Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 141

பிசியோதெரபிஸ்ட் மரியானா மேல் சந்தேகம் கொண்டு அவளை பற்றிய முன்தகவல்களை விசாரிக்கும்படி ரஷீத்திடம் அறிவுறுத்திய ஆர்யன் மனைவியை கவனிக்க அறைக்குள் வந்தான்.

படுக்கையில் படுத்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்த ருஹானா அவன் வாங்கி வந்திருந்த புதுசெருப்பை கொண்டு வந்து தருமாறு அவனிடம் கேட்க, ஆர்யன் அவளை கோபமாக பார்த்தான்.

“உடனே முறைக்காதீங்க! நான் ஒன்னும் இப்போ நடக்க கேட்கல. அது என் முன்னாடி இருந்தா சீக்கிரம் நல்லா நடக்கணும்னு எனக்கு ஒரு உத்வேகம் வரும் தானே?” என கண்களை சுருக்கி அவள் கேட்க, மென்மையாக முகம் மாறிய ஆர்யன் செருப்பு பெட்டியை கொண்டுவந்து பக்கவாட்டு மேசையில் வைத்துவிட்டு அவளை ஒட்டிக்கொண்டு அமர்ந்தான்.

ருஹானா கேட்ட பொருளை பார்க்காமல் அவனையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க, ஆர்யனின் புருவம் கேள்வியாக வளைந்தது.

“சில நாட்களா உங்களை தான் பார்க்கறேன், திரும்பவும் உங்களை தெளிவா பார்க்கறேன். எனக்கு ஆதரவா இருக்கற உங்களை பார்க்கறேன். நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உண்மையா இருக்கு. என்னை விட்டு ஒரு நிமிடம்கூட நீங்க விட்டு விலகல.” கண்கள் பளபளக்க பேசும் ருஹானாவின் கன்னத்தை வருடிய ஆர்யன் “உன் உயிர் உன்கூட தானே இருக்கும்?” என்று கேள்வி எழுப்ப, அவள் கிறங்கிப்போனாள்.

அவளை மேலும் மயக்கத்தில் ஆழ்த்த ஆர்யன் விரும்பியே நெருங்கி அவள் தாடையை பிடித்து உயர்த்த, இதழ்களும் உரச ஆசை கொண்டன. ஆனால் வந்துவிட்டானே இவான்!

“சித்தி! எனக்கு ஆம்லேட் போட்டு தரீங்களா?”

“வா சிங்கப்பையா! மறுபடியும் சரியான நேரத்துல வந்துட்டே!” என்ற ஆர்யன் முகம் சுருக்க, ருஹானாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நான் நல்லா தானே ஆம்லெட் போட்டு கொடுத்தேன்? வா இவான் நான் உனக்கு செய்து தரேன்.”

“நீங்க ருசியா தான் செய்தீங்க. ஆனா அவன் என்னோட ஆம்லெட்டை மிஸ் செய்றான்” என்று ருஹானா ஆர்யனின் காதோரம் சொல்ல, தலையாட்டிய ஆர்யன் அவளுக்கு நடக்க சிரமம் கொடுக்காமல் தூக்கிக்கொண்டான், அவளுடைய ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாமல்.

சமையலறையிலும் ஆர்யன் அவளுக்கு உதவுகிறேன் என்று அவளை தனியே விடாமல் கைகளை பிடிப்பதும், அணைவாக இடுப்பை வளைப்பதுமாக இருக்க, அவளுக்கு ஆம்லெட் செய்வதே மறந்துவிடும் போல இருந்தது.

ஒருவழியாக சித்தி செய்து தந்ததை சுவைத்த இவான் “சித்தப்பா! நீங்க வருத்தப்படாதீங்க! சித்தியோடது தான் பெஸ்ட்” என்று சொல்ல, “அன்னைக்கு என்னோடது தான்னு சொன்னியே?” என்று ஆர்யன் கேட்க, “அப்போ சித்தியோட ஆம்லேட் சுவை மறந்து போய்ட்டேன். அதான் அப்படி சொல்லிட்டேன்” என்ற இவான் சாப்பிடுவதில் முனைந்தான்.

