Advertisement

“நீ எதுக்கும் கவலைப்படாதே! நான் உன் பக்கத்துல இருக்கேன்” ருஹானாவின் பார்வையை கவனித்த மிஷால் திரும்பி பார்க்க அவனும் திகைத்து நின்றான்.

ஆர்யன் அங்கே விறைப்பாக நின்று கொண்டிருந்தான். ருஹானாவை நோக்கி அடியெடுத்து வைத்தவன் “இதுக்காக தான் இத்தனை நாள் திட்டம் வகுத்திட்டு இருந்தே! அப்படித்தானே?” என கோபமாக கேட்டான்.

“நீ என்ன செய்றே இங்க?” என கேட்ட மிஷாலை ஆர்யன் மருந்துக்கு கூட மதிக்கவில்லை.

அவன் புறம் பார்வையை திருப்பாமல் ருஹானாவை நோக்கியே அனல் பார்வையையும், கேள்வி கணையும் விடுத்தான்.

“திட்டம் போட்டே! காத்திருந்தே! நடிச்சே! இப்போ நிறைவேத்திட்டே!” என அவளை நோக்கி நடந்து கொண்டே சொல்ல மிஷால் அவனை வழிமறித்தான்.

“நான்…” என சொல்ல வந்த ருஹானாவை “இதுக்கு பலனை அனுபவிப்பே!” என்று மிரட்டினான்.

மிஷால் “இங்க பார்! உன் குரைப்புலாம் இங்க ஒன்னும் செல்லுபடியாகாது” என்று சொல்ல, ஆர்யன் அப்போதும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

“மிஷால்! தயவு செய்து நீ வெளியே போய் காத்திரு” என்றாள். மிஷால் நகராமல் ஆர்யனையே பார்த்திருக்க, அவனோ ருஹானாவையே முறைத்திருந்தான்.

“மிஷால்! ப்ளீஸ்!” என மீண்டும் ருஹானா அழுத்தி சொல்லவும், மிஷால் கோபமாக வெளியே சென்றான்.

இன்னும் ருஹானாவின் அருகே வந்த ஆர்யன் “நச்சுப் பாம்பை போல எல்லாத்தையும் திட்டம் போட்டு நடத்திட்டேல?” என்றான்.

கொதித்து எழுந்த ருஹானா “நான் ஆரம்பத்துல இருந்தே இவானோட சந்தோசத்துக்காக தான் எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன்” என்று இரைந்தாள்.

“நீ இவான் மனசுல நஞ்சை தான் தினமும் விதைச்சிருக்கே! நீ அவனோட அம்மா இல்ல! நீ அவனோட ரணம்!! அதோட ஒவ்வொரு நாளும் அந்த ரணத்தை குத்திட்டே இருந்திருக்கே…… எனக்கு எதிரா.. அவனோட குடும்பத்துக்கு எதிரா….”

“நீங்க… நீங்க யார் மேலயும் நம்பிக்கை வைக்க எப்பவும் கத்துக்கவே மாட்டீங்க”

ஆர்யன் கண்கள் கோபத்தில் பெரிதானது.

“நானும் தான் அம்மா இல்லாம வளர்ந்தேன். அல்லாஹ்க்கு நன்றி! நல்லவேளை உங்களை போல மோசமா நான் இல்ல” நெருப்பை அவன் முகத்தில் கொட்டிவிட்டாள்.

ஆர்யன் கண்கள் இடுங்கின. உடல் தடதடத்தது. வாயில் இருந்து வார்த்தை ஏதும் வரவில்லை. அவளை நெருங்கி அவள் கண்களை உற்று நோக்கினான்.

அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இன்றி ருஹானாவின் கண்கள் தாழ்ந்தன. தவறாக பேசிவிட்டோம் என உடனே உணர்ந்து கொண்டாள்.

இதயத்தில் கத்தி செருகியது போல அவள் பேசியது அவனுக்கு வலிக்க, பேச முடியாமல் சில விநாடிகள் நின்றவன் வேகமாக வெளியே சென்றுவிட்டான்.

