Advertisement

“ஜாஃபர்! பொறியாளர்களை வர சொல்லுங்க. உடனே ஒரு லிஃப்ட் அமைக்கணும். மாளிகை பூராவும் சக்கர நாற்காலி போறது போல மாத்தணும். ரொம்ப வேகமாக வேலைகள் நடக்கணும்” என்று ஆர்யன் கடகடவென உத்தரவுகள் பிறப்பிக்க, ஜாஃபர் குறித்துக்கொண்டான்.

ஜாஃபர் பணிந்து அகலவும், அங்கே வந்த கரீமா “எதுக்காக ஆர்யன் டியர்?” என்று வினவ, “ருஹானாவுக்காக!” என ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது.

“நல்லது தான். ஆனா இப்போ அவ குழம்பி போய் இருக்கா. நாம தான் அவளுக்கு எடுத்து சொல்லணும். அவளை பயிற்சிக்கு சம்மதிக்க வச்சா, இதெல்லாம் அவசியமே இல்லயே! அவ குணமாக கிடைக்கற வாய்ப்பை நாம ஏன் நிராகரிக்கணும்?” கரீமா தன்னால் இயன்றவரை ஆர்யனை சம்மதிக்க வைக்க பார்த்தாள்.

மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பவனுக்கு அதெல்லாம் ஏறுமா? “இல்ல, அண்ணி! அவ சரின்னு சொல்றவரை எதுவும் செய்ய வேண்டாம். பிடிக்காததை செய்ய சொல்லி அவளை கட்டாயப்படுத்தக் கூடாது” என்று சொல்லி மனைவியை நாடி சென்றான்.

“சித்தி! உங்களுக்கு கால் வலிக்குதா?”

“இல்ல செல்லம், நீ நல்லா தூங்குனியா?”

“ஓ! சித்தப்பா தான் என்னை தூங்க வச்சார். அவர் தான் எனக்கு புரிய வச்சார். இது நம்ம வீடு தானே? நான் எதுக்கு பயப்படணும்? நேத்து நான் கொஞ்ச நேரம் அமைதியா இருந்திருந்தா சித்தப்பாவே வந்து திறந்து விட்டுருப்பார்.”

“ஆமா அன்பே! சித்தப்பா எப்பவும் நம்மை காப்பாத்த வருவார்ங்றதை நீயும் நானும் மறக்கவே கூடாது” என்று உள்ளே வரும் ஆர்யனை காதலாக பார்த்தப்படியே சொன்ன ருஹானா “வா, நான் உனக்கு உணவு செய்து தரேன், சித்தப்பா உதவியோட” என்று சொல்ல, மனைவியின் பார்வை மாற்றத்தை கண்டுகொண்ட ஆர்யன் அவளை குனிந்து தூக்கிக்கொண்டான்.

“நான் விரும்பற பெண்ணை நானும் இப்படி தான் தூக்குவேன்” என்று இவான் பின்னால் வர, ஆர்யன் “உண்மையாவா, சிங்கப்பையா?” என்று சிரித்தான்.

“அதுக்கு இப்போ இருந்தே நீ நல்லா சாப்பிடணும், மானே! அப்போ தான் உன் சித்தப்பா போல உனக்கு பலம் கிடைக்கும்.” அவள் ஆர்யனின் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொள்ள, அவன் அவள் கன்னத்தோடு கன்னம் உரசினான்.

சமையலறையில் ஆர்யன் அவளை இறக்கிவிட, பக்கத்தில் அமர்ந்த இவானிடம் ருஹானா தெளிவுப்படுத்தினாள். “கண்ணே! இப்போ இருந்து நீ சில விஷயங்கள் புரிஞ்சிக்கணும். சித்தி உனக்காக எல்லாம் செய்வேன் தான். ஆனா முன்ன மாதிரி முடியாது. கொஞ்சம் மெதுவா செய்வேன். சிலது உன் சித்தப்பாவோட சேர்ந்து செய்வேன்.”

