Advertisement

“இதை நான் இவானுக்காக செஞ்சேன். விடுதில அவன் தனியா இருக்கும்போது உங்களோட பிரிவு எவ்வளவு கஷ்டம் தரும்ன்னு எனக்கு தெரியும். அதனால தான் இதை அவனுக்கு கொடுக்க நினைச்சேன்”

அதை பார்த்ததும் ஆர்யன் மனது கனிந்தது. அதை கையில் எடுத்து பார்த்தான்.

“நாம நம்பிக்கை வச்சவங்க நம்மள முட்டாளாக்கும்போது நமக்கு தாங்கவே முடியாது” சல்மா நூலின் முடிச்சை இறுக்கினாள்.

ஆர்யன் முகம் கோபத்தை பூசிக்கொள்ள “ஒரு நாள் வரும். அப்போ துரோகிகள் எரிக்கப்படுவார்கள்” என தலையை ஆட்டிக்கொண்டான்.

சல்மா அகமகிழ்ந்து போக, படத்தில் இருக்கும் இவானை பார்த்தபடியே ஆர்யன் அமர்ந்திருந்தான்.

——-

“சித்தப்பா!” என அழைத்தபடியே இவான் எழுந்துக்கொள்ள, பக்கத்தில் அமர்ந்திருந்த ருஹானா கவலையாக பார்த்தாள்.

“சித்தப்பா என் கனவுல வந்தார். அவர் தோட்டத்துல இருக்கார், சித்தி”

“அது கனவு கண்ணே!”

“என் கூட தோட்டத்துல அம்பு விட சொல்லி தரேன்னு சொன்னாரே!”

அவள் அதற்கு பதில் சொல்வதற்குள் அழைப்பு மணி ஒலிக்க “சித்தப்பா! சித்தப்பா வந்துட்டார்” என கத்தியபடி இவான் கட்டிலை விட்டு இறங்கி ஓடினான்.

பின்னாலேயே ருஹானா ஓட அங்கே மிஷாலுக்கு கதவை திறந்துவிட்டு வாகிதா அவனோடு பேசிக் கொண்டிருந்தாள்.

“சித்தப்பா” என கூப்பிட்டபடியே வந்த இவானை பார்த்த மிஷால் ருஹானாவை கேள்வியாய் பார்க்க அவனுக்கு பதில் சொல்லாமல் அவள் இவானிடம் பேசினாள்.

“உன் சித்தப்பா வேலையா இருக்கார், அன்பே! அதான் அவர் நண்பர்களை உன்னை பார்த்துக்க சொல்லி அனுப்பி இருக்கார்” என ருஹானா இரும்பு கதவுக்கு வெளியே நின்றிருந்த ஆர்யனின் காவலர்களை காட்டி கூறினாள்.

அதற்குள் வாகிதா “இவான் குட்டி, வரியா நாம கேக் செய்யலாம்?” என அவனை உள்ளே கூட்டி சென்றாள்.

“அவன் ஆளுங்க இங்க என்ன செய்றாங்க? நீ ஏன் இதை அனுமதிக்கறே?” என மிஷால் சத்தமாக கேட்க, ருஹானா “மிஷால்! அமைதியா பேசு. இவான் காதில் விழுந்துற போகுது. அவனை மெதுமெதுவா தான் புது வாழ்க்கைக்கு தயார்படுத்தணும்” என்றாள்.

தலையாட்டிக்கொண்ட மிஷால் “நிலத்தரகர் வேலை செய்ற என்னோட தோழனை பார்த்தேன். அவன் சில வீடுகளை பற்றி சொன்னான். நாம முன் பணம் செலுத்த தேவையில்ல”

ருஹானா சங்கடமாக அவனை பார்க்க “கவலைப்படாதே! நீ என் உணவகத்துல வேலை பார்க்கும்போது எளிதா வாடகை கொடுத்திடலாம்” என மிஷால் தைரியம் அளித்தான்.

“மிக்க நன்றி மிஷால்! நீ எனக்கு நிறைய உதவிகள் செய்றே!” என ருஹானா சொல்ல மிஷால் புன்னகைத்தான்.

