Advertisement

தொலைக்காட்சியில் பரபரப்பு செய்தியாக ஆர்யன் சுடப்பட்டு விழுந்து கிடக்கும் படம் காட்டப்பட, என்ன நடந்தது எனும் சரியான விவரம் தெரியாமல் வதந்திகள் பரவத் துவங்கியது.

மலையுச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டும் மரணத்தை தழுவாமல் பெரிய புதையலின் மீது சொகுசாக விழுந்த பரவச நிலை தான் கரீமாவிற்கு. எதிர்பாராமல் கிடைத்த இந்த அதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணி குதூகலித்தாள்.

அவளது அடியாளை அலைபேசியில் அழைத்தவள் “ஆர்யன் எப்படி இறந்தான்னு எனக்கு விசாரிச்சி சொல்லு. ருஹானாவும் இன்னும் மாளிகைக்கு திரும்பல. அவளும் ஆர்யானோட போய் சேர்ந்துட்டாளான்னு பாரு. எல்லா சொத்தும் அம்ஜத் பேர்ல வந்துடும். எனக்கு ஒரு பவர் ஆஃப் அட்டர்னி வாங்கணும். அம்ஜத்தை நிரந்தமா ஒரு ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டேன்னா எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாம சந்தோசமா இருப்பேன். இன்னும் சில மணி நேரத்துல நான் பலகோடிகளின் அதிபதி!” என்று மகிழ்ச்சியாக பேசினாள்.

“எப்போ போனாங்க? ஏன் இன்னும் வரல? என் அமைதி கெட்டு போச்சே! ஜாஃபர்! ஆர்யனுக்கு போன் செய்!” என்று அம்ஜத் விசனப்பட, அவனை அமைதிப்படுத்திய ஜாஃபர் அவனுக்கு குடிக்க பானம் எடுக்க வர, கரீமா பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டான். ஆனால் எதுவும் காதில் விழாததை போல நின்று கொண்டான்.

“இனி உங்களுக்கு நிரந்த அமைதி தான் அம்ஜத் டியர்! பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல வாழ்நாள் முழுக்க நிம்மதியா இருக்கலாம்.”

                                                  ———-

பொழுது விடிந்தும் எதிர்பார்த்த எந்த தகவலும் வராமல் போக அம்ஜத்தை ஜாஃபரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கரீமா தூங்கப் போனாள். “ஜாஃபர்! எனக்கு உடல்நிலை சரியா இல்ல. இப்போ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கறேன். செய்தி கேள்விப்பட்டத்துல இருந்து என்னால கண்மூட முடியல.”

“என்ன செய்தி கரீமா மேம்?”

“ஆர்யனுக்கு என்னவோ ஆனதா…” கரீமாவை முடிக்கவிடவில்லை ஜாஃபர்!

“ஆர்யன் சாருக்கு ஒன்னும் ஆகாது. அவர் வலிமையானவர். எனக்கு தெரியும், அவரோட எதிரிகள் மிக ஆவலா இதை எதிர்பார்த்து காத்திட்டு இருக்காங்க. ஆனா நீங்க கவலைப்படாதீங்க. ஆர்யன் சார் நலமோடு திரும்பி வருவார்.”

சுதாரித்துக்கொண்ட கரீமா “ஆமா ஜாஃபர்! அது தான் என்னோட பிரார்த்தனையும்” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு மேலே சென்றாள். ஜாஃபருக்கு அவளைப்பற்றிய விவரங்களை ஆர்யன் சொல்லியிருப்பான் என அவள் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

——–

சிகிச்சை முடிந்து மயக்கம் தெளியாமல் படுத்திருந்த ஆர்யனின் கையை பிடித்துக்கொண்டு ருஹானா “எனக்கும் இவானுக்கும் நீங்க தான் உலகம். தயவுசெய்து திரும்பி வந்துடுங்க. எங்களை விட்டு பிரிய மாட்டேன்னு வாக்கு கொடுத்து இருக்கீங்க. கண்ணை திறங்க” என்று கண்ணீர் விட, அவள் பிடித்திருந்த ஆர்யனின் கை அசைந்தது.

