Advertisement

“ஹல்லோ! காருக்கு கீழே பாம்பை நசுக்கிட்டே தானே?”

“கரீமா மேம்! என்னை நம்புங்க. என்னோட தவறு இல்ல. கடைசி வினாடில ஒரு கார் குறுக்க வந்துடுச்சி. நான் சந்துல காரை திருப்பிட்டேன் என்னால முடியல.”

“அடச்சே! சூனியக்கார பிசாசு தப்பிச்சிட்டாளா?”

———-

அர்ஸ்லான் மாளிகைக்குள் காரை நிறுத்தி இறங்கிய ஆர்யன், “உனக்கு நேரம் இருக்கா? நீ வீட்ல இல்லன்னு உன் வீட்டு பெரியவர் கண்டுபிடிச்சிருப்பாரா?” என்று கேட்டான்.

“இருக்காது. நீங்க தான் என்னை கூப்பிட வந்துட்டீங்களே? அதான் சீக்கிரமே திரும்பிட்டேனே!”

“அப்போ தோட்டத்தில ஒரு வாக் போலாமா? வானிலை இதமா இருக்கே!” என்று அவன் கேட்கவும், சம்மதித்து உடன் நடந்தாள்.

இருவரும் கைகோர்த்து நடைபயில, அங்கே காவலுக்கு சுற்றிவரும் பாதுகாவலனை பார்த்ததும் ருஹானா கையை உருவிக்கொண்டாள். “இந்த பக்கம் வரவேண்டாம்” என அவனுக்கு ஆர்யன் உத்தரவிட, அவன் பணிந்து அகன்றான்.

“அவங்க தப்பா நினைக்கப்…”

“ஏன் தப்பா நினைப்பாங்க? நீ என் மனைவி.. ம்.. நான் நேசிக்கற பெண்ணோட கையை தானே பிடிச்சிருக்கேன்?” என்று சொன்ன ஆர்யன் மீண்டும் அவள் கையை இழுத்து சேர்த்துக்கொண்டு அவளோடு நடந்தான்.

அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக மேலிருந்து இதை பார்த்த கரீமா ஆத்திரம் தாங்காமல் பல்லை கடித்தாள். “உன் அதிர்ஷ்டம், இன்னைக்கு தப்பிச்சிட்டே! நாளைக்குன்னு ஒன்னு வரும். உன்னை கொன்னு இந்த தோட்டத்துல புதைக்காம விடமாட்டேன்.”

“உனக்கு நடக்க பிடிக்குமா?” ஆர்யன் கேட்டான்.

“ரொம்ப! அப்பா அக்கா கூட பேசிட்டே நடப்பேன். தனியா நடக்கறதை விட அன்பானவங்க கூட நடக்கறது சுகமான விஷயம். இப்போ அவங்க ரெண்டு பேரும் இல்ல. இதோ, உங்களோட நடக்கறேன். நம்ம கூட நடக்க ஒருத்தங்க நமக்காக இருக்கறது மனசுக்கு சந்தோசத்தை கொடுக்கும்.”

உருகிப்போன ஆர்யன் அவளது இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டான். “நீ எப்போ ஆசைப்பட்டாலும் நான் உன்கூட நடக்க வருவேன்.”

அங்கே இருந்த அம்பு எய்யும் பலகையை பார்த்த ருஹானா “நீங்க ஏன் அம்பு பயிற்சி செய்றீங்க? கோபமா இருக்கும்போது மட்டும் தானா?” என்று கேட்டாள்.

“இல்ல.. வந்து.. ஆமா தான்! நான் மன உளைச்சல்ல இருக்கும்போது தான். அது மட்டும் இல்ல, அது என்னோட கவனத்தை குவிக்க உதவி செய்யும்.”

“அது எப்படி?”

“நான் நாணை இழுக்கும்போது குறி மட்டும் தான் என் கவனத்தில இருக்கும். அப்போ வேற எந்த சிந்தனைகளும் இருக்காது. அப்படியே குழப்பங்கள் தீர்ந்து அமைதியாகிடுவேன்.

