Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 54

ஆர்யனும், வாசிமும் மோதுவதற்கு தயாராக நிற்க, ருஹானா செய்வதறியாது திகைத்து நிற்க, சூழ்ந்து நின்ற மெய்காப்பாளர்களும், ரஷீத்தும் எதற்கும் தயாராக நின்றிருந்தனர்.

“நீ என்னோட இடத்துல நிக்கிறே, ஆர்யன் அர்ஸ்லான்! உனக்கு நான் பத்துநொடி அவகாசம் தரேன். அதுக்குள்ள உன் கைத்தடிகளை கூட்டிட்டு இங்க இருந்து போய்டு”

“போலீஸ் பேட்ஜ் வச்சிக்கிட்டு இப்போ கேங்ஸ்டர் மாதிரி நடந்துக்கறியே! நீ நிஜமான போலீஸ் தானே?”

“உனக்கு அதுல சந்தேகமா?” என கேட்டபடி வாசிம் இடுப்பில் இருந்த துப்பாக்கியில் கை வைக்க, ரஷீத்தின் ஆட்களும் உஷாரானார்கள்.

ஆர்யனின் லேசான கண்ணசைவு அவர்கள் துப்பாக்கியை எடுப்பதை தடுத்தது.

“எனக்கு சொந்தமானது ஒன்னு இங்க இருக்கு. அதை வாங்காம நான் போக மாட்டேன். நான் இங்க பிரச்சனை செய்ய வரல, ஆபிசர். எனக்கு குறுக்கே நிற்காதே. இல்லனா…” என ஆர்யன் வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினான்.

“உனக்கு உரிமையானது எதுவும் இங்க இல்ல” என வாசிம் சொல்ல, ஆர்யனின் கோபம் தலைக்கேறியது. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு “இவானை என்கிட்டே கொடுத்துடு. அதுக்கு அப்புறம் நாங்க யாரும் இங்க இருக்க மாட்டோம்” என்றான்.

“ஏற்கனவே அரசாங்கம் சொல்லிட்டாங்க, யாருக்கு இவான் மேல உரிமை இருக்குன்னு. அவங்க கூட தான் அவன் இருப்பான். உன்னால ஒன்னும் செய்ய முடியாது”

வாசிமுக்கு பதில் சொல்லாமல் ருஹானா புறம் திரும்பிய ஆர்யன் “உன்னால என்னை சில மணி நேரம்… இல்லனா.. ஒருநாள் தான் தடுத்து நிறுத்த முடியும். ஆனா ஞாபகம் வச்சிக்கோ. நாளைக்கு என்னை எந்த சுல்தானும் தடுக்க முடியாது. இந்த போலீஸால கூட” என வாசிமை பார்த்து சொல்லி முடித்தான்

ருஹானா சிறு அசைவும் இல்லாமல் சிலையென கண்களில் கலக்கத்துடன் நிற்க, ஆர்யன் திரும்பி வெளியே நடக்க, வாசிம் “நீ போகும்போது உன் காவல் நாய்களையும் சேர்த்து கூட்டிட்டு போ” என்றான்.

ஆர்யனுக்கு கோபம் பொங்க “என் அண்ணன் மகனை பாதுகாக்க என் ஆட்கள் இங்க தான் இருப்பாங்க. உன் போலீஸ் பேட்ஜ் மேல உனக்கு நம்பிக்கை இல்லயா, ஆபிசர்?” என ‘ஆபிசர்’ என்ற வார்த்தையை அழுத்தி ஏளனமாக கேட்டான்.

வாசிம் முறைத்து பார்க்க ஆர்யன் காவலர்கள் தொடர வெளியே சென்றான். ஆர்யன் அவன் காரில் ஏறி புறப்பட, ரஷீத் அங்கே காவலுக்கு நிற்க போகிறவர்களுக்கு செய்யவேண்டியதை ஆணையிட, வாசிம் இரும்பு கதவை கோபமாக சாத்தி சென்றான்.