கண் விழித்த ஆர்யன் “உங்களை விட்டு நான் எப்படி போவேன்?” என்றான். ருஹானா கடவுளுக்கு நன்றி சொன்னவள் படுத்த நிலையில் அவனை அணைத்து கொண்டாள். இருவருக்குள்ளும் ஆழ்ந்த அமைதி. ருஹானா ஆனந்த கண்ணீரோடு எழுந்து கொள்ள, அவன் இவான் எங்கே என கேட்டான். பக்கத்தில் இருந்த சோபாவில் தூங்கிக்கொண்டு இருந்த இவானை காட்டிய ருஹானா “உங்களுக்கு சரியாகாம வீட்டுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டான்” என்றாள்.

அப்போது காயத்திற்கு தையல் போட்ட காலை தாங்கி நடந்தவாறு ரஷீத் உள்ளே வர, ஆர்யன் அவனை கடிந்து கொண்டான். “அவர் காலைல இருந்து சாயந்தரம் வரை உங்க அறை வாசல்ல தான் இருக்கார்” என ருஹானா சொல்ல, ஆர்யன் அவனை ஓய்வெடுக்கும்படி பணித்தான். “எனக்கு ஒன்னும் இல்ல, ஆர்யன். நீங்க ஒரு நாள் முழுசா கண் திறக்கல. நாங்க பயந்திட்டோம். இப்போ தான் மூச்சே வருது.”

மனைவி மற்றும் நண்பனின் வேதனை கண்டு தன் வலியை மறைத்த ஆர்யன், அண்ணன் பயந்திருப்பானோ என கவலை கொண்டான். ரஷீத் “நான் ஜாஃபருக்கு போன் செய்து கேட்கறேன், ஆர்யன்! நீங்க எதையும் யோசிக்காம ஓய்வெடுங்க” என்று சொல்லி வெளியேறினான்.

“நீங்க சரியாகிட்டா நானும் இவானும் நல்லா இருப்போம். எங்க உலகமே நீங்க தான்!” என்ற ருஹானா ஆர்யனின் கையை இருகைகளாலும் பிடித்துக்கொண்டாள்.

———

வரவேற்பறையில் அம்ஜத் தலையை பிடித்தபடி அமர்ந்திருக்க, கரீமா உள்ளே சந்தோசத்தை மறைத்தபடி அவனை மருந்து சாப்பிட வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அவளின் கையாளிடமிருந்து தகவல் எதும் வரவில்லை என்றாலும் ஊடகங்கள் ஆர்யனின் கொலை முயற்சியை பற்றி பல்வேறு ஊகங்களை அள்ளி தெளித்திருக்க, அர்ஸ்லான் மாளிகை துயரில் ஆழ்ந்தது.

அப்போது அழைப்புமணி ஓசை கேட்க, ஜாஃபர் கதவை திறக்க சென்றான். சாராவிடம் கரீமா “இன்ஷா அல்லாஹ்! நல்ல செய்தியாக இருக்கட்டும்” என்று சொன்னவள் ஆவலாக ஆர்யனின் மரணசெய்தியை எதிர்பார்த்தாள்.

உள்ளே வந்த ரஷீத் “மூணு பேரும் நல்லா இருக்காங்க. எந்த ஆபத்தும் இல்ல” என்று சொன்னதும் கரீமாவின் முகம் பேயறைந்தது போல வெளுத்தது. “அல்லாஹ்க்கு ஆயிரம் நன்றிகள்!” என்று சாரா சொல்ல, அம்ஜத் மகிழ்ச்சியில் குதித்தான்.

கரீமாவின் இருண்ட முகத்தை பார்த்த ஜாஃபரின் சிரிப்பு மறைய, “ஆர்யன் நல்லா இருக்கானா? ருஹானாவும் தானே? இவானுக்கு ஒன்னும் இல்லயே?” என ரஷீத்திடம் உறுதிபடுத்திக்கொண்ட அம்ஜத் “கரீமா! கேட்டியா? ஒரு ஆபத்தும் இல்ல, அவங்க நல்லா இருக்காங்க” என்று அவளை உலுக்க, அவள் பதில் பேசமுடியாமல் திகைப்பில் நின்றாள்.

