Advertisement

மருத்துவமனை கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி தனது சிறிய மடிக்கணினியில் ஆர்யன் வேலை செய்துக் கொண்டிருக்க, ருஹானா ஏதோ படித்துக்கொண்டு இருந்தவள் அவனை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை. ஆனால் அவனோ அடிக்கடி தாடியை தேய்த்து விட்டுக்கொண்டபடி அவளை நோட்டமிட்டான்.

‘நல்லவேளை ஆர்யன் கேட்டதை மறந்துட்டார். என்னை திரும்பவும் வற்புறுத்தல. மனசுக்குள்ள நல்லா சொல்ல வருது அவர் பேர்! ஆனா வாயில வர மாட்டேங்குதே! ஆர்யனை காதலிக்கறேன்னு எப்படி சொல்ல? நான் என்ன செய்ய?’ என ருஹானா பெருமூச்சு விட்டவள் அவன் புறம் பார்வையை ஓடவிட, அவன் கை ஓயாமல் கன்னத்தை தடவி செல்வதை பார்த்தாள்.

“ஏன் முகத்துல தடவிட்டே இருக்கீங்க?”

“ஒன்னுமில்லயே! முடி கொஞ்சம் அதிகமா வளர்ந்துடுச்சி! ட்ரிம் செய்யல தானே?” என்று கேட்டவன், அவள் மீண்டும் புத்தகத்தில் பார்வையை பதிக்கவும் “வேற என்ன? நீ என்கிட்டே எதும் சொல்லணுமா?” என ஒற்றை புருவம் உயர்த்தி வினவினான்.

“இல்லயே! எதும் இல்லயே!” என்றபடி புத்தகத்துடன் அவள் திரும்பி அமர்ந்து கொள்ள, அவனும் சலிப்புடன் வேலையில் ஆழ்ந்தான். அவன் கை மட்டும் முகத்திலேயே இருந்தது.

ஏதோ யோசித்தவள் எழுந்து வெளியே சென்றாள். சில நிமிடங்களில் திரும்பி வந்தவளின் கையில் பெரிய துண்டும் கத்தரிக்கோலும் இருந்தது. அதை பார்த்த ஆர்யன் “எதுக்கு இது?” என்று கேட்டான்.

“நீங்க சொன்னீங்க தானே, தாடி வளர்ந்து உங்களுக்கு தொல்லை கொடுக்குதுன்னு. அதை நான் இப்போ சரி செய்யப் போறேன்.”

ஆர்யன் மிரட்சியாக பார்க்க, அவனை தோள்களை சுற்றி துண்டை போட்டவள், “நேசிக்கறவங்க தங்களோட அன்புக்குரியவங்களை எப்பவும் சந்தோசமா வச்சிப்பாங்க” என்றபடி அவன் கன்னத்து முடிகளை சீப்பால் சீவி விட்டாள்.

“நீ உண்மையா தான் சொல்றியா?” அவன் கத்தரியை பயத்துடன் பார்த்தான்.

“ஆமா!”

அவள் “இது எனக்கு பழக்கமான வேலை தான். என்னோட அப்பாக்கு உடம்பு சரியில்லாத சமயத்துல நான் தான் ட்ரிம் செய்து விடுவேன்” என்றபடி முடியை வெட்ட ஆரம்பித்தாள்.

அவன் முகத்தின் வெகு அருகே அவள் முகத்தை வைத்து, அவன் தலையை அவள் மேல் சாய்த்து முழங்கையால் பிடித்துக்கொள்ள, ஒரு கையில் சீப்பும் மறுகையில் கத்தரியும் கொண்டு அவள் தீவிரமாக வேலை செய்ய, அவனின் பயம் மிரட்சி அனைத்தும் நொடியில் பறந்தது. அதோடு அவன் மனமும் ஜிவ்வென வானில் மிதந்தது. அவளின் அருகாமை தந்த கிறக்கத்தில் கண்கள் தானாக மூடிக்கொண்டன.

அவள் காதலை செயலால் சொல்ல, அவன் சொல்லால் காது குளிர வேண்டுமென கேட்டான். “நான்… உங்களை..” என தயங்கியவள் “நினச்சிட்டே இருக்கேன்” என்று வெளியே ஓடிவிட்டாள்.

செல்லும் அவளை புன்னகையுடன் பார்த்திருந்தவன் தனது மடிக்கணினி திரையில் வேகமாக தனது முகத்தை திருப்பி திருப்பி பார்த்தான். திருப்தியுடன் சிரித்தவன் அவள் காதல் சொல்லும் தருணத்தை நிஜமாகவே ஆவலுடன் எதிர்பார்த்தான்.

