Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 140

ரோம் நகரத்துக்கு தேனிலவுக்கு கிளம்பும்நேரம் ருஹானாவால் அடியெடுத்து வைக்கமுடியாமல் மடங்கி சரிய, அவளை பிடித்துக்கொண்ட ஆர்யன் பதறினான். “என்ன.. என்ன.. உனக்கு அடிபடலயே? உன்னால நடக்கமுடியலயா?”

“என்னால முடியல. எனக்கு நிற்கக்கூட முடியல. என் கால்ல உணர்வு இல்ல” என்று அழும் ருஹானாவை தூக்கி கட்டிலில் அமர வைத்த ஆர்யன் “கட்டையை வச்சி நீ நடந்திட்டுத்தானே இருந்தே? ஒன்னும் பெருசா இருக்காது. இப்போ சரியாகிடும். ஏதோ பிசகி இருக்கு” என்று அவள் கண்ணீரை துடைத்தான்.

“அப்படி இல்லனா..? என்னால நிரந்தரமா நடக்கமுடியாம போய்ட்டா?” என அவள் கலங்க, “அதெல்லாம் யோசிக்காதே, வா! நாம ஹாஸ்பிடல் போவோம்” என்று அவளை கிளப்பினான்.

வெளியே ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த இருவரில் கரீமா சந்தோசமாக புன்னகை செய்ய, “மருந்து வேலை செய்யுது. உடம்பை தாக்குது” என்று சொன்ன மரியானா “எனக்கு நீங்க பேசினது விட ரெண்டு மடங்கு பணம் வேணும்” என்றாள்.

மகிழ்ச்சியாக தலையாட்டிய கரீமா “தாராளமா வாங்கிக்கோ. இப்போ உள்ள போய் பாரு!” என்று அவளை அனுப்பிவிட்டாள்.

உள்ளே சென்ற மரியானா என்ன எது என விசாரித்துவிட்டு பரிசோதனை செய்து பார்த்தாள். “எல்லாம் சரியா தானே இருக்கு, ருஹானா மேம்! நீங்க ஏதும் பயந்திட்டீங்களா?” என்று கேட்டவள் “ஆர்யன் சார்! சில சமயம் மனரீதியான பாதிப்பால கூட இப்படி  ஆகலாம்” என்று சொல்ல, ஆர்யன் மருத்துவரை அழைத்து தாங்கள் வருவதாக சொன்னான்.

ருஹானாவை தூக்கிக்கொண்டு ஆர்யன் சென்றதும், மரியானாவை தனியாக இழுத்து சென்ற கரீமா “நீ ஏத்தின மருந்தை டாக்டர் கண்டுபிடிச்சிடுவாரா?” என்று கேட்க, இல்லையென தலையாட்டிய மரியானா “அது ரத்த பரிசோதனை செய்தா தான் கண்டுபிடிக்கமுடியும். இந்த கேஸ்ல முதல்ல எம்ஆர்ஐ பரிசோதனை தான் எடுப்பாங்க” என்று நம்பிக்கையாக சொன்னாள்.

“சரி தான்! அவ ஹாஸ்பிடல்ல இருந்து வந்த பின்ன நீ தொடர்ந்து இந்த ஊசியை போட்டுவிடு, அவ கால் செயலிழக்கற வரைக்கும்.”

———-

“தெரபிக்கு அப்புறம் ஒரு வாரத்துல எழுந்து நடக்கணுமே! என்ன ஆச்சு ஆர்யன்?” ருஹானாவை பரிசோதித்தபடியே மருத்துவர் வினவினார்.

“உண்மையில என் மனைவிக்கு நல்லா சரியாகிட்டு தான் வந்தது, டாக்டர்! ஏன்னு தெரியல, காலைல திடீர்னு இப்படி ஆகிடுச்சி” என்று விளக்கி சொன்ன ஆர்யன், மருத்துவரின் யோசனையான முகத்தை பார்த்து “நீங்க என்ன சந்தேகப்படுறீங்க, டாக்டர்?” என்று கேட்டான்.

“சில சமயம் மூளைக்கு போற நரம்புகளோட பாதிப்புகளாலயும் இப்படி ஆகலாம். நீங்க கவலைப்படாதீங்க! டெஸ்ட் எடுத்து பார்த்தா எல்லாம் தெரிஞ்சிடும்.” மருத்துவர் செவிலிப்பெண்ணை அனுப்புவதாக சொல்லி சென்றார்.

“என்னோட மூளை பாதிப்பு ஆகியிருக்குமா? முடிவுகள் பாதகமா வந்துட்டா என்ன செய்றது? காத்திருக்கறது கொடுமை” என்று கைகளை பிசைந்த ருஹானாவின் கரங்களை பற்றிக்கொண்ட ஆர்யன் “எதுவும் ஆகாது. நாம இதையும் சேர்ந்தே கடப்போம்” என்று தைரியம் சொன்னான்.

