Advertisement

ஆர்யன் அவளின் முகம் வருடி நெற்றியில் முத்தமிட, அவளுக்கு அவளின் கேள்வியும் மறந்து போனது. முன்பெல்லாம் இவானை சாக்கு சொல்லி தப்பியோடும் ருஹானா இப்போது அவள் நினைத்தபடி நகரமுடியாமல் மாட்டிக்கொள்ள ஆர்யனுக்கு கொண்டாட்டமாகிப் போனது.

கெட்டதிலும் ஒரு நல்லதாக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டான். அவளை தழுவிக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் அவளின் வெட்கம் விலக்கி, அவளின் கணவன் என உணர்த்தி அவனோடு நெருக்கம் அதிகரிக்க செய்தான்.

நடுஇரவில் அவளுக்கு காலில் வலி ஏற்பட, வேறு கதை பேசி அவளின் கவனம் திருப்பி மென்மையாக மசாஜ் செய்துவிட்டான்.

———-

“ருஹானா மேடம்! இப்படியே நீங்க தொடந்து செய்தீங்கன்னா இன்னும் ரெண்டு நாள்ல நீங்க நடந்திடலாம். இன்ஜெக்ஷன் கூட இனிமே தேவையில்ல.”

“உண்மையாவா மரியானா மேடம்? எனக்கு ரொம்ப சந்தோசம். இவானை நானே இனி பார்த்துக்கலாம். அதோட எங்க பயணமும்…”

“என்ன மேடம்? பாதியிலயே நிறுத்திட்டீங்க? ஆர்யன் சார் இரண்டாவது தேனிலவுக்கு கூட்டிட்டு போறாரா?”

ருஹானா வெட்கமாக தலையாட்ட, மரியானா சிரிக்க, வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்த கரீமாவிற்கு வயிறு எரிந்தது.

“ஆர்யன் சார் உங்களை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கறார். உங்களோட வலியை தன்னோட வலியா உணர்றார். நீங்க அதிர்ஷ்டசாலி. கெட்ட கண்கள் உங்க மேல படாம இருக்கட்டும். இன்ஷா அல்லாஹ்!”

“இன்ஷா அல்லாஹ்!”

அதுதான் கெட்ட கண்கள் வஞ்சினத்தோடு பார்த்து கொண்டிருந்தனவே. தீய கண்கள் பார்த்ததோடு அல்லாமல் குறுக்கு மூளைக்கு அதை கடத்தி திட்டமும் தீட்ட வைத்தன.

கையாளுக்கு போன் செய்த கரீமா மரியானாவின் பின்புலத்தை பற்றி விசாரிக்க சொன்னாள். ஆர்யனின் உற்ற துணைவன் ரஷீத்தை விட கரீமாவின் அடியாள் திறமைசாலியாக இருந்தான். மரியானாவை பற்றிய விவரங்களையும், மறைத்து வைத்திருந்த அவளது இரகசியம் பற்றியும் தகவலும் சான்றும் தேடிக் கொடுத்தான்.

மரியானா சிகிச்சைகள் மேற்கொள்ள ஆரம்பிக்கும் காலகட்டத்தில் நோய்வாய்ப்பட்ட அவளது தங்கையை காப்பாற்றும் பொருட்டு பணம் வாங்கிக்கொண்டு தவறான சிகிச்சை அளித்ததும் அதன் காரணமாக கால்கள் செயலிழந்து போன ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதையும் தெரிந்து கொண்ட கரீமா அதை சொல்லியே மரியானாவை அவள் வழிக்கு இழுத்தாள்.

பெரும் தொகையை தருவதாக ஆசை காட்டிய கரீமா அவள் சொல்வதை செய்ய மறுத்துவிட்டால் அவளிடம் இருக்கும் சான்றை போலீஸில் ஒப்படைத்து விடுவதாகவும் மரியானாவை மிரட்டி பணிய வைத்தாள்.

———–

‘ஆர்யன் மேசையில் ஒளித்து வைத்ததை எடுத்து பார்த்தால் என்ன?’ என ருஹானாவிற்கு இலேசாக தோன்றிய எண்ணம் சிறிதுசிறிதாக வலுப்பெற்றது. ‘நான் அவர் மனைவி தானே, எனக்கு தெரியாமல் என்ன ரகசியம்?’ என்று மனசாட்சியை திட்டி அடக்கிவிட்டு ஊன்றுகோலை தாங்கிக்கொண்டு நடந்துவந்து அவன் மேசையை ஆராய்ந்தாள்.

