Advertisement

ஓரமாக ஒரு மரத்தின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ஆர்யன் அருகே சென்ற ருஹானா அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் கையை பிடித்துக்கொண்டாள்.

“என்னோட குடும்பத்தை பாதுகாக்க என்னலாம் செஞ்சேன் நான்? அவங்கள என் குடும்பமா தானே  நினைச்சிருந்தேன்? குடும்பத்துல ஒருத்தரே துரோகம் செய்யும்போது அதிகமா வலிக்குது.”

“சல்மா போல இல்ல, நெருக்கமா இருந்தாங்க, அண்ணனை சரிப்படுத்தினாங்க.. இப்போ அண்ணன் என்ன ஆவார்?”

“என்னோட குருட்டுத்தனத்தால உன்னை இழக்க இருந்தேனே!”

பலவாறு புலம்பி தவித்த ஆர்யன் ஆதரவுக்காக அவளை அணைத்துக்கொண்டான்.

“அவங்களோட துரோகத்தை என்னாலயும் ஏத்துக்கவே முடியல. ஆரம்பத்துல இருந்து அவங்களை என் சொந்த சகோதரியா தான் நான் பார்த்தேன்” என்று ருஹானாவும் பேச, ஆர்யன் அவளின் கூந்தலை ஒதுக்கி விட்டான். “இந்த உலகத்துல நான் நம்பிக்கை வச்சிருக்கற ஒரே பெண் நீ தான்.”

———-

காலையில் எழுந்ததும் ஜாஃபரை அழைத்த ஆர்யன் கரீமாவை பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு “அண்ணனை ஜாக்கிரதையா கவனிச்சிக்கோங்க, ஜாஃபர். அவங்களை பத்தி இதுவரை அண்ணனுக்கு எதுவும் தெரியாது. அவங்க என்ன செய்றாங்கன்னும் கண்காணிங்க. சாரா, நஸ்ரியா கிட்டேயும் சொல்லி வைங்க” என்று அறிவுறுத்தினான்.

ஜாஃபர் சென்றதும் ருஹானாவிடம் “இரவெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். தன்வீரை கூப்பிட்டு அவங்களை ஒப்படைக்க போறேன். மரியானா, சல்மாவோட சேர்ந்து சிறையில வாழட்டும்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா தயங்கினாள்.

“நானும் யோசித்தேன். கொஞ்சம் அம்ஜத் அண்ணனை நினைச்சி பாருங்க. இதை அவரால தாங்க முடியுமா? அவர் அவங்க மேல உயிரா இருக்கார். அவங்களை அவரால பிரிய முடியுமா? அவங்களோட உண்மை சுயரூபம் தெரிஞ்சா அவர் உடைஞ்சி போயிட மாட்டாரா?”

“உனக்கு இவ்வளவு செஞ்சவங்களை நீ மன்னிச்சி விடப்போறியா?”

“நான் அவங்களை மன்னிக்கல. அம்ஜத் அண்ணா இன்னொரு மனஅதிர்ச்சியை தாங்க மாட்டார்னு தான் சொல்றேன்.”

அண்ணன் மேல் ருஹானா கொண்டுள்ள பாசம் ஆர்யனை நெகிழ்த்தியது.

“பாருங்களேன்! மிஷால், சல்மா, கரீமா மேம் இவங்க செய்த கெடுதியிலயும் நமக்குள்ள அன்பு ஆழமா தான் பதிஞ்சிருக்கு. நீங்க, நான், இவான், அம்ஜத் அண்ணா எப்பவும் ஒருத்தொருக்கொருத்தர் உறுதுணையா இருப்போம்.”

———

ருஹானா சொன்னதை அசை போட்டபடி உணவு மேசையில் அமர்ந்திருந்த ஆர்யன் அண்ணனின் நிலை கண்டு மேலும் யோசிக்கலானான்.