ஆர்யன் உதட்டை பிதுக்க, சிரிப்புடன் ருஹானா “நீங்க அத்தனை தொல்லை கொடுத்தாலும் எப்படியோ செய்து முடிச்சிட்டேன்” என்று பெருமூச்சு விட, அவனும் “நான் என்ன செய்ய? என்னால உன்னை விட்டு நகர முடியலயே” என்று பெருமூச்சு விட்டான்.

——–

கரீமாவிற்கு அடிக்கடி போன் செய்ய அலைபேசியை கேட்டு சல்மா அவளுடைய சக கைதி குலாமை மிரட்ட, அவள் பொறுக்கமுடியாமல் ஜவேரியாவிடம் உண்மையை சொல்லிவிட்டாள். சல்மா தான் ஆர்யனுக்கு தகவல் அனுப்பி அவளுடைய சகோதரி கரீமாவை காப்பாற்றியது என்று தெரிந்ததும் ஜவேரியாவிற்கு ஆத்திரம் எல்லை மீறியது.

சல்மாவின் பேச்சை கேட்டு கரீமாவை கடத்தியும் தாங்கள் திட்டமிட்டபடி பணமும் கிடைக்காமல், அவளுடைய கூட்டாளி மிராஸ்ஸும் மயிரிழையில் போலீஸில் இருந்து தப்பித்ததும், அவர்களின் சட்டவிரோதமான நடவடிக்கைகள் எதும் செய்யமுடியாமல் பணவரவும் நின்று போயிருப்பதும் ஜவேரியாவை வெறி கொள்ள வைத்தது.

அத்தனை கோபத்தையும் அவள் சல்மாவின் மேல் காட்டினாள். அவளை அடித்து உதைத்தாள். அவளுடைய உணவு, உடைகளை அபகரித்துக்கொண்டாள். அடிமையாக வேலைகளை செய்ய வைத்தாள். சல்மாவிற்கு அங்கே ஒவ்வொரு நிமிடமும் நரகமாக கழிந்தது. ஆனால் கரீமாவிற்கு தங்கையை பற்றி யோசிக்கக் கூட நேரம் இல்லை.

மரியானாவுடன் சேர்ந்து அடுத்து ருஹானாவை எப்படி நடக்கவிடாமல் செய்வது என்பதை திட்டமிடுவதில் அவளது சிந்தனையும், காலமும் செலவானது.

“மரியானா! அந்த மருந்தை உணவோட சேர்த்து கொடுக்கலாமா?”

“கொடுக்கலாம், கரீமா மேம்! ஆனா அதிக டோஸ் கொடுக்கணும். அது உயிருக்கே ஆபத்தாகலாம்.”

“பரவாயில்ல. எது வந்தாலும் நான் பார்த்துக்கறேன்” என்று சொன்ன கரீமா, ருஹானாவிற்கு சாப்பிட நஸ்ரியா கொண்டு போன சூப்பில் மரியானாவை மருந்து கலக்க வைத்தாள்.

ஆனால் இறைவன் அருளால் அதை ருஹானா சாப்பிடவில்லை. ருஹானாவின் அறையில் அவளிடம் கதை கேட்டுக்கொண்டிருந்த இவான் கதை மும்முரத்தில் அதை தட்டிவிட்டு விட்டான். இதை அறியாத சதிகாரர்கள் இருவரும் ருஹானாவின் வீழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

——–

“நீ சந்தோசமா இருக்கியா ருஹானா?” தனது நெஞ்சில் சாய்ந்திருந்த காதல்மனைவியிடம் ஆர்யன் கேட்டான். “ஆமா, ஏன் அப்படி கேட்கறீங்க?” ருஹானா தலையை உயர்த்தி ஆர்யனை பார்த்தாள்.

“நீ ஆசைப்பட்டபடி நான் இருக்கேனா? உன்னோட விருப்பம் எல்லாம் நிறைவேறுதா?”