———

ஆர்யனுக்கு பிடித்த உணவுகளை ருஹானா வீட்டிலிருந்து சமைத்து கொண்டுவந்து தந்தாள். அவன் ஆசைப்பட்டான் என பஞ்சு மிட்டாயை யாருக்கும் தெரியாமல் வாங்கிக்கொண்டு வந்து, வெட்கப்பட்ட அவனை மறைவில் சாப்பிட வைத்தாள். அவனின் அலுவக வேலையில் உதவி செய்தாள். மருத்துவமனை ஊழியர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஜாஃபரின் துணையுடன் அந்த வளாகம் விட்டு அருகிலிருந்த பூங்காவிற்கு அழைத்து சென்று துருவ நட்சத்திரத்தை காட்டினாள்.

ஆர்யனை காணவந்த இவான் “சித்தி! கண்ணாடி முன்ன நின்னு உங்களை நேசிக்கறேன்னு சொல்லிட்டே இருக்காங்க, ஏன் சித்தப்பா?” என ஆர்யனின் காதில் கேட்க, தன் காதல் மனைவியின் அயராத முயற்சிகளை கண்டு அவன் புளகாங்கிதம் அடைந்தான்.

———

நாட்கள் செல்ல செல்ல ஆர்யனின் வேதனை அதிகரிக்க, உள்ளத்தால் அவனோடு இணைந்திருந்த ருஹானா அதை கண்டுகொண்டாள். அவனிடம் அதை காட்டிக்கொள்ளாமல் ரஷீத்திடம் விசாரிக்கவும், ஆண்டவனிடம் தொழுது வேண்டவுமாக பரிதவித்தாள்.

ஒருநாள் ஆர்யன் மயக்கம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அனைவரின் பிரார்த்தனைக்கு செவிசாய்க்கும் விதமாக சையத் நாடு திரும்பினார். ஆர்யனை காண வந்தவர் அவனின் நிலை அறிந்து இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்த உண்மையை வெளியிட்டார்.

“கவலை கொள்ளாதே, மகளே! ஆர்யனின் சொந்த சகோதரன் இன்னும் ஒருவன் இந்த நகரத்திலேயே இருக்கிறான்.”

“எப்படி இது சாத்தியம்? நீங்க உண்மையை தான் சொல்றீங்களா?”

“ஆமா ருஹானா! உனக்கும் தெரிந்தவன் தான் அவன். நம்ம வாசிம் தான் அது!”

ருஹானாவும், மற்றவர்களும் அது கதையா, கற்பனையா என அதிர்ந்து நின்றனர்.

ஆர்யனின் தாய் தன் காதலனுடன் சென்ற ஒரே மாதத்தில் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என தெரிந்ததும் அவன் அவளை கைவிட்டு சென்றுவிட்டான். நான்கு மாத கர்ப்பிணி பெண்ணை அவளது தூரத்து உறவினர் ஹெமதுல்லா ஆதரித்து தன் கிராமத்து வீட்டில் வைத்திருக்க, ஆண்குழந்தை பிறந்தவுடன், அவளோ பச்சிளம்குழந்தையை தவிக்கவிட்டு அவனை தேடி போய்விட்டாள்.

அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வாசிமை வளர்த்த ஹெமதுல்லா அவனை மேல்நிலை பள்ளிப் படிப்பிற்காக அகாபா நகருக்கு அழைத்து வந்தார். விடுதியோடு கூடிய பள்ளியில் வாசிமை சேர்த்த அந்த தலைமையாசிரியர் தன் நண்பர் சையத்திடம் அவனின் பிறப்பின் உண்மையை கூறி அவனின் பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் வாங்கிக்கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.

ஏற்கனவே ஆர்யனுக்கு பாதுகாவலாக இருந்த சையத், அவனது சிறிய சகோதரன் மீதும் பாசத்தை பொழிந்தார். இருவரும் அவர் சொல்லை மீறி ஒரு கோடு தாண்ட மாட்டார்கள். இருவரும் வேறு பாதையில் பயணித்தாலும் சையத்திடம் மிகுந்த பாசமும் மரியாதையும் கொண்டிருந்தனர். குழப்பமான சூழலில் சையத்தின் அறிவுரையை நாடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

பள்ளி, கல்லூரி விடுமுறைக்கு மட்டும் ஊருக்கு சென்றுவரும் வாசிம், அகாபா நகரத்தில் கமிஷனராக பொறுப்பேற்றதும் ஓய்வுபெற்ற ஹெமதுல்லாவை தன்னுடன் அழைத்து வந்துவிட்டான். ஆர்யனை போன்றே அன்னையின் மேல் தீராத வெறுப்பை கொண்டிருந்த வாசிம் தனது கோபத்தின் வடிகாலாக நேர்மையான காவல் அதிகாரியாக உயர்ந்தான்.