பயண முகவரின் கடித உறை ஒன்றை காணவும் ஆவலாக அதை பிரித்தாள். உள்ளே ஒரு துண்டு சீட்டு ‘நீ என்மீது நம்பிக்கை வைத்திருந்தாயே!’ என்று ஆர்யனின் கையெழுத்தில் இருந்தது. அவள் அவமானமாக உணரும் நேரம் புன்னகையுடன் ஆர்யன் உள்ளே வந்தான்.

 மாட்டிக்கொண்ட கள்வனாக அவள் விழிக்க, “இன்னும் ஒரே நாள், அதுக்கு உனக்கு பொறுமை இல்லயா?” என்று கேட்ட ஆர்யன் அவள் அருகே வர, “எனக்கு ஆவலை அடக்க முடியல. நீங்க என் மேல கோபப்படப் போறீங்களா?” என்று பயத்துடன் கேட்டாள்.

“உன்மேல எனக்கு கோபம் வருமா?” என்று ஆர்யன் சிரிக்க, ருஹானா முகம் மலர்ந்தாள். அவன் கோபத்தில் கொதித்த கதையெல்லாம் அத்தனை சீக்கிரம் மறந்துவிட்டார்களா, இவர்கள்? எல்லாம் காதல் படுத்தும்பாடு!

——–

பேருக்கு கையில் புத்தகம் இருக்க, ருஹானா படிப்பது போல பாவனை செய்வதை புரிந்துகொண்ட ஆர்யன் முறுவலுடன் அவள் பக்கத்தில் வந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்த்த அவள் மௌனமாக இருக்கவும், அவளை சீண்டினான்.

“என்ன ருஹானா, எங்க போறோம்னு உனக்கு தெரிய வேணாமா?”

“எனக்கு கண்டுபிடிக்க முடியல, நான் என் முயற்சியை கைவிட்டுட்டேன்.”

“அப்போ உனக்கு குறிப்பு எதும் வேணாமா? அது உன் பக்கத்துலயே இருக்கு. நல்லா யோசிச்சிக்கோ, ருஹானா!”

“தேவையில்ல! நான் உங்களுக்கு யெஸ் சொல்லி நீண்ட பாதையை தேர்ந்தெடுத்தேன். அப்பவும் எங்க போறோம்னு நான் கேட்கல. இப்பவும் கேட்க மாட்டேன். எங்க போனாலும் அது அழகான இடமா தான் இருக்கும்.”

“ஆனா இப்போ அது அழகா இருக்காது. ஏன்னா நீ அங்க இல்லயே. உலகத்துலயே அழகான இடம் இப்போ இது தான். இந்த அறையை விட்டு எங்கயும் போக நான் விரும்ப மாட்டேன்.”

ஆர்யனின் பேச்சில் ருஹானா கிறங்கி இருக்க, அவள் அழகில் ஆர்யன் மயங்கி இருக்க, இதழ்கள் ஒன்றையொன்று ஈர்க்க, உரசும் நேரம் “சித்தி! நான் கண்டுபிடிச்சிட்டேன்” என கத்திக்கொண்டு இவான் உள்ளே ஓடிவந்தான்.

இருவரும் மயக்கம் தெளிந்து விலக, ருஹானா “என்ன அன்பே?” என கேட்டாள். “நாம நேத்து விளையாடும்போது ஜெ எழுத்துக்கு மிருகம் கண்டுபிடிக்கலயே? இப்போ அது எனக்கு தெரிஞ்சிடுச்சி, சொல்லவா சித்தி?” என கேட்க, ஆர்யனின் மீது லேசான பார்வையை செலுத்தி புன்னகைத்த ருஹானா, இவானின் கன்னம் தடவி “சொல்லு, செல்லம்!” என்றாள்.

“ஜாகுவார்!” என்று இவான் பெருமையாக சொல்ல, அவன் முடியை தடவிக்கொடுத்த ஆர்யன் “வெல்டன் சிங்கப்பையா! சரியான நேரத்தில கண்டுபிடிச்சிருக்கே” என்று ஒரு பெருமூச்சுடன் சொல்ல, ருஹானாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஜெ ஃபார் ஜாகுவார்!” என இவான் குதித்துக்கொண்டே வெளியே செல்ல, “இவன் வேணும்னே செய்றான்னு நான் நினைக்கறேன்” என்று ஆர்யன் சோகமாக சொல்ல, ருஹானா கலகலத்து சிரித்தாள்.

