Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 143

கரீமா இறந்த செய்தி கேட்ட ஆர்யன் அதிர்ந்து போனாலும் அண்ணனை நினைத்தே கவலை கொண்டான். ஆனால் கரீமாவின் மறைக்கப்பட்ட கோரமுகத்தை கண்முன்னால் கண்டுகொண்ட நேர்மைவாதியான அம்ஜத் அவளுக்கு கிடைத்த முடிவில் நிலைகுலையவில்லை.

ஜாஃபர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்துவந்த காவல் அதிகாரிகள், மருத்துவமனையிலிருந்து தப்பியோடி வந்து கரீமாவின் மரணத்திற்கும் காரணமான சல்மாவை கைது செய்து அழைத்து சென்றபோதும், அம்ஜத் அவள் பேரில் இரக்கம் கொள்ளவில்லை.

கணப்பொழுதில் நடந்து முடிந்த விபரீதம் வருடக்கணக்கில் நடந்து வந்த கொடுமைகளுக்கு நியாயம் செய்தாலும், ஆம்புலன்ஸ் வந்து கரீமாவின் பிரேதத்தை எடுத்து சென்றபோது அர்ஸ்லான் மாளிகைவாசிகள் கண்ணீருடனேயே வழியனுப்பி வைத்தனர்.

“எந்த தப்பும் தண்டிக்கப்பட்டே தீரும்” என்று ருஹானா ஆர்யனை ஆறுதல்படுத்தினாலும், கரீமாவினால் இத்தனை காலம் முட்டாளடிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“நம்மை பிரிக்க அவங்க செய்த எந்த முயற்சியும் வெற்றி அடையலயே! இன்னும் சொல்லப் போனால் அன்புவசப்பட்டு நாம நெருங்கி தான் இருக்கோம்” என ருஹானா அவன் உடல்நலன் பின்னடைந்துவிடுமோ என்ற பயத்தில் அவனது ஆவேசத்தை குறைக்க முயன்றாள்.

அப்போது அம்ஜத் தம்பியை தொலைபேசியில் அழைத்தான். “ஆர்யன்! நீ என்னை நினைச்சி கவலைப்படாதே! நான் நல்லாத் தான் இருக்கேன். நம்மை பிடிச்சிருந்த பிசாசு தொலைஞ்சிடுச்சி. அவ வாயாலயே என்ன என்ன சதிவேலைகள் செய்தான்னு சொல்லி இருக்கா. நீ அதை கேட்டினா அதிர்ச்சியாகிடுவே! வேணா.. வேணா.. நீ அதை கேட்கவே வேணா.. நீ சீக்கிரம் நல்லாகி வீட்டுக்கு வா. அதுவரைக்கும் எனக்கு தோட்டம் இருக்கு. மலர்கள் நம்மை எப்பவும் வஞ்சனை செய்யாது.”

அம்ஜத்திடம் பேசிமுடித்த ஆர்யன், ஜாஃபரை அழைத்து தமையனுக்கு மருந்து அளித்து தூங்க வைக்கக் கூறினான். அம்ஜத்தின் மருத்துவரிடம் அவனை கவனிக்க ஒரு செவிலிப்பெண்ணையும் மாளிகைக்கு அனுப்பி வைக்க வேண்டினான்.

ருஹானாவின் கண்ணில் நீரை பார்த்தவன் “தகுதியில்லாதவங்களுக்காக உன் ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளிய வரக்கூடாது. கரீமான்னு ஒரு பெண் நம்ம வாழ்க்கைல வரவே இல்லன்னு நினைச்சிக்கோ. அந்த நினைவுகளை தூக்கிப் போடு. அந்த பேரை இனிமேல் யாரும் உச்சரிக்கக்கூடாது” என எச்சரித்தான்.

“துரோகிக்கும் இரக்கப்படற நீ அபூர்வ பிறவி” என்று சொல்லி மனைவியை வேகமாக இழுத்து அணைத்துக்கொண்டான். ருஹானா அவனின் காயத்தில் மோதிவிட ஆர்யன் வலியால் துடித்துப் போனான். அவள் ஓடிச்சென்று மருத்துவரை அழைத்து வந்தாள்.

———

“உங்களுக்கு இன்னும் வலிக்குதா? டாக்டர் ஊசி போட்ட பின்னும் வலி குறையலயா?”