ஆனா இப்போ நீ இருக்கே! உன்னை பார்த்தாலே எனக்கு அமைதி கிடைக்குது. உன்னோட கண்கள்ல அமைதியும் இருக்கு, ஆழமும் இருக்கு. எது ஒன்னு ஆழமா இருக்கோ அது கவர்ந்திழுக்கும்” என்று சொல்லிக்கொண்டே அவளின் கூந்தலை ஒதுக்கி கன்னத்தில் இதழ் பதித்தான்.

அவள் இலேசாக விலக, அவள் நாடியை பிடித்து கண்ணோடு கண் நோக்கி “நீ என் மனைவி தானே?” என்று கேட்டான்.

“ஆமா, ஆனா…”

“ஆனா?”

“நான் போகணும், இவான் தேடுவான்” என்று அவள் விலகி மாளிகையின் உள்ளே நடந்துவிட்டாள்.

செல்லும் அவளை பார்த்துக்கொண்டே ஆர்யன் “அவ நடந்துக்கறது சரிதான். அவ இன்னும் முழுமையா என்னோட மனைவி ஆகல. எல்லாமே ஃபார்மாலிட்டியா தானே ஆரம்பித்தது?” என தனக்குள் பேசிக்கொண்டான்.

———-

“இன்னைக்கு இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் இன்றிரவு எப்படி போகும்?” என தவித்தபடி நடந்த ருஹானா கட்டிலிலும் சோபாவிலும் மாறி மாறி படுக்கைகளை விரித்தாள். பின் கட்டிலுக்கு நடுவே தலையணைகள் போட்டு பிரிவினை ஏற்படுத்தினாள்.

“இதான் சரி! இங்க படுத்தா தான் அவருக்கு முதுகு வலிக்காது” என்று தீர்மானித்து கொண்டவளுக்கு உடனே ஐயம் ஏற்பட்டது. “அவர் தப்பா நினைச்சிட்டா?”

———-

ஆர்யன் படுக்கையறைக்குள் நுழைய, கட்டிலின் நடுவில் இவான் அமரவைக்கப்பட்டு இருந்தான், தலையணைகளுக்கு பதிலாக.

ஏமாற்றமான ஆர்யன் கேள்வியாக ருஹானாவை நோக்க, அவள் “இன்னைக்கு நம்ம கூட ஒரு விருந்தாளி தங்கப் போறாங்க” என்றாள்.

“எனக்கு தூக்கம் வந்துடுச்சி, சித்தப்பா. ஆனாலும் சித்தி கூப்பிட்டாங்கன்னு இங்க வந்தேன்” என்று இவான் அவளின் குட்டை உடைத்துவிட்டான்.

“ம்.. வந்து.. இவான் இப்போலாம் வெளிய போறது இல்லையே! அவனுக்கு போரடிக்குமே! அதான் அவனை குஷிப்படுத்தலாம்னு…”

“உன் சித்தி செய்தது நல்ல செயல் தான், சிங்கப்பையா! நாங்களும் உன்னை மிஸ் செய்தோம்” என்றபடி ஆர்யன் இவானுக்கு மறுபுறம் வந்து படுத்தான்.

நடு இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த இவான், ஒரு கட்டத்தில் எழுந்துவிட்டான்.

“என்ன ஆச்சு அன்பே?”

“சித்தி! இங்க எனக்கு புழுக்கமா இருக்கு” என்று இறங்க, “செல்லம்.. இவான்… போகாதே” என கிசுகிசுப்பாக ருஹானா அழைத்தும் அவன் ஓடியே போய்விட்டான்.

அதற்குள் விழித்துவிட்ட ஆர்யன், இவானின் பின்னே செல்லப்போன ருஹானாவின் கையை பிடித்து தடுத்தான். மாட்டிக்கொண்ட கள்வனை போல விழித்த ருஹானா, ஆர்யன் படுக்கையை கண்ணால் காட்டவும் ஒன்றும் பேசாமல் ஆர்யனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

———

வழக்கம்போலவே காலையில் தூங்கும் ருஹானாவின் முகத்தை ரசித்தபடியே தலைக்கு முட்டுக்கொடுத்து ஆர்யன் சாய்ந்திருந்தான். கண்விழித்த ருஹானா ஆழ்ந்து பார்த்தபின்னும் அவனின் ரசனை பார்வையை அவன் மாற்றிக்கொள்ளவில்லை. உரிமையாகவே உற்று பார்த்தான்.