“கரீமா சாப்பிடல, ஆர்யன். சல்மா அறையில இருந்து வெளியவும் வர மாட்றா. தூங்கவும் இல்ல. நீ அவளை மன்னிச்சிடு ஆர்யன். அவ நல்லவ. அவளையும் அறியாம தப்பு செஞ்சிருப்பா. நீ சமாதானம் சொன்னினா அவ சரியாகிடுவா. நம்ம அமைதியும் திரும்ப வந்துடும்.” அம்ஜத் பேச, ருஹானா ஆர்யனையே பார்த்திருந்தாள்.

“சரி அண்ணா. நான் பேசுறேன்” என்று ஆர்யன் எழுந்து கொள்ள, அம்ஜத் முகம் மலர்ந்தான்.

உள்ளே நுழைந்த ஆர்யனை கண்டு வேகமாக எழுந்த கரீமா “ஆர்யன்! என்னை நம்பு. நான் நிரபராதி..” என்று பேச வர, “நீ சொல்ற எதுவும் கேட்க நான் தயாரா இல்ல. உன்னை உயிரோட விட்டு வச்சிருக்கேன்னா அதுக்கு காரணம் என் அண்ணன். இல்லனா சல்மா மாதிரி உன்னை துரத்தி அடிச்சிருப்பேன். தெருத்தெருவா பிச்சை எடுத்திருப்பே நீ!” என்று ஆர்யன் பல்லை கடித்தான்.

“ஆர்யன்..!”

“பேசாதே. என்னை பொறுத்தவரை நீ ஒரு பிணம். என் குடும்பத்துல இருந்து உன்னை கிழிச்சி எறிஞ்சிட்டேன். கரீமா அர்ஸ்லான்ங்ற ஒரு சுவடு கூட இந்த மாளிகைல இருக்கக்கூடாது.”

கரீமா தலைகுனிந்து கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“உன்னை இப்போ நான் வெளிநாட்டுக்கு அனுப்புறேன். என் அண்ணன்ட்ட ஒரு வாரம் சிகிச்சைக்காக வெளிநாடு போறேன்னு சொல்லிட்டு நீ கிளம்பறே. அதோட எங்க கண் பார்வைல இருந்து நீ மறைஞ்சி போய்டணும். எங்க முன்னாடி எந்த காலத்துலயும் நீ வந்துறவே கூடாது. இந்த நாலு நாள்ல என் அண்ணனை மனசளவுல நீ தயார் செய்றே! வேற எந்த உண்மையும் அவருக்கு தெரியக்கூடாது.”

“ஆர்யன்! அம்ஜத் தாங்க மாட்டார். நான் இல்லாம அவர் இருக்கறது கஷ்டம்.”

“ஒன்னும் தேவையில்ல. அம்மான்ற பேய் இல்லாமலே அவர் சமாளிச்சிட்டார். உன்னை போல அரக்கி துணை இல்லனாலும் அவர் நல்லா இருப்பார். நாங்க அவரை பார்த்துப்போம். நீ கிளம்பிட்டே இரு. என் அண்ணனுக்கு மட்டும் ஏதாவது தெரிஞ்சது உன் குரல்வளையை நெறிச்சிடுவேன்.”

ஆர்யன் வெளியே சென்றதும் அம்ஜத் உள்ளே வர, தன் கழுத்தில் இருந்து கையை எடுத்த கரீமா அவனை பார்த்து புன்னகைத்தாள்.

“அட கரீமா சிரிக்கிறியே! அப்போ ஆர்யன் கூட சண்டை சரியாகிடுச்சா?”

“ஆமா அம்ஜத் டியர்! நாங்க பேசி தீர்த்துக்கிட்டோம். அதோட எனக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்ல தானே? அதான் ஆர்யன் எனக்கு வெளிநாட்டுல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கான்.”

“நல்லது கரீமா! எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. நாம எப்போ கிளம்பறோம்?”