“உன்னை பார்த்தாலே என் வலியெல்லாம் பறந்து போய்டுமே!”

“உங்களுக்கு குணமாகணும்னா நான் எதுவும் செய்வேனே!”

ஆர்யனுக்குள் இருந்த குறும்புக்காரன் விழித்துக்கொண்டான். “அப்படின்னா இங்க வலி குறையலயே, என்ன செய்யலாம்?”

“இது உங்களை வலியை குறைக்காது. ஆனா உங்க நினைப்பை மாற்றும்” என்று சொன்ன ருஹானா, அவள் என்ன செய்யப்போகிறாள் என அனுமானிக்கும்முன் குனிந்து அவன் இதழில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

பரவசத்தில் திளைத்த ஆர்யன் மீண்டும் அவள் நெருக்கம் வேண்டி காயம்படாத இடது பக்கம் காட்டி “இங்க வலிக்குதே!” என்று மயக்கத்தில் சொல்ல, ருஹானா கலகலவென சிரித்தாள்.

——–

இரு தினங்களுக்கு பின் ஒரு தேர்ந்த மருத்துவக்குழு ஆர்யனை பரிசோதித்து பார்த்தது. வலதுபக்க இடுப்பில் பாய்ந்திருந்த துப்பாக்கிக்குண்டை மருத்துவர்கள் அகற்றியிருந்தபோதிலும் அது அவனின் கல்லீரலை பாதித்து இருந்தது. மருந்து மாத்திரை மூலம் அதை சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் கணித்திருக்க, அது இயலாமல் போனது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ரஷீத்தையும், ஜாஃபரையும் அழைத்து நிலைமையை விளக்கியவர்கள் அவனது சகோதரனிடமிருந்து அதை பெற்றுக் கொள்ளலாம் எனும் தீர்வையும் அளித்தனர். கல்லீரல் தன்னை மீண்டும் உருவாக்கக்கூடிய ஒரு உறுப்பு. நன்கொடையாளரின் கல்லீரல் தனது இயல்பிற்கு தானாகவே வளரக்கூடியது மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட பகுதி பெறுநருக்கு முழு கல்லீரலாக வளரும்.

எனவே சிறிய பாகம் தானம் கொடுத்தாலும் அம்ஜத்திற்கு பக்கவிளைவுகள் எதும் ஏற்படாது எனவும் உறுதி அளித்தனர். ஆர்யனின் இரத்தவகை அரியவகை என்பதால் இரத்த உறவுகளிடமிருந்து தானம் பெற்றால் மட்டுமே அது அவனுக்கு முழுமையாக பொருந்தும் என்றும் எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்தார்கள்.

ருஹானாவிற்கு இந்த தகவல்கள் சொல்லப்பட, அவள் பயந்து தவித்து போனாள். பின்பு ரஷீத் அவளை மருத்துவ நிபுணரிடம் அழைத்து செல்ல, அவர் இந்த அறுவை சிகிச்சை அவசியமானது என்று விளக்கி சொல்லி, அதன் பாதுகாப்பான சிகிச்சை முறையையும் எடுத்து உரைத்தனர்.

ஆனால் ஆர்யன் இந்த அறுவை சிகிச்சையில் தன் தமையனுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக்கூடாது என்னும் நிபந்தனையை முன்வைத்தான். பலவிதமான மருத்துவ வல்லுனர்களை தொலைபேசியில் அழைத்து பாதக நிலை உருவாகாது என்ற உறுதியை பெற்றுக்கொண்டான்.

——–

ஆர்யனுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்து அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த ருஹானா அதை தெரிந்து கொள்ள, அவனோடு ஸ்காரபிள் விளையாட்டு விளையாடினாள்.

அவனுக்கு வந்த எழுத்துக்களில் அவன் முதலில் ஹெலிகாப்டர் என அமைத்தான். அவனோடு ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யலாம் என எண்ணி “உங்களுக்கு ஹெலிகாப்டர்ல போறது பிடிக்குமா?” என கேட்டாள்.

“அப்படி எல்லாம் இல்ல. இந்த  எழுத்துக்களுக்கு அந்த  வார்த்தை சரியா வந்தது.”

“ஓஹோ, அப்படியா?” என்றவள் தன் முறையில் டேபிள் என வார்த்தையை உருவாக்கினாள். அடுத்து அவன் கார் என வைக்க, “உங்களுக்கு எந்த வகை கார் பிடிக்கும்?” என கேட்டாள்.

