Advertisement

“சரி விடு! நீயும் சோர்வாகிட்டே! நான் கேட்டதால நீ எத்தனை தீவிரமா முயற்சி செய்றேன்னு எனக்கு தெரியும். இது இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நான் நினைக்கல. போதும், நிறுத்திடு! நான் உனக்கு ஏற்கனவே வாக்கு கொடுத்து இருக்கேன். உனக்காக நான் எத்தனை காலம்னாலும் காத்திருப்பேன்னு. அதோட இதையும் சேர்த்துக்கலாம். சரியான சமயத்துல இதுவும் தானாகவே எனக்கு வந்து சேரும்.”

அவனின் ஆறுதல் பேச்சில் அவள் வலுக்கட்டாயமாக புன்னகை செய்தாள்.

“அப்புறம்… நீ என்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் உன் பச்சை கண்கள் எனக்கான காதலை எனக்கு சொல்லுதே!”

“நான் ரொம்ப முயற்சி செய்றேன். ஆனா என்னால முடியலயே!”

அவள் புறம் சாய்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்ட ஆர்யன் “எனக்கு தெரியும்!” என்றான்.

மருத்துவமனை ஊழியர் மதியஉணவை கொண்டுவந்து வைக்க, அவளை அவனோடு சாப்பிட அழைத்தான். “இதே யோசனைல நீயும் சாப்பிட்டு இருக்க மாட்டே. எதையாவது தீவிரமா செய்யும்போது உன் உணவை நீ மறந்திடுவியே! உன்னோட இரத்த அழுத்தம் அதனால குறைந்து போயிருக்கும். சாப்பிடு!”

அவன் நீட்டிய கரண்டியை வாங்கிக்கொண்ட ருஹானா அவன் அன்பில் கரைந்து முகம் மலர்ந்தாள்.

இருபக்கமும் கூம்பு வடிவத்தில் இருந்த ரொட்டியை எடுத்து முகர்ந்து பார்த்த ஆர்யன் “இந்த வாசனை எனக்கு சின்னவயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்” என்று சொன்னவன் பழைய நினைவுகளில் ஆழ்ந்தான்.

“அண்ணன் ரெண்டு பேரும் என்கூட ரொட்டி வாங்க வருவாங்க. வீட்டுக்கு திரும்பும்போது நாங்க மூணுபேரும் ஓடிவருவோம். யார் அந்த ஓட்டப்பந்தயத்தில ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு தான் ரொட்டியோட மொறுமொறுப்பான முனைகள் கிடைக்கும்.”

ருஹானா புன்னகையுடன் அவன் விவரிப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஆனா அண்ணன்கள் முதல்ல வந்தாலும் அந்த நுனி ரொட்டியை எனக்கு கொடுத்துடுவாங்க, எனக்கு அது பிடிக்கும்னு… ரெண்டு பேரும் என் மேல அத்தனை அன்பா இருப்பாங்க” என்று சொல்லிக்கொண்டே ரொட்டியின் முனைகளை பிய்த்து தன்னிச்சையாக மனைவியின் தட்டில் வைத்தான்.

அவனுக்கு மிகப் பிடித்ததை தனக்கு அளித்த அவனின் காதலில் நெக்குருகிப்போன ருஹானா “நான்….” என்று தொடங்க, பாத்திரங்களை திறந்து வைத்துக்கொண்டு இருந்த ஆர்யன் அவளை திரும்பி பார்த்தான்.

“நான்.. உங்களை ரொம்பவும் காதலிக்கிறேன், ஆர்யன்!” என்று ஸ்பஷ்டமாக சத்தமாக அவள் இதயத்தில் இருப்பதை வெளிப்படுத்த, ஆர்யன் தட்டி முழிக்காமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.

“நான் சொல்லிட்டேன் தானே?” என அவள் மகிழ்ச்சியுடன் கேட்க, ஆர்யன் தலையைக் கூட அசைக்கவில்லை.

“நீங்க பேசினது என்னை உருக்கிடுச்சி. நீங்க என் மேல வச்சிருக்கற அன்பு எனக்கு பெருமையா இருந்தது. தன்னால சொல்லிட்டேன். நான் நினச்சதுபோல அது அவ்வளவு கடினமா இல்ல” என்று அவள் சொல்லவும், “அப்போ மறுபடியும் சொல்லேன்!” என அவன் ஆசைப்பட, அவள் அமைதியாக இருந்தாள்.

“பரவாயில்ல, நீ வாய் திறந்து சொல்லாட்டாலும் உன்னோட ஒவ்வொரு செய்கை, உன்னோட தீண்டல், உன் பார்வை எல்லாமே எனக்கு உன் காதலை தெரிவிக்குது! ஆனாலும் நான் இன்னும் அதிகமாக அன்பு செய்து இப்போ நீ சொன்னது போல சொல்ல வைப்பேன்” என்று ஆர்யன் உறுதியோடு சொன்னான்.