“உன் அக்கா பையன் இரவெல்லாம் என்னை உதைச்சிட்டே இருந்தான். என்னை பத்தி எதும் புகார் சொல்வான், பாரு” என்று அவன் சொல்ல, அவள் சிரித்தாள்.

“நீங்க நல்லா தூங்குனீங்களா? முதுகு வலி எப்படி இருக்கு?”

“பரவாயில்ல” என்றவனுக்கு தனக்காக தான் இந்த ஏற்பாடு என புரிந்தது.

அவள் எழுந்து வெளியே செல்ல, அவன் மீண்டும் படுத்துக்கொண்டான். பின்னிரவெல்லாம் அவளை பார்த்துக்கொண்டே விழித்திருந்தானோ?

———-

அலுவலக அறை மேசையில் இருந்த கடிதத்தை பார்த்த ஆர்யன், அது ருஹானாவிடமிருந்து வந்தது எனவும் வேகமாக எடுத்தான். அதை படிக்கும்முன் அவளின் எழுத்துக்களை கனிவாக வருடிக் கொடுத்தான்.

ஒரு பூத்தோட்டமே என்னுள் பூத்தது போல தோன்றுகிறது.. 

இத்தனை காலமாக சூரியனையும் பூமியையும் விட்டு விலகியே இருந்தது, என் இதயம்… 

அது இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாது..

 

இப்போதோ அது குதித்து களியாட்டம் போடுகிறது… 

நீங்கள் புன்சிரிப்புடன் பேசும்போதுகோபப்படும்போதும்கூட… 

உங்களை சுற்றியே என் இதயம் ஓடிக்கொண்டிருக்கிறது.. 

உங்களின் ஒவ்வொரு மூச்சுக்கும் பேச்சுக்கும் ஒவ்வொரு மலர்கள் பூக்கின்றன, என் இதயத்தில்.. 

நான் என் உணர்ச்சிகரமான தோட்டத்தை பார்த்தேன்.. 

அதில் துள்ளலும் இருக்கிறது.. ஒரு பயமும் இருக்கிறது.. 

நீரில்லாமல் என் தோட்டம் வாடிவிடுமோ என நான் ஒருகணம் பயந்துவிட்டேன். 

நிமிர்ந்து உங்களை கண்டேன். என் எல்லா பயங்களும் ஓடோடி விட்டன.. 

இனி நான் பனியால் உதிரமாட்டேன்.. 

புயலால் அடித்து செல்லப்பட மாட்டேன்.. 

ஏனெனில் உங்கள் சூரியன் ஒளி தர வந்துவிட்டது.. 

எனக்கு மகிழ்ச்சி.. இத்தனை பெரிய பூத்தோட்டம் தந்ததற்கு… 

எனக்கு தெரியும், நாம் இந்த வண்ணமயமான தோட்டத்தில் மயக்கும் வாசனையுடன் என்றும் வாழ்ந்திருப்போம்.. 

அல்லாஹ்க்கு நன்றி!

கதவுக்கு பின்னால் நின்று அவன் படிப்பதை பார்த்திருந்த ருஹானா முன்னே வந்தாள். அவனின் பதிலுக்காக அவள் காத்திருக்க, அவளை காதலாக பார்த்தபடியே அவன் தந்த பதில் அவளுக்கு ஏமாற்றத்தையே தந்தது.

“எனக்கு வந்த கடிதங்களில் இதுதான் இரண்டாவது சிறந்தது!”

மனதில் பொறாமை அலை வீச, அவள் முகம் சுருங்க, ஒரு வினாடியில் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு செயற்கையாக சிரித்தாள். நொடிநேரம்கூட அவள் முகம் வாட பொறுக்காத ஆர்யன் வேகமாக மேசையை திறந்து ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

மருத்துவமனையில் அவள் எழுதி அவனுக்கு அனுப்பிய சிறிய சீட்டு அது. ‘காத்திருக்கிறேன், உங்களுக்கு வாக்களித்தபடி!’