“இல்ல, டியர்! நான் மட்டும் தான் போறேன். அங்க போய் உங்களை என்னால கவனிக்க முடியாது இல்லயா? ஒரு வாரம் தானே? நானே தனியா போயிட்டு வந்துடறேன்.”

பலவாறு பேசி கரீமா அம்ஜத்தை ஏற்றுக்கொள்ள வைத்தாள்.

——–

“அவங்க இல்லாம அம்ஜத் அண்ணாவால இருக்கமுடியுமா?”

“கண்டிப்பா இருப்பார், ருஹானா! உனக்கு இவ்வளவு செய்தவங்க அண்ணனுக்கும் ஏன் இவானுக்கும் எதும் செய்ய துணிவாங்க. அவங்க அண்ணனை பாசத்தால பார்த்துக்கல. பணம், அதிகாரத்துக்காக தான் அன்பு காட்ற மாதிரி நடிச்சிருப்பாங்க. அவங்களோட பணவெறி எனக்கும் தெரியும். அண்ணனுக்காக எல்லாம் விட்டுக் கொடுத்தேன்.”

“இருந்தாலும் குடும்பத்துல ஒருத்தர் இப்படி செய்தது ரொம்ப கஷ்டமா இருக்கு.”

“அவங்க என்னைக்குமே நம்ம குடும்பத்துல இல்ல. அதை நாம தான் தெரிஞ்சிக்காம இருந்திருக்கோம்.”

அப்போது சாரா வந்து “இரவு உணவு என்ன செய்ய? கரீமா மேம் ஒன்னும் சொல்லலயே?” என்று கேட்க, ஆர்யன் “இந்த வீட்டு எஜமானி ருஹானா மட்டும் தான்” என்று கோபமாக சொல்ல, “நீங்க போங்க சாரா அக்கா. நான் வந்து சொல்றேன்” என்று ருஹானா அவரை அனுப்ப, இவையனைத்தும் கேட்டுக்கொண்டே கரீமா அங்கே வந்தாள்.

ருஹானா அவளை கண்டுகொள்ளாமல் சமையலறைக்கு செல்ல, கரீமாவிற்கு உள்ளே எரிந்தாலும் வெளியே பணிவாக ஆர்யன் முன்னே வந்து நின்றாள்.

அவளை பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்ட ஆர்யன் “அண்ணன்ட்ட பேசியாச்சா?” என்றான்.

“ஆமா ஆர்யன். அம்ஜத் சரின்னு சொல்லிட்டார்.”

“என் அண்ணனை பயன்படுத்தி இங்க இருக்கணும்னு உன் சின்ன மூளை ஏதாவது திட்டம் போட்டுச்சினா, உன்னை உருத்தெரியாம அழிச்சிடுவேன்.”

“நான் எப்படி அப்படி செய்வேன்? அம்ஜத்க்காக என் உயிரையும் கொடுப்பேனே!”

“போதும். நிறுத்து. நீ என்னலாம் செய்வேன்னு எனக்கு தெரியும். இப்போ நான் சொன்னதை மட்டும் செய்தா போதும்.” ஆர்யன் அவளை கேவலமான பிறவியை பார்ப்பது போல இகழ்ச்சியாக பார்த்துவிட்டு செல்ல, ருஹானா அங்கே வந்தாள்.

“ஏன்? எனக்கு ஏன் இப்படி செய்தீங்க? உண்மையில நீங்க எங்களுக்கு துரோகம் செய்யல, உங்களுக்கு நீங்களே செய்துக்கிட்டீங்க. உங்களை மதித்து அன்பு செலுத்தினவங்களை இழந்துட்டீங்க. நான் இங்க வந்ததுல இருந்தே நீங்க இப்படி தான் இருந்திருக்கீங்க தானே? நான் தான் உங்க உண்மை முகத்தை புரிஞ்சிக்கல. உங்களை சொந்த சகோதரியா நினைச்சிட்டேன்” என்று பேசிவிட்டு திரும்பிய ருஹானா “ஆனா உங்க தங்கை உங்களை விட தைரியசாலி. வெளிப்படையா வெறுப்பை காட்டினா” என்று சொல்லி செல்ல, கரீமா அவமானத்தில் தலைகுனிந்து நின்றாள்.

