Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 142

எதிர்கொள்ளப் போகும் மனைவியின் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டிருந்த அம்ஜத்தை ருஹானா தேற்றினாள். “அம்ஜத் அண்ணா! உங்களை பார்த்துக்க நாங்க இருக்கோமே, நீங்க ஏன் கவலைப்படறீங்க?”

“கரீமா தான் எனக்கு மருந்து தருவா. நான் என்ன சாப்பிடணும், எந்த உடை போடணும், எப்போ தூங்கணும்.. எல்லாம் அவ தான் சொல்லுவா. இனிமேல நான் என்ன செய்வேன்?”

“நீங்க என் பெரிய அண்ணன். நான் உங்களுக்கு இதெல்லாம் செய்து தருவேன். உங்களை பத்திரமா பார்த்துக்குவேன். நாம ஒரே குடும்பம் தானே?”

“நிஜமாவா ருஹானா?”

“ஆமா அம்ஜத் அண்ணா! வாங்க நாம இந்த செடியை நட்டு வைப்போம்.”

இருவர் பேசுவதையும் கேட்டபடி நிம்மதியாக காரை எடுத்த ஆர்யன் ரஷீத்திற்கு போன் செய்தான். “ரஷீத்! கரீமாவோட வங்கி கணக்கு, அவங்க அலைபேசி தொடர்புகள் எல்லாம் சேகரி. இப்போ உள்ளது மட்டும் இல்ல, கடந்த பத்து வருஷமா யார் கூட பேசினாங்க, யாருக்கு பணம் அனுப்பினாங்க, எங்க போனாங்க, யார் கூட சிநேகிதம்… எல்லா விவரமும் வேணும். திறமையான டிடெக்டிவ்ஸ் ஏற்பாடு செய்.”

“நமக்கு ஏற்கனவே பழக்கம் ஆனவங்களையே சொல்றேன், ஆர்யன்!”

“அப்படியே மாளிகைக்குள்ள நடமாடுற இடங்கள் எல்லாம் கண்காணிப்பு கேமராவை பொருத்து, மைக்கும் சேர்த்து. இது யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ, ஜாஃபர் கூட பேசி ராத்திரியோட ராத்திரியா வேலையை முடி.”

“சரி ஆர்யன்! இப்பவே எல்லாம் செய்றேன். அதுக்கு முன்ன நான் ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு சொல்லணும்.”

“என்ன ரஷீத்?”

“நம்ம யுவா வீடுகள் திட்டம் வெற்றிகரமாக போயிட்டு இருக்கு தானே? அதை அகாபா நகரத்தோட சிறந்த திட்டம்னு தேர்ந்தெடுத்து இருக்காங்க. ரெண்டு நாள்ல அதுக்கான விழா இருக்கு.”

“மகிழ்ச்சி ரஷீத்! ஆனா இதுல ஆச்சர்யம் ஒன்னும் இல்லயே! அது ருஹானாவோட திட்டம் தானே? வெற்றி அடைந்து தானே ஆகணும்? பரிசளிப்பு விழால அவளை தான் அவார்ட் வாங்கிக்க வைக்கணும்.”

“நல்ல யோசனை ஆர்யன்! அப்புறம் நேத்து ராத்திரி நீங்க சொன்னது போல பழைய டிரைவரை தேடி கண்டுபிடிக்க அவனோட சொந்த ஊருக்கு ஆட்கள் அனுப்பி இருக்கேன். ரெண்டு நாள்ல நமக்கு விவரம் தெரிஞ்சிடும்.”

“வெரிகுட். அதான் ரொம்ப முக்கியம். முன்னாடியே இதை நாம செய்திருக்கணும். தஸ்லீம் அண்ணியை தப்பா சொல்லிட்டு மறைஞ்சி போன அவனை அப்பவே பிடிச்சி உதைச்சிருந்தா கரீமாவுக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்திருக்காது.”

பேசி முடித்த ஆர்யன் சென்றது, தஸ்லீமின் கல்லறைக்கு. அங்கே மண்டியிட்டு அமர்ந்தவன் இவானின் அன்னையிடம் மன்னிப்பு வேண்டினான்.