ருஹானா மூச்சு விடமுடியாமல் தவிக்க அங்கே இருந்த ஒரு தூணை துணைக்கு பற்றிக்கொண்டாள்.

வேகமாக உள்ளே வந்த மிஷால் அவள் நிலைகண்டு பதறிப்போனான்.

“அவன் என்ன செஞ்சான், உன்னை? சொல்லு ருஹானா” என அவன் கேட்க கேட்க அவள் பெரிதாக மூச்சிரைத்தாள்.

பின் அவள் சற்று நிதானமானவுடன் வெளியே வந்தனர்.

“வா, எதாவது சாப்பிட்டு வேற வீடு பார்க்கலாம்” என மிஷால் கூற “எனக்கு பசியில்ல. இதோட இன்னைக்கு போதும். நான் வீட்டுக்கு போறேன்” என ருஹானா மறுக்க, “சரி, வா நானே உன்னை கமிஷனர் வீட்டுல விடுறேன்” என அவன் அழைக்க, “இல்ல, வெளிகாத்து பட்டா நல்லா இருக்கும். நான் நடந்தே போறேன்” என அவள் விடைபெற்று விட்டாள்.

சாலையில் மெல்ல நடந்து செல்லும் அவளையே மிஷால் கவலையுடன் பார்த்து நின்றிருந்தான்.

——–

மேல்மாடி தோட்டத்தில் ருஹானாவின் சொற்கள் தந்த வலி குறையாமல் ஆர்யன் ஆவேசமாக நடந்துக்கொண்டிருக்க, சகோதரிகள் இருவரும் அதற்கும் மேல் உள்ள அறையின் மேன்மாடத்தில் நின்றுக் கொண்டு ஆர்யனின் கோபத்தை ரசித்துக்கொண்டிருந்தனர்.

“ஆர்யன் நார்மலா இல்ல சல்மா. எனக்கு அவனை தெரிஞ்சவரைக்கும் கவனிச்சி பார்த்தா, ஏதோ விரும்பத்தகாத சம்பவம் நடந்திருக்கு”

வேகமாக நடந்து கொண்டிருந்த ஆர்யன் ஒரு செடியை பார்த்ததும் அப்படியே நின்றான். அது ருஹானாவும் அவனும் சேர்ந்து நட்டு வைத்த செடி. அந்த இனிமையான நினைவுகள் இப்போது அவனுக்கு கசந்து வந்தது. ருஹானா ஏமாற்றினாள் எனும் எண்ணம் அவனை பொசுக்கியது.

அந்த தொட்டியை எட்டி உதைத்தான். மண் நிறைந்த பலமான அந்த தொட்டி கீழே விழவில்லை. அசைந்து மட்டுமே கொடுத்தது. அந்த செடியில் அழகாக பூத்திருந்த மலரை ஆ என கத்தியபடியே அப்படியே பிடுங்கினான்.

“அக்கா! என்ன செய்றான் இவன்?”

“ஆத்திரத்தில அறிவிழந்து போய்ட்டான். இனி ருஹானா கதி அதோ கதி தான்”

கையில் நசுக்கி வைத்திருந்த மலரை தூக்கி எறிந்தான். வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.

“ருஹானாவின் கழுத்துக்கு கத்தி நெருங்கிடுச்சி. கூர்மையான கத்தி. இனி அவ தப்பிக்கவே முடியாது, சல்மா”

இருவரும் நிம்மதியாக சிரித்துக்கொண்டனர்.

——–

இருள் கவிழ இவானையும் வாகிதாவையும் கூட்டிக்கொண்டு வாசிம் வீடு திரும்ப வாசலில் நின்ற ஆர்யனின் ஆட்களை பார்த்ததும் அவனுக்கு கோபம் வந்தது.

முறைத்துக்கொண்டே வாசிம் உள்ளே வர அதிகமாக சாக்லேட் சாப்பிடும் இவானை கண்டிக்கும் வாகிதாவை பார்த்து அவன் மனநிலை மாறியது.