அப்போது தொலைபேசி சிணுங்க, “இல்ல, ரஷீத்! நாங்க போகல! ருஹானாக்கு நடக்கமுடியல” என்று பேசிக்கொண்டே நகர்ந்தவனை பார்த்துக்கொண்டே இருந்தாள் ருஹானா.

———

“ஏர்போர்ட்ல இருக்கவேண்டிய நாம எங்க இருக்கோம், பாருங்க! விமானபயணத்தை பற்றி பயப்பட்டேன், இப்போ ரிசல்ட்டுக்காக பயந்துட்டு இருக்கேன்.”

அவள் கன்னங்களை கைகளில் ஏந்திய ஆர்யன் “இப்போ போகமுடியலனா என்ன? நாம சீக்கிரமே உலகம் பூரா சுத்தி வரலாம். மெக்சிகோக்கு போய் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். அடானால கெபாப் சாப்பிடலாம். சுவிஸ்ல சாக்லேட் சாப்பிடலாம். இன்னும்..” என்று சொல்லிக்கொண்டே போக, இடைமறித்த ருஹானா “அப்போ நாம சாப்பாட்டு டூர் தான் போகப் போறோமா?” என்று புன்னகைத்தாள்.

அவள் முகமலர்ச்சியில் நிம்மதியான ஆர்யன் அந்த பேச்சை அப்படியே வளர்த்தான். “காதல் நகரம் பாரிஸ் போகலாம். இந்தியா போய் தாஜ்மகால் பார்க்கலாம். எகிப்து பிரமிட்டுகளை பார்த்துட்டு வரலாம்.”

“இவானும் தானே?” என அவள் ஆர்வமாக கேட்க, “இவான் இல்லாம எப்படி? அவன் நம்மை தனியா விடுவானா என்ன?” என்று ஆர்யன் பாவமாக கேட்க, ருஹானாவின் சிரிப்பு இன்னும் விரிந்தது.

“கடைசியில ரோம்க்கு போய் காதலர்கள் நீரூற்று முன்னாடி நிற்போம். என்கூட நீ இருந்தா இது எல்லாமே நடக்கும்” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

——–

மாளிகைக்கு திரும்பிய ருஹானாவின் நலம் விசாரித்த கரீமா மருத்துவமனையில் எடுத்த பரிசோதனைகளை பற்றியும் கேட்டுக்கொண்டபின் தான் நிம்மதியானாள். அவளுடன் நின்ற மரியானா கையில் இருந்த ஊசிமருந்தை தவறவிட, கரீமா அதை ஆர்யன் பார்த்துவிடாதபடி சாமர்த்தியமாக காலால் மறைத்தாள்.

பிசியோதெரபி தொடர்ந்து அளிக்கும்படி மருத்துவர் கூறியதை சொன்ன ஆர்யன், மரியானாவை சில நாட்கள் மாளிகையிலேயே தங்கும்படி கேட்டுக்கொண்டான். அவளுக்கு தங்கும் அறையை ஏற்பாடு செய்யும்படி கரீமாவிடம் சொன்ன ஆர்யன் மனைவியை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றான்.

——–

தூங்கும் ருஹானாவிற்கு தொல்லை கொடுக்காமல் ஆர்யன் சோபாவில் அமர்ந்து அவளின் புத்தகத்தை படித்தபடி அவ்வப்போது அவளையும் கவனித்துக்கொண்டு இருந்தான்.

“சித்தப்பா!” என்று உள்ளே வந்த இவான், ஆர்யனின் மடியில் அமர்ந்துகொண்டான். “பெரியம்மா சொன்னாங்க, நீங்க ஹாஸ்பிடல் போயிட்டு வந்தீங்களா? சித்தி எப்போ எழுந்து நடப்பாங்க, சித்தப்பா? இல்லனா என் அம்மா போலவே படுத்தே இருப்பாங்களா?”

அவன் முகத்தில் கலவரத்தை பார்த்த ஆர்யன் அவன் கன்னத்தை வருடி, “இல்ல அக்னிசிறகே இல்ல! சித்தி கண்டிப்பா எழுந்து நடப்பாங்க” என்று உறுதி அளித்தான்.

“என்கூட விளையாடுவாங்களா?” ருஹானாவை பார்த்தபடியே கேட்டான்.

“நிச்சயமா! ஆனா கொஞ்ச நாள் பிடிக்கும். அவ்வளவு தான். நாம அவங்களுக்கு துணையா இருப்போம். நீ வருத்தப்படாதே!”

“நான் சித்தியை நேசிக்கறது போல தான் நீங்களும் சித்தியை நேசிக்கறீங்க, நீங்களும் வருத்தப்படாதீங்க, சித்தப்பா!” என்று சிறிய தகப்பனின் கன்னம் தடவினான்.

