Advertisement

“இந்த இடம் உனக்கு நினைவு இருக்கா?” மலையுச்சிக்கு அவளை கூட்டிவந்த ஆர்யன் கேட்க, கீழே தெரிந்த கடலை பார்த்த ருஹானா ஆமென தலை அசைத்தாள். மேலே நீலவானத்தில் நட்சத்திரங்கள் இன்னமும் தெரிய, கீழே கடல் அலைகள் மலையடிவாரத்தில் மோத, நடுவில் மரங்கள் செறிந்த மலை மீது இருவரும் நெருங்கி அமர்ந்திருக்க, அந்த சூழல் ரம்மியமாக இருந்தது.

“இங்க தான் நீ எனக்கு நட்சத்திரங்களை பார்க்க கத்துக் கொடுத்தே! எனக்குள்ள நடந்த மாற்றங்கள் உனக்கு தெரியாது. ஒரு குருடனுக்கு நீ கண்ணா மாறினே! சண்டை சத்தம் மட்டும் கேட்டுட்டு இருந்த என் காதுகளுக்கு அன்பு சத்தமும் கேட்க வச்சது நீ தான்! தலையில இருந்து பாதம் வரை இறுகி போயிருந்த எனக்குள்ள உணர்வுகள் உன்னால தான் ஓட ஆரம்பிச்சது. உன்னை நோக்கி நான் எடுத்து வச்சது தான் நான் நடந்த முதல் அடி. எனக்குள்ள எல்லாத்தையும் மாத்தினது நீ தான்!”

உன்னை காதலிக்கிறேன் என்ற சொற்ப சொல்லில் முடியாமல் அங்குலம் அங்குலமாக காதலை சொல்லும் ஆர்யனின் மொழி கேட்டு ருஹானாவிற்கு அவள் துன்பம் துச்சமாக தெரிந்தது.

“இப்போ நீயே முடிவு செய்! பாதாளத்தை பார்க்கணுமா? நட்சத்திரங்களையும் தாண்டி மேல பார்க்கணுமா? எதுவா இருந்தாலும் நாம சேர்ந்தே பார்க்கலாம். நான் உன்னை விட்டு விலகவே மாட்டேன். மறக்காதே!”

கடலில் இருந்து சிவப்பு பந்தாக சூரியன் வெளிக்கிளம்ப, கொஞ்சநஞ்சம் இருந்த இருளும் விலகி ஒளி பரவியது.

அவளாக அவன் தோளில் சாய்ந்தவள் “அல்லாஹ்க்கு நன்றி, உங்களை எனக்கு கொடுத்ததுக்கு!” என்றாள். ஆர்யன் தலைசாய்த்து அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

தேக்கி வைத்த என் கண்ணீர் 

அனைத்திற்கும் ஓரிதழ் மோட்சம் 

உன் பரிவு நெற்றி முத்தம்..!         

ஆயிரம் அணைப்புகளை விட

உன் ஒற்றை நுதல் ஒற்றல்

என்னை தழுவி விடுகிறது

உந்தன் அன்பினில் உறைந்து

போய் விடுகின்றேன்..!

———

மரியானா செய்யும் பயிற்சிகளுக்கு ருஹானா மலர்ந்த முகத்துடனேயே ஒத்துழைப்பு கொடுக்க, ஆர்யன் முறுவலுடன் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆனால் கரீமாவிற்கு எரிச்சலாக வந்தது. “உன்னை இப்படி பார்க்க சந்தோசமா இருக்கு ருஹானா டியர். அதிகாலை காற்று உன் மனநிலையை மாற்றி இருக்கும் போல!”

ஆர்யனை பார்த்தபடியே ருஹானா கரீமாவிற்கு பதில் அளித்தாள். “ஆமா, புது உற்சாகம் பிறந்திருக்கு. என்னால சீக்கிரம் நடக்கமுடியும்ங்கற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கு.”

இவான் ஓடிவந்து ருஹானாவை கட்டிக்கொள்ள, மரியானாவை கூட்டிக்கொண்டு கரீமா வெளியே சென்றாள்.

“டேமிட்! ஒடிஞ்சி போய்டுவான்னு பார்த்தா உற்சாகமாக குதிக்கறா. எப்போ இவளுக்கு முழுசா கால் மரத்து போகும்?”

“ஒரு வாரம் தொடர்ந்து ஊசி போடணும், கரீமா மேம்! ஒருநாள் நிறுத்தினாலும் சரியா வராது” என்ற மரியானா அவளது சந்தேகத்தை கேட்டாள். “நீங்க ஏன் அவங்களுக்கு காலை முடமாக்க நினைக்கறீங்க?”

கோபத்தில் கொதித்திருந்த கரீமா மரியானாவிடம் உண்மையையே சொன்னாள். “ஏன்னா அவ இருக்கற இடம் என் தங்கையோடது. சீக்கிரமே இவளை வெளிய தூக்கி போட்டுட்டு சல்மாவை அங்க கொண்டு வருவேன். எவ்வளவு நாள் தான் ஆர்யன் இவளை தூக்கி சுமப்பான்? சலிச்சி போகும் தானே?”