அதை பார்த்ததும் சூரியனை கண்ட சூரியகாந்தி மலராக அவள் முகம் விகசித்தது. அவனுக்கு மிக பிடித்த அவள் கூந்தலை தடவி அவளை அருகே இழுத்தவன் “உன்னோட தோட்டத்தில நான் மலர்களை மலரவைப்பேன், நமக்காக!” என்றான்.

சூரியனும் சூரியகாந்தியும் ஒன்றையொன்று லயித்தபடியே ஒரே இடத்தில் நகராமல் நின்றன.

———-

“ஜாஃபர்! நீங்க உங்க மனைவிட்ட காதலை சொன்னதுக்கு அப்புறம் எப்போ கல்யாணம் செய்துகிட்டீங்க?”

“சீக்கிரமே ஆர்யன் சார் ! ஒரு மாதத்தில..”

“ஒரு மாதம் ரொம்ப அதிகம்” என்று முணுமுணுப்பாக சொல்லிக்கொண்ட ஆர்யன் “நமக்கு எது வேணும்னு நமக்கு தெரிஞ்சிடுச்சினா உடனே செயல்ல இறங்கிடணும், சரி தானே ஜாஃபர்?” என்றான்.

“சரி தான் சார்!”

“நீங்க எப்படி அவங்களை கல்யாணத்துக்கு கேட்டீங்க?”

“ஒரு உணவுவிடுதிக்கு கூட்டிட்டு போனேன். என்னை நிக்காஹ் செய்துக்கறியான்னு நேரிடையா கேட்டுட்டேன்.”

“என்னால அப்படி எளிதா கேட்கமுடியாதே” என்று சொல்லி யோசித்தவன் “எனக்கு கடித உறைகள் கொண்டுவந்து கொடுங்க. நிறைய வேணும்” என்றான்.

———

“ருஹானா! நான் வெளிய போறேன். நஸ்ரியாவும் வகுப்புக்கு போயிருக்கா. உனக்கு உதவி செய்ய முடியலயே!”

“சாரா ஆன்ட்டி! நீங்க போயிட்டு வாங்க! சித்திக்கு உதவியாள் நான் தான் இருக்கேனே!”

“ஆமா சாரா அக்கா! இவானும் நானும் சேர்ந்து லெமன் குக்கீஸ் செய்யப் போறோம்” என்று ருஹானா சொல்லவும், தலையசைத்து சாரா வெளியேறினார்.

மாவு பிசையும்போது திருமணமோதிரம் முழுவதும் மாவாகிட, அதை கழட்டி கழுவி அங்கேயே வைத்த ருஹானா குக்கீஸ் செய்ய முனைந்தாள்.

“சித்தி! எனக்கு லெமன் குக்கீஸ் பிடிக்கும் தானே? அதுபோலவே முஹல்லெபியும் பிடிக்குது. நேத்து ஜாஃபர் அங்கிள் எனக்கு தந்தார்.”

“ஆமா அன்பே! எனக்கு பிடித்தமானதுன்னு உன் சித்தப்பா செய்ய வச்சார். எனக்கு சர்ப்பரைஸ் கொடுக்க” என்று ருஹானா சந்தோசமாக சொல்ல, “சித்தப்பா சூப்பர் இல்லயா, சித்தி? சித்தப்பா உங்களை சந்தோசப்படுத்த செய்தார். நீங்க அவருக்கு என்ன செய்தீங்க?” என்று இவான் கேட்க ருஹானா விழித்தாள்.

“நான் ஒன்னும் செய்யலயே… நீ சொல்றது சரிதான், கண்ணே! நான் ஏதாவது அவருக்கு பிடிச்சது செய்யணும்” என்று யோசிக்க, இவான் மாவை எடுத்து ருஹானாவின் கையை தொட்டு வைத்தான்.

“உங்க கை சுவையா இருக்குமாமே? சித்தப்பா பெரியப்பா கிட்ட சொல்லிட்டு இருந்தார்.”

சிரித்த ருஹானா “அது அப்படி இல்ல, மானே! கைமணம்னு சொல்லியிருப்பார். அப்படின்னா நான் செய்ற உணவுகள் ருசியா இருக்கும்னு அர்த்தம்” என்று விளக்க, இவானும் சிரிக்க, தன் கைகளை பெருமையுடன் பார்த்துக்கொண்டாள்.

Advertisement