மாவை திரும்பி பார்த்தான்.

“நானும் வெளிய போறேன். அப்புறமா இந்த வேலையை பார்க்கலாம்” என சொல்லி ருஹானாவை முறைத்தப்படி வெளியே நடந்த சல்மா கதவோரமாக நின்று கொண்டாள்.

“எல்லாம் கட்டுப்பாட்டை மீறி போகுது. அதனால தான் உங்களோட பேச வந்தேன். இதை, இந்த கோபத்தை, மிரட்டலை எல்லாம் முடிவுக்கு கொண்டு வரனும்” என ருஹானா உறுதியாக சொல்ல, “என்ன, மனப்பாடம் செய்துட்டு வந்து ஒப்பிக்கிறியா?” என ஆர்யன் அலட்சியமாக கேட்டான்.

“நீங்க மறுபடியும் மறுபடியும் இதைத்தான் செய்றீங்க. நான் எல்லாத்தையும் சரிசெய்ய பார்க்கறேன்”

நாற்காலியை விட்டு எழுந்து அவள் அருகே வந்த ஆர்யன் “உனக்கு தேவையானது கிடைக்க என்ன செய்ய முடியுமோ அது எல்லாம் நீ செய்ற” என சொல்ல “இல்ல, இந்த சண்டையை முடிக்கறது தான் என் ஒரே விருப்பம். உங்க கூட சண்டை போடற வலிமை எனக்கு இல்ல. நான் உங்களைப்போல கிடையாது” என ருஹானா அழுத்தமாக சொன்னாள்.

Advertisement