புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 138

நாளை இரவு தேனிலவு என்று சொல்லிவிட்டு ஆர்யன் ஆனந்தமாக உறங்கிவிட, ருஹானா தான் இம்முறை அவனை பார்த்தபடி நெடுநேரம் விழித்து கிடந்தாள்.

காலையிலும் இன்பக்கனவு கண்டு திடுக்கிட்டு துயில் களைந்தவள் தூங்கும் ஆர்யனை பார்த்துக்கொண்டே நுனிக்காலில் நடந்து சென்று மாற்றுடையை எடுக்க, அந்த சத்தத்தில் விழித்துக்கொண்ட ஆர்யன் அசையாமல் படுத்தே இருந்தான். அவள் ஒலியெழுப்பாமல் மெல்ல கதவை திறந்து வெளியே செல்ல புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான்.

இருவரும் காலையில் எழும்போது நிஜ தம்பதியினர் அல்லவா? இருவருக்கும் அது நன்கு நினைவிருந்தது. ஆர்யனுக்கு உற்சாகத்தை தந்த அந்த நினைப்பு ருஹானாவிற்கு படபடப்பை அளித்தது.

———

அம்ஜத் கரீமாவை சாப்பிட பலமுறை வற்புறுத்தி அழைக்க, அவள் வர மறுத்தாள். “கரீமா! வருத்தமா இருக்கியா? நான் போய் ருஹானாவை கூட்டிட்டு வரட்டுமா? அவ பேசினாலே கவலையெல்லாம் பறந்திடும்” என்று அவன் எழுந்து கொள்ள, அதுவரை அமைதியாக மறுத்துக்கொண்டிருந்த கரீமா வெகுண்டாள்.

“நான் தனியா இருக்க விரும்பறேன்” என்று அவள் கத்த, “சரி, சரி! கோபப்படாதே! உனக்கு பிடிக்கும்போது சாப்பிடு” என்ற அம்ஜத் சாப்பிட சென்றுவிட்டான்.

“பரதேசி நீ ஜெயிச்சிட்டேல? என்னோட எல்லா திட்டமும் தகர்ந்து போச்சே!” என்று அவள் ஒடிந்து அமர்ந்திருக்க, அவளின் உடன்பிறந்தவளின் நிலையும் அதுவே தான்.

ஜவேரியாயின் ஆணவ அதிகாரத்தில் வெறுத்துப்போன சல்மா தலையைக்கொண்டு சுவரில் முட்டி மோதி ரத்தக்காயத்தை ஏற்படுத்திக்கொண்டாள். சிறை அதிகாரி அவளை மருத்துவ உதவிக்கு அழைத்து சென்றார்.

——–

ஆர்யன் வந்து அருகில் நின்றதுகூட தெரியாமல் வரவேற்பறையில் ஜன்னலை பார்த்தபடி ருஹானா கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்.

“என்ன யோசித்திட்டு இருக்கே?”

பயந்து திரும்பியவள் “ஒன்னுமில்லயே, சும்மா தான்!” என்றாள்.

“நான் எழுந்திருக்கும்போது நீ அறையில இல்ல. சாப்பிடும்போதும் என்கிட்டே சரியா பேசல. நீ என்னை தவிர்க்கிறியா?”

“இல்லயே, நான் ஏன் அப்படி செய்யணும்?” என்று தலைகுனிந்து கொண்டவள் “நீங்க எதாவது என்ட்ட சொல்லணுமா?” எனக் கேட்டாள்.

“ஆமா, ஒன்னு கேட்கணும். அதாவது…. நீ விரும்பினா… நாம இன்னைக்கு நைட் வேற எங்கயாவது போய் தங்கலாம். நமக்கு இது முக்கியமான இரவு. நட்சத்திர விடுதியில தேனிலவு அறை கூட பதிவு செய்றேன். நேத்து நான் யோசிக்காம நம்ம அறையிலன்னு சொல்லிட்டேன்.”

“இல்ல, அது தேவை இல்ல! இவானை தனியா விட்டுட்டு நாம போக முடியாது.”

“சரி, உன் விருப்பம்!” என்றவன் அவள் கன்னம் வருடி முத்தமிட வந்தான். “யாராவது பார்த்துட்டா…” என்று அவள் தொடங்க, அவன் முறைக்கவும் “வந்து… எனக்கு அவங்க முன்ன வெட்கமாகிடும்” என்று சமாளித்தாள்.