———-

ஆர்யன் பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருக்க, ருஹானா “நெஜமாவே என்னோட உதவி உங்களுக்கு வேணாமா?” என்று கேட்டாள்.

“இல்ல, உனக்கு இன்னைக்கு முழுமையான ஓய்வு தேவை. நாளைக்கு காலைல மரியானாயோட உன் பயிற்சிகள் முடியவும் நாம கிளம்பிடலாம். அதுவரை நீ கட்டில்ல தான் இருக்கணும். இப்போ சொல்லு, நான் இந்த சட்டை எடுக்கவா, இதுவா?” என இருகைகளிலும் இரண்டு சட்டைகளை வைத்துக்கொண்டு கேட்டான்.

“இது!” என்று நீல சட்டையை காட்டிய ருஹானா “என்னை முதல் தடவை திருமணத்துக்கு கேட்டபோது இந்த சட்டை தான் போட்டு இருந்தீங்க, இது உங்களுக்கு அழகா இருக்கும்” என்று வேகமாக அவளையறியாமல் சொல்லிவிட்டாள்.

இன்ப தாக்குதலுக்கு உள்ளான ஆர்யன் “அப்போ இருந்தே நீ என்னை நேசிக்கிறியா?” என்று ஆர்வமாக கேட்டான். நாணம் கொண்டாலும் ருஹானா இல்லையென தலை ஆட்டியவள், “அதுக்கு முன்ன இருந்தே!” என்றாள்.

பூரித்து போன ஆர்யன் “நான் உன்னை முதல்முறை பார்த்தபோதே காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா முட்டாள் நான், எனக்கு அது ரொம்ப தாமதமா தான் புரிஞ்சது” என்று வருத்தமாக சொன்னான்.

“சரி, போற இடம் குளிருமான்னு தெரியல. எனக்கு கனமான உடைகள் எடுக்கணுமா?” என்று அவள் கேட்க, “அங்க அப்படி ஒன்னும் குளிராது. ஆனா விமானத்துல குளிரும், அதுக்கு மட்டும் உனக்கு ஒரு ஜெர்கின் எடுத்து வைக்கறேன்” என்று போகிற போக்கில் சொல்லி சென்ற ஆர்யன் அதை எடுத்துவந்து பெட்டியில் வைத்தான்.

“என்ன? விமானப் பயணமா?” என்று ருஹானா திகைக்க, “ஏன்? என்ன பிரச்சனை உனக்கு?” என்று அவன் கேட்டான்.

“ஒன்னுமில்லையே, எனக்கு தூக்கம் வருது” என்று படுத்துக்கொண்டாள்.

——-

“அச்சோ!” என்று அலறிக்கொண்டே ருஹானா கண்விழிக்க, ஆர்யனும் என்னவோ என்று வேகமாக எழுந்தான். அவனை பாய்ந்து கட்டிக்கொண்ட ருஹானா “விமானம் கீழே விழுந்துடுச்சி. நானும் விழுந்திட்டேன்” என்றாள்.

“நடுராத்திரி கனவு கண்டுருக்கே! பாரு ருஹானா, அது கடந்துடுச்சி” என்று ஆர்யன் அவள் முதுகை தட்டிக்கொடுக்க, அவள் பெரிய மூச்சுகளை எடுத்து விட்டாள்.

“இல்ல, இதுவரை நான் விமானத்துல போனது இல்ல. அதான் பயமா இருக்கு.”

அவளை ஒட்டி அமர்ந்து கொண்ட ஆர்யன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கையை பற்றிக்கொண்டான். “இது போலவே பயணம் முழுவதும் நான் உன்னோட கையை விடவே மாட்டேன். பயப்படாதே! தூங்கு வா!”

———-

“நேத்துவிட இன்னைக்கு நல்லா செய்றீங்களே!” என்று மரியானா பாராட்ட, “நாங்க பயணம் கிளம்பறோம். அந்த உற்சாகத்துல தான் எல்லாம் எளிதா வருது” என்று ருஹானா சந்தோசமாக சொன்னாள்.

“ஆர்யன் சார் சொன்னார். நான் இப்போ உங்களுக்கு ஒரு ஊசி போடுறேன். அரைமணிநேரம் அசையாம படுத்திருங்க. அதுக்கு அப்புறம் நீங்க சொந்தமாவே நடக்கலாம்” என்று மரியானா மருந்தை உட்செலுத்தினாள்.