“என் வீட்டை முற்றுகையிடறாங்களா? என்ன திமிர்?” என கத்தியபடி வாசல் கதவையும் அறைந்து மூடிய வாசிம் அப்போது தான் அங்கே அழுதுக்கொண்டு நிற்கும் ருஹானாவை பார்த்து நிதானமானான்.

“உங்களுக்கு ஒன்னும் இல்லயே?” என்று அவன் கேட்க ருஹானா இல்லை என தலையாட்டினாள்.

“அவன் இப்போ உங்களை மிரட்டினானா? இல்லனா முன்னாடி பயமுறுத்தி இருந்தா கூட சொல்லுங்க, என்கிட்ட. இப்பவே அவனை பிடிச்சி ஜெயில்ல தள்ளுறேன்” என வீராவேசமாக வாசிம் கேட்க, ருஹானா வேகமாக தலையாட்டினாள்.

“இங்க பாருங்க, எனக்கு இவனைப் போல ஆளுங்களை பத்தி நல்லா தெரியும். அவனோட பார்வையே உங்களை இவ்வளவு பயப்படுத்தி இருந்தா, அவன் எத்தனை அபாயமானவன்? சொல்லுங்க… ஒரே ஒரு போன் கால். இப்பவே அவனை தூக்கிடலாம்”

“வேணா” என வேகமாக சொன்ன ருஹானாவை வாசிம் ஆச்சரியமாக பார்க்க, அவள் இன்னும் அவனை திகைப்பில் ஆழ்த்தினாள்.

“எனக்கு அவரை புரியுது”

வாசிம் அவளையே பார்க்க “நானும் இப்படித்தான் இவானுக்காக அவங்க வீட்டு வாசல்ல கிடந்தேன். அவரை மிரட்டினேன். இவானை எனக்கு தர சொல்லி கத்தினேன். அதே தான் இப்போ அவரும் செய்றார்” என சொன்ன ருஹானாவை மறுத்த வாசிம் “அது வேற, இது வேற. உங்களை ஆர்யன் அர்ஸ்லானோட ஒப்பிடாதீங்க. அவன் மிரட்டலும், அடியாட்களோட வந்து அராஜகம் செய்றதும் சட்டத்தை உடைக்கிற செயல்” என்றான்.

“இது எல்லாமே, நாங்க இங்க இருக்குறதால நடக்குது. உங்களுக்கும் என்னால சிரமம்” என ருஹானா வருத்தப்பட “நீங்க இங்க இருக்குறது தான் உங்களுக்கு நல்லது” என வாசிம் அவளுக்கு ஆறுதலாக பேச, அவன் போன் ஒலிக்க அதில் பேசிக்கொண்டே அவன் நகர்ந்து சென்றான்.

பாதுகாப்பு கேடயமான அவனுமே

காவல் வேலியின் வெளியே நிற்க

அவ்வாறே நின்ற என் துன்பங்களும்

நினைவு அடுக்குகளில்…

இரும்பு சுவரின் முட்கள் மட்டும்

மற்றவர்களுக்கு புலப்பட..

அதன் பாதுகாப்பை உணர்ந்த நான்

உள்ளம் மறுகினாலும்…

கடுஞ்சொற்களும், ஆக்ரோஷமுமாய்

அவனுடைய தாக்குதலில் வெகுவாய்

புண்பட்டதே என் நெஞ்சம்..!

பிஞ்சு மனமும் அவனுக்காய் ஏங்கிட

என்ன செய்வேன் நான்?

வாகிதா ஓடிவந்து ருஹானா கையை பற்றி அழைத்து சென்றாள். “இவான்?” என்று ருஹானா கேட்க “கவலைப்படாதே! அவன் காதுல ஹெட்போன் போட்டுட்டு கார்டூன் பார்த்துட்டு இருக்கான். அவனுக்கு எதும் கேட்கல. வா உனக்கு நான் மூலிகை டீ போட்டு தரேன். உன் படபடப்பு குறையும்” என வாகிதா அவளை சமையலறைக்கு கூட்டிப் போனாள்.

