Advertisement

“ஹேய்! சித்தப்பா கண்டுபிடிச்சிட்டாங்க” என்று சிரித்த இவான் “இப்போ நீங்க வாசனை பார்த்து என்னன்னு கண்டுபிடிக்கணும். தொடக்கூடாது. கண்ணை மூடுங்க” என்று மறுபடியும் ஆர்யனை கண்ணை மூடவைத்து ருஹானாவை அவன் அருகே இழுத்துவிட்டான்.

அவளை நெருங்கி வாசம் பிடித்த ஆர்யன் “எனக்கு சரியா தெரியலயே?” என்று சொல்ல, ருஹானாவின் கண்கள் கோபத்தால் பெரிதாகின.

ருஹானாவை ஆர்யன்புறம் தள்ளிய இவான் “இப்போ கண்டுபிடிங்க, சித்தப்பா” என்று சொல்ல, ஆர்யன் ஆனந்தமாக அவளை நுகர்ந்தபடியே இருந்தான்.

ஆர்யனிடமிருந்து பதில் வராமல் போகவே “உங்களுக்கு ஒரு க்ளூ கொடுக்கறேன், சித்தப்பா. இது எனக்கு பிடிச்ச உணவோட வாசனை” என்று சொல்ல, “ம்ம்.. நீ விரும்பி சாப்பிடறது லெமன் குக்கீஸ். அதுவா?” என்று ஆர்யன் கேட்டான்.

ருஹானாவின் கோபம் அதிகமாக, “இல்ல, சித்தப்பா! ஆனா நீங்க கிட்ட வந்துட்டீங்க. அதே வாசனை தான் இதுக்கும். எனக்கும் ரொம்ப பிடிச்சது. உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று இவான் சொல்ல, ருஹானாவின் கோபம் மறைந்து முகம் மென்மையானது.

ஆசைதீர ருஹானாவின் சுகந்தத்தை சுவாசித்து சேமித்துக்கொண்ட ஆர்யன் “நான் கண்டுபிடிச்சிட்டேன்னு நினைக்கறேன், சிங்கப்பையா! சொல்லவா?” என்றான். இவான் சொல்லும்படி கூற “உன் சித்தியோட வாசனை” என்று சொன்ன ஆர்யன், “சரியா சொல்லிட்டீங்க, சித்தப்பா” என்ற இவானின் குரல் கேட்டு கண்திறந்தான்.

நெருக்கத்தில் இருந்த ருஹானாவின் கண்களை பார்த்தவாறே “நீ சொன்னது சரிதான் அக்னிசிறகே! எனக்கு ரொம்ப பிடிச்ச வாசனை தான்” என்று ஆர்யன் சொல்ல, “ம்ம்க்கும்” என நகர்ந்த ருஹானா இவானுக்கு பால் கொண்டுவருவதாக சொல்லி வெளியே சென்றாள்.

ஆர்யனின் அருகாமை தந்த கிறக்கமும், அவன் சொல் தந்த மயக்கமுமாக ருஹானா படிக்கட்டின் அருகே வர, அவள் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்டு பொசுங்கிய கரீமா ஆத்திரமடைந்து ருஹானாவின் பின்னால் ஓடிவந்து அவள் எட்டு எடுத்து வைக்க தூக்கிய காலை தட்டி விட்டாள்.

நிலைதடுமாறிய ருஹானா படிக்கட்டில் உருண்டு சென்று தலைகுப்புற கீழே விழுந்தாள்.

மயங்கி கிடந்த ருஹானாவை எட்டிப்பார்த்த கரீமாவிற்கு அதே இடத்தில் ருஹானாவின் சகோதரி தஸ்லீம் கிடந்தது கண்முன் வர, “என்ன செய்திட்டேன் நான்? யாராவது பார்த்திருந்தா என்ன ஆகும்?” என்று பயந்து நின்றவள், சாரா வரும் சத்தம் கேட்டு அவள் அறைக்கு ஓடிவிட்டாள். அங்கே அம்ஜத் இல்லாததை கூட அவள் கவனிக்கவில்லை.

ருஹானா கிடந்த கோலத்தை பார்த்து சாரா அலறிய சத்தத்தில் ஆர்யன் தடதடவென இறங்கி ஓடிவந்தான். மனைவியின் நிலையை பார்த்த ஆர்யனுக்கு இதயம் துடிக்க மறந்தது. “ஆர்யன் சார்!” என சாரா உலுக்க, “என்ன நடந்தது? கண்ணை திற! என்னை பாரு! நான் பேசுறது கேட்குதா?” என்று அவளை தூக்கி மடியில் வைத்து கத்தினான்.