———

ஜாஃபர் சாராவிடம் கரீமாவை பற்றி எடுத்து சொல்லி கவனமாக இருக்கும்படி அறிவுறுத்த, சாராவிற்கு நம்பவே முடியவில்லை. “என்ன கரீமா மேடமா? அவங்களா ருஹானாவுக்கு இப்படி செய்தாங்க? ருஹானா மேல அபவாத பழி போட்டதும் அவங்க தானா?” என்று கேட்டவர் “அப்போ தஸ்லீம் மேல பழி போட்டதும் அவங்க திட்டம் தானா? அப்பவே அதை நான் நம்பல. ருஹானாவை போலவே அவ அக்காவும் தங்கமான பொண்ணு” என்று குரலை தழைத்துக் கொண்டு சொன்னாலும் சமையலறைக்குள் வந்து கொண்டிருந்த ருஹானாவிற்கு அது கேட்டுவிட்டது.

“என்ன என் அக்கா மேல பழி போட்டாங்களா?” என்று ருஹானா அதிர்ச்சியாக கேட்க, சாராவும் ஜாஃபரும் மௌனமே சாதித்தனர்.

ஆர்யனிடம் விரைந்த ருஹானா அவனிடம் வினவ, அவனும் மௌனமாகவே ஒத்துக்கொண்டான்.

“ஆனா கொஞ்ச நாளாகவே நானும் யோசித்துட்டு தான் இருந்தேன். உன் கூட பிறந்தவங்க தவறு இழைக்க வாய்ப்பே இல்ல. ஆனா இப்போ தெள்ளத்தெளிவா புரியுது, அதுவும் இவங்க வேலை தான்னு. நானும் சரியா விசாரிக்காம தப்பு செய்திட்டேன். என்னை மன்னிச்சிடு ருஹானா” என ஆர்யன் அவள் கையை பிடிக்க, ருஹானா துன்பமாக பெருமூச்சு விட்டாள்.

“யாரை சொல்லி என்ன லாபம்? என் அக்கா அப்பாவி. இவங்க கிட்ட என்ன பாடுபட்டாளோ? இவங்களை பத்தி தான் என்னை எச்சரிக்கை செய்திருக்கா. இவானை இங்க விடவேணாம்னு சொன்னா. பாவம் எத்தனை பயந்தாளோ?”

ஆர்யனுக்கு அது புதிய செய்தியாக இருக்க, அவன் மனம் கனத்து போனது. சின்ன அண்ணன் அக்ரமிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டினான்.

——–

பழைய பொருட்கள் வைக்கும் அறைக்கு சென்ற ருஹானா தன் அக்கா தஸ்லீமின் பெரிய புகைப்படத்தை எடுத்து வந்தாள். ஜாஃபரின் உதவியுடன் அதை வீட்டின் நடுவே மாடிப்படி வளைவின் கீழ் மாட்டினாள்.

ஊழியர்கள் அனைவரையும் அங்கே வரவழைத்தவள் கரீமாவின் முன்னிலையில் “இவங்க தான் இந்த மாளிகையின் அதிபதி. இவங்களுக்கு நீங்க எல்லாரும் மரியாதை செய்வது கட்டாயம்” என்று கம்பீரமாக அறிவித்தாள்.

அனைவரும் மலர்களை தூவி தஸ்லீமை வணங்க, கரீமாவின் முகம் வேப்பெண்ணை குடித்தது போல மாறியது.

உண்மையில் ருஹானா அவளை அறியாமல் சகோதரியின் படத்தை மாட்டி இருந்த இடம் தஸ்லீம் மாடியிலிருந்து விழுந்த இடமானது.

(தொடரும்)

Advertisement