Advertisement

“சித்தி! உங்களுக்கு அடிபட்டுடுச்சா?” என்று இவான் ருஹானாவை வேகமாக கட்டிப்பிடிக்க “மெதுவா, சிங்கப்பையா!” என்று ஆர்யன் அவனை பிடித்தான்.

“உங்களுக்கு வலிக்குதா?” என்று இவான் முத்தமிட, அவனுக்கு முத்தமிட்ட ருஹானா “நீ முத்தம் கொடுத்ததும் எல்லாம் சரியா போச்சி” என்று சொல்ல, ஆர்யனின் கண் அசைவில் நஸ்ரியா இவானை அழைத்துப்போக, ஜாஃபர் அம்ஜத்தை புது தொட்டிகள் வந்திருக்கிறது என சொல்லி கூட்டி சென்றான். கரீமா அவர்களின் பின்னாலேயே சென்றாள்.

ருஹானாவின் கட்டைகளை வாங்கி கீழே வைத்த ஆர்யன், அவள் இடுப்பில் கைகொடுத்து அலேக்காக தூக்கிக்கொள்ள, “என்ன செய்றீங்க?” என்று ருஹானா பதறினாள்.

“ஷ்ஷ்… நம்ம திருமண சடங்குகள்ல ஒன்னே ஒன்னு விட்டு போச்சி. மாப்பிள்ளை பொண்ணை தூக்கிட்டு தானே அறைக்கு போகணும்? அதான் இப்போ நடக்குது” என்று சொன்னவன் “நல்லா என்னை கட்டி பிடிச்சிக்கோ! இல்லனா விழுந்துடுவே” என்று கனகாரியமாக எச்சரித்தான்.

அவன் கழுத்தில் கையை போட்டு இருகைகளாலும் வளைத்துக்கொண்ட ருஹானா அவன் மேல் சொகுசாக சாய்ந்து கொண்டாள். மலர்கொத்தை பிடித்திருப்பது போல படிக்கட்டில் அவளை இன்பமாக தூக்கி சென்ற ஆர்யன் அவளை கட்டிலில் படுக்க வைத்து கன்னத்தில் முத்தமிட்டான். இவான் முத்தமிட்டபோதே இவன் திட்டமிட்டிருப்பானோ?

உன்னை மட்டும் அல்ல 

உன் நினைவை சுமப்பதும் 

இனிய வரமே எனக்கு…!

அழகு எனும் சொல்லிற்கு

உண்மையான அர்த்தத்தை

உணர்த்தியவள் நீ தான்..!

அழகு என்பது உண்மையான

அன்பு என்று எனக்கு

புரிய வைத்தவள் நீ தான்..!

“என்ன பார்க்கறே?” கண்ணாடி கொண்டு தன் நெற்றிக் காயத்தை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த ருஹானாவிடம் ஆர்யன் கேட்டான்.

“காயம் ஆறி தழும்பாகிடுமோ?”

“ஆனா என்ன?” பக்கத்தில் வந்து கட்டிலில் அமர்ந்துக்கொண்டவன் அவளை அணைத்துக்கொண்டான்.

“அசிங்கமா இருக்குமே!”

“என்னோட தழும்புகளோடும் குறைபாடுகளோடும் நீ என்னை ஏத்துக்கிட்டே தானே? இங்க இருக்கறதை கூட நீ தான் குணப்படுத்தினே” என்று அவள் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்தவன் “நெற்றியில தழும்பு உருவானாலும் என் கண்ணுக்கு முன்ன விட அழகா தெரியுறே! ஏன்னா அதை பார்க்கும்போதெல்லாம் நான் உன்னை எப்படி தேடி தவிச்சேன்னு அது எனக்கு நினைவூட்டும். நீ எனக்கு உயிர்னு சொல்லும்” என்றான்.

ருஹானாவின் கண்கள் பனிக்க, அவள் கூந்தலை ஒதுக்கி காயத்தில் இதழ் பதித்து “தினமும் நான் அதுக்கு முத்தம் தந்து நன்றி சொல்வேன்” என்றான்.

“நீங்க இப்படி அழகா சொன்னீங்கன்னா, அது மறையாம அங்கயே இருக்கட்டும்.” பச்சை நிற நட்சத்திரக்கண்கள் பளிச்சிட்டன.

———

அம்ஜத் பின்னாலேயே தோட்டத்திற்கு சென்ற கரீமாவை கோபப்பார்வை பார்த்துக்கொண்டே அம்ஜத் ஜாஃபரிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.

“தொட்டிலாம் கீழ விழுந்து உடையாம இருக்க பலமான வேலி போடணும், ஜாஃபர். இல்லனா கெட்ட காத்து தள்ளி விட்டுடும்.”

கரீமாவின் முகம் ரத்தப்பசையின்றி வெளுத்தது.

——–

ருஹானா புத்தகத்தை எட்டி எடுக்க முயல, மேசையில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. வெளியே அலுவலக அறையில் இருந்த ஆர்யன் வேகமாக ஓடி வந்தான். “என்னை ஏன் கூப்பிடல?”