“என்ன கரீமா? உன் முகத்தில சந்தோசமே காணோம்? யாருக்கும் ஒன்னும் ஆகல” என்று அம்ஜத் அவளை சகஜமாக்க முயற்சி செய்ய, ஜாஃபரும் ரஷீத்தும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஆமா, அம்ஜத் டியர்! என்னோட இரத்த அழுத்தம் அதிகமாகிடுச்சி. வேற ஒன்னும் இல்ல, எனக்கு மகிழ்ச்சி தான்.”

“கரீமா, வா! நாம ஹாஸ்பிடல் போகலாம். எனக்கு ஆர்யனை பார்க்கணும்.”

“இல்ல, அம்ஜத் டியர்! இப்போ இரவாகிடுச்சி. நான் மாத்திரை போட்டு ஓய்வெடுக்கணும். காலைல போகலாம்” என்று சொல்லி கரீமா மேலே சென்றுவிட்டாள்.

அம்ஜத் ஏமாற்றமாக சோபாவில் அமர, ரஷீத் ஜாஃபரிடம் ஆர்யனுக்கு மாற்றுடை எடுத்து தருமாறு கேட்டான்.

தேவையான பொருட்களுடன் ரஷீத் ஜாஃபருடன் மருத்துவமனை செல்ல வெளியே வர, ரஷீத் ஏற்பாடு செய்த துப்பறிவாளன் அவனை தேடிக்கொண்டு அங்கே வந்தான்.

இரவில் பனியிலிருந்து காக்க வேண்டிய செடிகளை எடுக்க வந்த அம்ஜத் அவர்கள் மூவரும் பேசுவதை கேட்டுவிட்டான்.

“கரீமாவுக்கு இத்தனை காலமா கையாளா இருந்த ஆளை நாங்க பிடிச்சிட்டோம். அவன் மூலமா எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சி. ருஹானா மேம் கூட மிஷாலை இணைச்சி சதி செய்தது கரீமா தான். அது மட்டும் இல்ல, ருஹானா மேம் மேல கார் ஏத்தி கொல்லவும் அவங்க ஏற்பாடு செய்திருக்காங்க. இப்போ அவங்களை நடக்க விடாம செய்ய மரியானாவை பயமுறுத்தி பணம் கொடுத்து ஒத்துக்க வச்சிருக்காங்க.”

“ஆர்யன் கரீமா மேல சந்தேகப்பட்டார். ஆனா இவ்வளவு படுபாதகம் செஞ்சிருப்பாங்கன்னு அவரே நினைச்சி பார்த்திருக்க மாட்டார்.”

அவர்கள் பேசிக்கொண்டே செல்ல அம்ஜத் உறைந்து நின்றான்.

———

ஆர்யனை பரிசோதித்த மருத்துவர் “அதிசயமா இருக்கு. மிஸ்டர் ஆர்யன்ட்ட இத்தனை வேகமா நல்ல மாற்றம் தெரியுது. நீங்க வலிமையானவர்னு உங்க மனைவி சொன்னது சரி தான்” என்று சிரித்தார்.

“என் மனைவிக்கு என்னை நல்லா தெரியும்” என்று ஆர்யனும் சிரிக்க, ருஹானா நாணப் புன்னகை புரிந்தாள்.

“நான் எப்போ வீட்டுக்கு போகலாம், டாக்டர்?” என்றான், மருத்துவமனை வாசம் அறவே பிடிக்காத ஆர்யன்.

“உங்க கல்லீரல்ல அடிபட்டு இருக்கு, ஆர்யன். சில பரிசோதனைகள் செய்யணும். அதோட முடிவுகள் சாதகமா வந்துட்டா, நீங்க சீக்கிரமே வீட்டுக்கு போயிடலாம். கொஞ்சம் பொறுமையா இருங்க, நானே சொல்றேன்” என்ற மருத்துவர் வெளியே செல்ல, ருஹானா ஆர்யன் அருகே அமர்ந்து கொண்டு அவன் தலையை தடவிக் கொடுத்தாள்.