“என்ன வாசிம்! யார் இந்த ரவுடிங்க? பழக்கமே இல்லாதவங்களுக்காக நீ ஏன் வம்பில மாட்றே?” என தௌலத், சத்தமாக வாசிமை கடிவது சமையலறை வரை கேட்டது.

“அத்தை! இதானே என் வேலை? ரவுடிகளை பார்த்து நான் பயப்படலாமா?”

“அது சரி! அதுக்காக வீட்லயே நீ எத்தனை பேருக்கு அடைக்கலம் கொடுக்க முடியும்? ஏற்கனவே ஒருத்தி அசையாம உட்கார்ந்து இருக்கா!” என அவர் பேசிக்கொண்டே செல்ல, வாசிம் அவரை சமாதானப்படுத்தியபடியே படுக்க அழைத்து சென்றான்.

“தௌலத் அத்தை சொல்றதுலாம் பெருசா எடுத்துக்காதே, ருஹானா. அவங்க மனசு சுத்தமானது. இப்போ ஹெமதுல்லா அங்கிளை பிரிந்த துக்கத்தில இருக்காங்க. அதான் இப்படி பேசுறாங்க. வாசிம் கமிஷனர் யாரையும் காப்பாத்துறதுல முன்னாடி நிற்பார். நீ மனசு வருத்தப்படாதே” என வாகிதா ருஹானாவுக்கு எடுத்து சொல்வதை வாசிமும் வெளியே நின்றபடி வாகிதாவை நினைத்து பெருமித புன்னகையுடன் கேட்டு நின்றான்.

———-

ஆர்யன் உள்ளே வருவதை மாடியில் மறைந்திருந்து பார்த்த கரீமா அப்போது தான் எதிரே வருவது போல வந்தவள் “என்ன நடந்தது ஆர்யன்?” என மிக ஆவலோடு கேட்க, ஆர்யன் அவளை கூர்ந்து நோக்க, “இல்ல.. அம்ஜத் கேட்டுட்டே இருந்தார், இவான் எப்போ வருவான்னு. எனக்கும் இவானை விட்டுட்டு இருக்க முடியல” என சமாளித்தாள்.

“அண்ணாவை கவனிங்க. இந்த நிகழ்ச்சிகள் அவரை பாதிக்காம பார்த்துக்கங்க” என வேறு தகவல் ஏதும் தராமல் நகர முயன்றான்.

ஏமாற்றமடைந்த கரீமா “என்ன தான் சொல்றா, அந்த சித்தி?” என பேச்சை நீட்டினாள்.

ஆர்யன் முகம் கடுக்க, அதை கண்ட கரீமா சந்தோசத்தை மறைத்துக்கொண்டு “இவான் நமக்கு எப்போ கிடைப்பான்?” என கேட்க “உடனே இல்ல. ஆனா சீக்கிரமே அவ கிட்டே இருந்து இவானை நான் வாங்கிடுவேன்” என்று அழுத்தி சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

——-

“சித்தி! எனக்கு சித்தப்பா சொன்ன கதை சொல்றீங்களா?” என படுக்கையில் படுத்திருந்த இவான் கேட்க ருஹானாவின் முகம் சுருங்கியது.

“ஒரு காட்டில ஒரு அசுரன் இருந்தான். அவன் ஒரு சின்ன பையன் மேலே அதிக அன்பு வச்சிருந்தான். இந்த உலகத்தையே அந்த பையனோட காலடியில கொண்டு வந்து வைக்க அசுரன் தயாரா இருந்தான். பையனோட மகிழ்ச்சிக்காக அந்த அசுரன் எதையும் செய்வான்”

குளியறையில் நுழைந்த ஆர்யன் எதிரே தெரிந்த கண்ணாடியில் தன் உருவத்தையே பார்த்து நின்றான்.

