Advertisement

போன் பேசி முடித்த ஆர்யன் உள்ளறையில் ருஹானாவின் ஊன்றுகோலின் சத்தம் கேட்க, எழுந்து உள்ளே சென்றான். அங்கே அவள் ஓய்வெடுக்காமல் துணிகளை அடுக்கி கொண்டிருப்பதை பார்த்து அவளை கடிந்து கொண்டான்.

ஊன்றுகோலை வாங்கி அவளுக்கு எட்டாத தூரம் வைத்த ஆர்யன், அவளை கட்டிலில் அமர வைத்தான். கண்மூடி உறங்கும்படி கண்டிப்புடன் அவளிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த ஆர்யன் நேராக சென்றது மரியானாவின் அறைக்கு தான். அங்கே அவளை காணாமல் ஜாஃபரிடம் அவளை தேட சொன்னான்.

மாளிகையில் அவளை எங்கும் காணாமல் திரும்பி வந்த ஜாஃபர் அவளது உடமைகளை ஆர்யனின் முன்னிலையில் சோதனை செய்ய, அவற்றில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. குப்பை தொட்டியில் போட்டிருந்த மருந்து பெட்டியை ஜாஃபர் கையிலெடுத்து பார்க்க ஆர்யனுக்கு பொறி தட்டியது.

அந்த மருந்து அட்டையை வாங்கிய ஆர்யன், நேராக மருத்துவரிடம் கொண்டு சென்று காட்டினான். அதை பார்த்து அதிர்ந்த மருத்துவர் “ஆர்யன்! இது நான் எழுதி தந்த மருந்து இல்ல. இது நரம்பு மண்டலத்தையே பாதிக்கக்கூடியது. இதை தொடர்ந்து செலுத்தியிருந்தா உங்க மனைவியின் கால்கள் நிரந்தமா செயல் இழந்து போயிருக்கும்” என்றார்.

மரியானா ருஹானாவிற்கு அதை திருட்டுத்தனமாக போட முயன்ற காட்சி கண்முன்னே ஓட ஆர்யன் திகைத்து போனான். “இல்ல, டாக்டர்! ரெண்டு, மூணு ஊசிக்கு மேல போடல. ருஹானா பிடிவாதமா மறுத்துட்டா. அல்லாஹ் அருளால நானும் அவளை வற்புறுத்தல.”

அந்த மருந்தின் தீய விளைவை முறியடிக்கும் எதிர்மருந்தை மருத்துவரிடம் கேட்டு வாங்கிக்கொண்ட ஆர்யன் வெளியே வர, ரஷீத்திடம் இருந்து அடுத்த செய்தி வந்திருந்தது. மரியானாவின் தவறான சிகிச்சை பற்றி விளக்கி சொன்ன ரஷீத் அவளை தங்களுடைய எதிரி யாரோ தான் அனுப்பி இருப்பார்கள் என சந்தேகம் தெரிவித்தான்.

ருஹானாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பும் நபர் யார் என தெள்ளத்தெளிவாக அறிந்திருந்த ஆர்யன் சிறைச்சாலைக்கு சென்று சல்மாவை சந்தித்தான்.

ஆர்யனை பார்த்து நடுங்கிய சல்மா “என்னையே இங்க என்னால காப்பாத்திக்க முடியல. நான் எப்படி வெளிய ஆள் அனுப்பமுடியும்?” என்று கேட்டாள்.

“நீ மட்டும் இந்த சதியில சம்மந்தப்பட்டு இருக்கேன்னு தெரிஞ்சது உன்னை உயிரோட புதைச்சிடுவேன்” என்று மிரட்டிய ஆர்யன் வெளியே நகர, “ஆர்யன்! அக்கா…” என சல்மா தொடங்க, நின்று திரும்பிய ஆர்யன் “அண்ணிக்கு என்ன?” என்று கேட்டான்.

நொடியில் மனதை மாற்றிக்கொண்ட சல்மா “அக்கா என்னை பார்க்கவே வரல. தயவுசெய்து அவளை வர சொல்லுங்க” என்று தயங்கியபடி சொல்ல, அவளை கோபமாக பார்த்துவிட்டு ஆர்யன் வெளியேறிவிட்டான்.