“நானே என்னை கவனிச்சுக்குவேன் சித்தி! உங்களுக்கும் உதவி செய்வேன். பெரியவனானதும் உங்க ரெண்டு பேரையும் நான் நல்லா பார்த்துக்குவேன்” என்று சொன்ன இவானை நெட்டி முறித்த ருஹானா “நீ என் அன்பு செல்வம்!” என்று கன்னத்தில் முத்தமிட்டாள். ஆர்யன் இருவரையும் பெருமிதமாக பார்த்திருக்க, மூவரின் சந்தோசத்தை பார்த்த கரீமாவிற்கு வயிறு காந்தியது.

மரியானாவிடம் “அவ்வளவு பெரிய தொகை வாங்கி இருக்கே தானே? நீ தான் எப்படியாவது ருஹானாக்கு மருந்து போட்டு விடணும்” என்று கரீமா சொல்ல, “தூக்கத்துல ஊசியை குத்தினா அந்த வலில முழிச்சிடுவாங்க. ஆழ்ந்த தூக்கத்தை தான் வரவைக்கணும்” என்று மரியானா யோசித்தாள்.

———-

பின்புற தோட்டம், முன் வராண்டா என ருஹானாவை அழைத்து சென்று நேரம் செலவிட்ட ஆர்யன், பனி அதிகம் பெய்யவும் வரவேற்பறை சோபாவில் அவளை அமரவைத்து கம்பளியால் போர்த்திவிட்டான்.

 “உனக்கு வேற எதுவும் தேவையா, ருஹானா? இன்னும் குளிருதா?”

“நீங்க என் பக்கத்துல இருக்கும்போது எனக்கு என்ன தேவை?” என ருஹானா காதல் வசனம் பேச, அவனுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.

சையத் அளித்த புத்தகத்தை ஆர்யன் அவளுக்கு வாசித்து காட்ட, எதிரே அமர்ந்திருந்த கரீமா அவனின் பணிவிடைகளை கண்டு இகழ்ச்சியாக சிரித்துக்கொண்டாள்.

ஆர்யனின் அலைபேசி ருஹானாவிற்கு மருந்து கொடுக்க வேண்டிய நேரத்தை ஓசையெழுப்பி நினைவுபடுத்த “தெரபி தான் வேண்டாம்னு சொல்லிட்டே! மருந்து சாப்பிடுவே தானே?” என ஆர்யன் கேட்க, ருஹானா சரியென்றாள்.

ஆர்யன் எழுந்து கொள்வதற்குள் விருட்டென எழுந்து கொண்ட கரீமா தானே மருந்து கொண்டுவருவதாக சொல்லி சென்றாள். அவள் அதில் தூக்க மருந்தை கலந்து கொடுத்துவிட, ருஹானாவிற்கு தூக்கம் கண்ணை சுழற்றியது.

“தூங்கும் நேரம் ஆகலயே, எனக்கு ஏன் இப்படி தூக்கம் வருது?”

“ருஹானா டியர், இன்னைக்கு பகலெல்லாம் நீ ஓய்வெடுக்கவே இல்ல. அங்க இங்க அலைஞ்சிட்டு இருந்தே. சோர்வாகி இருப்பே” என்று கரீமா காரணம் சொல்ல, ருஹானா “ஆமா, அப்படித்தான் இருக்கும்” என்றாள்.

ஆர்யன் அவளை கைகளில் ஏந்த, கரீமா “ஆர்யன் டியர்! நீ இப்போ தூங்க மாட்டே தானே? எனக்கு அம்ஜத் பத்தி உன்கிட்டே பேசணும்” என்று சொல்ல, “ருஹானாவை விட்டுட்டு வரேன், அண்ணி!” என்று மேலே சென்றான்.