“நான் உங்களுக்கு ஒரு சுமையா போய்ட்டேன். எப்படி தான் இந்த ஒரு வாரம் போகுமோ?”

“நான் உனக்கு வாக்கு கொடுத்ததை நீ மறந்திட்டேன்னு நினைக்கறேன். இன்னைக்கு மட்டும் இல்ல, ஒரு வாரம் இல்ல, வருஷக்கணக்கா இல்ல, நான் மூச்சு விடற வரை உன்கூட தான் இருப்பேன்” என்று கட்டிலில் அவளை ஒட்டி அமர்ந்து கொண்டான்.

“டாக்டர் சொன்னபடி ஒரு வாரத்துல உனக்கு சரியாகிடும். அதுக்கு அப்புறம் நாம விட்ட இடத்துல இருந்து தொடருவோம். நம்ம தேனிலவுக்கு அருமையான ஒரு நாடு பார்த்து வச்சிருக்கேன். அதுவரை நான் தான் உன்னோட கை கால்” என்று அவள் காலை நன்றாக நீட்டிவிட்டான்.

“நீ கட்டளையிட்டா அதை செய்து முடிக்கிற பணியாளா நான் இருப்பேன். அதே நேரம் உன் கதையோட நாயகனா நீ கேட்டதை உன் காலடில கொண்டுவந்து வைப்பேன். நீ தலை சாய தோள் கொடுப்பேன்” என்று சொல்லி அவளை அணைத்துக்கொள்ள, அவன் தோளில் சாய்ந்த ருஹானா சுகமாக தூங்கிப் போனாள்.

கரீமாவின் சதித்திட்டங்கள் அனைத்தும் இவர்கள் காதலுக்கு சாதகமாகவே எப்போதும் அமையும். இப்போதும் அப்படித்தான். காதலர்களிடையே இருந்த தயக்கமும் வெட்கமும் விலகியோடி அன்னியோன்யம் அதிகரித்துள்ளது.

———

அயர்ந்து தூங்கி எழுந்த ருஹானா அவன் நெஞ்சில் தான் தலை வைத்திருப்பதை பார்த்து “இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தீங்க? உங்களுக்கு முதுகுவலி வேற இருக்கே?” என்று வருத்தப்பட, ஆர்யன் “அதெல்லாம் சரியாப்போச்சு. நம்ம படுக்கை சிக்கலும் தீர்ந்துடுச்சி. அப்படியே உன் குறட்டை பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைச்சா நல்லா இருக்கும்” என்றான், அலட்டாமல்.

படக்கென அவனிடமிருந்து விலகிய ருஹானாவின் முகம் சிவக்க, “என்னது? குறட்டையா? நானா? இருக்காதே!” என பதறினாள். ஆர்யன் மௌனமாக சிரிக்க, “எனக்கு தெரியும், நான் குறட்டை விடல தானே?” என சந்தேகம் கேட்டவள் “ஒருவேளை விடறேனா?” என்று குரலை தாழ்த்தினாள்.

“நான் உன்னோட ரோஜா முகத்தை பார்க்க ஆசைப்பட்டேன். இப்படி உன்னை பார்க்க ரொம்ப அழகா இருக்கும்” என்று அவளை மீண்டும் சேர்த்தணைத்து கொண்டு அவள் கையை தூக்கி முத்தமிட்டான்.

“நீங்க ரொம்ப மோசம். நான் நிஜம்னே நம்பிட்டேன்” என்று அவள் சிணுங்க, அவன் சத்தமிட்டு சிரித்தான்.

அறைக்கதவு தட்டப்படும் ஓசையில் ருஹானா வேகமாக அவனிடமிருந்து விலக முயற்சி செய்ய, பிடியை விடாத ஆர்யன் “நிதானமா இரு. இது நம்மோட அறை. எழுந்துக்காம படுத்திரு. ரஷீத் பிசியோதெரபிஸ்ட்டை கூட்டிட்டு வந்திருப்பான்” என்றான்.

“அவ்வளவு நேரமா ஆகிடுச்சி?” என ருஹானா வியக்க, புன்னகை செய்த ஆர்யன் “உள்ளே வா ரஷீத்” என்றான்.

ரஷீத் தன்னுடன் வந்த பிசியோதெரபிஸ்ட் மரியானாவை அறிமுகப்படுத்தி வைத்தான். அவன் முதுகுவலியால் அவதிப்பட்டபோது மரியானா தான் அவனை குணப்படுத்தியதாகவும் தெரிவித்தான்.

மருத்துவ அறிக்கைகளையும், ருஹானாவையும் பரிசோதித்த இளம்பெண் மரியானா ஒரு வாரத்தில் அவளை நடக்க வைத்துவிடலாம் என்று நம்பிக்கை தந்துவிட்டு ஒரு நிபந்தனையும் வைத்தாள். “நான் சொல்றவரை நீங்க காலை தரையில வைக்கவே கூடாது, ருஹானா மேம்!”