——–

மரியானாவை தேடும் பணியை தீவிரமாக்கிய ஆர்யன் மாளிகைக்கு திரும்ப அவனுக்கு தோட்டத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தோட்டத்தில் ருஹானா டெய்சி மலர்களை வாசம் பிடித்தபடி நின்றிருந்தாள்.

காரிலிருந்து வேகமாக இறங்கிய ஆர்யன் அவளை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான். சுற்றி ஊன்றுகோலை தேடியவன் “எப்படி இங்க வந்தே, ருஹானா? ஊன்றுகோல் எங்கே?” என்று கேட்க, ருஹானா இன்பமாக புன்னகைத்தாள்.

“அல்ஹம்துலில்லாஹ்! அது இனி தேவையில்ல. நானே தான் நடந்து வந்தேன்.”

ஆர்யன் அவள் கைகளை பிடிக்க, “வேணாம், இன்னும் ஒரே வாரத்துல உங்க கூட ஓட்டப்பந்தயத்துக்கு வருவேன்” என அவள் சவால் விட, “அப்போ இனிமேல் உன்னை தூக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்காதா?” என்று ஆர்யன் முறுவலித்தான்.

பேசிக்கொண்டே இருவரும் வரவேற்பறை சோபாவில் வந்து அமர, கரீமா மாடிவளைவில் வந்து நின்று அவர்கள் பேசுவதை கவனித்தாள்.

அவனின் புன்னகை முழுமையாக இல்லாததை புரிந்து கொண்ட ருஹானா “ஏன் கவலையா இருக்கீங்க?” என்று கேட்டாள்.

அவளிடம் எதையும் மறைக்க முடியாத ஆர்யன் மரியானாவை பற்றி சொல்லி “உன் கூடவே இருந்தும் இந்த முறையும் உன்னை பாதுகாக்க தவறிட்டேன்” என்று வருத்தப்பட, ருஹானா பயந்துவிட்டாள், தான் எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்து தப்பினோம் என்று எண்ணி.

“ஆனா உன்னை இப்படி செய்த மரியானாவையும், அவளை செய்ய தூண்டினவங்களையும் என் கையாலயே கொன்னு போடுவேன்” என்று ஆர்யன் சூளுரைக்க, கேட்டுக் கொண்டிருந்த கரீமாவிற்கு குலைநடுங்கியது.

அறைக்கு ஓடி சென்ற கரீமா மரியானாவின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டாள். அது செயலிழந்து இருக்க, தன் கையாளுக்கு அழைத்து உடனே அவளை கண்டுபிடிக்க சொல்லி ஆணையிட்டாள்.

——–

ஆர்யனின் ஆட்கள் அகாபாவை சல்லடையாக அலசி தேட, கள்ளத்தோணி ஏறும் கடைசி நொடியில் மரியானா மாட்டிக்கொண்டாள். அவளை ரஷீத் ஆர்யனின் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்த, அவள் வாய் திறக்க மறுத்தாள்.

“நீ உண்மையை சொல்லலனா இப்படியே நடுகடல்ல உன்னை தூக்கி போட்டுடுவேன்!”

“என்னை அவங்க கொன்னுடுவாங்க!” என்று அவள் நடுங்க, “நான் மட்டும் உன்னை உயிரோட விடுவேனா?” என்று ஆர்யன் கொந்தளிக்க, அவள் கரீமாவை காட்டிக் கொடுத்தாள்.

ஆர்யன் அதை சற்றும் நம்பவில்லை. “அண்ணி ஏன் செய்யணும்? நீ தப்பிக்கறதுக்காக பொய் சொல்றே!”

“அவங்க தங்கை சல்மாவை உங்களுக்கு மனைவியாக்கணும்னு இப்படி செய்றதா அவங்களே என்கிட்டே சொன்னாங்க. இல்லனா அவங்க தங்கை பற்றி எனக்கு எப்படி தெரியும்?”

ரஷீத்திடம் அவளை ஒப்படைத்துவிட்டு ஆர்யன் கடற்கரையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தான். ருஹானாவை ஊசி போட கரீமா வற்புறுத்தியது, மரியானாவுடன் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தது, சிறையில் சல்மா அக்கா என்று தொடங்கி நிறுத்திக் கொண்டது, ருஹானா படிக்கட்டில் விழுந்தபோது கரீமா காட்டிய அதீத பதட்டம் என பின்னோக்கி அவன் எண்ணங்கள் சுழன்றன.