“எதும் குறிப்பிட்டது இல்ல. நம்ம வசதிக்கு பயணம் செய்ய ஒரு வாகனம், அவ்வளவு தான்.”

அவன் பதிலில் அவளுக்கு உற்சாகம் குறைந்து போனது. அவனை எதிர்பாராத மகிழ்ச்சியில் ஆழ்த்த தனக்கு சந்தர்ப்பம் கிடைக்காதோ என வருந்தினாள். அடுத்து அவள் எஸ்கலேட்டர் என்ற வார்த்தையை பொறுத்த, ஆர்யன் “உனக்கு எஸ்கலேட்டர் பிடிக்குமா?” என்று கேட்டான்.

திகைத்த ருஹானா “ஏன் இப்படி கேட்கறீங்க?” என வினவ, “இல்ல, நீ ஒவ்வொரு முறையும் என்னை கேட்டே தானே? விளையாட்டின் விதிமுறை இது தானோன்னு நான் நினைச்சேன்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா வாய்விட்டு சிரித்தாள்.

“சரி, இனி நாம விதிமுறையை மாத்திக்குவோம். நமக்கு பிடித்தமான வார்த்தையை பொருத்துவோம்” என்று சிரிப்பினூடே அவள் சொல்ல, சம்மதித்த ஆர்யன் அடுத்து அமைத்த வார்த்தை ‘ருஹானா!’

“என்ன, ஏன் பேரை வச்சிட்டீங்க?”

“எனக்கு பிடித்தமான சொல், சொல்லப்போனா எனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல், ருஹானா” என அவள் பெயருக்கும் வலிக்குமோ என்பது போல மென்மையாக வார்த்தையை உதிர்த்தான். நெகிழ்ந்து உருகிய ருஹானா அவன் தோள் சாய்ந்தாள்.

——–

அம்ஜத்தை மருத்துவமனைக்கு அழைத்து வந்து உரிய பரிசோதனைகள் செய்தனர். தன்மூலம் தம்பிக்கு குணமாக வாய்ப்பு கிட்டியது குறித்து அவனுக்கு மிகுந்த சந்தோஷம். என்றாலும் அவனின் உடல்நிலை ஆர்யனுக்கு தானம் அளிக்கும் நிலையில் இல்லை என முடிவுகள் தெரிவித்தன.

என்ன காரணம் என மேலும் ஆராய, கரீமா செய்து வைத்த மருந்து மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. கொதித்து போன ஆர்யன் அண்ணனின் அனைத்து மருந்துகளையும் மாற்ற சொல்லி உத்தரவிட்டான். கரீமா மாற்றிய மருந்துகளின் பின்விளைவுகளுக்கு தக்கவாறு அம்ஜத்திற்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவனுக்காக நியமிக்கப்பட்ட செவிலிப்பெண் நிஹாரா அவனை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டாள்.

——–

ஆர்யனுக்கு சிகிச்சைகள் தொடர, ரஷீத் ஆர்யனின் உறவினர்களை தேடும் படலத்தை ஆரம்பித்தான். தீவிரமாக அவன் தேடி அலைந்தபோதும் ஆர்யனின் இரத்தவகைக்கு பொருத்தமாக உறவுகள் ஒருவரையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அகாபா நகரம் மட்டும் அல்ல, ஜோர்டான் நாடு முழுவதுமே ஆட்களை அனுப்பி சல்லடையாக சலித்தான்.

வலியால் துடித்த ஆர்யன் அதை மனைவிக்கு தெரியாமல் மறைத்தான். மரணம் தன்னை அழைத்துக்கொண்டால் என்ன செய்வது என பயந்து இவானுக்கும் ருஹானாவிற்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். சொத்துக்களையும் அவர்கள் பெயருக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்தான்.

ஒருபக்கம் குணமாகிவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. மனைவியை திசை திருப்ப அவளிடம் “என் பேர் சொல்லி கூப்பிடு, ருஹானா!” என வம்பு செய்து கொண்டு இருந்தான். அவள் வெட்கப்பட்டு மறுக்க, மேலும் அவளை சீண்டினான். “நான் எத்தனை முறை உன்னை காதலிக்கிறேன்னு சொல்றேன். நீ ஒருமுறையாவது வாய் திறந்து சொல்றியா?”

———-

Advertisement