——–

“சித்தி! நாம மூணு பேரும் இங்கயே சாப்பிடலாமா? எனக்கு நீங்க செய்ற ஆம்லேட் வேணும்!”

ருஹானாவின் முகம் வாடுவது பொறுக்கமுடியாத ஆர்யன் “சிங்கப்பையா! இன்னைக்கு உன் சித்தியோட ஆம்லேட்டை நான் உனக்கு செய்து தரப்போறேன்” என்றான்.

“நிஜமாவா சித்தப்பா? சித்தி! இதை கேட்டீங்களா?”

ருஹானா அசந்து பார்த்துக்கொண்டிருக்க, ஆர்யன் சமையலறைக்கு சென்றான். அங்கே ஆம்லேட் செய்ய தோசைக்கல் எங்கே என ஆர்யன் கேட்க, ஜாஃபரின் நிலையும் அதுவே.

ஆர்யன் கேட்ட பாத்திரத்தை எடுத்துக்கொடுத்த ஜாஃபர் கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருக்க, தேவையான பொருட்களை சேர்த்து ஆர்யன் அருமையாக ஆம்லேட் தயாரித்தான். இத்தனை நாட்களாக சமையலறையில் ருஹானாவை தான் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் என்றால் அவள் கைகள் செய்ததையும் கவனித்திருந்தான் போலும்.

ஆர்யன் கொண்டுவந்ததை வாசனை பிடித்த இவான் “சித்தப்பா! அருமையான வாசனை!” என்று சொல்ல, ஆர்யன் பெருமையாக சிரித்தான். “பார்க்கலாம், சுவையும் அது போலவே இருக்கான்னு” என்று சொன்ன ருஹானா, இவானுக்கு ஊட்டி விட்டாள்.

“ம்ம்ம்.. என்ன ஒரு ருசி!” என்று இவான் ராகம் பாட, தானும் ஒரு துண்டை எடுத்து வாயில் வைத்தாள். நாக்கின் சுவையை அவளால் நம்பமுடியவில்லை. “இது என்ன, இப்படி சுவையா இருக்கே? யார் உங்களுக்கு உதவி செய்தது?”

“ஆமா, ஆமா! செம டேஸ்ட்!” என இவானும் கூட சேர்ந்து பாட, “ஏன், நானே தான் தனியா செய்தேன்! நீ செய்றது போலவே இருக்குமே?” என்று ஆர்யன் சிரிப்புடன் கேட்க, ருஹானாவின் ஆச்சரியம் இன்னும் அகலவில்லை. “ஆமா, ஆனா நான் உங்களுக்கு செய்ய சொல்லி தரலயே?”

“நீ செய்றது தான் நான் பார்த்து இருக்கேனே! அதை எப்படி நான் மறப்பேன்?”

ருஹானா வாயடைத்து பார்க்க, இவான் “இது போல ஆயிரம் ஆம்லேட் நான் சாப்பிடுவேன்” என்று சொல்ல, அவளுக்கு செல்ல பொறாமை ஏற்பட்டது. “கண்ணே! நான் செய்றது நல்லா இருக்கா, உன் சித்தப்பா செய்ததா?”

“சித்தி ஆம்லேட் ரொம்ப நல்லா இருக்கும்” என்று இவான் சொல்ல, ருஹானாவிற்கு பெருமை பிடிபடவில்லை. ஆர்யன் ஏமாற்றமாக தலையாட்டிக் கொண்டான்.

“ஆனா சித்தப்பா செய்தது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு” என இவான் கைகளை பெரிதாக விரிக்க, ஆர்யன் முகம் மலர்ந்தது.

“அன்பே! நான் உனக்கு நூறு ஆம்லேட் செய்து கொடுத்து இருக்கேன். உன் சித்தப்பா செய்த ஒரு ஆம்லேட்க்கு சாஞ்சிட்டியே?” என்று அவள் குறைப்பட, “நீங்க செய்றதும் சித்தப்பா செய்றதும் ஒன்னு தான் சித்தி” என்று இவான் அவளை சமாதானம் செய்தான்.

ஆர்யன் அவளுக்கு மாத்திரை எடுத்து தர, “உங்களுக்கு வேலை இருந்தா போய் பாருங்க. அதான் இவான் என்னை கவனிச்சிக்குவானே!” என்று ருஹானா சொல்ல, “உன்னை கவனிக்கறது தவிர எனக்கு எந்த வேலையும் இல்ல” என அவன் மறுத்தான்.

“சித்தப்பா! சித்தி கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்” என்று இவான் சொல்ல, புருவம் உயர்த்திய ஆர்யன் அவன் தலையை தடவிவிட்டு வெளியே சென்றான்.