“என்னை சுட்டவன் என்ன ஆனான்?” என்று ஆர்யன் விசாரிக்க, “கமிஷனர் வாசிம் அவனை பிடிச்சிட்டார். அதோட எங்களை காப்பாத்தினதும் அவர் தான்” என்று ருஹானா சொல்ல, “வாசிமுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டு இருக்கேன்” என்று ஆர்யன் நெகிழ்ச்சியாக சொன்னான்.

“அவரோட நல்ல மனதுக்கு அல்லாஹ் வாகிதாவை சீக்கிரமே குணமாக்கட்டும்” என்று ருஹானா சொல்ல, “ஆமின்!” என ஆர்யனும் ஆமோதித்தான்.

——–

“இத்தனையும் கரீமா செய்தாளா? அவள் அத்தனை மோசமானவளா? கரீமா தான் எங்க அமைதியை கெடுத்ததா? எப்படி கரீமா? ஏன் இதெல்லாம் செய்தே?” தோட்டத்தில் இருந்த பலகையில் அமர்ந்திருந்த அம்ஜத்தின் கண்களில் கண்ணீர் கசிந்தபடி இருந்தது.

———

மருந்தின் பிடியில் ஆர்யன் உறக்கத்தில் இருக்க, தன் கையில் இருந்த மோதிரத்தை பார்த்த ருஹானா அது தொடர்பான நிகழ்வுகளில் ஆழ்ந்தாள். ஆர்யனின் மோதிரத்தை தடவிக்கொடுக்க, மனைவியின் அன்பு தீண்டலில் அவன் விழித்துவிட்டான்.

“அச்சோ! உங்களை எழுப்பிட்டேனா?”

“பரவாயில்ல, என்ன யோசிக்கறே, ருஹானா?”

“ஃபார்மாலிட்டிக்கு இதை போட்டுக்கிட்டாலும் நாம எப்படி ஒன்னு சேர்ந்தோம்னு நினைச்சிட்டு இருந்தேன்.”

தலையாட்டி மறுத்த ஆர்யன் “என்னை பொறுத்தவரை எப்பவுமே அது ஃபார்மாலிட்டி இல்ல. உன்னை கல்யாணம் செய்ய கேட்டபோது இவானை காரணமா சொன்னேனே தவிர இவான் மட்டும் அதுக்கு காரணம் இல்ல. உன் மேல நான் கொண்ட காதலும் தான்” என்று ஆர்யன் தன் மனதை திறந்து காட்ட, ருஹானாவின் கன்னங்கள் சிவந்தன.

“நானும் உங்களுக்கு சம்மதம் சொல்லும்போது இவானை தவிர வேற நினைப்பும் இருந்தது.”

இருவர் கண்களும் காதலுடன் கலக்க, அவள் கண்களில் சோர்வை பார்த்த ஆர்யன் அவளை இவானோடு படுக்க சொன்னான்.

“இல்ல, நான் உங்களை விட்டு போக மாட்டேன்” என்று அவள் மறுக்க, “அப்போ என் பக்கத்துல படு” என்று அவன் சிரமத்துடன் ஒரு பக்கம் நகர்ந்து தலையணையை இழுத்தான்.

அவள் மறுக்க, “இதான் சரி, என் பக்கம் வாயேன்” என அவன் கைநீட்டி அழைக்க, அவள் தயக்கத்துடன் அவன் தலையணையில் தலைவைத்து படுத்தாள். அவளை அணைத்த கையால் அவள் கூந்தலை ஒதுக்கி விட்ட ஆர்யன் வலியால் முகம் சுளிக்க “உங்களுக்கு வலிக்கிது. நான் இவான் கூடவே படுத்துக்கறேன்” என ருஹானா எழுந்து கொள்ள “ம்ப்ச்!” என்று ஆர்யன் தடுத்தான்.

Advertisement