ஆர்யன் அவளை மென்மையாக படுக்கையில் விட்டு கன்னத்தில் முத்தமிட “எனக்கு கை காலா நீங்க மாறிட்டீங்க!” என்று ருஹானா முறுவலிக்க, “தேவைப்பட்டா என் முதுகுல கூட உன்னை சந்தோசமா தூக்கி சுமப்பேன்” என்று அவன் அவள் கூந்தலை ஒதுக்கி விட, அவள் பெருமையாக சிரித்தாள்.

———

அம்ஜத்தின் மாத்திரைகளை கரீமா சரியாக கொடுக்காவிட்டாலும், அவற்றில் பாதியை அப்புறப்படுத்திவிட்டு ஆர்யனுடன் பேச்சை நீட்டிக்க மீதியை கொண்டுவந்து வரவேற்பறையில் கடை பரப்பினாள். அதேவேளையில் மரியானா ருஹானாவிற்கு மருந்து செலுத்த அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

மருந்து செலுத்தும் நேரம் எச்சரிக்கைக்காக மரியானா திரும்பி பார்க்க, தூக்கத்தில் திரும்பி படுத்த ருஹானாவின் கைபட்டு ஊசி கட்டிலுக்கும் சுவருக்கும் இடையில் போய் விழுந்தது. கரீமா தந்த குறுஞ்செய்தியை அவள் கவனிக்கவில்லை.

மிகுந்த பிரயத்தனத்திற்கு பின் அவள் கைக்கு அது சிக்க, அவள் அதை எடுத்து போடும்வேளையில் பின்னால் இருந்து ஆர்யன் அவள் கையை பிடித்துக்கொண்டான். ருஹானாவின் தூக்கத்தை கெடுக்காமல் அப்படியே அவளை அலுவலக அறைக்கு இழுத்து வந்தவன் “நான் தான் போட வேண்டாம்னு சொன்னேனே! என்ன துணிச்சல் உங்களுக்கு!” என மெல்லிய குரலில் கர்ஜித்தான்.

“நான் ருஹானா மேடமுக்கு எடுத்து சொல்லலாம்னு தான் வந்தேன், சார். அவங்க தூங்கிட்டு இருக்கறதை பார்த்து ஊசி போட்டுடலாம்னு நினைச்சேன், சார்!” நடுக்கமோ நடுக்கம்.

“நீங்களா எப்படி முடிவு எடுப்பீங்க? என்னோட அனுமதி இல்லாம எப்படி அறைக்குள்ள வருவீங்க?” குரலில் கோபம் தெறித்தது.

“அவங்க நல்லதுக்கு தான், குணமாக..” வார்த்தைகள் வெளியே வரவில்லை.

“வெளிய போங்க!” கை கதவை காட்டியது.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடிய மரியானா கரீமாவிடம் மாட்டிக்கொண்டாள். தோல்வியுடன் திரும்பிய மரியானாவை அவள் பாடாய்படுத்திவிட்டாள். அடுத்து கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எப்படியாவது மருந்தை ஏற்றிவிடுவதாக கரீமாவிடம் வாக்கு தந்த மரியானாவின் மனக்கண்ணில் ஆர்யன் தோன்றி கிலி ஏற்படுத்தினான்.

———

ஆழ்ந்த தூக்கத்தில் ருஹானாவிற்கு நாவறட்சி ஏற்பட, ஆர்யனின் பிடியிலிருந்து கையை விடுவித்துக்கொண்டு எழுந்து சாய்ந்து அமர்ந்து தண்ணீரை எடுத்து குடித்தாள். எட்டி மேசையில் காலி கோப்பையை வைத்தவளுக்கு அப்போதுதான் உரைத்தது, தன்னால் கால்களை அசைக்கமுடிகிறது என்று.