ஆர்யன் தனக்கு தந்த ரொட்டி துண்டில் பாதியை ருஹானா அவனுக்கு ஊட்டிவிட்டாள். அதை சுவைத்து விழுங்கிய ஆர்யன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு “நானும் உன்னை உயிராய் நேசிக்கிறேன்!” என்றான்.

அவள் நான் தேடும் மடி

நான் அவள் தேடும் தோள்

இன்னமும் இறுக்கி கட்டிக்கொள்ள

இன்னும் அழுத்தமாய் சாய்ந்து கொள்ள

உற்ற உறவிருக்கிறதென்பது

ஆகப்பெரும் ஆசுவாசம்,

சகியவளென் சுவாசம்!

———

சையத் தன் இருப்பிடத்தில் சகோதரர்கள் நலமடைந்ததை முன்னிட்டு ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். ஆர்யனும் ருஹானாவும், வாசிமும் வாகிதாவும் இணைகளாக வருகை தர, அம்ஜத்துடன் நிஹாரா அவன் உதவிக்கு வந்தாள்.

கணவனின் கொடுமையால் மணமுறிவு பெற்றிருந்த நிஹாரா மனமும் முறிந்த நிலையில் தான் மருத்துவ சேவை செய்து கொண்டிருந்தாள். அம்ஜத்தின் வெள்ளை உள்ளமும், கள்ளமில்லா அன்பும் அவளிடம் மாற்றத்தை ஏற்படுத்த, அவளின் இதயம் மெல்ல அவன்பால் சாய்ந்து கொண்டிருந்தது.

மூன்று சகோதரர்களின் சந்திப்பு மிகுந்த உணர்ச்சிகரமாக இருந்தது. விரைவில் நடக்கப்போகும் வாசிம் வாகிதாவின் நிக்காஹ் பற்றி ஆலோசனைகள் நடத்தப்பட, எளிமையான திருமணமே வாசிமின் விருப்பமாக இருந்தது. பெரியப்பா ஹெமதுல்லாவின் அடியை ஒற்றி ஆடம்பர திருமணத்திற்கான செலவுகளை ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு ஒதுக்க வாசிம் திட்டமிட்டான்.

வாகிதாவின் விருப்பமும் அவ்விதமே இருக்க, ருஹானாவின் ஆலோசனையின்படி ஆர்யன் அந்த நற்பணிக்காக பெரிய அறக்கட்டளை ஒன்றை நிறுவ முனைந்தவன் ரஷீத்திடம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய பணித்தான். அதை மட்டும் ஏற்றுக்கொண்ட வாசிம், ஆர்யன் கட்டிக்கொண்டிருக்கும் புதிய பண்ணை வீட்டில் வசிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

வாசிமின் முடிவை ஆர்யன் ஏற்கனவே அனுமானித்து இருந்ததால் அவன் வாசிமை வற்புறுத்தவில்லை. ஆனால் அம்ஜத் தன் சிறிய தம்பியுடன் சண்டையிட்டான். அவனின் மனம் புண்படாமல் மறுத்த வாசிம் “அண்ணா! நீங்க ரெண்டு தம்பி வீட்லயும் மாற்றி மாற்றி தங்குங்க. உங்களுக்கும் மாற்றம் கிடைக்கும். இங்கயும் பெரிய தோட்டம் உருவாக்கலாம்” என்று அம்ஜத்தை சமாதானப்படுத்தினான்.

இவானின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. வாசிமும் இன்னொரு சித்தப்பாவானதோடு சாக்லேட் அக்காவும் அவனுக்கு சித்தியானது அவனை துள்ளி குதிக்க வைத்தது.

பிரிந்த உறவுகள் நல்ல தருணத்தில் இணைய, தன்வீரும் நஸ்ரியாவை கரம் பற்ற ஆர்யனின் அனுமதியை கேட்டான். சாரா ஆனந்த கண்ணீர் வடிக்க, ஜாஃபரும் மகிழ்ந்து புன்னகைத்தான்.

———-

நதிக்கரையோரம் அமைந்த பண்ணை வீட்டின் கட்டுமானப்பணிகளை பார்வையிட ருஹானாவுடன் வந்திருந்த ஆர்யன், பொறியாளர்களிடம் மனைவியின் சிறுவிருப்பமும் தவறாது நிறைவேற வேண்டும் என கண்டிப்புடன் கூறினான்.

மற்றவர்கள் சென்றபின் கணவன் மனைவி இருவரும் வீட்டு மனையை சுற்றி வந்து இயற்கை எழிலை ரசித்துக்கொண்டு இருந்தனர். ருஹானா மாளிகையில் விட்டு வந்த செல்பேசியிலிருந்து இவான் காணொளி அழைப்பில் தொடர்பு கொள்ள, அவனுக்கும் எல்லாவற்றையும் சுற்றிக்காட்டி கொண்டிருந்தனர்.