“அது எப்படி முடியும்? இவானை நான் கவனிக்கணுமே!” என்று அவள் ஆட்சேபம் தெரிவிக்க, ஆர்யன் அவளை சமாதானப்படுத்தினான்.

ருஹானாவிற்கு ஊசி போட்ட மரியானா ஒரு மணி நேரம் கழித்து பயிற்சிகளை செய்ய வேண்டும் என சொல்ல, கரீமாவை அழைத்த ஆர்யன் மரியானாவிற்கு ஒரு அறை ஏற்பாடு செய்து தர சொன்னான்.

“என்ன இப்படி சொல்றீங்க? இப்படியே என்னால படுத்திருக்க முடியாது” என்று தனிமையில் ருஹானா ஆர்யனிடம் குறைபட, “இப்போ நீ குணமாகுறது தான் முக்கியம். அதுக்கு அப்புறம் நீ எழுந்து எல்லாம் கவனி. உன்னை யார் தடுக்கப் போறாங்க?” என்று அவளை தேற்றினான்.

——–

அம்ஜத்தை பேச வைக்க கரீமா பலவிதங்களில் முயற்சி செய்ய, அவனிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை. “அம்ஜத் டியர்! உங்க செடிகளுக்கு நான் சத்து மருந்துகள் போடவா?”

“பெரிய புழு உள்ள இருந்தே செடியை அரிக்கும்போது சத்துக்களால் என்ன பயன்?”

‘அச்சோ! கண்டிப்பா இவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. அதை ஆர்யன் கிட்டே அவர் சொல்றதுக்கு முன்ன நான் ஏதாவது செய்யணும்.’ கரீமா யோசித்தாள்.

——–

மரியானா ஆர்யனை வைத்துக்கொண்டே ருஹானாவின் காலை நீட்டி மடக்கி பயிற்சிகள் செய்ய வைத்து “நான் இல்லாத நேரம் நீங்க இப்படி செய்ய வைங்க ஆர்யன் சார்! அடிக்கடி இப்படி செய்யறது முக்கியம்” என்றாள்.

“ஏன், நானே செய்து கொள்வேனே” என்று ருஹானா மறுக்க, ஆர்யன் முறைத்தான். “உங்களுக்கு வேலை இருக்குமே..” என்று ருஹானா இழுக்க, “என்னுடைய எல்லா நேரமும் என் மனைவிக்கு தான்” என்று ஆர்யன் முடித்துவிட்டான்.

கணவன் தானே என ஆர்யனை தாங்கிக் கொள்ளவும், அவள் இடுப்பை பிடித்துக்கொள்ளவும் வைத்து ருஹானாவிற்கு பல பயிற்சிகளை மரியானா செய்ய, ஆர்யனின் நெருக்கத்திலும், பயிற்சியின் வலியிலும் ருஹானா தடுமாறிப்போனாள்.

மரியானா சென்ற பிறகு, “இது இவ்வளவு கடுமையா இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. இத்தனை செஞ்சும் நான் நடக்க முடியலனா?” என்று அவள் ஆர்யனிடம் கேட்க, “உனக்கு இது சாதாரணம். இதை விட மோசமான எதிரியையே நீ போராடி ஜெயிச்சிருக்கே!” என்று அவன் புதிர் போட்டான்.

“யார்? நானா? யார்கூட?” அவள் புரியாது விழித்தாள்.

“என்கூட தான். மாளிகையின் வாசல்ல நின்னு நீ நடத்தின போராட்டம்லாம் உனக்கு மறந்து போச்சா? ஆனா கன்னத்தில அறை வாங்கின எனக்கு மறக்கல. அப்பா..! என்னவொரு அடி!” என்று அப்போது தான் ருஹானா அவனை அடித்ததுபோல கன்னத்தை பிடித்துக்கொண்டான்.

ருஹானா கலகலத்து சிரிக்க, “எங்க போனா அந்த தைரியசாலி பொண்ணு?” என்று அவள் நாடியை தூக்கி கேட்ட ஆர்யன், அவளுக்கு ஒரு அழகிய காலணியை காட்டினான்.

“ரொம்ப அழகா இருக்கே! ஆனா இதை நான் எப்போ போடுவேனோ?” என அவள் பெருமூச்சு விட “நீ ஒழுங்கா மாத்திரை சாப்பிட்டு, பயிற்சிகள் செய்தா ஒரு வாரத்துல குணமாகிடுவே. நானும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்” என்று ஆர்யன் அவளை உற்சாகப்படுத்தினான்.

“என்ன சர்ப்ரைஸ்? ப்ளீஸ் சொல்லுங்களேன்” என்று அவள் கெஞ்ச, “அதான் சர்ப்ரைஸ்! நீயே உன் கண்ணால பார்த்துக்கோ” என்றான் ஆர்யன் அமர்த்தலாக!

(தொடரும்)

Advertisement