“நீ எத்தனை சாப்பிடுறே. அவன் இன்னும் ஒன்னு சாப்பிட்டா என்ன?” என வாசிம் இவானுக்கு பரிந்து வர “அவன் சின்ன பையன். அதிகம் சாப்பிட்டா பல்லுக்கு கெடுதி” என வாகிதா மறுக்க, இதையெல்லாம் வாகிதாவுக்கு தெரியாமல் வாசிம் வீடியோ எடுத்தான்.

“நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிக்க போறீங்களா?” என இவான் கேட்ட கேள்வியில் இருவரும் அதிர்ந்து விழித்தனர்.

மனம் ஆனந்தமடைய வாசிம் “ஏன் அப்படி கேட்கறே, இவான் பையா?” என கேட்க “இல்ல.. நீங்க ரெண்டு பேரும் அம்மா அப்பா மாதிரி சண்டை போட்டுக்கறீங்களே!” என இவான் சிரிக்க, வாகிதா இல்லையென மறுக்க, வாசிம் குறும்பு புன்னகையுடன் “நாங்க தோழர்கள் மட்டும் தான்” என்றான்.

இவான் உள்ளே ஓடிசென்று தௌலத்துடன் பேசிக்கொண்டிருந்த ருஹானாவை கட்டிக்கொண்டான்.

“வீடு திரும்ப இவ்வளவு நேரமா? எல்லாரும் வெளிய சுத்திட்டு வாங்க. வயசானவ நான், கால்வலியோட சமைச்சி வைக்கறேன்” என தௌலத் கோபப்பட “கமிஷனருக்கு திடீர்னு வேலை வந்துடுச்சி. போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டோம்” என வாகிதா எடுத்து சொல்ல, தௌலத்தின் சிடுசிடுத்த முகம் அப்படியே தான் இருந்தது.

வாகிதா கண்களாலேயே ருஹானாவிடம் மன்னிப்பு கேட்டாள்.

——-

அம்ஜத் ஆர்யனை நாடி வர, அண்ணனை பார்த்த அவன் தன் கைகடிகாரத்தை பார்த்தான்.

“அண்ணா! இன்னுமா நீங்க தூங்கல?”

“இவான்… இவானை நான் தேடுறேன். அவனை பார்க்காம என்னால இருக்க முடியல. நீ அவனை கூட்டிட்டு வரேன்னு சொன்னியே, ஆர்யன்!”

“சீக்கிரம் வந்துடுவான் அண்ணா! நீங்க கவலைப்படாதீங்க”

“ருஹானா?” என அம்ஜத் கேட்கவும் ஆர்யன் முகம் திருப்பிக்கொண்டான்.

“ருஹானாவும் வந்துடுவா தானே, ஆர்யன்?” என கேட்க ஆர்யன் பதில் சொல்லவில்லை.

இத்தனை நேரம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த கரீமா வேகமாக வந்து “அம்ஜத் டியர்! உங்களை எங்கலாம் தேடுறது? வாங்க போகலாம்” என அவனை கை பிடித்து அழைத்து சென்று தூரமாக விட்டவள், ஆர்யனிடம் வந்து “இவான் போனதுல இருந்து இப்படி தான் இருக்கார். தூக்கமே இல்ல. மாத்திரை அதிகமா கொடுக்கலாம்ன்னு பார்க்கறேன்” என நடித்தாள்.

“அதுக்கு அவசியம் இல்ல. இவான் சீக்கிரமே வந்துடுவான்” ஆர்யன் சொன்னான்.

“இன்ஷா அல்லாஹ் ஆர்யன். அம்ஜத் நிலமையை நினைச்சா எனக்கு பயமா இருக்கு. இவானை சீக்கிரம் கூட்டிட்டு வந்துடு” என உருவேற்றி சென்றாள்.