ஆனந்த அதிர்ச்சியடைந்தவள் மெல்ல கால் விரல்களை அசைத்து பார்த்தாள், நன்றாக அசைந்தது. கால் முட்டியை மடக்கினாள். அதுவும் அவள் சொன்ன பேச்சை கேட்டது. மாற்றி மாற்றி இருகால்களையும் அவள் இழுத்து மடக்க, அந்த அசைவில் ஆர்யனும் விழித்துக்கொண்டான்.

“என்ன? ஏன் அழறே? வலிக்குதா?” என அவன் பதற, “இங்க பாருங்க!” என்று தன் கால்களை அசைத்து காட்ட, ஆர்யனுக்கு ஆனந்தத்தில் வாயடைக்க, “அல்லாஹ்க்கு நன்றி!” என்று சொன்ன ருஹானா அவனை பாய்ந்து கட்டிக்கொண்டாள். அவளை இறுக அணைத்தவனும் அதையே சொன்னான்.

அவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு அவளால் நிற்கமுடிகிறதா என்று பார்த்தான். மெல்ல நடக்கவும் வைத்தான். “எப்படி ருஹானா?”

“எனக்கும் தெரியலயே! படுக்கும்போது என் கால்ல உணர்வே இல்ல. இப்போ என்னால நடக்கமுடியுது! அதிசயம்தான், என்னால நம்பவேமுடியல!”

“என்னால நம்பமுடியுது. உன்னை பார்த்த பின்ன என் வாழ்க்கைல நடக்கறது எல்லாமே அதிசயம்தான்” என ஆர்யன் உணர்ந்து சொல்ல, ருஹானா ஆனந்தமாக சிரித்தாள்.

அவன் கைப்பிடியில் இன்னும் சில அடிகள் நடந்து பார்த்தவள் “இன்ஜெக்ஷன் நிறுத்தின பின்னும் என்னால நடக்கமுடியுதே?” என்று அவள் வியக்க, ஆர்யனுக்கு சந்தேகப்பொறி தட்டியது.

உள்ளே வந்த இவான் “ஹேய்ய்!” என கூவினான். சித்தி நிற்பதைக்கண்டு அவனுக்கும் உற்சாகம் பிடிபடவில்லை. அம்ஜத்தை அழைத்து வர ஓடினான். கரீமாவின் முன்னே இவான் அம்ஜத்திடம் சொல்லி அவனை கைப்பிடித்து இழுத்து வந்தான்.

கையிலிருந்த சீப்பை ஆத்திரமாக கண்ணாடியில் விட்டெறிந்த கரீமா மரியானாவை போய் பார்த்தாள். “இன்னைக்கும் மருந்து கொடுக்கமுடியலனா இன்னும் வேகமாக சரியாகும்” என்று மரியானா பயமுறுத்த, “அதுக்கு அப்புறம் உன் உயிர் உன் உடம்புல தங்காது” என்று கரீமா அவளுக்கு பீதியை கிளப்பினாள்.

———-

ஊன்றுகோலை வைத்துக்கொண்டு மெல்ல ருஹானா அடியெடுத்து வைத்தாலும் ஆர்யன் அவளுக்கு அணைவாகவே நின்றான். அம்ஜத் ஆனந்தக்கண்ணீரை துடைத்துக்கொள்ள, உள்ளே வந்த கரீமா ருஹானாவை தழுவிக்கொண்டு வாழ்த்து தெரிவித்தாள்.

அவள் பின்னால் வந்த மரியானாவின் இருண்ட முகத்தை கண்ட ஆர்யன் அவள் குளிராடையின் பையை அழுத்தமாக பிடிப்பதையும் பார்த்துக்கொண்டான்.

அவள் முகத்தை மாற்றிக்கொண்டு புன்னகையுடன் ருஹானாவை பரிசோதனை செய்ய, ஆர்யன் “மிஸ் மரியானா! எப்படி இப்படி நடந்தது?” என்று கேட்டான். “எனக்கும் தெரியல, ஆர்யன் சார்! ஆனா முன்னேற்றம் தானே?” என தடுமாறினாள்.