“என்னை பார்த்தாலே உங்களுக்கு தெரியலயா? எனக்கு பெரிய குடும்பம் வேணும்னு நினைப்பேன். என்னை உயிருக்கு உயிரா நேசிக்கற கணவன் வேணும்னு ஆசைப்பட்டேன். எல்லாமே கிடைச்சிருச்சே! ம்.. ஆனா…”

“என்ன கிடைக்கல, சொல்லு?” ஆர்யன் பரபரப்பாக கேட்டான்.

“அப்படி இல்ல. ஆனா சிறுபிள்ளைத்தனமா இருக்கும். எனக்கு சொல்ல வெட்கமா இருக்கே!”

“எதுவா இருந்தாலும் சொல்லு. உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிக்க நான் ஆசைப்படறேன்.” ஆர்யன் ஆர்வமாக கேட்க, ருஹானாவும் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

“நான் உயர்நிலை பள்ளியில படிக்கும்போது ஒரு கதை படிச்சேன். அதுல ஒரு இளவரசன் ஒரு சாதாரண பெண்ணை விரும்பி கல்யாணம் செய்துக்குவான். அந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி படிப்பேன். அதுல அந்த இளவரசன் ஒரு வெள்ளை குதிரைல அழகா வருவான். அந்த பெண்ணை அதுல ஏத்தி கூட்டிட்டு போவான். நானும் அப்படி ஆசைப்பட்டேன்” என்று சொன்ன ருஹானா நாணத்தால் முகத்தை மூடிக் கொண்டாள்.

“அச்சோ! இப்போ ஏன் இதை நான் சொன்னேன்?”

“ஓஹோ! உனக்கு குதிரைல வர்ற இளவரசன் தான் பிடிக்கும்? நான் வேணாம் தானே?” என்ற ஆர்யன் கோபித்துக்கொண்டு மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்.

“என்ன நீங்க? அது சின்ன வயசு கனவு! நீங்க கேட்டதால தானே சொன்னேன்?” என்று அவள் ஆர்யனின் கையை பிடித்து இழுக்க, அவன் அசைந்து கொடுக்கவில்லை.

“சரிதான். எனக்கு புரியுது. குட்நைட்!” என்று ஆர்யன் கண்களை மூடிக்கொள்ள, ருஹானா பதறினாள். “அப்படி இல்ல. எழுந்திருங்க ப்ளீஸ்! நீங்க தான் என்னோட இளவரசன். உங்களைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று சொன்ன ருஹானா அவன் கன்னத்தில் இலேசாக இதழ் ஒற்றினாள்.

கொஞ்சும் மொழியில்

கெஞ்சும் உன் வார்த்தைகளில்

என் பொய்கோபங்களும்

மறைந்து விடுகிறது!  

என்னால் தடுமாற்றம் இல்லாமல்

எதையும் தாங்கிக்கொள்ள முடியும்

உன் மெல்லிய முத்தத்தைத் தவிர!

கோடி இன்பம் கிடைத்த ஆனந்தத்தில் வேகமாக எழுந்து அமர்ந்த ஆர்யன், நாணத்தால் கண்களை மூடி அமர்ந்திருந்த ருஹானாவை இறுக தழுவிக் கொண்டான். “என்னை தவிர நீ யாரையும் விரும்பக் கூடாது. அது கதைல வர்ற ஆளா இருந்தாலும் சரி, நான் அதை அனுமதிக்க மாட்டேன்” என்று அவள் காதில் சொல்ல, ருஹானா கலகலவென சிரித்தாள்.

——–

காலையில் ருஹானாவை அழைத்துக்கொண்டு ஆர்யன் மருத்துவமனை செல்ல, அங்கே ருஹானாவிற்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. முடிவுகள் நாளை வந்ததும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையை பற்றி சொல்வதாக கூறிய மருத்துவர் ருஹானாவின் எலும்புகளின் பலத்திற்கு மருந்துகளும் தந்தார்.

அப்படியே வாகிதா அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துமனைக்கும் சென்றவர்கள் அசையாமல் கிடக்கும் அவளை பார்த்துவிட்டு வாசிமின் அத்தை தௌலத்திடம் அவளின் நலம் விசாரித்தார்கள். வாகிதாவின் மருத்துவரிடம் அவளது சிகிச்சை முறைகளை கேட்டறிந்த ஆர்யன் அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து சிறந்த மருத்துவ நிபுணர்களை வரவைப்பதாக தெரிவித்தான்.

