Advertisement

தூங்கிய இவானை ருஹானா தூக்கிக்கொண்டு வர வாகிதா படுக்கையை சரி செய்ய ருஹானா அவனை கட்டிலில் படுக்க வைத்தாள்.

“எங்களால உனக்கு தான் சிரமம், வாகிதா. உன் ரூமை எங்களுக்கு தர வேண்டியதா போச்சி”

“அப்படிலாம் இல்ல. எனக்கு இவானை திரும்ப பார்த்தது அதிக மகிழ்ச்சி”

“அவனும் ரொம்ப சந்தோசப்பட்டான்”

“உன்னைப் போல சித்தி அவனுக்கு கிடைச்சது அல்லாஹ் அருள்”

இரவு வணக்கம் சொல்லி வாகிதா விடைபெற அடுத்தடுத்து நடந்துவிட்ட சம்பவங்களை எண்ணி ருஹானா கவலையானள்.

அன்று ஆர்யனின் பேசிய பேச்சு எல்லா எல்லைகளையும் தாண்டிய பேச்சு. ருஹானாவிடமிருந்து அறை வாங்க வைக்கும் பேச்சு தான்.

முன்பு அவளை பற்றி தெரியாதபோது அவளுக்கு பணம் கொடுத்து அவமானப்படுத்தினான். அதற்கு நன்றாக வாங்கியும் கட்டிக்கொண்டான். இப்போது அவளை பற்றி நன்கு அறிந்தபின் அவளின் நற்பண்புகளை பற்றி புரிந்தபின் இப்படி அபாண்டமாக குற்றம் சுமத்துவது எந்த வகையில் சரி? அது கரை காணாத கோபம் என்றாலும் அவன் செயல் எப்படி நியாமாகும்?

ஆனால் இவானை பற்றிய விஷயம் என்றால் அவனுடைய நடவடிக்கைகள் எந்த வரையறைக்கும் உட்படாததாக அமைந்து விடுகிறது.

சிந்தனையில் மூழ்கி இருந்த ருஹானா, அப்போது இவான் புரண்டு படுக்க அவன் முகத்தை பார்த்து தன் கவலைகளிலிருந்து தேறிக்கொண்டாள்.

தூங்கும் இவானுக்கு நெற்றியில் முத்தமிட, விழித்துக்கொண்ட இவான் “சித்தி!” என தூக்கக் கலக்கத்தில் அழைத்தான்.

“பயப்படாதே அன்பே! நான் இங்க தான் இருக்கேன்”

“சித்தப்பாவும் இங்க தான் இருக்காரா?”

“நாம இப்போ மாளிகைல இல்ல, செல்லம்”

நன்கு தூக்கம் கலைந்து எழுந்து கொண்ட இவான் அந்த அறையை சுற்றி பார்வையை ஓட்டினான்.

“எப்போ வீட்டுக்கு போவோம்?”

ருஹானாவிடம் பதில் இல்லை.

“சித்தப்பா கவலைப்பட்டுட்டு இருப்பாரே!”

“செல்லம்! நாம கொஞ்ச நாளைக்கு அங்க போக முடியாது”

“ஆனா அதானே நம்ம வீடு? எல்லாரும் அங்க தானே இருக்காங்க. என் ரூமும் அங்க இருக்கு. சித்தப்பாவும் இருக்கார்”

“எனக்கு தெரியும் தேனே! நீ வீட்டை தேடுறே! உன் சித்தப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு தெரியும்”

இவான் ஆமோதித்து தலையாட்டினான்.

“ஆனா அங்க விடுதில இருந்த அதிகாரிகள் நாம சில நாள்களுக்கு மாளிகைக்கு போக கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அவங்க சொன்னதை நாம செய்யணும், கண்ணே!”

“நாம எப்பவும் மாளிகைக்கு போக கூடாதுன்னு அவங்க சொல்லிட்டா என்ன செய்றது, சித்தி?”

ருஹானா தலைகுனிந்து கொண்டாள்.

“அப்போ என் சித்தப்பாவை நான் பார்க்கவே முடியாதா?” இவான் சோகமாக கேட்க ருஹானா வேகமாக பதில் சொன்னாள்

“இல்ல, அன்பே! கண்டிப்பா பார்க்கலாம். ஆனா சில நாட்கள் பொறுத்திருக்கனும்”

“எவ்வளவு நாள்? ரொம்ப நாளா?”

“கொஞ்ச நாள் தான்” என சொல்லி அவனை முத்தமிட்ட ருஹானா அவனை தூங்க வைத்தாள்.

