Advertisement

இருவரையும் அர்ஸ்லான் மாளிகைக்கு அழைத்து வந்த ரஷீத் ஆர்யனோடு வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக கோப்புகளை சரிபார்க்க, ஆர்யன் உடல் மட்டுமே அங்கே இருந்தது. மனமோ மேலே படுக்கையறைக்கு சென்ற ருஹானாவையே சுற்றி வந்தது.

கவனத்துடன் தன்னை அலங்கரித்துக்கொண்ட ருஹானாவின் மனமும் முந்திய இரவிலேயே நிலைபெற்று நின்றது.

ரஷீத் ஆவணங்களை பற்றி விளக்க, ஆர்யன் அதில் ஈடுபாடு காட்டாததை உணர்ந்து “ஏன் ஆர்யன் ஒரு மாதிரியா இருக்கீங்க? என்ன யோசனை?” என்று கேட்டான்.

தன்னை மீட்டுக்கொண்ட ஆர்யன் “வேலையை பற்றி தான் யோசித்தேன்” என்றவன் எழுந்து கொண்டான். “அதான் நீ எல்லாம் சரி பார்த்திட்டியே! நீ தொடங்கு. எல்லாம் சரியா வரும். எப்பவும் வேலை வேலைன்னு இருக்காதே, ரஷீத்! வாழ்க்கை ரொம்ப சின்னது!”

பேசிக்கொண்டே சென்ற ஆர்யனை வியப்பாக பார்த்த ரஷீத் “ஆனா.. ஆர்யன்! ஆர்யன்!” என்று அழைத்தும் கூட ஆர்யன் காதில் போட்டுக்கொள்ளாமல் நிற்காமல் நகர்ந்து விட்டான்.

படிக்கட்டில் ஏறி சென்ற ஆர்யன் எதிரே அப்சரஸ் போல இறங்கிவரும் ருஹானா பார்த்து மலைத்து நின்றான். அவள் கையை இறுக்கி பிடித்தவன் “என்னை என்ன செய்திட்டே நீ? உன்னை சுத்தியே கட்டி போடுறியே! உன்னை தவிர வேற எதையும் யோசிக்க விடமாட்டறே! இப்போ உன் அழகால மயக்குறே!” என்று மெதுவாக சொல்ல, அவள் பெருமிதமாக புன்னகை செய்தாள்.

“உங்களுக்கு இந்த உடை பிடிச்சிருக்கா?” என அவள் கேட்க, அவன் அவள்மீது கண்ணெடுக்காமல் தலையாட்டினான்.

அங்கே வந்த ரஷீத் கீழிருந்து “ஹாங்காங்ல இருந்து போன். உங்க கூட பேசணுமாம்” என்று குறுக்கிட்டான்.

இரண்டு படிக்கட்டுகள் தாண்டிய ஆர்யன் ருஹானாவின் காதில் “இன்னைக்கு இரவும் உனக்காக நான் நேரத்தை மீண்டும் நிறுத்தி வைக்கறேன். நாம தனியா இருப்போம். உனக்காக காத்திருப்பேன்” என்று கிசுகிசுப்பாக சொன்னவன், “மேல வா ரஷீத்!” என்று இரைந்துவிட்டு ஏறி சென்றான்.

———

சமையலறையிலும் ருஹானா நிதானத்தில் இல்லாமல் தடுமாற, சாரா “ருஹானா! நீ ஒரு இடத்துல உட்கார். என்ன செய்யணுமோ சொல்லு, நான் செய்றேன்” என்று அவளை நாற்காலியில் அமர வைத்தார்.

ஆர்யனோ ரஷீத் கையொப்பமிட சொன்ன இடத்தில் எல்லாம் ருஹானா என எழுதி கொண்டிருந்தான். அவளுக்கு செல்பேசியில் இதயத்தின் வடிவை குறுஞ்செய்தியில் அனுப்பிவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

ஆர்யன் அலைபேசியை பார்த்தபடி நடந்து கொண்டிருப்பதை கவனித்த ரஷீத் “இன்னும் பார்ட்னர் கிட்டே இருந்து அறிக்கை வரலயா?” என்று கேட்க, புரியாது பார்த்த ஆர்யன் சுதாரித்துக்கொண்டான். “ஆமா ரஷீத்! அதான் பார்த்துட்டே இருக்கேன்.”

கதவு திறந்து ருஹானா காபி கோப்பைகளோடு உள்ளே வர, ஆர்யன் அகமகிழ்ந்தான். “உங்களுக்கு இப்போ காபி தேவைப்படலாம்னு நினச்சேன்” என்று அவள் மேசை அருகே நின்றிருந்த ஆர்யனுக்கு கொடுக்க, “பத்து நிமிடத்துக்கு ஒருமுறை நீ கொடுத்தா கூட நான் குடிப்பேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவன் காபியை அருந்தியபடி “அருமையா இருக்கு” என்று அவளை பார்த்து சொன்னான்.