சிறுவயதிலேயே பல அரண்களால் பூட்டப்பட்ட ஆர்யனின் உள்ளத்தில்  இவான், அம்ஜத் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.

அண்ணன் மகனுக்காக ருஹானாவை அவன் வாழ்க்கையில் முதலில் ஆர்யன் அனுமதித்தாலும், இவானுக்காக தளராமல் போராடும் ருஹானாவின் உறுதி அவனை அசைத்து பார்த்தது. அவளுடைய நேர்மையும், நற்குணங்களும் அவனை ஈர்க்க, எல்லாமும் சேர்ந்து அவள்பால் அன்பும் ஏற்படுகிறது.

இப்போது எல்லாமே பொய்த்துப் போனதில் அவன் தளர்ந்து அமர்ந்திருந்தான்.

ருஹானாவின் வார்த்தைகள் மட்டுமே அவன் இதயத்தை சென்றடைகிறது. அது நல்லதோ, கெட்டதோ, அதன் பாதிப்பு அவனுக்கு அதிகமாக இருக்கிறது.

——

கட்டிலில் படுத்திருந்த இவான் அன்று வெளியே நடந்தவைகளை சித்திக்கு சொல்ல, அவனை தூங்க வைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்த ருஹானா அதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“சித்தி! நான் அங்கே போலீஸ் பேட்ஜ் மாட்டினேன். பொம்மை பேட்ஜ் இல்ல, சித்தி! நெஜமான பேட்ஜ்”

“உனக்கு அது அழகா இருந்திருக்குமே!”

“ஆமா சித்தி! நாம அடுத்த முறை அங்க போனா, சித்தப்பாக்கும் ஒன்னு வாங்கணும்”

ருஹானாவிடமிருந்து பதில் வராமல் போக “சித்தி!” என சத்தமாக கூப்பிட்டான்.

“நம்ம வீட்டுக்கு போகலாம், சித்தி. எனக்கு எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு”

கண்கலங்கிய ருஹானா அவனுக்கு முத்தமிட்டு தட்டி கொடுத்து தூங்க வைத்தாள்.

——-

ருஹானாவின் பணப்பையை கையிலெடுத்த ஆர்யன் அதை திறந்தான். ருஹானாவும் இவானும் நிற்கும் போட்டோவை பார்த்தவன் அதை வெளியே எடுத்து சில விநாடிகள் பார்த்துவிட்டு பக்கத்தில் வீசினான்.

அடுத்து பச்சை நிற காகித கப்பலை எடுத்தவன் சில நொடிகளுக்கு பின் அதையும் மேசையில் எறிந்தான்.

பின் ஒரு பெண்ணும், சிறுவனும் நிற்கும் இவான் வரைந்த படத்தை வெளியே எடுத்து பார்த்துவிட்டு கோபமாக தூக்கி போட்டான்.

அதன்பின் கிடைத்தது, ருஹானாவின் அடையாள அட்டை. மற்ற பொருட்களை முன்னே வைத்துவிட்டு, அதை மட்டும் கையில் வைத்து பல நிமிடங்கள் ஆர்யன் பார்த்திருக்க, ரஷீத் உள்ளே வந்தான்.

மேசையில் ருஹானாவின் அடையாள அட்டையை பட்டென வைத்தவன் அதை ரஷீத் புறம் நகர்த்தினான்.

ரஷீத் புரியாது பார்க்க “அவ தானே சண்டையை ஆரம்பிச்சி இருக்கா! அதோட பலனையும் அவ தான் அனுபவிக்கணும். அவளுக்கான தண்டனையை கொடு, ரஷீத். உனக்கு என்ன செய்யணும்னு தெரியும் தானே!” என அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

ஆர்யன் மனம் அறிந்து செயல்படுபவன் அல்லவா, ரஷீத்! ஆர்யனுக்கு ருஹானா மேல் ஓடும் மெல்லிய அன்பு இழையை கண்டு வைத்திருந்தவன், இப்போது பெரிதாக திகைத்தான்.

(தொடரும்)

Advertisement