அப்போது அங்கே வந்த வாகிதாவிடம் ருஹானா “நான் மிஷால் கூட வீடு பார்க்க போறேன். இவானை வெளிய கூட்டிட்டு போக இங்க நிற்கிற மெய்காப்பாளர்கள் அனுமதிக்க மாட்டாங்க….” என சொல்லிக்கொண்டே போக “நான் இவானை பார்த்துக்கறேன். நீ எதையும் யோசிக்காம போயிட்டு வா” என வாகிதா பொறுப்பேற்றுக் கொண்டாள்.

———-

“சல்மா! நல்லது செய்தே! இப்படியே ஆர்யனை நெருங்கி போ”

“அக்கா! முதல்முறையா நான் சொன்னதை காது கொடுத்து கேட்டுருக்கான். எனக்கு சந்தோசமா இருக்கு. என்னோட சின்ன பரிசும் அதுக்கு உறுதுணையா இருந்துச்சி. நாங்க அந்த மாயக்காரிய பத்தி தான் பேசினோம். ஆனாலும் ஆர்யன் இணக்கமா தான் பேசினான்”

“நேத்து என்ன நடந்ததுன்னு சொன்னானா?”

“இல்லக்கா. அதை கேட்டு சுமுகமா போயிட்டு இருந்ததை நான் கெடுக்க விரும்பல”

“சரி விடு. நான் இப்போ சித்திக்காரிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிறேன்” என கரீமா போனை எடுத்தாள்.

“ஹலோ! ருஹானா டியர்! எப்படி இருக்கே! இவான் எப்படி இருக்கான்? உங்களை நினைச்சி தான் நான் கவலையா இருக்கேன்” அன்பொழுக நடித்தாள்.

“கரீமா மேம்! நாங்க நல்லா இருக்கோம். நீங்க வீணா கவலைப்படாதீங்க”

“அப்பாடா! இவான் உன்கூட இருக்குறது எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா?” சல்மா வாய்விட்டு சிரிக்க, அவளை சைகையில் அடக்கிய கரீமா “உனக்கு எதுவும் தேவைன்னா என்கிட்டே தயங்காம கேளு” என்றாள்.

“நன்றி கரீமா மேம்! இப்போதைக்கு எதும் தேவை இல்ல”

“உனக்கும், இவானுக்கும் நான் எதையும் செய்வேன். ஆர்யனுக்கு தெரியாம உங்க ரெண்டு பேருக்கும் வீடு ஏற்பாடு செய்யவா?”

“இல்ல கரீமா மேம். மிஷால் அதை செய்றான். நானும் அவனும் இப்போ வீடு பார்க்கத் தான் போறோம்” ருஹானா கரீமாவின் வலையில் வந்து விழுந்தாள்.

“ஒஹ்! நல்லது, நல்லது! எப்போ எது வேணும்னாலும் எனக்கு கால் செய். உன் நேரத்தை நான் எடுத்துக்க விரும்பல. பை”

போனை மூடிய கரீமா பெருமை பொங்க சல்மாவை பார்த்து சிரித்தவள் “இந்த நல்ல செய்தியை இப்போ ஆர்யனுக்கு தெரியப்படுத்துவோம்” என்றாள்.

———-

“கரீமா மேம் நல்லவங்க இல்லயா?” என மிஷால் பாராட்ட, ருஹானா அதை ஆமோதித்தாள்.

“அவங்க எப்படி தான் ஆர்யனோட வசிக்கிறாங்களோ, தெரியல!” என மிஷால் வியந்து பேச, ருஹானா “வெளிய தெரியுற மாதிரியே உள்ள இருக்காது, மிஷால். கடினமான ஓடுக்குள்ள என்ன இருக்கும்னு யாருக்கு தெரியும்?” என பெருமூச்சு விட மிஷால் புரியாது பார்த்தான்.

இருவரும் வீட்டை நோக்கி நடக்க, பின்னால் ஆர்யனின் காவலன் ஒருவன் இவர்களை பின் தொடர்ந்தான்.

——-

ஆர்யனின் கோபத்தில் எண்ணெய் ஊற்ற அவன் முன்னே நின்ற கரீமா “எங்கயாவது பாதுகாப்பு இல்லாம மாட்டிக்க போறாளோங்கற பயத்துல நான் அவ கிட்டே பேசினேன்” என தூபம் போட்டாள்.