“அண்ணன் தோட்டத்துல இருக்கார், நான் அவரை பார்த்துட்டு வரேன்” என்று ஆர்யன் செல்ல, தட்டு தடுமாறிய ருஹானா சமையலறைக்கு வேகமாக சென்றவள், அங்கே அடுப்பு மேடையிலிருந்த டம்ளரில் இருந்த தண்ணீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு முகம் சுளித்தாள்.

“அச்சோ! ருஹானா! நான் வினிகர் கலந்து வச்சிருக்கேன், மேடையை சுத்தம் செய்ய. அதையா குடிப்பே?” என்று சாரா சத்தமிட, ருஹானா வேறு தண்ணீரை எடுத்து குடித்தாள். “ஏன் மகளே! உன் முகம் வெளுத்திருக்கு?” என்று அவர் கேட்க, ஒன்றுமில்லை என்று அவரிடம் தப்பித்து மேலே அறைக்கு வந்தாள்.

நஸ்ரியா கட்டிலில் புது விரிப்புகளை மாற்றுவது கண்டு, காரணம் வினவ அது ஆர்யனின் சொற்படி நடக்கிறது என தெரிந்து கொண்டதும் அவளது பதற்றம் மேலும் அதிகரித்தது.

———

கீழே வந்து காபி தயாரித்த ருஹானா அதில் சர்க்கரைக்கு பதில் உப்பை போட்டாள். “என்ன ருஹானா! வினிகர் தண்ணியை குடிக்கறே! காபில உப்பு போடுறே? உன் நினைப்பு எல்லாம் எங்க இருக்கு? நீ சரியா தானே இருக்கே?” என சாரா கேட்க, ருஹானாவை தேடிவந்த ஆர்யனின் காதில் அது விழுந்தது.

அவனுக்கு சிரிப்பும், கவலையும் ஒருங்கே தோன்றியது. ‘இது என் தப்பு தான். நான் ருஹானாவை அவசரப்படுத்தியிருக்கக்கூடாது’ என்று முடிவெடுத்தவன், கடந்து செல்லும் அவளை அழைத்தான்.

“நான் உன்கிட்டே பேசணும். ரஷீத் கூப்பிட்டு இருந்தான். ஒரு முக்கியமான சந்திப்பு, இன்னைக்கு இரவு இருக்கு. அது இரவு முழுதும் நீளலாம். நீ விரும்பினா அது காலை வரை கூட நீடிக்கும்” என்று சொல்ல, அதுவரை பயந்திருந்த ருஹானாவின் மனம் ஏனோ ஏமாற்றம் அடைந்தது.

“இன்று இரவு மட்டும் இல்ல, நிறைய இரவுகளும் கூட வியாபார சந்திப்புக்களை ஏற்படுத்திக்குவேன். எல்லாமே உன் இஷ்டப்படி தான்” என்று ஆர்யன் அவள் கண்களை பார்த்து சொல்ல, ருஹானா தலையாட்டி சென்றாள்.

அறைக்கு வந்து நிலைகொள்ளாமல் தவித்தவள் “உண்மை தானே? நான் தான் யெஸ் சொல்லிட்டேனே? அப்புறம் என்ன? நான் அவர் மனைவி தானே?” என்று கேட்டுக்கொண்டாள்.

உள்ளே வந்த நஸ்ரியா “ஆர்யன் சார் இந்த மலர்களை உனக்கு தர சொன்னார். நீ மிக அதிர்ஷ்டசாலி, ருஹானா! ஆர்யன் சார் எவ்வளவு கடுமையானவர்! ஆனா உன்கிட்டே எத்தனை மென்மையா நடந்துக்கறார்! உன்னை சந்தோசப்படுத்த என்னலாம் மெனக்கெடுறார்? நேத்து இரவு மெழுகுவர்த்தி அப்புறம்….” என்று சிரிப்புடன் பாதியில் நிறுத்த, ருஹானாவின் முகம் சிவந்தது.