சையத், ருஹானா, தன்வீர், ரஷீத் என ஒரு கூட்டமே வாசிமை பார்க்க சென்றது. அவனது உயிருக்குயிரான காதலி வாகிதா படுத்த படுக்கையாக இருப்பதால் வாசிமுக்கு சையத் விளக்கிய அவனது பிறப்பின் ரகசியம் பெரிதான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

வாழ்க்கையை வெறுத்து காவல்கடமையை மட்டும் செவ்வனே செய்துகொண்டிருந்த வாசிம், அகாபா நகரத்தின் பெரிய புள்ளி ஆர்யன் தனது தமையன் என துள்ளி குதிக்கவில்லை. ஆனால் அம்ஜத்தை நினைத்து அவன் இதயம் கனிந்தது.

அவர்களின் வேண்டுகோளின்படி ஆர்யனுக்கு கல்லீரல் தானம் செய்யவும் ஒப்புக்கொண்டான். வாகிதாவை மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு பரிசோதனைகளுக்கு ஒப்புதல் தந்தான். அவனது கல்லீரல் ஆர்யனுக்கு ஒத்துப்போகவே அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது.

வாசிம் அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்தில் இருக்க, வாகிதா மயக்கத்தில் இருந்து கண்விழித்தாள், தூங்கி எழுவது போல! இத்தனை மாதங்களாக அவளுக்கு மேற்கொண்ட சிகிச்சைகள் பலனளித்ததோ, அவளின் நேசத்துக்குரியவனின் உடலில் கத்தி பட்டதும் அவளின் உள்ளுணர்வு விழித்துக்கொண்டதோ, அனைவரின் கூட்டுப்பிரார்த்தனை அவளின் புலன்களை தட்டி எழுப்ப வாகிதா நெடுந்தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தாள்.

———–

சகோதரர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு நாட்கள் இருந்தபின் வாசிம் மட்டும் சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டான். அங்கே அவன் கண்டது பூரண நலத்துடன் நின்றிருந்த அவன் உயிர் வாகிதாவை தான். அவன் உலகமே அவனிடம் உயிர்ப்புடன் திரும்பி வந்ததால் அவன் மகிழ்ச்சிக் கடலில் விழுந்தான்.

ஆர்யனின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்க தொடங்கிய பின்னரே அவனை பார்க்க அனுமதி கிடைத்தது. தனக்கு தானம் வழங்கியது வாசிம் என்பதும் அவன் தன்னுடைய சொந்த சகோதரன் என்பதும் அவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. வாகிதா நலம் பெற்றதும் ஆர்யனுக்கு நிம்மதி கலந்த மகிழ்ச்சியை அளித்தது.

ருஹானா அவனை விட்டு ஒரு நொடி கூட அகலாமல் அவனை கவனித்து கொண்டாள். அவன் விரும்பிய சொற்களை அவனிடம் சொல்லிவிட மிகுந்த பிரயாசை செய்து அவன் முன்னால் வந்து அமர்ந்தாள். “நான் இப்போ சொல்லப் போறேன்!”

கட்டிலில் நிமிர்ந்து அமர்ந்துக்கொண்ட ஆர்யன் “யெஸ், நானும் தயாரா இருக்கேன். நடுவுல எதும் பேசி உன்னை தடுக்க மாட்டேன்” என்று ஆர்வமாக அவள் முகத்தை உற்று நோக்கினான்.

உதட்டை ஈரப்படுத்திக்கொண்ட ருஹானா அவன் ஆசைப்பட்டதை கூறினாள் தான். ஆனால் படுவேகமாக வாய்க்குள்ளே முணுமுணுத்து கொண்டாள். ஒரு ஓசையும் அவன் காதை எட்டவில்லை.

இருவரும் ஒரே சேர ஏமாற்றம் அடைந்தனர். “நீ ஏதோ சொன்னேன்னு புரியுது. ஆனா எனக்கு ஒன்னுமே கேட்கலயே, கொஞ்சம் சத்தமா இன்னொரு முறை சொல்லேன்!”

ருஹானா மறுமுறையும் முயற்சி செய்தாள். இம்முறை உதடுகள் கூட அசையவில்லை. வருத்தமாக தலைகுனிந்து கொண்டாள்.

Advertisement