நீலநிற கோப்பு விவகாரத்தில் சல்மா மாட்டிக்கொண்டபோது அவள் கரீமாவை குற்றம் சாட்டியது, அவளை பேசவிடாமல் கரீமா அறைந்தது என ஒவ்வொரு நிகழ்ச்சியும் மின்னல் போல அவன் முன்னே வந்து போனது.

மரியானாவை காவல்நிலையத்தில் ஒப்படைக்கும்படி ரஷீத்திடம் சொல்லிவிட்டு ஆர்யன் மாளிகைக்கு விரைந்தான்.

கதவை திறந்த ஜாஃபரிடம் அண்ணன் எங்கேயென கேட்டான். அம்ஜத் ருஹானாவுடன் பின்பக்க தோட்டத்தில் இருப்பதாக அவன் சொல்லவும் கரீமாவின் அறைக்குள் புயலென நுழைந்தான்.

அவன் வந்த வேகத்தில் பயந்து போன கரீமா கையிலிருந்த போனை நழுவ விட்டு எழுந்து நின்றாள்.

“பன்னிரண்டு வருஷம்!”

“என்ன சொல்றே ஆர்யன் டியர்? எனக்கு எதும் புரியலயே!”

“எங்க குடும்பத்துக்குள்ள நீங்க வந்து பன்னிரண்டு வருஷமாச்சி. என்னோட அண்ணனை உங்களை நம்பி ஒப்படைச்சேன். அண்ணின்னு உங்களை கூப்பிட்டேன்.”

“ஏன்… ஆர்யன்…  இப்படி… பேசுறே?” அவளின் நடுக்கமே ஆர்யனுக்கு எல்லா உண்மைகளையும் உணர்த்தியது.

“வாயை மூடு. உன் வாயில இருந்து ஒரு பொய் கூட வரக்கூடாது. என்கூடவே இருந்துட்டு என் பின்னாடி வேலை செய்திருக்கே! என் மனைவியை கொலை செய்ய பார்த்திருக்கே!”

ஆர்யனின் உறுமலில் கரீமா விதிர்த்துப்போனாள்.

“சல்மாவை முன்னாடி நிறுத்தி அந்த மோசடி ஃபைலை உருவாக்கினது நீ தான்!”

“இல்ல, நான் எதுவும் செய்யல..”

“பொய் சொல்லாதே! எனக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சி. உன் கூட்டாளி உண்மையை சொல்லிட்டா. உன்னோட பேராசை, சின்னத்தனம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? அண்ணனுக்காக உன்னோட அதிகபிரசங்கித்தனத்தை பொறுத்துட்டு இருந்தேன். என்னை மீறி உன்னால என்ன செய்திடமுடியும்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன். நீ இப்படி கீழ்த்தரமான ஓநாயா இருப்பேன்னு நான் நினைக்கல.”

தன்னுடைய ஆட்டம் முடிந்தது என உணர்ந்து கொண்ட கரீமா தளர்ந்து போய் கட்டிலில் விழுந்தாள்.

“என்னோட உயிருக்கு உயிரான மனைவிக்கு நீ செஞ்ச கொடுமைக்கு நானே உனக்கு கல்லறையை தோண்டுவேன். போலீஸ்ட்டலாம் உன்னை அனுப்ப மாட்டேன்.”

அவள் கழுத்தை பிடித்து நெறித்த ஆர்யன் “சொல்லு, இன்னும் என்னலாம் செய்திருக்கே? எங்க குடும்பத்துல யார்க்கு என்ன தீங்கு செய்தே?” என்று இரைய, அவன் சத்தம் கேட்டு “ஆர்யன்!” என அம்ஜத் ஓடிவந்தான்.

கரீமாவிடமிருந்து விலகி நின்ற ஆர்யனின் கோபம் சற்றும் குறையவில்லை. அம்ஜத் பின்னால் ஓடிவந்த ருஹானாவும் உள்ளே வர, இருவரும் ஆங்காரமாக நிற்கும் ஆர்யனையும், கண்ணீர் உகுக்கும் கரீமாவையும் பார்த்து திகைத்தனர்.

ஆர்யன் வேகமாக வெளியே செல்ல, ருஹானா அவன் பின்னே சென்றாள்.

