Advertisement

“என்னோட வாழ்க்கையில உன்னை தவிர என்னை குணமாக்கறது வேற எதுவும் இல்ல. நீ தான் என்னோட சிறந்த மருந்து. உன்னோட இடம் என் அருகில் தான், வா!”

அவனை நெருங்கி படுத்த ருஹானா “ஆனா எல்லா மருந்துக்கும் ஒரு பக்கவிளைவு இருக்குமே?” என புருவம் உயர்த்தி கேட்டாள்.

“உண்மை! உன்னோட பக்கவிளைவு, மயக்கம்.” அவளின் சிவந்த கன்னத்தை வருடியவன் “பாரேன், நீ என் வாழ்க்கையில வரும்முன்ன நான் நல்லா தான் இருந்தேன். ஆனா இப்போ நீ இல்லாம என்னால உயிர் வாழ முடியாது. காலையில ஒரு டோஸ், மாலையில ஒரு டோஸ். என் ஒவ்வொரு மூச்சுலயும் நீ வேணும்” என்று கிறக்கமாக சொல்ல, ருஹானா விரும்பியே அவன் விரும்பியதை கொடுக்க அவன் முகத்தருகே நெருங்கி கண்களை மூடிக்கொண்டாள்.

மயக்க மருந்தை நாடியவனும் மருந்தை சுவைத்த நொடியில் மயக்கத்தில் ஆழ்ந்தான். மருந்தின் சுவை கசப்பு என்பது உலக இயல்பாக இருக்க, இவன் அருந்திய இதழ் மருந்தோ தேனினும் இனிமையாய் சுவை தந்து பக்கவிளைவாய் மயக்கத்தை தந்தது. கொடுத்தவளும் எடுத்தவனும் உலகை மறந்து கிடந்தனர்.

“சித்தப்பா!” என குரல் கொடுத்தபடி இவான் கண்விழிக்க, தன்னிலைக்கு வந்தவர்கள் சற்றே விலக, ஆர்யன் “நல்லவேளை, இன்னைக்கு இவனுக்கு சென்சார் தாமதமா வேலை செஞ்சிருக்கு” என்று ஆசுவாசப்பட, ருஹானாவிற்கு சிரிப்பு அள்ளியது.

“வா, அக்னி சிறகே!”

“சித்தப்பா! உங்களுக்கு சரியாகணும்னு நான் ரொம்ப ரொம்ப பிரார்த்தனை செய்தேன்!”

“எனக்கு தெரியும், சிங்கப்பையா! இல்லனா நான் எப்படி கண் திறந்திருப்பேன்? நீ தான் என்னோட ஹீரோ!”

“யேஹ்! நானும் வருவேன்” என்று ஓடிவந்து ஆர்யனின் இடதுபுறம் அவனை அணைத்து படுத்துக்கொண்டான். எப்போதும் இவானை நடுவில் வைத்து இருவரும் படுத்திருப்பார்கள். இப்போது மனைவி ஒருபுறமும், மகன் மறுபுறமும் படுத்திருக்க, இருவரையும் இருகைகளாலும் அணைத்திருந்த ஆர்யனுக்கு உலகமே தன் கைவசம் என்பது போல ஆனந்தமாக இருந்தது.

———

“இல்ல, கரீமா அப்படி செய்திருக்க மாட்டா! அவ நல்லவ! என்னை அப்படி பார்த்துக்குவாளே! ஆனா அவங்க பேசினதை நான் கேட்டேனே! இல்ல, தஸ்லீமை கரீமா தான் தள்ளிவிட்டா. அவ மோசம்! அவளுக்கு தண்டனை கிடைக்கணும்.”

தஸ்லீமுடன் நிகழ்த்திய தள்ளுமுள்ளுவில் ஆரம்பித்து மயங்கி கீழே கிடந்த ருஹானாவின் அருகே கிடைத்த கரீமாவின் காதணி வரை கரீமா செய்த காரியங்கள் யாவும் அம்ஜத்தின் நினைவுகளில் ஒவ்வொன்றாக முன்னால் வர, அவள் அவனுக்கு செய்த பணிவிடைகள் மெதுவாக பின்னே நகர்ந்தன.