ஆர்யனின் பேட்டரி தீர்ந்து அணைந்து போக, அந்தி மயங்கும் நேரத்தின் வனப்பில் மயங்கி நேரத்தை செலவிட்டவர்கள் மாளிகை திரும்ப மனமில்லாமல் கிளம்பினர். அவர்கள் மனதை அறிந்து கொண்ட இயற்கை அதற்கும் வழிவகை செய்தது.

ஆர்யன் காரை கிளப்ப அது நகர மறுத்தது. யாரையும் உதவிக்கு அழைக்க இயலாத நிலையில் ஆர்யனே அதை பழுது பார்க்க முயன்றும் கார் ஒத்துழைக்கவில்லை.

முன்தினம் பிக்னிக் சென்றபோது எடுத்து சென்ற இவானின் மடக்கும் கூடாரம் காரின் டிக்கியில் இருக்க, அதை எடுத்து ஆர்யன் தங்கும் இடமாக அமைத்தான்.

“டென்ட் நம்ம ரெண்டு பேருக்கும் படுக்க சரியா இருக்குமா?” என்று ருஹானா சந்தேகப்பட, குறும்பன் ஆர்யன் வசீகரமாக குறுநகை புரிந்தவன் “ஒருத்தருக்கு இடம் இருந்தா போதாதா?” என கண்சிமிட்டினான்.

நுனிக்காலில் நின்று எட்டி ருஹானா அவன் கழுத்தை கட்டிக்கொள்ள, அவளின் பின்கால் தவிர அனைத்து பாகங்களும் ஒட்டி உரசின.

——-

கூடாரத்தின் முன் கட்டைகளை கொண்டு நெருப்பு மூட்டிய ஆர்யன், குளிருக்கு இதமாக நெருப்பில் கைகளை காட்டிக்கொண்டிருந்த ருஹானாவை அணைத்துக் கொண்டான்.

“ருஹானா! நாம இப்போ எங்க இருக்கோம்னு சொல்லு?”

“எங்க ஆர்யன்?”

“நம்மோட வருங்கால படுக்கையறையில…”

ருஹானா வெட்கி தலைகுனிய, அவள் நாடியை பற்றி அவனை பார்க்க வைத்த ஆர்யன் “நம்மோட தேனிலவை இங்கயே இன்னைக்கே கொண்டாடுவோம். இன்றைய இரவு நமக்கு மறக்க முடியாத இரவு” என்றான்.

பேச்சை மாற்ற விரும்பிய ருஹானா “அப்போ இது தான் நம்மோட படுக்கையறையோட கணப்பு இருக்கப் போற இடமா?” என்று எதிரே எரிந்துகொண்டிருந்த நெருப்பை காட்டிக் கேட்டாள்.

“இல்ல, இது உன்னை பார்த்த நொடி முதல் எனக்குள்ள எரிந்திட்டு இருக்கற நெருப்பு. உனக்கான என்னோட காதலை நான் தெரிந்த நிமிடத்தில கொழுந்து விட்ட நெருப்பு. ஒவ்வொரு விநாடியும் உன்னோட சேர்ந்து எரிய நான் ஆசைப்படும் நெருப்பு. நம்மை ஒரே உடலா, ஒரே ஆன்மாவா மாற்றப்போற நெருப்பு. வாழ்நாள் முழுவதும் நம்மை தகிக்கப் போகும் நெருப்பு!”

———-

காலையில் கண்விழித்த ஆர்யன் அருகில் அயர்ந்து உறங்கும் ருஹானாவை கண்களால் பருகியபடியே படுத்திருக்க, சூரியக்கதிர்கள் அவளை தொட்டு எழுப்ப அவள் மயக்கும் முறுவலுடன் கண்விழித்தாள்.

“உன்னை நான் இதைவிட அதிகமா விரும்பமுடியாதுன்னு நேத்துவரை நினைச்சேன். ஆனா அது தப்பு. இனிவரும் ஒவ்வொரு நாளும் உன்மீதான என் அன்பு கூடிக்கொண்டே போகும்” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான். கண்கள் பளபளக்க கேட்டு கொண்டிருந்தாளே தவிர ருஹானா எதுவும் பேசவில்லை.

“துருவ நட்சத்திரம் நேற்றிரவும் நம்மோட காதலுக்கு சாட்சியா இருந்தது” என்று எழுந்தவன் அவளை கைகொடுத்து தூக்கி விட்டான்.

அவள் கிளம்ப தயாராக, ஆர்யன் வெளியே வந்து எரிந்து முடிந்திருந்த சாம்பலை எடுத்து கைக்குட்டையில் பத்திரப்படுத்தினான்.

———

Advertisement