ஜாஃபர் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஓடிவர, எதற்கும் ருஹானாவின் மயக்கம் தெளியவில்லை. ருஹானாவை தூக்கிக்கொண்டு காருக்கு ஓடிய ஆர்யன் அவளை காரில் படுக்கவைத்துவிட்டு “நான் உன்கூட தான் இருக்கேன். உனக்கு ஒன்னும் ஆகாது. நான் அதுக்கு அனுமதிக்க மாட்டேன்” என்று அவளுடன் பேசிக்கொண்டே காரை வேகமாக செலுத்தினான்.

——–

“நீ திரும்பி வந்துருவே! என்னை விட்டு போக மாட்டே! நான் இங்க தான் இருக்கேன். உனக்காக காத்திருக்கேன்” என்று ருஹானாவின் காதில் சொல்லிக்கொண்டே மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அவளை அனுப்பிவிட்டு, வெளியே நின்ற ஆர்யன் “என்னை கைவிட்டுடாதே, ருஹானா! நீ இல்லாம என்னால இருக்கமுடியாது” என்று புலம்பிக்கொண்டே நின்றான்.

ஆர்யனிடம் ஓடிவந்த கரீமா “கண் முழிச்சாளா? ஏதாவது சொன்னாளா?” என்று பயந்தபடியே கேட்க, “டாக்டர்ஸ் பார்த்துட்டு இருக்காங்க” என்று ஆர்யன் சொன்னதை கேட்டு முகத்தை மூடிக்கொண்டு அழனாலாள். கூட வந்த ஜாஃபர் அவளை தேற்ற, ஆர்யன் மூடிய கதவை பார்த்தபடியே நின்றான்.

———

“என் மனைவி எப்படி இருக்கா? அவளுக்கு ஒன்னும் கெடுதலா ஆகலயே?” வெளியே வந்த மருத்துவரிடம் ஆர்யன் பயத்துடன் கேட்க, அவர் நம்பிக்கையாக சிரித்தார். “மிஸஸ் ருஹானா இன்னும் கண் திறக்கல. ஆனா பயப்படும்படி ஒன்னும் இல்ல. அவங்க உணர்வுக்கு வந்தபின்ன தான் எதுவும் சொல்ல முடியும்.”

“அப்போ அவ ஓகே தானா?” என்று கரீமா கலவரமாக கேட்க, “கீழ விழுந்ததால கால்கள் மட்டும் நடக்க சிரமப்படலாம். எதுக்கும் காலைல பரிசோதனை செய்து பார்க்கலாம். அப்போ தான் எதுவும் உறுதியா சொல்ல முடியும்” என்று அவர் சொல்ல, மீண்டும் அவள் “தலைல அடிப்பட்டு இருந்ததே, நிரந்தரமா பாதிப்பு ஏற்படுமா? ஞாபக மறதி போல..” என்று தன் உள்மன ஆசையை வெளிப்படுத்தினாள்.

ஆர்யன் அவளை திரும்பி பார்க்க, மருத்துவர் “அதான் சொன்னேன், காலைல தான் எல்லாம் தெரியும். இப்போதைக்கு கவலைப்பட எதும் இல்ல” என்று சொல்லி சென்றார்.

“ஏன் எதுவும் தெளிவா சொல்ல மாட்றாங்க?” என்று சலிப்பாக கரீமா கேட்க, “ஏன் அண்ணி இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க? ருஹானாக்கு ஒன்னும் ஆகாது” என்று ஆர்யன் அவள் பெயரை சொல்லவும், திகைப்பான கரீமாவிற்கு ஆத்திரம் அதிகமாகியது.

அவனை பயப்படுத்த எண்ணி “சரி தான் ஆர்யன்! ஆனா பழசு நினைவு வர்றது தவிர்க்க முடியல” என்று தஸ்லீமின் மரணத்தை நினைவுப்படுத்தினாள்.