——–

ஆர்யன் மேலே படுத்திருந்த இவான் மீண்டும் தூங்கிவிட, அவனை தூக்க முயன்ற ருஹானாவை ஆர்யன் தடுத்தான். “எனக்கு இதுவே சுகமா இருக்கு” என்று அவன் சொல்ல, அவளும் அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள்.

“இன்னும் ரெண்டு நாள்ல நாம வீட்டுக்கு போய்டுவோம்.”

“இல்ல, அந்த மாளிகை இனிமே நம்ம வீடு இல்ல. மரணம்… விபத்து.. அங்க நடந்த கசப்பான நிகழ்வுகளை நான் மறக்க விரும்பறேன்” என்ற ஆர்யனுக்கு ருஹானாவிற்கு அவன் செய்த தீங்குகளும் மனதை வதைத்தன.

“நான் அங்க நிறைய தப்பு செய்திருக்கேன். அதெல்லாம் எனக்கு நினைக்க பிடிக்கல. பேய் நிழல் போல அதை நான் சுமக்க விரும்பல. நாம புதுசா ஆரம்பிப்போம். ஒரு புதுவீடு அமைப்போம்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா தலை தூக்கி அவனை பார்த்து தலையாட்டினாள்.

“சரி, சொல்லு! நம்ம புது வீடு எப்படி இருக்கணும்?”

“நாம ஒன்னா இருந்தாலே போதும்.”

“அது எப்பவும் இருப்போம். இருந்தாலும் உன் கனவு இல்லம், நீ ஆசைப்பட்டது சொல்லு!”

“பெரிய தோட்டம் இருக்கணும். அம்ஜத் அண்ணாக்கு விருப்பமான செடிகள் வளர்க்கலாம்.”

“தோட்டம் கண்டிப்பா இருக்கும். இவான் ஓடி விளையாட வேணுமே!”

“ஆடுன்னா இவானுக்கு பிடிக்கும். அதும் வாங்கலாமா?”

“ஒஹ்! அப்படினா நீ ஃபார்ம் ஹவுஸ் வாங்கலாம்னு சொல்றியா?”

“ஆனா இந்த மாளிகை போல ரொம்ப பெருசு வேணாம்.”

“ஏன் ருஹானா? விருந்தாளிகள் வருவாங்களே!”

“வருவாங்க தான். அவங்களுக்கு ஒரு அறை போதுமே!”

“ஒரு அறை போதுமா? ஒருத்தருக்கு அதிகமா வந்துட்டா?”

ருஹானா புரியாது பார்த்தாள். “ஒருத்தருக்கு மேலா?”

ஆமென தலையாட்டிய ஆர்யன் “ரெண்டு.. மூணு கூட இருக்கலாம்” என்று குறும்பாக சிரித்தான். “இவான் எத்தனை தம்பி தங்கை கேட்பானோ? நமக்கு எப்படி தெரியும்?”

ருஹானாவின் விழிகள் அகல, முகம் குப்பென சிவந்தது. தலையை குனிந்து கொண்டவள் அவன் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தமிட்ட ஆர்யன், நிம்மதியாக அவள் தலையில் கன்னத்தை பதித்துக்கொண்டான்.

———

கரீமாவின் கையாள் ரஷீத்தின் பிடியில் இருப்பது தெரியாமல் கரீமா அவனுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தாள். “எங்க போய் தொலைஞ்சான் இவன்? பூமி விழுங்கிடுச்சா? ஆர்யன் உயிரோட இருக்கற தகவலை கூட எனக்கு சொல்லல” என்று கத்தியவளுக்கு திடீரென பயம் வந்தது.

“ஆர்யன் கையில சிக்கிட்டானா? ஐயோ! ஆர்யன் ஒரு விஷயம் பாக்கி இல்லாம கக்க வச்சிடுவானே! என்னை உயிரோட எரிச்சிடுவான்” என்று நடுங்கியவள் பெட்டியில் பணம், நகைகளை அள்ளிப் போட்டாள்.