“என்ன சொன்னா அவ?” ஆர்யன் கேட்டான்.

“புது வாழ்க்கை ஆரம்பிக்க போறாளாம். அது மகிழ்வான வாழ்க்கையா இருக்கும்னு நம்புறாளாம். மிஷால் உதவி செய்றானாம்”

மிஷால் பேரை கேட்டாலே தகிக்கும் ஆர்யனுக்கு இப்போது கொழுந்துவிட்டு எரிந்தது. நாற்காலியை விட்டு எழுந்து திரும்பி நின்று கொண்டான்.

“யாருக்கு தெரியும்? ரெண்டு பேரும் திருமணம் செஞ்சிக்குவாங்களோ, என்னவோ?… இவானோட கஸ்டடிக்காக…. உனக்கே தெரியும் தானே, அவளுக்கு கல்யாணமாகிட்டா இவானோட உரிமை நிரந்தரமா அவளுக்கு கிடைச்சிடும்னு”

ஆர்யனின் உள்ளும், புறமும் பற்றி எரிந்தது. நாற்காலியில் மாட்டியிருந்த கோட்டை எடுத்துக்கொண்டு விருட்டென்று வெளியே கிளம்பி விட்டான்.

——-

பல வீடுகளை பார்த்தும் ஒன்றும் சரிவராமல் ருஹானாவும், மிஷாலும் தெருவில் நடக்க “சோர்ந்து போகாதே ருஹானா! எப்படியும் அடுத்து பார்க்க போற வீடு உனக்கு பிடிக்கும் பாரேன்” என சுணங்கிய ருஹானாவின் முகம் பார்த்து மிஷால் உற்சாகமூட்ட முயற்சி செய்தான்.

“வீட்டை பத்தி இல்ல, மிஷால்”

“வேற என்ன, ருஹானா?”

“இவான் அவன் சித்தப்பாவை பத்தியே எப்பவும் கேட்கிறான். நான் அவனுக்கு கெடுதல் செய்றனோன்னு எனக்கு தோணுது. அவன் சித்தப்பா கிட்டே இருந்து அவனை பிரிக்கிறனோன்னு குற்ற உணர்வா இருக்கு”

“அச்சோ! இல்ல ருஹானா! நீ எந்த தப்பும் செய்யல. நீ ஏன் அப்படி நினைக்கறே? உன்னோட பொக்கிஷத்தை நீ பாதுகாக்கற. நீ கொடுத்த வாக்கை நிறைவேற்றுற. சரியா?”

முழுதாக திருப்தி அடையாவிட்டாலும் லேசாக மனம் மாறிய ருஹானாவை வேறு வீடு பார்க்க மிஷால் அழைத்துச் செல்ல ஆர்யனின் ஆள் அங்கும் அவர்களை தொடர்ந்து சென்றான்.

——

பூங்காவிற்கு இவானை கூட்டி செல்லும் வாசிமின் காரையும் யாரோ பின்தொடர, உடன் இருந்த வாகிதா பதட்டமானாள். வாசிம் சாமர்த்தியமாக அவர்களை ஏமாற்றிவிட்டு பூங்காவிற்கு வந்து சேர்ந்தான்.

யாரையும் பார்த்தவுடன் ஈர்க்கும் இயல்புடைய இவானை வாசிமுக்கு மிகவும் பிடித்தது. இவானின் கையை பற்றிக்கொண்டு, அவன் உள்ளம்கவர் வாகிதாவுடனும் ஆனந்தமாக பூங்காவை சுற்றி வந்தான்.

சாய்ந்தாடும் பலகையில் எடை குறைந்த வாகிதாவை தானே மேலே எழுப்பியதை கண்டு இவான் மகிழ, பின்னால் இருந்து இவான் பக்கம் பலகையை சாய்த்த வாசிமுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

சிறுவனுடன் அவனும் சிறியவனாய் மாறி அகாபா நகரத்தின் காவல்துறை தலைவன் என்பதையும் மறந்து குதூகலமாய் வாசிம் ஆனந்தப்பட, அவன் சிரித்த முகம் கண்டு வாகிதாவும் மகிழ்ந்தாள்.