அங்கே ஆர்யன் தன் மன உளைச்சலை அம்பு கணைகளாய் செலுத்திக்கொண்டிருக்க, பாய்ந்து சென்ற ஒவ்வொரு அம்பும் நடு இலக்கில் சரியாக குத்தி நின்றது. முன்பு ருஹானா அவன் இலக்கு பலகையின் முன்வந்து நின்றது, அவள் மீது அம்பு வீசாமல் தான் பக்கபலகையில் செலுத்தியது என ஆர்யன் நினைவுகள் பின்னே சென்றன. இன்னும் அதிக வேகமாக அம்புகளை விட ஆரம்பித்தான்.

இங்கே இவான் சித்தி கையை அழுந்த பிடிப்பதும், புருவத்தை சுருக்குவதுமாக அமைதியற்ற தூக்கத்தில் இருக்க, கவலையுடன் அவனை தடவிவிட்டுக் கொண்டிருந்த ருஹானா சாய்ந்து கூட படுக்கவில்லை, இரவு முழுவதும்.

வாகிதாவை தன் அறையில் வற்புறுத்தி படுக்க செய்த வாசிம் வரவேற்பு அறையில் படுத்தவன் அவளை பற்றிய இன்ப கனவுகளில் மூழ்கி போனான்.

———-

இவான் அறைக்குள் நுழைந்த ஆர்யன் மேசையில் இருந்த காகித கப்பலை எடுத்து மென்மையாக தடவினான். ருஹானா இவானை மடியில் வைத்து முத்தமிடும் புகைப்படம், இவான் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்டது எதிரே அவன் கண்ணில் பட அதை எடுத்து பார்த்தான். கரீமா வந்து அவன் பின்னால் நின்றாள்.

இவானை பார்த்து மிருதுவான அவன் பார்வை ருஹானாவை உற்று நோக்கியதும் கடினமுற்றது. இவான் மேல் தூய அன்பு கொண்ட பார்வை, ருஹானா மீது கோபமும் ஈர்ப்பும் கலந்த பார்வை என அவன் பார்வை மாற்றமே அவன் மனதை சொன்னது.

அவள் மேல் எரிச்சல் அதிகரிக்க படத்தை படாரென கவிழ்த்து போட்டான். கரீமாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. “ஓ! ஆர்யன் நீ இங்க தான் இருக்கியா? உன்னை காலை உணவுக்கு கூப்பிட வந்தேன். ருஹானா இப்படி செஞ்சிட்டு போவா ன்னு என்னால இன்னும் கூட நம்ப முடியல. நாம அவளை  நம்பினோம், அவளுக்காக நம்ம வீட்டு கதவை திறந்து விட்டோம். அவளோட அக்கா பையனோட அவ இருக்க எல்லா அனுமதியும் தந்தோம்” என கரீமா முடுக்கி விட்டாள்.

“அது என்னோட தப்பு. ஆரம்பத்தில இருந்தே இது தான் அவளோட நோக்கமா இருந்திருக்கு. இங்க ஒரு திட்டத்தோடு தான் வந்திருக்கா. என் கண்ணு முன்னாடியே படிப்படியா அதை நிறைவேத்தி இருக்கா. திறமையா நடிச்சி நம்ம எல்லாரையும் முட்டாளாக்கிட்டா”

“நீ அப்படியா நினைக்கிறே? அவளை எனக்கு தப்பாவே நினைக்க தோணல. ஆனா.. ஒருவேளை.. சமூக சேவை நிறுவனத்துக்கு அவ தான் புகார் கொடுத்திருப்பாளோ?” கரீமா நெருப்பை தூண்டி விட்டாள்.

தன்வீரின் கல்லறையில் யாசின்ஸ் கையாட்களிடமிருந்து தப்பி ருஹானா இவானோடு மாளிகைக்கு ஓடிவந்த தினம், அவள் சொன்னது இப்போது ஆர்யன் காதில் ஒலித்தது.

‘நான் ஓடி போகணும்ன்னு நினைச்சிருந்தா இங்க வரதுக்கு பதிலா நானே போயிருப்பேன். இங்க வந்திருக்கவே மாட்டேன். ரவடிங்க கிட்ட இவானை காப்பாத்தினவளுக்கு அப்படியே போக முடியாதா? ஆனா நான் இங்க இருக்கேன். ஏன் தெரியுமா? நீங்களே உங்க கையால இவானை தூக்கி எனக்கு கொடுப்பீங்க’

ஆர்யனின் கை முஷ்டி இறுகி உள்ளங்கை சிவந்தது. அதை பார்த்து கரீமாவின் புன்னகை விரிந்தது.

“அவ செஞ்சதுக்கெல்லாம் கட்டாயம் அனுபவிப்பா” ஆர்யன் முழங்கினான்.