அறையின் கதவு மூடப்படும் ஓசையில் அதிர்ந்த கரீமா திரும்பி பார்க்க, அங்கே சல்மா சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள்.

———-

இவானை சோபாவில் படுக்க வைத்த ருஹானா, ஆர்யனுக்கு சரியாக போர்த்தி விட்டாள். அவன் கையில் மருந்து இறங்கி கொண்டிருந்த ட்ரிப்ஸ் மடங்கி இருக்க, அதை சரி செய்தாள். கண்விழித்த ஆர்யன் அவளை நெருக்கத்தில் பார்த்தபடி இன்பக் கனவுகளோடு எழுந்தான்.

“காலையில எழும்போதே நல்ல காட்சி!”

“உங்களுக்கு பசிக்குதா? நர்ஸ்ட்ட கேட்டு ஏதாவது கொண்டுவரவா?”

“அவங்க வரும்போது வரட்டும். நாம இரவெல்லாம் பேசினோமே, நம்ம தேனிலவு பற்றி பேசவே இல்லயே?” என்று ஆர்யன் ஆரம்பிக்கும்போது கதவு தட்டப்பட்டது. “பார், நம்ம தேனிலவுக்கு திட்டமிட்டாலே இடைஞ்சல் வரும். இப்பவும் அதான் பார்.”

உள்ளே வந்த ரஷீத்தும் ஜாஃபரும் அவன் கூற்றை மெய்ப்பித்தனர். துப்பறிவாளன் கண்டுபிடித்ததை ரஷீத் விளக்கமாக கூற, ஆர்யன் “விஷப்பாம்பை என் பக்கத்துலயே வச்சி என் கையால பால் வார்த்திருக்கேன்” என்று நொந்து கொண்டான்.

“உங்க மேல தப்பு இல்ல, சார்! அவங்க மிகச்சிறந்த நடிகை அவங்களுக்கு சொத்துக்கள் மேல தான் கண். இத்தனை நாள் அம்ஜத் சார் மேல அன்பா இருக்கறது போல நடிச்சிருக்காங்க” என்று சொன்ன ஜாஃபர், சொத்துக்களை அவள் பேரில் மாற்ற கரீமா வக்கீலுக்கு ஆணையிட்டதும், அம்ஜத்தை மனநோய் மருத்துவமனையில் சேர்க்க திட்டமிட்டதையும் கூறினான்.

அதிர்ச்சியடைந்த ஆர்யன் “என் அண்ணனை அவளை நம்பி ஒப்படைச்சேனே!” என்று கத்திக்கொண்டே எழுந்தவன் ட்ரிப்சை பிடுங்கி போட்டான். பதறிய ருஹானா அவனை பிடித்து கட்டிலில் அமரவைத்து அமைதிப்படுத்தினாள். “நீங்க குணமாகுறது தான் இப்போ முக்கியம். அப்புறம் அவங்களை பார்த்துக்கலாம். அம்ஜத் அண்ணாவையும் யோசித்து பாருங்க. எங்க எல்லாருக்கும் நீங்க வேணும்.”

“ஜாஃபர்! அண்ணனை கவனமா பார்த்துக்கங்க. ரஷீத்! கரீமா மேல கண்காணிப்பு தொடரட்டும். மாளிகையோட கேமரா பதிவுகளை பார்த்திட்டே இரு. நான் வந்து என் கையாலயே அவளுக்கு தண்டனை தரேன்!” என இருவரையும் எச்சரித்த ஆர்யன், ஜாஃபரை உடனடியாக மாளிகைக்கு திரும்ப சொன்னான்.

———

“சல்மா! நீ எப்படி இங்க?”

“மாளிகைல இருந்தா என்னால வர முடியாதுன்னு நினைச்சியா? ஹாஸ்பிடல்ல இருந்து தப்பி ஓடி வந்து இருக்கேன்.”

“என்ன? ஹாஸ்பிடலா?”