“என்ன செல்லம், என்கிட்டே பேசணும்?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சித்தி! சித்தப்பா உங்களை விட்டு நகரவே மாட்றார். நான் உங்களை மிஸ் செய்றேன். அதான்” என்று இவான் கிளுக்கி சிரிக்க, ருஹானாவும் வெட்கமாக சிரித்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“சித்தி! உங்களுக்கு எதுவும் தேவைபட்டா நீங்க சித்தப்பா கிட்ட மட்டும் கேட்கணும்னு தேவை இல்ல. என்கிட்டயும் கேட்கலாம் சித்தி! நானும் உங்களுக்கு எது வேணுனாலும் செய்வேன்” என்று பெரிய மனிதனாக இவான் சொல்ல, ருஹானா பெரிதும் மகிழ்ந்து போனாள்.

———

நிறைய படங்களை இருவரும் வரைந்து தள்ளி கதைகள் பேசி சிரித்தனர். இவான் கழிவறையை பயன்படுத்த செல்ல, கதவு திறக்க முடியாமல் மாட்டிக்கொண்டான். அவன் உள்ளே இருந்து பயந்து போய் கத்த, ருஹானா வெளியே குரல் கொடுக்க, ஆர்யன் அப்போது தான் கீழே சென்றிருந்தான்.

ஊன்றுகோலை எட்டி எடுக்க முயன்ற ருஹானா தடுமாறி கட்டிலிலிருந்து கீழே விழுந்தாள். கால்களை தேய்த்துக்கொண்டு அவள் நகர முயல, இவான் அவளை கூப்பிட, அவள் உதவிக்கு சத்தமாக குரல் கொடுத்தாள்.

உள்ளே ஓடிவந்த ஆர்யன் கீழே கிடந்த ருஹானாவை பார்த்து பதறி தூக்க, அவனை தடுத்த ருஹானா இவான் மாட்டிக்கொண்டதை சொன்னாள்.

இவானை கதவை விட்டு விலகி நிற்க சொன்ன ஆர்யன், தோளால் கதவை நெம்பி திறந்தான். இவான் ஓடிவந்து அவனை கட்டிக்கொள்ள, அவனை தூக்கிக்கொண்டான். “சித்தப்பா! முன்ன என்னை அடைச்சி போட்டாங்களே, அது ஞாபகம் வந்துடுச்சி. அதான் பயந்துட்டேன்” என்று சொல்ல, ஆர்யன் அவனை இறுக அணைத்துக்கொண்டான்.

வெளியே வரவும், ருஹானா வருந்துவாள் என கண்ணீரை துடைத்துக்கொண்ட இவான் சித்தியின் கழுத்தை கட்டிக்கொண்டான். “எனக்கு ஒன்னும் இல்ல சித்தி! பயம் எல்லாம் போய்டுச்சி” என்று சொல்ல, ருஹானா மௌனமாக கண்ணீர் வடித்தாள்.

ஜாஃபர் வந்து இவானை அழைத்து செல்ல, ஆர்யன் ருஹானாவை தூக்கி கட்டிலில் விட்டான். “அவனுக்கு தேவைப்படும் நேரம் நான் உதவ முடியாமல் போய்டுச்சே” என அவள் வருந்த, “உன்னால நடக்க முடிந்திருந்தாலும் கதவை திறந்திருக்க முடியாது. நல்லா சிக்கிடுச்சி. தாழ்ப்பாளை உடைத்து தான் திறந்தேன்” என்று ஆர்யன் அவளை ஆறுதல்படுத்தினான்.

மரியானாவுடன் உள்ளே ஓடிவந்த கரீமா “ருஹானா டியர்! இப்படி பரிதாபமா இருக்கியே! இவான் ரொம்ப பயந்து போயிட்டானா?” என்று பாவப்பட, ஆர்யன் அவளை முறைத்தான். “அண்ணி! ஒன்னும் நடக்கல. எல்லாம் சரியாகிடுச்சி.”

ருஹானா விட்டத்தை பார்த்தபடி பதில் சொல்லாமல் இருக்க, கரீமா மரியானாவிற்கு ஜாடை செய்தாள். அவள் ஊசி போட ருஹானாவின் கரத்தை பற்ற, ருஹானா அதை உதறினாள். “தெரபி, ஊசி, பயிற்சி எதுவும் எனக்கு வேணாம்.”

ஆர்யன் யோசனையாக ருஹானாவை பார்க்க, கரீமாவும் மரியானாவும் அதிர்ந்தனர்.

“ஆனா..” என்று மரியானா பேச, “போதும்! இதோட எல்லாத்தையும் நிறுத்துங்க!” என்று ருஹானா உறுதியாக சொல்ல, ஆர்யன் அவர்களை வெளியே போகும்படி கூறினான்.

“எனக்கு உன்னை புரியுது. நானா இருந்தாலும் இதான் செய்திருப்பேன். ஒரு நாள் இடைவெளி எடுத்துக்கிட்டு யோசிப்போம், ருஹானா!”

“இல்ல, ஒருநாள், ரெண்டு நாள் இல்ல. எனக்கு இந்த பயிற்சிகள் வேணாம். நான் இப்படியே படுத்துட்டு இருக்க போறதும் இல்ல. எனக்கு ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்ங்க. நான் இவானை கவனிக்க எளிதா இருக்கும். நான் புதுசா வாழ்க்கையை தொடங்கப் போறேன், உங்க உதவியோட.”

——–

Advertisement