“நான் இவ்வளவு வலிமையாகிட்டேன்னு என் சித்தி பார்த்தாங்கன்னா ரொம்ப சந்தோசப்படுவாங்க” என இவான் சொல்ல “அதுக்கென்ன! இப்பவே நான் உன்னை போட்டோ எடுத்துக்கறேன். உன் சித்திட்ட காட்டலாம், அக்னி சிறகே!” என வாசிம் புகைப்படம் எடுக்க “என் சித்தப்பாவும் என்னை இப்படி தான் கூப்பிடுவார். அவரும் ரொம்ப வலிமையா இருப்பார்” என இவான் சொல்லவும் வாசிமின் முகம் மாறியது.

வாகிதா இவானை கண்காட்ட இயல்புக்கு திரும்பிய வாசிம், வாகிதாவையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டான். இருவர் கைகளையும் பிடித்துக்கொண்டு இவான் நடக்க வாசிமுக்கு கடமை அழைத்தது.

போன் பேசி முடித்த வாசிம் “அக்னி சிறகே! உனக்கு ஒரு சர்ப்ரைஸ்!” என்று கூறி காரில் இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்றான்.

அங்கே அவன் வேலையை பார்க்க, அவனது சக அதிகாரிகள் தலைகொள்ளா சுருட்டை முடியும், வாய்கொள்ளா சிரிப்புமாய் வசீகரமாக இருக்கும் இவானிடம் வலிய பேச்சு கொடுத்தனர்.

அங்கே இருந்த வாக்கிடாக்கி மற்ற போலீஸ் உபகரணங்களை இவான் ஆவலோடு பார்க்க, அவனுக்கு அதை பற்றி எடுத்து சொன்ன அதிகாரி தனது போலீஸ் பேட்ஜையும் மாட்டி விட்டார்.

வாசிம் “நீ போலீஸாக போறீயா?” என கேட்க இவான் அதற்கு பதில் சொல்லாமல் “என் சித்தப்பா கிட்ட இதெல்லாம் நான் சொல்ல போறேன்” என சொன்னவன் வாகிதாவுக்கும் அந்த பேட்ஜை மாட்ட சொன்னான். வாசிம் தனது பேட்ஜையே வாகிதாவுக்கு மாட்ட, இருவர் கண்களும் கலக்க மெய்மறந்து நின்றனர்.

மற்ற அதிகாரிகள் அவர்களை சிரிப்புடன் பார்த்தபடி இவானை வேறு அறைக்கு அழைத்து சென்றனர்.

—-

“இந்த வீடு சின்னதா, உங்க ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி இருக்கு. சூரிய ஒளி உள்ள வருது. பாதுகாப்பான இடமும் கூட. குளிருக்கும் அடக்கமா இருக்கு. நம்ம உணவகத்துக்கும் பக்கத்துல இருக்கு”

ருஹானா ஒன்றும் சொல்லாமல் மிஷாலை பார்த்தாள்.

“இங்க பக்கத்துலயே சின்ன பசங்க பள்ளிக்கூடமும் இருக்கு. இவானை நீ அங்க சேர்க்கலாம். தேவைப்பட்டா நான் கூட தினமும் அவனை பள்ளியில கொண்டு போய் விடுவேன்” கடைசி வாக்கியத்தை மிஷாலே தயக்கமாக சொன்னான் என்றால், ருஹானா அதற்கு சற்றும் இசைவு தெரிவிக்கவில்லை.

“நானே உன்னை உணவகத்துக்கு கூட்டிட்டு போவேன்” மிஷால் சொல்ல சொல்ல ருஹானா வேறு பக்கம் பார்த்தபடி அந்த வீட்டை சுற்றி வந்தாள். மிஷாலின் எதிர்கால திட்டங்கள் அவளுக்கு உவப்பாய் இல்லை.

கூடவே நடந்து வந்த மிஷால் “நீ வார இறுதியில வேலை செய்யணும்னு அவசியம் இல்ல. ருஹானா! இதெல்லாம் சொல்லும்போது கஷ்டமா தெரியும். ஆனா நீ சீக்கிரம் பழகிடுவே பாரேன்” என பேசிக்கொண்டே போக ருஹானாவின் பார்வை ஒரு இடத்தில் நிலைக்குத்தி நின்றது.

Advertisement