ருஹானா சிரிப்புடன் கதவை நோக்கி நடக்க, சோபாவில் அமர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்த ரஷீத் “ருஹானா!” என அழைத்தான். அவனுக்கு காபி தராமல் திரும்பிய தனது மடத்தனத்தை நொந்துக்கொண்ட ருஹானா “ஸாரி!” என்று சொல்லி அவனுக்கு காபியை எடுத்து நீட்டினாள்.

ஆர்யன் சத்தமில்லாமல் சிரிக்க, ருஹானா அவனை திரும்பி பார்க்காமல் வெட்கத்துடன் ஓடிவிட்டாள்.

———-

பிற்பகலில் வேலை முடிந்து ரஷீத் வெளியேற, வரவேற்பறையில் பொறுமையிழந்து காத்திருந்த ருஹானா மேலே ஓடினாள். ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு நிமிர்ந்த ஆர்யன் மூச்சு வாங்க தன்னருகே வந்து நின்ற மனைவியை ஆவலாக பார்த்தான்.

வேகமாக அவன் மார்பில் சாய்ந்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவனுக்கும் அதே நிலை தான். இருகரம் கொண்டு அவளை இறுக்கி அணைத்தவன் அவள் தலைமீது முகத்தை வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

பின் மேசை மீது இருந்த மணற்கடிகாரத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான். “இது உனக்காக!”

அவள் அதை வாங்கி பார்க்க “பாதி நான்! பாதி நீ! இதுக்குள்ள நான் சிக்கி இருக்கேன். மீண்டு வரவும் விரும்பல. துருவ நட்சத்திரத்தை உனக்கு பரிசா கொடுக்க எனக்கு ஆசை தான். அது முடியாது இல்லயா? அதான் இது.. இன்னொரு சாட்சி. நேற்று நம்மை எரித்த நெருப்பின் சாம்பல் இது” என்று ஆர்யன் சொல்லவும், ஆச்சர்யத்தில் அவள் கண்கள் விரிந்தது.

அவளிடமிருந்து கடிகாரத்தை வாங்கிய ஆர்யன் அதை பக்கவாட்டில் சாய்த்து அதன் ஓட்டத்தை நிறுத்தினான். அவளை நெருங்கி அவளின் இரத்தவோட்டத்தை அதிகரித்தான். இதயங்கள் தாறுமாறாக துடிக்க, இன்பமாக இதழ்கள் செவ்வனே பணிபுரிந்தன.

———-

இவானை பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் செல்ல காரை திருப்பிய ஆர்யன், முக்கிய ஆவணத்தை வீட்டில் விட்டதை அறிந்து புதிய வீட்டை நோக்கி காரை திருப்பினான்.

ருஹானாவிற்கு அழைப்புமணி ஓசை கேட்காமல் போக, அம்ஜத்தின் மனைவி நிஹாரா வாசற்கதவை திறந்துவிட, படுக்கையறைக்கு சென்ற ஆர்யன் தேடி வந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டு வேகமாக திரும்பியவன் அங்கே சோபாவில் கிடந்த சின்னஞ்சிறு கம்பளி காலணிகளையும், கையுறைகளையும் கண்டு வியந்தான்.

அதை ஆசையாக எடுத்து பார்த்தவன் பின்னி முடிக்கும் தருவாயில் அவை இருப்பதை பார்த்துவிட்டு புரிந்து கொண்டான். தான் அலுவலகம் கிளம்பியவுடன் தினமும் இந்த வேலையை ருஹானா செய்கிறாள் என யூகித்தவன் அவளை தேடி சென்றான்.

ருஹானா இவானின் அறையில் அவனின் பந்தை மேல்சட்டையினுள் தனது வயிற்றில் வைத்துக்கொண்டு கண்ணாடிமுன் நின்று அப்படியும் இப்படியும் அழகு பார்த்து கொண்டிருப்பதை பார்த்து பூரித்தான். அதை தனது செல்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு விலகி நடந்தவன் அப்போது தான் வருபவன் போல ஓசை எழுப்பிக்கொண்டு “ருஹானா!” என அழைத்தபடி நடந்து வந்தான்.