“ஆனா ஒருநாள் அந்த சின்ன பையன் காணாம போய்ட்டான். அசுரன் திகைச்சி போய் எல்லா இடமும் தேடினான். தான் சரியா பையனை பாதுகாக்கலன்னு தன்னையே நொந்துக்கிட்டான்”

வாஷ்பேசினில் குழாயை திறந்து விட்ட ஆர்யன் குனிந்து கொதிக்கும் தலையை தண்ணீரில் நனைத்தான்.

“அவன் நடந்தான்.. தேடினான்.. நடந்தான்.. தேடிட்டே நடந்தான். பனி உறைந்த ஏரிக்குள்ள குதிச்சி தேடினான். அங்கயும் பையன் இல்ல”

துண்டை வைத்து துடைத்துக்கொண்டே ஆர்யன் அறைக்குள் வந்தான்.

“அப்புறம் அவனுக்கு ஒரு துப்பு கிடைச்சது”

ஆர்யனின் கால் எதிலோ இடற, குனிந்து அதை எடுத்தான்.

“தூரத்துல இருக்குற ஒரு குகைல பையன் இருக்குறது அவனுக்கு தெரிஞ்சது”

அது ஒரு சிறிய பணப்பை. அவன் அதை திறக்க அதிலிருந்து ருஹானாவின் புகைப்படம் வெளியே விழுந்தது.

“அவன் உட்காந்து ஒரு திட்டம் வகுத்தான்”

அந்த அழகிய புகைப்படத்தை உள்ளங்கையில் வைத்து நசுக்கினான்.

“அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கிட்டான், ‘காத்திரு குட்டிப்பையா! உன்னை கூட்டிட்டு போக நான் அங்க வரேன். முன்ன இருந்த மாதிரி நாம ஆனந்தமா காட்டில் வாழுவோம்’”

பலப்பல யோசனைகள் மனதில் ஓட ஆர்யன் அந்த படத்தை கீழே வீசினான்.

இவான் தூக்கத்தில் ஆழ்ந்து போனான்.

ஆர்யன் தூக்கம் தொலைத்து நாற்காலியில் அமர்ந்து அந்த பணப்பையை மேசையில் தட்டிக்கொண்டே சிந்தனையில் ஆழ்ந்து போனான்.

———

காலையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நிகழ்வுக்கு வந்த ஆர்யன், அதுவரை தட்டிக்கொண்டிருந்த ருஹானாவின் பையை பின்னால் மறைத்தபடி “வரலாம்” என்றான். ருஹானாவின் உடைமையை யாருக்கும் காட்ட மனமில்லாமல் மறைத்தானா? அதோடு அவள் மீது அவனுக்குள்ள உணர்வுகளையும் மறைக்கிறானா?

அழகுபதுமையென உள்ளே வந்த சல்மா இரு காபி கோப்பைகளுடன் அவன் அருகே வந்து காலை வணக்கம் சொல்ல அவன் பதில் சொல்லவில்லை.

“உங்களுக்காக காபி கொண்டு வந்தேன். உங்களுக்கு பிடிச்ச மாதிரி திடமா” என்று அவன் முன்னே ஒரு கோப்பையை வைத்தாள்.

ஆர்யன் அவள் முகம் பார்க்காவிட்டாலும் தயக்கத்துடன் அந்த கோப்பையை தன் அருகே இழுத்தான்.

அதற்கே அகமகிழ்ந்து போன சல்மா “நடந்ததுலாம் எனக்கு இன்னும் நம்பவே முடியல, வருத்தமா இருக்கு. நாம எல்லாரும் ருஹானாவை நம்பினோம்” என நூல்விட்டு பார்த்தாள்.

ஆர்யன் முகத்திலிருந்து அவளால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தவள் அதை பிரிக்க, ஓரக்கண்ணால் அதை பார்த்துக்கொண்டே ஆர்யன் காபி கோப்பையை கையில் எடுத்தான்.

காகித உறையை எடுத்த சல்மா ஒரு படத்தை ஆர்யன் முன்னே வைத்தாள். அது பூங்காவில் இவானும் ஆர்யனும் சாய்ந்தாடும் பலகையில் விளையாடியபோது எடுத்த படம்.

Advertisement