“நீங்க ஜாஃபரோட மாளிகைக்கு போங்க. இவானுக்கும் அண்ணனுக்கும் எதும் தெரியாம பார்த்துக்கங்க” என்று ஆர்யன் சொல்லியும், ஜாஃபரை மட்டும் அனுப்பிவிட்டு அவள் ஆர்யனோடு அமர்ந்து கொண்டாள். ‘அவளுக்கு நினைவு திரும்பி நான் தான் தள்ளிவிட்டேன்னு சொல்லிட்டா?’

———

காலையில் “கண் திறந்திட்டாங்க! இடுப்புலயும் கால்லயும் சின்ன பாதிப்பு இருக்கு. ஒரு வாரம் நடக்க விடாம பார்த்துக்கங்க” என்று சொன்ன மருத்துவர் ருஹானாவை பார்க்க அனுமதியும் தந்தார்.

நன்றி சொன்ன ஆர்யன் உள்ளே விரைய, அவனுக்கு முன் கரீமா “நானும் வரேன்” என்று செல்ல முனைய, “ஒவ்வொருத்தரா பாருங்க” என்று செவிலிப் பெண் தடுத்தாள்.

“நீ போ, ஆர்யன் டியர்!” என்று விட்டுக்கொடுத்த கரீமா “அவளுக்கு ஞாபகம் இருக்கக்கூடாது” என்று பதைத்தபடி வெளியே நின்றாள்.

——–

“எப்படி இருக்கே?” என்று அவள் கையை பிடித்த ஆர்யன் “ஐந்து நிமிடத்துல வரேன்னு சொல்லிட்டு போனே! ஏழு மணி பதினாறு நிமிடம் ஆச்சு” என்று கைக்கடிகாரத்தை பார்த்து சொல்ல, ருஹானா சிரித்தாள்.

“பயந்திட்டியா ருஹானா? நானும் தான்! ஆனா எனக்கு தெரியும், உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு. ஏன்னா உன் உயிர் என்கிட்டே தானே இருக்கு?” என்று ஆர்யன் நெகிழ்ந்து சொல்ல, ருஹானாவின் வலிகள் போன இடம் தெரியவில்லை.

அவள் நெற்றிக் காயத்தை தடவிய ஆர்யன் “எல்லாம் கடந்து போய்டுச்சி. இப்போ நீ என்கூட இருக்கே. ஆனா இதுல இருந்து ஒன்னு தெரியுது. நான் உன்னை விட்டு எப்பவும் பிரியக்கூடாது” என்று அவள் பக்கத்தில் அமர்ந்தவன் “எப்படி கீழ விழுந்தே?” என்று விசாரித்தான்.

“இவானுக்கு பால் எடுக்க மாடிப்படில இறங்கினேன். எனக்கு எப்படி நடந்ததுன்னு தெரியல. மனசெல்லாம் ஒரே பரபரப்பா இருந்தது…”

“ஏன் பரபரப்பு? ஏன் உனக்கு அவசரம்?” என்று ஆர்யன் புருவம் உயர்த்தி குறும்பாக கேட்க, “நான்…” என்று ருஹானா சொல்லத் தயங்கினாள்.

“உனக்காக நான் ரொம்ப காலமா காத்திருக்கேன், ருஹானா! உன்னை சந்திக்கறதுக்கு முன்னாடில இருந்தே காத்திருக்கேன். இன்னும் சில நாட்கள் காத்திருக்க மாட்டேனா?” என்று கனிவோடு கேட்க, அவன் அன்பில் அவள் கரைந்து போனாள்.

“எனக்கு அடிப்பட்டது இவானுக்கு தெரியுமா? கவலைப்படப் போறான்.”

“இல்ல, காலை நடைப்பயிற்சிக்காக நாம போயிருக்கோம்னு சொல்லியிருப்பாங்க.”

“இவானோட தப்பு இல்ல இது!”

“தெரியும்! யாரோட தப்பும் இல்ல. காலம் உன்னோட அருமையை எனக்கு மறுபடியும் உணர்த்தி இருக்கு. நீ இல்லனா நான் ஒன்னுமே இல்ல” என்று ஆர்யன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

காத்திருக்க முடியாமல் உள்ளே ஓடிவந்த கரீமா “ருஹானா டியர்! உனக்கு எதும் ஆகலயே?” என்று அவள் மேல் படுத்து கட்டிக்கொண்டாள்.

“அண்ணி! அவளுக்கு இன்னும் சரியாகல, வலிக்கப் போகுது” என்று ஆர்யன் அவளை பிரித்துவிட்டான்.