ருஹானா வேகமாக வெளியே வந்தவள் “என்ன? அதுக்குள்ள திரும்பிட்டீங்க? இவானுக்கு ஒன்னுமில்லயே?” என பதறினாள். “அதெல்லாம் ஒன்னும் இல்ல, அவனை ஸ்கூல்ல விட்டுட்டேன். எனக்கு தான் கொஞ்சம் தலை சுத்துது” என்று அவன் சொல்ல, அவள் நெருங்கி வந்து கவலையாக அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள்.

“காய்ச்சல் எதும் இல்லயே! காலைல நல்லா தானே இருந்தீங்க?”

“ஆமா, இப்போ ஏதோ செய்யுது! வா, டாக்டர்ட்ட போகலாம்” என்று ருஹானாவை ஆர்யன் அழைத்து சென்றது மகப்பேறு மருத்துவரிடம். ருஹானாவின் கன்னங்கள் செந்தூரமாக சிவக்க, ஆர்யன் சிரிப்புடன் செல்பேசியை எடுத்துக் காட்டினான்.

அவளின் பெரிய வயிறு புகைப்படத்தை கண்டவள் முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள்.

                                                  ———

ருஹானாவின் பெரிய வயிற்றின் உள்ளே குழந்தை அசைந்து கொண்டே இருக்க, ருஹானா தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டாள். அவள் தூக்கம் வராமல் தவிக்க, ஆர்யனுக்கும் விழிப்பு வந்துவிட்டது.

“பாருங்க உங்க மகளை! உங்க குரல் கேட்காம தூங்க மாட்டறா” என மனைவி புகார் படிக்க, வேகமாக எழுந்துகொண்ட ஆர்யன், ருஹானாவின் வயிறை மென்மையாக தடவி கொடுத்துக்கொண்டே  கனிவான குரலில் தாலாட்டு பாட ஆரம்பித்தான்.

தாயும் சேயும் சுகமாக தூங்க, ஆர்யனும் ருஹானாவை அணைத்தபடி படுத்துக்கொண்டான். மனம் நிறைந்த சந்தோசத்தில் அவன் உறக்கம் விலகி சென்றிருந்தது.

அதிகாலையில் வலி கண்டு எழுந்து கொண்ட ருஹானா அலறி துடிக்க, ஆர்யன் “மூச்சை இழுத்துவிடு, ருஹானா! இதோ நான் போய் பையை எடுத்துட்டு வரேன். இப்பவே ஹாஸ்பிடல் கிளம்பிடலாம்” என ஓடியவன் ‘அம்மா’ என எழுதியிருந்த பையை எடுத்து ஒரு தோளில் மாட்டிக்கொண்டான்.

‘பேபி’ என்று போட்டிருந்த பையையும் எடுத்துக்கொண்டவன் கதவை திறந்துகொண்டு வேகமாக வெளியே ஓடினான். அதிர்ந்து விழித்த ருஹானா “ஆர்யன்! ஆர்யன்!” என உரக்க அழைக்க, திரும்பி வந்தவன் “யா அல்லாஹ்! நான் உன்னை மறந்துட்டு போறேனே!” என்று அவளை தூக்கிக் கொண்டான்.

———

தஸ்லீம் பாப்பாவின் பிறந்தநாள் விழாவில் இவான் அவள் கையை பிடித்து கேக்கை வெட்ட வைக்க, அந்த அழகு குட்டியோ கேக்கின் க்ரீமை எடுத்து அண்ணனின் முகத்தில் அப்பியது.

இவானின் பள்ளி நண்பர்கள் அனைவரும் கொல்லென்று சிரிக்க, இவான் முகம் சுருக்காமல் சிரிப்புடனேயே தஸ்லீமிற்கு கேக்கை ஊட்டிவிட்டான். பக்கத்தில் இருந்த ருஹானா இவானின் முகத்தை துணி கொண்டு துடைக்க, தஸ்லீமும் க்ரீம் இருந்த கையோடு பாசக்கார அண்ணனின் முகத்தை துடைத்தாள்.

ஆர்யனும், அம்ஜத்தும் அவ்வினிய காட்சியை சிரிப்புடன் பார்த்திருக்க, வாசிம் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தான்.

வாகிதா, நிஹாரா, சாரா, நஸ்ரியா அனைவரும் சிறுவர்கள் உண்ண கேக் துண்டுகளை தந்தனர். தன்வீர், ரஷீத், ஜாஃபர் விருந்தினரை உபசரித்தபடி சுற்றி வந்தனர்.

சையத், பர்வீன், தௌலத் மூவரும் சோபாவில் அமர்ந்தபடி இளையவர்களின் நலனுக்காக இறைவனை பிரார்த்தனை செய்தனர். நாமும் அவர்களின் நலன் நாடி விடைபெறுவோம்!

நிறைவு

Advertisement