அம்ஜத் “என்ன நடந்தது கரீமா? ஆர்யன் ஏன் கோபமா இருக்கான்? அவன் உன்கிட்டே இப்படி பேச மாட்டானே? நீ என்ன செய்தே?” என்று கலவரமாக கேட்க, அவனால் தப்பித்துக்கொண்ட கரீமா கண்ணீரோடு அம்ஜத்தை கட்டிக்கொண்டாள். “ஒன்னும் இல்ல டியர். ஒரு சின்ன கருத்து வேறுபாடு. நாங்க பேசி தீர்த்துக்குவோம்.”

———

ஆர்யன் தாங்கமாட்டாமல் அறையில் வேகமாக நடந்தவன் முஷ்டி மடக்கி சுவரில் ஓங்கி குத்தப்போனான். ருஹானா பாய்ந்து வந்து அவனை கட்டிக்கொண்டாள். “என்னை விடு” என்று அவன் கத்த, “நீங்க அமைதியாகற வரை நான் உங்களை விடமாட்டேன்” என்றவள் அவன் தலையையும், தோள்களையும் தடவிக்கொடுத்தாள்.

மெல்ல மெல்ல அவனின் மூச்சிரைப்பு குறைய, அவனை தன் அணைப்பிலேயே வைத்திருந்தவள் மெதுவாக கேட்டாள். “என்ன நடந்தது?”

மரியானாவின் மூலம் தான் அறிந்துக்கொண்டதை கூறிய ஆர்யன் “ஆரம்பத்துல இருந்தே பின்னாடி குத்தியிருக்கா. அவளை போய் அண்ணின்னு நான் கண்மூடித்தனமாக நம்பி இருக்கேன். அண்ணன் மட்டும் வரலனா நான் அவளை கொன்னு இருப்பேன்” என்று குமுறினான்.

ருஹானா அதிர்ச்சியில் உறைந்திருக்க, ஆர்யன் கத்தித் தீர்த்தான். “என்ன செய்யப் போறேன் நான்? உன்னை கொல்ல பார்த்திருக்கா, உன் மேல பழி போட்டு இருக்கா, உன்னை நடக்க விடாம செய்திருக்கா. ஆனா இதே கூரையில அவ இன்னும் உயிரோட இருக்கா! நினைக்கவே எனக்கு ரத்தம் கொதிக்குது.”

“நான் அண்ணன்கிட்டே எல்லாம் சொல்லப்போறேன்” என்று வேகமாக வெளியே நடக்க, ருஹானா அவனை தடுத்தாள். “வேணாம், அம்ஜத் அண்ணனால இதை தாங்க முடியாது.”

என்றாலும் அவன் கதவருகே செல்ல, கதவை திறந்துகொண்டு அம்ஜத் உள்ளே வந்தான். “என்ன ஆர்யன்? கரீமா என்ன தப்பு செய்தா, நீ இவ்வளவு கோபப்படுற அளவுக்கு?”

“அண்ணா..” என்று ஆர்யன் ஆரம்பிக்க, ருஹானா அவன் கையை அழுத்தினாள். “அவ ஏதோ பெரிய தப்பா தான் செய்திருக்கணும். அதனால தான் நீ இப்படி நடந்துக்கறே! ஆனா அவ நம்ம கரீமா, ஆர்யன். அவளுக்கும் தெரியாம எதும் நடந்திருக்கும். இப்போ ரொம்ப பயப்படறா, பாவம்!”

“ஆமா அம்ஜத் அண்ணா. ஏதோ தவறான புரிதல். எல்லாம் சரியாகிடும். உங்க தம்பி இப்போ வருத்தப்படுறார், அவர் நடந்துக்கிட்டதுக்கு” என்று ருஹானா அம்ஜத்தை சமாதானப்படுத்த, ஆர்யன் அவளை உறுத்து விழித்தான்.

கண்களால் அவள் கெஞ்ச, ஆர்யன் ஒன்றும் பேசாமல் வேகமாக வெளியே சென்றுவிட்டான். அம்ஜத்தை ருஹானா தேற்றினாள்.

கட்டிலில் படுத்து அழுதுகொண்டிருந்த கரீமா “ஆர்யன் என்னை கொன்னுடுவான். எல்லாம் முடிந்தது” என்றவள் வேகமாக எழுந்து கை நிறைய தூக்க மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். பின் சாகவும் மனம் வராமல் எல்லாவற்றையும் துப்பிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

———-

Advertisement