ருஹானாவிற்கு குதிரைகள் விருப்பம் என்று சொன்னதால் அடுத்து ஆர்யன் அவளை குதிரை பண்ணைக்கு அழைத்து சென்றான். இவானை கூட்டிக்கொண்டு ஜாஃபரும் அங்கே வர, ருஹானா குதூகலத்துடன் ஆர்யனின் கைவளைவில் குதிரைகளை தடவிப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

——–

ஜாஃபரின் மேற்பார்வையில் குட்டி குதிரைகளுடன் இவான் விளையாடிக்கொண்டிருக்க, அருகே ருஹானா காபி குடித்தபடி அந்த பெரிய பசுமையான பண்ணையின் அழகை ரசித்தவாறு, சின்ன சின்ன விஷயங்களிலும் அவளுக்காக அயராது மெனக்கெடும் ஆர்யனோடு வண்ணக்கனவுகளில் திளைத்துக் கொண்டிருந்தாள்.

“சித்தி! அங்க பாருங்க!” என்று இவானின் கூவல் அவளை நினைவுக்கு கொண்டுவர எதிரே பார்த்தாள். அங்கே ஆர்யன் ஒரு கருப்பு குதிரையின் மீது அற்புதமாக சவாரி செய்து வந்து கொண்டிருந்ததை பார்த்தவள் அப்படியே எழுந்து நின்று விட்டாள்.

கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே தோன்றவும்
சொப்பனமோ என்றெண்ணியது அவள் மனம்!

அவள் அருகே வந்து குதிரையை நிறுத்திய ஆர்யன் “கருப்பு குதிரை பரவாயில்லயா?” என்று குறும்புடன் கேட்க, வாய் பேச முடியாமல் அவள் தலை தானாக ஆடியது.

அவள் கையை பிடித்து அப்படியே தூக்கி பின்னால் ஏற்றிய ஆர்யன் பரந்த புல்வெளியில் அவளோடு பயணம் செய்தான். அவன் இடுப்பை இருகைகளாலும் கட்டிக்கொண்டு அவன் தோளில் முகத்தை வைத்தபடி முகத்தில் வந்து மோதும் காற்றை அனுபவித்து அந்த பண்ணை முழுவதும் அன்புக் கணவனோடு சுற்றி வந்தாள்.

———-

மனைவியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்த ஆர்யன் அலுவலக அறையில் மடிக்கணினியின் முன் அமர, ரஷீத் போனில் அவனை அழைத்தான். “ஆர்யன்! மரியானாவை பற்றி ஒரு தகவல். அவளோட வங்கிக்கணக்குல பெரிய தொகை போன வாரம் வந்து சேர்ந்திருக்கு.”

“என்ன ரஷீத்? மரியானா கணக்குலயா? யார் அனுப்பினாங்க அவ்வளவு பணம்?”

ருஹானாவின் நிலை அறிய அவளை காண ஆர்யனிடம் அனுமதி கேட்க வந்த மரியானா தன் பெயர் காதில் விழவும், இலேசாக திறந்த கதவை பிடித்துக்கொண்டு அப்படியே நின்றாள்.

“அது விசாரிக்க சொல்லி இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்துல விவரம் கிடைச்சிடும், ஆர்யன்!”

“அப்படியே அவளோட பழைய நோயாளிகளை பற்றியும் விசாரிக்க சொன்னேனே, அதையும் கவனி. எனக்கு சீக்கிரமா சொல்லு.”

அதற்கு மேல் மரியானா அங்கே நிற்கவில்லை. தனது அறைக்கும் செல்லவில்லை. ஒரே ஓட்டமாக யார் கண்ணிலும் படாமல் வெளியே ஓடிவிட்டாள். கரீமாவும் வெளியே சென்றிருக்க அவளை தடுப்பார் யாருமில்லை.

Advertisement