“எனக்கு தெரியும், உங்களால என்னை மன்னிக்க முடியாது. என்னோட கோபத்தால நான் நிறைய தப்பு செய்திருக்கேன். அதுல மிகப்பெரிய தப்பு உங்களுக்கு செய்தது தான். உங்களை பாதுகாக்காம விட்டுட்டேன், உங்க பக்கமும் நான் கேட்டு இருக்கணும். நம்பக்கூடாதவங்களை நம்பி கண்மூடித்தனமா இருந்துட்டேன்.”

“இவான் என் அண்ணனோட வாரிசுன்னு நினைச்சேன். இல்ல, அவன் உங்க வாரிசும் கூட தான். அவன் தான் என்னோட உயிர். அந்த இளங்குருத்து மரமா வளர்ற வரை நான் தாங்கிப் பிடிப்பேன்.”

“உங்க மகனும், உங்க தங்கையும் என்னோட இரு கண்கள். என் உயிர் உள்ளவரை அவங்களுக்கு சின்ன தீமை கூட வர விடமாட்டேன். நான் இறந்த பின்னும் அவங்க பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துட்டு தான் போவேன்.”

“உங்க ஆன்மா சாந்தியடைய நான் அல்லாஹ் கிட்டே பிரார்த்தனை செய்றேன்” என்று ஆர்யன் சில நிமிடங்கள் கண்மூடி நின்றான். கண் திறந்தவன் தஸ்லீமின் பெயர் பலகையில் இருந்த கறையை பார்த்தான். தனது வெள்ளை கைக்குட்டையை எடுத்து அதை துடைத்து அகற்றினான்.

———–

கரீமா தான் செய்த அனைத்து சதிசெயல்கள் பற்றியும் ஒப்புதல் வாக்குமூலம் தந்த குரல் பதிவை கையில் வைத்துக்கொண்டு ஜவேரியா சல்மாவை வெறுப்பேற்றினாள்.

“இது தானே உனக்கு வேணும்? இதை வச்சி தானே உன் அக்காவை நீ மிரட்ட நினைச்சே? இதோ இந்தா! என் காலை சுத்தம் செய்றியா?”

அதை காட்டி மிரட்டியே சல்மாவின் முதுகு ஒடிய வைத்தாள். பொறுத்துக்கொள்ள முடியாத சல்மா சிறை அதிகாரியின் அனுமதி பெற்று கரீமாவின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள். அவளின் எந்த அழைப்பையும் கரீமா ஏற்கவில்லை. அவள் பாடே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, சகோதரியின் நினைப்பு கூட அவளுக்கு வரவில்லை.

சல்மாவின் நிலைமையோ மிக பரிதாபகரமாக இருந்தது. வினை விதைத்தால் வினை தானே செழித்து வளரும்?

விதைத்த வினையின் அறுவடை காலம்

நெஞ்சில் ஈரமின்றி நெடுங்காலமாய் விதைத்து

அப்பாவிகளின் கண்ணீர் தெளித்து

பிஞ்சு மனதில் நஞ்சை மறைத்து

விளைவித்ததெல்லாம் என்னவாகும்?

சிறையில் அவதிப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் 

அறுவடையாகிறது விதைத்த வினை!

———

விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆர்யன் ருஹானா மற்றும் இவானோடு குடும்பமாக கிளம்ப, மூவரின் ஆடை அலங்காரம் பார்ப்பவரின் நெஞ்சை அள்ளியது. அழகு கொள்ளை கொண்டது. ஆனால் கரீமாவின் நெஞ்சு காந்தியது.

“மாஷா அல்லாஹ்! எந்த தீயக்கண்ணும் நெருங்காம இருக்கட்டும்” என்று சாரா சொல்ல, மூவரும் காரில் ஏறி புறப்பட்டனர்.

விழாவில் ருஹானாவை முன்னிறுத்தி ஆர்யன் துணையாக பின்னே நின்றது விழாவில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பொறாமையால் உந்தப்பட்ட ஆர்யனின் பழைய எதிரி காதிர் ஆர்யனை பழிவாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.