இரண்டு நாட்களுக்கு முன் இனிமேல் ஊசி தேவையில்லை என சொன்ன மரியானா இப்போது ஏன் மருந்தை ஏற்றுகிறாள் என ருஹானா சந்தேகப்படவில்லை. அவள் தானாகவே நடக்கப்போகும் குஷியில் இருந்தாள்.

——–

மரியானா வெளியேற ஆர்யன் உள்ளே வந்தான். “எல்லாம் தயார். நாம கிளம்ப வேண்டியது தான். சீக்கிரமா ஏர்போர்ட் போய் அங்க ஒரு காபி குடிக்கலாம். அதுக்குள்ள நீ ரிலாக்ஸ் ஆகிடுவே” என அவள் மனநிலையை இதமாக்க சொல்ல, ருஹானா சிரிப்பு வராமல் சிரித்தாள்.

“கடைசி க்ளூ சொல்லவா?” என்று ஆர்யன் சிரித்தபடி கேட்க, ருஹானாவின் முகம் மலர்ந்தது. “உன் படுக்கைக்கு பக்கத்துல தான் அது எப்பவும் இருக்கும்” என்று அவன் சொல்ல அவள் திரும்பி பார்த்தாள்.

ஆர்யன் அவளுக்காக தேடி வாங்கித்தந்த அவளுக்கு மிக பிடித்த ‘தூரம் அதிகமாகும்போது’ என்ற புத்தகம், யுவதி ஒருத்தி இதயத்தின் பாகங்களை தேடி அலைந்த கதை சொல்லும் புத்தகம் இருந்தது.

ருஹானா அதை கையில் எடுக்க “காதலர்களின் நீரூற்று பக்கத்துல அவளோட இதயத்தின் நடுப்பகுதியை அவ காதலன் கொடுத்தானே, அது எந்த நகரம்?” என்று ஆர்யன் புதிராக கேட்க, அவள் ஆனந்த கண்ணீருடன் “ரோம்!” என்றாள்.

ஆர்யன் தலையசைக்க, “ரோம்! அங்கயா நாம போறோம்? நெஜமா ரோமுக்கா? அப்படின்னா நீங்க இந்த புக்கை முழுசா படிச்சி முடிச்சிட்டீங்களா?” என்று கேள்விகளை அடுக்கிய ருஹானாவின் மகிழ்ச்சியை பார்த்த ஆர்யன் அளவிலா உவகை அடைந்தான். இருவரும் அருமையான உடையணிந்து பார்க்க ரம்மியமாக இருந்தனர்.

அவளது புதிய காலணியை ஆர்யன் கொண்டுவர “ரோம்க்கு போகும்போது போடத்தான் இந்த ஷுவை வாங்கினீங்களா?” என்று அவள் பேசிக்கொண்டே இருக்க, அவன் மண்டியிட்டு அவள் காலில் காலணியை மாட்டினான்.

அவள் தடுக்க வர, “ஒரு தேவதை கதை இருக்குமே.. நடனம் ஆடும்போது ஒற்றை ஷுவை விட்டுட்டு போய்டுவாளே..” என்று அவன் தொடங்க, “சின்ட்ரெல்லா” என அவள் வேகமாக சொன்னாள்.

“ஆமா, அந்த கதை போல தான் என்னோட இளவரசியை நான் தேடிக் கண்டுபிடிச்சேன். நீ தான் அந்த இளவரசின்னு கற்பனை செய்துக்கோ” என்று அவன் மற்ற காலணியையும் மாட்டி நிமிர, “நான் ஏன் கற்பனை செய்யணும்? நீங்க என்னை இளவரசியை போல தான் உணர வைக்கறீங்க” என்று கண்கள் பளபளக்க ருஹானா சொன்னாள்.

வாய்விட்டு சிரித்த ஆர்யன் “நான் எந்த இடத்தையும் சொந்தமா உணர்ந்தது இல்ல. ஆனா நீ என் வாழ்க்கைல வந்த பின்ன நீ இருக்கற இடம் எல்லாம் என்னோடது தான். உன்னோட நான் உலகம் பூரா சுற்றப்போறேன். அந்த பயணத்தின் தொடக்கமா என்கூட ரோம் நகரத்துக்கு வருவியா?” என்று கை நீட்டி கேட்டான்.

“உங்க கூட எங்கனாலும் வருவேனே!” என்று ருஹானா அவன் கைமேல் தன் கையை வைக்க, “வா, போகலாம்” என்று அவளின் கையை ஆர்யன் பற்ற, எழுந்த ருஹானா நிற்க முடியாமல் சடாரென தரையில் விழுந்தாள்.

(தொடரும்)

Advertisement