சிரிப்புடன் தலையாட்டிய ஆர்யன் “சித்தி தூங்குறாங்க. வா, நாம வெளிய போகலாம்” என்று அழைக்க, “சித்திக்கும் நம்ம ரெண்டு பேர் மேல அதிக பாசம். நாம அவங்க கனவுல வருவோம் தானே, சித்தப்பா?” என்று இவான் கேட்க, விரிந்து கிடக்கும் அவன் முடியை வருடிய ஆர்யன் ஆமென தலையாட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவர்கள் வெளியே சென்றதும் கண்களை திறந்த ருஹானா “அல்லாஹ்! இவானுக்காக தயவுசெய்து என்னை நடக்க வைங்க. அவனுக்கு நான் தேவை. அவருக்கும் நான் இல்லன்னா கஷ்டம். ரெண்டு பேருக்காகவும் என்னை குணப்படுத்துங்க” என்று பிரார்த்தனை செய்தாள்.

——–

ருஹானா அமைதியாக உணவு உண்டு முடிக்கும்வரை அருகிலேயே நின்று கவனித்த ஆர்யன் அவளிடம் தட்டை வாங்கி பக்கவாட்டு மேசையில் வைத்தான். அவளுடன் பேச்சில் நேரம் செலவழிக்க அவன் விரும்பினாலும் அவள் தூக்கம் வருவதாக சொல்ல அவளுக்கு படுக்கையை சரிசெய்து கொடுத்தான்.

“தண்ணி உன் பக்கத்துல இருக்கு. காலுக்கு ஒரு தலையணை வைக்கவா, ருஹானா?” என்று அவன் கேட்க, வேண்டாமென தலையாட்டிவிட்டு படுத்துக்கொண்டாள். “எதும் தேவைன்னா எப்போனாலும் என்னை எழுப்பு” என்று சொன்ன ஆர்யன் விளக்கின் வெளிச்சத்தை குறைத்தான்.

அவள் ஏதோ சரியில்லை என உணர்ந்த ஆர்யன் தூங்கும் நேரம் நெருங்காவிட்டாலும், அலுவலக வேலைகளை பார்க்காமல் அவள் அருகினில் படுத்துக்கொண்டான்.

சிறிதுநேரத்தில் மறுபுறம் திரும்பி படுத்திருந்த ருஹானாவிடமிருந்து தேம்பல் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு எழுந்தவன் அவளை தன்புறம் திருப்பினான். “இவான் பேசினதை நான் கேட்டேன். உள்ளுக்குள்ள அவன் பயப்படறது அவன் குரல்ல எனக்கு நல்லா தெரிஞ்சது. அவன் பயந்தது போல ஆனா என்ன செய்றது? நாம ரெண்டு பக்கமும் யோசிக்கத் தானே வேணும்?” என்று அவள் கண்ணீருடன் கேட்க, ஆர்யன் அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்.

“நீ பயப்படாதே! உனக்கு கெடுதலா எதும் நடக்க நான் விடமாட்டேன். உலகத்தோட எந்த மூலைல இருந்தும் டாக்டரை வரவைப்பேன். என்மேல் நம்பிக்கை வை. உனக்கு சீக்கிரம் குணமாகும்” என அவளை தட்டிக்கொடுத்து தூங்க வைத்து அவன் விழித்திருந்தான்.

———

அதிகாலையில் அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க, ஆர்யனுக்கு மருத்துவரிடம் இருந்து குறுஞ்செய்தி வரவும், சத்தமில்லாமல் அவன் வெளியே வந்து அவருக்கு காணொளி அழைப்பு விடுத்தான். மருத்துவர் ருஹானாவின் முதுகெலும்பு, கால் எலும்புகளின் படங்களை காட்டி அவளுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் அதன் விளைவுகளையும் விளக்கினார்.

பேசிமுடித்து உள்ளே வந்த ஆர்யன் கட்டிலில் கண்கலங்க அமர்ந்திருந்த ருஹானாவை பார்த்து திகைத்தான்.

“எனக்கு கால் விளங்காம போகக்கூட வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொன்னார் தானே?”

“நீ ஏன் மோசமான முடிவுகளையே நினைக்கறே? நான் எப்பவும் உன்கூட தான் இருப்பேன். அப்படியே நிரந்தரமா உன்னால நடக்கமுடியாம போனாக்கூட நான் உன்னை விட்டு ஒரு நொடி கூட விலக மாட்டேன். உனக்கு எல்லாமுமாக நானே இருப்பேன்.”

ஓருயிராய் நினைத்து அவன் பேச, அவளோ “உங்களையும் என்னோட பாதிப்புக்குள்ள இழுக்க எனக்கு எந்த உரிமையும் இல்ல” என பிரித்து பேசினாள்.

வேகமாக சென்று அவள் காலணிகளை எடுத்துவந்து அவளுக்கு மாட்டிவிட்ட ஆர்யன் அவளை அள்ளிக்கொண்டான். “என்ன செய்றீங்க? என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?” என அவள் கத்தினாலும் அவளை தூக்கிக்கொண்டு காரில் விட்டான்.

வரவேற்பறையில் காபி அருந்திக்கொண்டு இருந்த கரீமா “நொண்டி சித்தியோட கதை இதோட முடிந்தது. ஆர்யன் அவளை சீக்கிரம் தூக்கிப் போட்டுடுவான்” என்று குதுகலித்தாள்.

———

Advertisement