கரீமாவும் லேசுப்பட்டவள் அல்லவே! அம்ஜத்தின் குழல் மாத்திரையினுள் இருந்த மருந்தை கொட்டிவிட்டு நரம்புகளை பாதிக்கும் வேறு மருந்தை மாற்றி வைத்தாள். “நான் கிளம்பி நாலே நாள்ல அம்ஜத்தை சமாளிக்க முடியாம என்னை திருப்பி கூப்பிட போறே, பார் ஆர்யன்! உன் அண்ணனுக்காக என்னை நீ மன்னிச்சு தான் ஆகணும். உன்னோட பலவீனம் எதுன்னு எனக்கு தெரியாதா?”

———

ஆர்யன் புகைப்பட ஆல்பங்களிலிருந்து கரீமாவின் படத்தை ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டிருந்தான். அதை பார்த்த ருஹானா சில புதிய படங்களை கொண்டுவந்து தந்தாள். இவானோடு இராட்டினத்தில் ருஹானா, அம்ஜத் விளையாடிய படங்கள், ஆர்யனோடு ருஹானா கோலி விளையாடிய படங்கள் என எல்லாமே உற்சாகம் நிறைந்த படங்கள்.

அவற்றை ஆர்யன் ஆல்பத்தில் ஓட்ட, “இதும் போதலனா நாம இன்னும் எடுப்போம். அம்ஜத் அண்ணா கூட, ஜாஃபர் அண்ணா, சாரா அக்கா, நஸ்ரியா இவங்களோட இவான் சிரிக்கற படங்கள்” என அவள் சொல்ல, ஆர்யன் அவள் கையைப்பற்றி முத்தமிட்டான்.

“இதுக்காவே நாம உலகம் முழுவதும் சுற்றுவோம். எல்லா நாட்டு படங்களும் சேகரிப்போம்” என ஆர்யன் பெரிய தேனிலவு பயணமாக திட்டமிட, ருஹானா புருவம் உயர்த்தி குறும்பாக சிரித்தாள்.

“நீ எதுக்கு சிரிக்கறேன்னு எனக்கு புரியுது. எந்த திட்டம் போட்டாலும் நமக்கு எதும் சரிவரல தானே? நம்பிக்கை வை. இதெல்லாம் ஓய்ந்து அண்ணன் சரியான மனநிலைக்கு வரட்டும். சீக்கிரமே எல்லாமே நல்லபடியாக நடக்கும்” என்ற ஆர்யன் அவளை கைவளைவுக்கு கொண்டுவந்து அவள் வதனம் நோக்கி குனிந்தான்.

“ஆர்யன்! ருஹானா!” என்று வெளியிலிருந்து அம்ஜத் குரல் கொடுக்க, ருஹானா வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள்.

“இந்த முறை இவான் கருணை காட்டி இருக்கான். அண்ணன் புண்ணியம் கட்டிக்கிட்டார்” என்று சலித்தபடி ஆர்யன் சென்று கதவை திறந்தான். “ஆர்யன்! இந்த தொட்டியை பிடி! உனக்காகவும் ருஹானாக்காகவும் கொண்டு வந்தேன். உங்க அறை வெளி மாடத்துல வைங்க. இந்த பூ இரவு பூக்கும். இனிமையான மணம் பரப்பும்” என்று அம்ஜத் ஒரு தொட்டியை உள்ளே கொண்டு வந்தான்.

வெளியே கிடந்த வெட்டப்பட்ட கரீமாவின் படங்களை ருஹானா மறைத்து வைக்க, உற்சாகமாக கதை பேசிக்கொண்டிருக்கும் அம்ஜத்தின் பின்னால் நின்ற ஆர்யன் ருஹானாவை பாவமாக பார்த்தான்.