———

அலைபேசியில் மருத்துவரிடம் விவரம் சொல்லி ஆர்யன் விளக்கம் கேட்க, அவரும் குழப்பத்தில் தான் இருந்தார். “இப்படி திடீர்னு நடக்க முடியாம போறது, இப்போ தன்னால நடக்கமுடியறது… எப்படின்னு தெரியலயே? ஏற்கனவே எடுத்த டெஸ்ட்ல அதுபோல அறிகுறி இல்ல, வேணும்னா இப்போ ஒரு டெஸ்ட் எடுத்து பார்க்கலாம். ஒருவேளை மருந்து எதும் மாத்தி எடுத்துக்கிட்டாங்களா?”

“இல்லயே டாக்டர்! சொல்லப்போனா இன்ஜெக்ஷன் போடறதைக்கூட ருஹானா நிறுத்தி ரெண்டு நாளாச்சி.”

“நான் எழுதிக் கொடுத்த அந்த இன்ஜெக்ஷன் வலிமை கொடுக்கறதுக்கு தான். அதால ஒன்னும் பெருசா மாற்றம் இருக்காது. நீங்க மிஸஸ் ருஹானாவை கூட்டிட்டு வாங்க. என்னன்னு பார்க்கலாம்.”

———-

“வாய்ப்பு கிடைக்கலயா? அதெப்படி கிடைக்காம போகும்? காசு வாங்கும்போது இந்த சாக்குபோக்கு எல்லாம் வரலயே!”

“கரீமா மேம்! நீங்களே பாருங்க, ஆர்யன் சார் அந்த பொண்ணை விட்டு ஒரு வினாடி கூட நகரல. நான் என்ன செய்யமுடியும்?”

ஆர்யன் அவர்களை நோக்கி நடந்து வருவதை பார்த்த கரீமா முகத்தை மாற்றிக்கொண்டு “மரியானா! ருஹானாக்கு இனிமேல எதும் பிரச்சனை இல்ல தானே?” என விசாரித்தாள்.

“அண்ணி! நான் மிஸ் மரியானா கிட்ட தனியா கொஞ்சம் பேசணும்” என்று ஆர்யன் சொல்ல, இருவரும் செய்வதறியாது திகைத்தனர். தலையாட்டி நகர்ந்த கரீமா வரவேற்பறை தூணுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டாள்.

“மிஸ் மரியானா! உங்களுக்கு என்னோட நன்றிகள்! உங்க உதவி இல்லனா இதெல்லாம் சாத்தியமே இல்ல.”

“நான் என்னோட கடமையை தான் சார் செய்தேன்.”

“உங்களை பத்தி ரஷீத் சொல்லி தான் தெரிஞ்சிகிட்டேன். உங்க பழைய நோயாளிகளுக்கு தான் உங்க திறமை நல்லா தெரிஞ்சிருக்கு.”

“ம்…ம்… டாக்டர் என்ன சொல்றார்?”

“அவரும் நீங்க சொன்னது போல சைக்காலஜிக்கலா தான் இருக்கும்னு சொல்றார். என் மனைவி நல்லா நடக்கற வரை உங்க சிகிச்சை தொடரணும். மீண்டும் நன்றி” என்று ஆர்யன் சொல்ல, மரியானா அவளது அறைக்கு வேகமாக சென்றுவிட்டாள். கரீமாவும் நிம்மதியாக நகர்ந்தாள்.

தோட்டத்துக்கு வந்த ஆர்யன் அலைபேசியை எடுத்து “ஹல்லோ ரஷீத்! நான் சந்தேகப்பட்டது சரிதான். நீ இன்னும்  தீவிரமா மரியானாவை பற்றி விசாரி. முக்கியமா அவளோட பழைய நோயாளிகளை பற்றி விசாரி. அதுல ஏதோ தப்பு இருக்கு. தடுமாறுறா” என்று பேசி வைத்தான்.

(தொடரும்)

Advertisement