——–

“மிஸஸ் ருஹானா ஒரு வாரத்துக்கு கால் தரையில் வைக்க கூடாது. பிசியோதெரபி செய்தா வேகமா குணமாகிடுவாங்க.”

“டாக்டர்! இது எல்லாம் வீட்டிலயே நான் ஏற்பாடு செய்துக்கறேனே! என் மனைவியை நான் கூட்டிட்டு போகவா?”

“சரி, சாயந்தரம் வரை இங்க இருக்கட்டும். என்ன என்ன செய்யணும்னு நான் சொல்றேன். கவனமா பார்த்துக்கங்க” என்று சொல்லி மருத்துவர் செல்ல, “நீங்க வீட்டுக்கு போங்க, அண்ணி! ராத்திரி முழுசும் தூங்கல” என்று ஆர்யன் மனைவியுடன் தனிமை வேண்டி அவளை அகற்றினான்.

“உங்களுக்கு தான் என்னால சிரமம்” என்று ருஹானா தேவையில்லாமல் வருத்தப்பட, “என்ன ருஹானா இப்படி சொல்லிட்டே? நாம எல்லாம் ஒரே குடும்பம். இந்த மாதிரி நேரத்துல கூட இருக்காம எப்படி?” என்று அவளிடம் நடித்துவிட்டு வெளியே வந்த கரீமா “டேமிட்! சீக்கிரம் குணமாகிடுவாளாம், இதுக்கா நான் பயந்து கிடந்தேன்?” என்று காலை உதைத்தாள்.

“நகரத்தோட சிறந்த பிசியோ தெரபிஸ்ட்டை கூட்டிட்டு வா” என்று ரஷீத்திற்கு போனில் ஆணையிட்ட ஆர்யன் மாலைக்குள் மேலும் என்ன என்ன தேவை என்பதையும் தெரிவித்தான்.

அவனையே காதலாக பார்த்து படுத்திருந்த ருஹானாவை கண்ட ஆர்யன் “உனக்கு என்ன வேணும்?” என கேட்க, “நீங்க கூட இருக்கீங்க, அதுவே போதும்!” என்று அவள் நேசமொழி பேச, அவன் சுற்றுப்புறம் மறந்தான்.

——–

“என்னை வந்து பார்க்கக்கூட நேரம் இல்லயா, கரீமா மேடத்துக்கு?” என்று சிறையில் சல்மாவை சென்று பார்த்த வக்கீலிடம் சீறியவளுக்கு என்ன தெரியும், கரீமா கொடுஞ்செயலை செய்துவிட்டு நடுங்கிக் கொண்டிருப்பது?

வக்கீல் அவளை சீக்கிரம் விடுதலை செய்துவிடுவோம் என சமாதானம் சொல்ல, “அடுத்த விசாரணையில நான் வெளிய வந்திரணும். இல்லனா நடக்கப்போற விபரீதம் என்னன்னு உங்க மேடத்துக்கு தெரியும். சொல்லிவைங்க” என்று சொன்ன சல்மா அதிகமாக பணம் அனுப்பி வைக்க சொன்னாள்.

——–

“என்னோட கம்மல் எங்க போச்சி? ஹாஸ்பிடல்ல தொலைச்சிட்டேனா?” என்று படிக்கட்டிலும், ருஹானா விழுந்து கிடந்த இடத்திலும் தேடிய கரீமா “ஆமா, அம்ஜத் எங்கே? நேத்து ராத்திரி நான் அறைக்கு வரும்போது கூட அவர் இல்லயே?” என அதிர்ந்தாள்.

“இதையா தேடுறே கரீமா?” என்று முறைத்தபடி அம்ஜத் அவளின் ஒற்றை கம்மலை நீட்டி அவளை மேலும் அதிர வைத்தான். அவனிடம் விளக்கம் கேட்கும்முன் வாசல் கதவு திறக்க, ஆர்யன் ருஹானாவை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.

கைகளில் கட்டையுடன் இருந்த ருஹானாவை ஓடிச்சென்று அணைத்துக்கொண்ட அம்ஜத் “நான் பயந்தே போயிட்டேன். உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னால தாங்கியிருக்கவே முடியாது” என கண்ணீர் சிந்தினான். அவனை ருஹானாவும் ஆர்யனும் தேற்ற, அவனோ கரீமாவை கோபமாக முறைத்தான்.

Advertisement