   ———

“பார்த்தியா வாசிம், எத்தனை வகையான உணவு செஞ்சி வச்சிருக்கா. நம்ம ரெண்டு பேருக்கும் இதெல்லாம் கண்ணுல காட்டியிருப்பாளா? தோட்டத்து பூனைக்கு கூட சீஸ் கொடுப்பா, நன்றி கெட்டவ”

“அத்தை! உங்களுக்கு அவளை குறை சொல்லாம இருக்க முடியாதே! ருஹானாவும், இவானும் சாப்பிட வராங்க பாருங்க”

“ஹலோ! யங்மேன்!! குட்மார்னிங்! சாப்பிட வாங்க ருஹானா” என வாசிம் அழைக்க ருஹானாவும் இவானும் காலை வணக்கம் சொன்னார்கள்.

“என்னை கூப்பிட்டு இருக்கலாமே, வாகிதா? சிரமப்பட்டு இத்தனை தனியா செஞ்சிருக்கே” என ருஹானா வருத்தப்பட, வாகிதா “அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் வேகமா சமைச்சிடுவேன்” என வாகிதா சொல்ல “உங்களால ஏதோ நல்ல உணவு எங்களுக்கும் கிடைக்குது. வாங்க உட்கார்ந்து சாப்பிடுங்க” என தௌலத் அழைத்தார்.

அனைவரும் அமர்ந்து சாப்பிட “சித்தி! பாருங்களேன், சித்தப்பாவை போலவே வாசிம் அங்கிளும் குடை மிளகாய் சாப்பிட மாட்றார்” என இவான் வியந்து சொன்னான்.

“ஆமா, குட்டி பையா. எனக்கு பிடிக்காது. ஆனா வாகிதா அக்கா எதுலனாலும் அதை தான் போடுவா” என வாசிம் வாகிதாவை பார்த்தபடியே புகார் சொன்னான்.

அவள் வாசிமை பார்க்காமல் “ஆமா, வேணும்னே தான் போடுறேன், இவான் குட்டி.  அதுல விட்டமின் ஏ, சி இருக்கு. கண்ணுக்கும் நல்லது” என சொல்ல “ஓஹோ! இவ்வளவு நல்லது இருக்கா? அப்போ சாப்பிட்டுடுவோம், யங்மேன்” என்று வாசிம் வழிக்கு வந்தான்.

சாப்பிட்டு முடித்து வாசிம் பணிக்கு கிளம்ப இவானை அழைத்துக்கொண்டு வாகிதாவும் ருஹானாவும் முன்பக்க தோட்டத்துக்கு வந்தனர். எதுவும் தேவை என்றால் தனக்கு போன் செய்யும்படி சொல்லிவிட்டு வாசிம் சென்றுவிட்டான்.

“இவானுக்கு உன்னை போல ஒரு சித்தி கிடைச்சது அவன் அதிர்ஷ்டம் தான், ருஹானா. அவன் அம்மாவாவே நீ மாறிட்டே”

“அவன் தான் எனக்கு எல்லாமே. என் அக்காக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன்”

“உனக்கு தெரியுமா, ருஹானா? நானும் இவானை போல தான். எனக்கு யாரும் இல்ல. ஹெமதுல்லா அங்கிள் தான் எனக்கு இங்க அடைக்கலம் கொடுத்தார். கமிஷனர் என்னை நல்லா கவனிச்சிக்கறார்”

“வாசிம்க்கு நல்ல குணம். உனக்கு நல்லது தான் நடக்கும். அடுத்து என்ன செய்ய போறே, வாகிதா?” தௌலத் பேச்சை மனதில் வைத்து ருஹானா கேட்டாள்.

“அதுதான் நானும் ரொம்ப நாளா யோசித்திட்டே இருக்கேன். என் அண்ணனுக்கு பயந்து வீட்டிலேயே உட்கார்ந்துட்டு இருக்கேன்” கட்டாய கல்யாணம்,  அண்ணனை அடித்து போட்டுவிட்டு கிராமத்திலிருந்து ஓடிவந்தது என அவள் கதையை நேற்றே வாகிதா ருஹானாவிடம் கூறி இருந்தாள்.

அப்போது பர்வீன் அங்கே வர இருவரும் அவருக்கு சலாம் சொல்ல “அப்பாடா! கெட்டது எல்லாம் ஒருவழியா முடிந்தது, மகளே! இப்போ இவான் உனக்கு கிடைச்சிட்டான். நீயும் பாதுகாப்பான இடத்துக்கு வந்துட்டே” என்று சொல்லி பர்வீன் ருஹானாவை அணைத்துக்கொண்டார்.

அனைவரும் உள்ளே செல்ல பர்வீன் ருஹானாக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தௌலத்க்கு நன்றி தெரிவித்தார். ருஹானாவும் வாகிதாவும் சமையலை கவனிக்க உள்ளே செல்ல இவானும் அவர்களோடு சென்றான்.

——–

Advertisement