———-

சல்மா ஜவேரியாவிடமிருந்த ஒலிப்பதிவு கருவியை திருடிய நேரம் ஜவேரியா அதை பார்த்துவிட, அதை பிடுங்க நேர்ந்த அடிதடியில் சல்மாவிற்கு தலையில் அடிபட்டு இரத்தம் கொட்டியது. என்றாலும் சல்மா அந்த கருவியை தனது ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டாள்.

அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட, கரீமாவிற்கு அந்த தகவல் தெரிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர்களால் கரீமாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்த சல்மாவிடம் செவிலிப் பெண் அதை தெரிவிக்க, சல்மா அக்காவின் மேல் அடங்காத கோபம் கொண்டாள்.

———

“அன்பே! இன்னைக்கு நாம ஹாஸ்பிடல் போகணும். உனக்கு உடம்பு நல்லா சரியாகிடுச்சி இல்லயா? இனி மாத்திரை மருந்துலாம் சாப்பிடணுமா, வேண்டாமான்னு டாக்டர் உன்னை பரிசோதனை செய்து பார்த்துட்டு சொல்வார்.”

“அப்போ ஊசி போட மாட்டாங்க தானே, சித்தி?”

“மாட்டாங்க கண்ணே! போனதும் வந்துடலாம்.”

ஆர்யன் இவானை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நேரம் ரஷீத் வேகமாக வந்தான். தஸ்லீமுடன் இணைத்து தவறாக பேசப்பட்ட பழைய ஓட்டுனர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது என அவன் சொல்ல, இடத்தை அடையாளம் காட்டிய ஆட்களோடு ஆர்யன் அவனை விசாரிப்பதற்காக ரஷீத்தின் காரில் புறப்பட்டான்.

இவான், ருஹானாவோடு ரஷீத் பாதுகாப்பிற்காக செல்ல, காதிரின் ஆட்கள் ஆர்யன் தான் அழைத்து செல்கிறான் என நினைத்து அவர்களை பின்தொடர்ந்தனர்.

ஆர்யன் எதிர்பார்த்தது போல கரீமாவையே அந்த பழைய ஓட்டுனர் காரணமாக சொன்னான். அவளின் சதி செயலுக்கு உடன்படவில்லை என்றால் அவனுடைய குடும்பத்தை அழித்துவிடுவதாக அவள் மிரட்டியதாகவும், அதனாலேயே அவன் அதற்கு இசைந்ததாகவும், தஸ்லீம் இறந்ததும் பயந்துபோய் தலைமறைவாகிவிட்டதாகவும் அவன் சொல்ல, ஆர்யனின் கோபம் எல்லை கடந்தது.

அப்போது ரஷீத்தின் அழைப்பு வந்தது. “ஆர்யன்! காதிரோட ஆட்கள் ஹாஸ்பிடலை சுத்தி வளைச்சிட்டாங்க. எல்லார் கையிலும் துப்பாக்கி இருக்கு. என்னால எவ்வளவு நேரம் சமாளிக்க முடியும்னு தெரியல. நீங்க ஆட்களோட சீக்கிரம் வாங்க!”

பதறிப்போன ஆர்யன் அவனை ஆட்களிடம் ஒப்படைத்துவிட்டு, வேகமாக கிளம்பினான். காரை ஓட்டிக்கொண்டே தன்வீரை அழைத்தான், ருஹானாவையும் இவானையும் பாதுகாக்க.

தன்வீர் வேறு வேலைக்கு சென்றிருக்க, கமிஷனர் வாசிம் காவல்படையோடு மருத்துவமனைக்கு விரைந்தான். தீவிரமாக நடந்த துப்பாக்கி சண்டையில் ரஷீத்தின் காலில் அடிபட்டு கீழே விழ, சரியான சமயத்தில் போய் சேர்ந்த வாசிம் ருஹானாவையும் இவானையும் காப்பாற்றி தனது வாகனத்தில் ஏற்றினான்.

ஆர்யன் அந்த நேரம் அங்கே வந்து சேர்ந்தவன் சாலையில் இறங்கி வாசிமின் வண்டியை நோக்கி ஓட, மறைந்திருந்த காதிரின் அடியாள் ஒருவன் அவனை சுட்டுவிட்டான்.

———–

Advertisement