“சரி, நான் வரேன் ருஹானா! தௌலத் ஆன்ட்டிக்கு உதவி செய்ய போறேன். ஆர்யன் சார் ஏற்பாடு செய்திருக்கற வெளிநாட்டு டாக்டர் இன்னைக்கு வாகிதாவை பரிசோதிக்க வர்றார்.“

“ரொம்ப நல்லது! நானும் வாகிதாவை பார்க்க வரணும், எனக்கு நேரமே இல்ல” என்று ருஹானா கவலையாக சொல்ல, நஸ்ரியா மீண்டும் குறும்புடன் சிரித்தாள்.

“நான் விசாரித்ததா அவங்க கிட்டே சொல்லு. நானும் நாளைக்கு போன் செய்றேன்” என்று சொன்ன ருஹானா, ஆர்யன் கொடுத்த மலர்க்கொத்தை முகர்ந்தாள். “நீ போகும்போது எனக்கு ஒரு உதவி செய், நஸ்ரியா. இதெல்லாம் எடுத்துட்டு போ!”

———

சோபாவில் விரித்திருந்த படுக்கைகளை எடுத்துக்கொண்டு இறங்கி வந்த நஸ்ரியாவை பார்த்த ஆர்யன் “இதல்லாம் எங்க எடுத்துட்டு போறே?” என்று கேட்க, “ருஹானா மேம் இது தேவை இல்லன்னு சொல்லிட்டாங்க” என்று அவள் சொன்னாள்.

ஆர்யன் யோசித்தபடி “சரி, நீ போ!” என்று சொல்லும்போது, அவன் தொலைபேசி ஒலி எழுப்பியது.

‘உங்களுக்கு இரவு சந்திப்பு இருக்குன்னு சொன்னீங்க! அது அவசரம் இல்லனா தள்ளி போடலாம்னு நான் நினைக்கறேன்’ என்ற ருஹானாவின் குறுஞ்செய்தியை படித்தவனுக்கு இதயம் வேகமாக அடித்துக்கொண்டது.

‘நான் சொன்னேனே, எல்லாம் உன் விருப்பம் தான்’ என வேகமாக பதில் அனுப்பினான்.

———-

இரவு உணவு மேசையில் ஆர்யனை ருஹானா பார்க்க, அவள் வெட்கத்தால் அவன் பார்வையை தவிர்த்தாள். அம்ஜத் கரீமாவை சாப்பிட அழைத்து வர ருஹானா அவளை உபசரித்தாள்.

“நீங்க நல்லா இருக்கீங்களா?” என அவள் கேட்க, கரீமாவிற்கு ஆவேசம் பொங்கியது. ‘இல்ல, நான் நல்லா இல்ல. நீ இந்த மாளிகைக்குள்ள அடியெடுத்து வச்ச நாளா என் நிம்மதி போச்சி, சந்தோசம் போச்சி. நான் உன்னை அடியோடு வெறுக்கறேன்’ என மனதில் கத்தியவள் வாய்விட்டு எதுவும் சொல்லாமல் தலையாட்டினாள்.

“அண்ணி! நீங்க வேணும்னா அண்ணனை கூட்டிட்டு தீவுக்கு சுற்றுலா போயிட்டு வாங்களேன்” என்று ஆர்யன் சொல்ல, அம்ஜத் மகிழ்ச்சியுடன் தலையாட்டினான். ஆனால் எங்கும் போக விருப்பம் இல்லையென கரீமா மறுத்தாள். தன் அழகில் தற்பெருமை கொண்டிருந்த அவள் தன் அடிப்பட்ட முகத்தை மற்றவர்களுக்கு காட்ட அவமானப்பட்டாள்.

ஆர்யன் கைக்கடிகாரத்தை பார்க்க, அம்ஜத் “ஆர்யன்! நீ எங்கயாவது வெளிய போறியா?” எனக் கேட்டான்.

“இல்லயே! ஏன் அண்ணா?”

“ரெண்டு மூணு முறை நேரம் பார்த்திட்டியே!”

ஆர்யனுக்கும் வெட்கம் வந்துவிட்டது. தலையை குனிந்துகொண்டு “என்னையறியாம செய்றேன் போல, அண்ணா!” என்றான்.

“சித்தி! நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்.”

“வா அன்பே! நான் உன்னை தூங்க வைக்கறேன்” என்று ருஹானாவும் எழுந்து கொள்ள, இவான் மற்றவர்களுக்கு இரவு வணக்கம் சொன்னான். “சீக்கிரம் தூங்கணும், சிங்கப்பையா” என ஆர்யன் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டான்.