“ம்.. நல்லா கேட்பியே! எல்லா கொடுமையையும் அனுபவிச்சி, சாகப்போகற நேரத்துல தப்பிச்சி வந்திருக்கேன், என் ஆசை அக்காவை பார்க்க!”

“ஏன் சல்மா, கோபமா இருக்கியா? இப்போ எனக்கு பேச நேரம் இல்ல, வா, நாம வெளிய போய் பேசலாம். இங்க ஒரு நிமிடம் இருக்கறது கூட ஆபத்து.”

“என்ன விளையாடுறியா? நீ செய்ததுக்கு எல்லாம் நான் தண்டனை அனுபவிச்சிட்டு வந்திருக்கேன். என்னை விரட்ட பார்க்கறியா?”

“சல்மா! நிலைமை புரியாம உளறாதே! நீ கிளம்பு! நானும் பின்னாடியே வரேன்!”

“ஓஹோ! நான் உளறுறேனா? இதை கேட்கறியா? இது எப்படி உளறுதுன்னு பார்க்கறியா?” என்ற சல்மா தன் கையிலிருந்த ஒலிப்பதிவு கருவியை ஓட விட்டாள்.

நிலைகுலைந்த கரீமா “சல்மா! அதை நிறுத்து!” என்று கத்த, “நான் இதை ஆர்யன்ட்ட கொடுக்கறேன். அவனே எல்லாத்தையும் நிறுத்துவான். உன் குரலை உனக்கே கேட்க பிடிக்கலயா? உன்னோட நரகத்துக்கான பயணச்சீட்டு இது!” என்று கதவை திறந்து கொண்டு ஓடினாள்.

கரீமாவும் அவள் பின்னால் ஓடினாள். “ஆர்யன் இங்க இல்ல, சல்மா! அவன் ஹாஸ்பிடல்ல இருக்கான்” என்றபடி அவளை மாடிப்படி வளைவில் பிடித்து விட்டாள். “இங்க இல்லனா என்ன? அவன் எங்க இருக்கானோ, அங்க நான் போறேன்” என்று சல்மா திமிறினாள்.

மாளிகை திரும்பிய ஜாஃபர் தோட்டத்தில் தடுமாறி நடந்துக்கொண்டிருந்த அம்ஜத்தை கைப்பிடித்து உள்ளே கூட்டி வந்தான்.

“சல்மா! உனக்கு பைத்தியமா? என்கிட்டே கொடு அதை! உன் அக்காவுக்கு இதை செய்யாதே!” என கரீமா பிடுங்க பார்க்க, “என்னை பயன்படுத்தி தூக்கிப்போட்ட நீ எனக்கு அக்காவும் இல்ல, நான் உன் தங்கையும் இல்ல” என்று சல்மா கையை மேலே உயர்த்தி பிடித்துக்கொண்டாள்.

சல்மாவின் கழுத்தை நெறித்த கரீமா “அதை என்கிட்டே கொடுத்துடு, இல்லனா நான் உன்னை கொன்னுடுவேன்” என்று இரைய, கீழே பார்த்துக்கொண்டிருந்த ஜாஃபரும், அம்ஜத்தும் திகைத்து நின்றிருந்தனர்.

சல்மாவின் கையில் இருந்து நழுவிய குரல்பதிவு கருவி அம்ஜத்தின் காலடியில் வந்து விழுந்தது. கரீமாவின் கவனம் கலைய சல்மா அவளை உதற, நிலைதடுமாறிய கரீமா மாடிவளைவில் குப்புற கவிழ்ந்தாள்.

சல்மா அதிர்ச்சியில் வாயை மூடிக்கொள்ள, அங்கே மாட்டப்பட்டிருந்த தஸ்லீமின் படத்தை தழுவியபடி கரீமா கீழே விழுந்தாள். சட்டென அவள் பின்தலை நச்சென மோதி அவள் மல்லாந்து தரையில் விழ, அவள் காதிலிருந்து இரத்தம் வடிந்தது. மரணபயத்துடன் கண் திறந்தபடி அவள் உயிர் பிரிந்தது.

(தொடரும்)

Advertisement