ருஹானா சிரிப்பை மறைத்துக்கொண்டு மேலே செல்ல, சாரா காபி கொண்டுவரவா என கேட்டார். ஆர்யன் மறுக்க, அம்ஜத் சேர்ந்து காபி சாப்பிட தம்பியை வற்புறுத்தினான். அண்ணனுக்கு தெரியாமல் நேரம் பார்த்துக்கொண்ட ஆர்யன் சரியென்றான்.

சாரா காபி தயாரிக்க உள்ளே செல்ல, ஆர்யன் அருகில் சென்று அமர்ந்து கொண்ட அம்ஜத் “ஆர்யன்! எனக்கு இப்போ கொடுக்கற மாத்திரை நல்லா வேலை செய்யுது. மனம் அமைதியா இருக்கு. குழப்பம் வரல. எதுவும் மறந்து போறது இல்ல, பழசுலாம் கூட ஞாபகம் வருதுன்னா பார்த்துக்கோயேன்” என்று சிலாகிக்க, ஆர்யன் முகம் மலர்ந்து தமையனின் தோளை தட்டிக் கொடுத்தான்.

கரீமாவின் முகத்தில் பயம் தெரிய, ஆர்யன் “ஆமா, நானும் உங்க கிட்டே நல்ல மாற்றத்தை கவனிச்சேன். அப்படித்தானே அண்ணி?” என்று அவளை கேட்க, முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாள்.

“சரிதான் ஆர்யன் டியர். எனக்கும் தெரியுது.”

ஆர்யன் பொறுமையின்றி சாரா வரும்வழியை பார்த்திருக்க, அம்ஜத் தோட்டத்தில் செய்யவேண்டிய மாறுதல்களை பற்றி நீளமாக பேச, ஆர்யன் எல்லாவற்றுக்கும் சரியென தலை அசைத்துக்கொண்டே இருந்தான்.

சாரா காபியை கொண்டுவந்து வைத்தது தான் தாமதம், ஒரே மூச்சில் ஆர்யன் காபியை குடிக்க “மெதுவா, ஆர்யன். யாரும் உன்னை துரத்துறாங்களா, என்ன?” என்று அம்ஜத் நகைச்சுவை பேசி சிரித்தான்.

ஒருவழியாக அண்ணனை அண்ணியோடு உறங்க அனுப்பிவிட்டு ஆர்யன் ருஹானாவை தேடிவந்தால், அவளோடு இவான் தூங்காது விளையாடிக்கொண்டு இருந்தான்.

இவான் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்க, ருஹானாவை ஆர்யன் ஏக்கமாக பார்க்க, அவள் ‘நான் என்ன செய்யமுடியும்?’ என்பது போல தோளை குலுக்கினாள்.

ருஹானா நாய்க்குட்டி பொம்மையை இவான் கையில் வைக்க, அவன் அதை தடவிப் பார்த்து “என் செல்ல சிண்டு!” என்று சரியாக கண்டுபிடித்துவிட்டு உற்சாகமாக குதித்தான்.

“என்ன செய்றே, அக்னிசிறகே!” என்று ஆர்யன் உள்ளே வந்து அவன் அருகே அமர “எனக்கு தூக்கம் வரல, சித்தப்பா. அதான் சித்தி என்னை விளையாட வைக்கறாங்க” என்றான்.

“சரி, நானும் வரேன், உங்க விளையாட்டுக்கு. என்ன செய்யணும்?”

“கண்ணை இறுக்கமா மூடிக்குங்க. நான் உங்க கையில வைக்கற பொருளை கண்டுபிடிக்கணும்.”

சரியென்ற ஆர்யன் கண்களை மூடிக்கொள்ள, சைகை மொழியில் ருஹானாவின் கழுத்து சங்கிலியை கழற்றி வாங்கிய இவான் அதை ஆர்யனின் கையில் வைத்தான்.

அவள் சங்கிலி கையில் பட்ட நொடியில் கண்டுவிட்ட ஆர்யன் அதை முழுவதுமாக தடவி “நீ இருக்கிற உன் சித்தி சங்கிலி” என்றான்.