Advertisement

புத்தக அறையை சுத்தம் செய்துக்கொண்டிருந்த ஜாஃபரிடம் சென்ற ருஹானா ஆர்யனுக்கு பிடித்த இனிப்பு வகை ஏதாவது இருக்கிறதா என கேட்டாள்.

“பொதுவா ஆர்யன் சாருக்கு இனிப்புக்கள் பிடிக்காது. ஆனா அன்னைக்கு சாரா செய்த ஸ்ட்ராபெர்ரி கேக்கை மீதம் வைக்காம சாப்பிட்டு இருந்தார்” என அவன் சொல்லவும், அவள் நன்றி சொல்லி சமையலறைக்கு வந்தாள்.

மறுபடியும் ருஹானாவின் மீது காரை ஏற்ற ஏற்பாடு செய்த கரீமா, குளிர்சாதனபெட்டியில் ஸ்ட்ராபெர்ரியை தேடிக்கொண்டிருந்த ருஹானாவிடம் வந்தாள். நேற்று அவள் வாங்கி தந்த மாத்திரை பத்து எம் ஜி எனவும் அவளுக்கு தேவைப்படுவது இருபது எம் ஜி எனவும் கரீமா சொல்ல, ருஹானா “நான் ஸ்ட்ராபெர்ரி வாங்கப்போறேன், அப்படியே இதும் மாற்றி வாங்கிட்டு வரேன்” என்று மாத்திரையை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

ஆனால் என்ன திட்டங்கள் போட்டு என்ன? அவள் மேல் கார் மோத வரும்நேரம் சாலையில் தடுமாறிய ஒரு முதியவரை காப்பாற்ற ருஹானா வேகமாக நகர, காரோட்டியின் இலக்கு தப்பியது.

செய்தி அறிந்த கரீமா தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். இனியும் சாக்கு சொல்லி ருஹானாவை வெளியே அனுப்ப முடியாது, அவள் மேல் சந்தேகம் வரும் என்பதால் அந்த திட்டத்தையே கைவிட்டாள்.

———-

கேக்கை சுவைத்த ஆர்யன் முகம் மலர “சாரா செய்ததை விட நல்லா இருக்கு. அவங்க கிட்ட சொல்லிடாதே” என்று சமையலறையை எட்டிப்பார்த்துவிட்டு மெல்லிய குரலில் சொல்ல, ருஹானாவின் முகமும் மலர்ந்தது.

என்றாலும் அவள் முகத்தில் வருத்தத்தின் அறிகுறி தெரிய, அதை கண்டுகொண்ட ஆர்யன் “ஏன் கவலையா இருக்கே?” என்று கேட்டான்.

“நான்.. என் மோதிரத்தை தொலைச்சிட்டேன். எல்லா இடமும் தேடி பார்த்தேன். அழுக்காக போகுதேன்னு கழட்டி வச்சேன். காணல. அதை கூட என்னால பத்திரமா வச்சிக்க முடியல.”

“நம்ம திருமண உறவுக்கு அது குறியீடு தான். கிடைக்கும். கவலைப்படாதே! அது முக்கியம் தான். ஆனா கிடைக்கலனாலும் ஒன்னுமில்ல” என்று ஆர்யன் சொன்னாலும் ருஹானா கலக்கத்துடனே சென்றாள்.

——–

‘அவரும் கவலைப்படறார். எப்படி நான் மோதிரத்தை தொலைத்தேன்?’ என்று படுக்கையறையில் ருஹானா வருத்தமாக அமர்ந்திருக்கும்போது, கதவை தட்டி உள்ளே வந்த ஜாஃபர் ஒரு காகித உறையை நீட்டினான். “ஆர்யன் சார் கொடுத்தார்.”

அவள் அதை குழப்பத்துடன் வாங்க, அவன் “இது போல இன்னும் வரும்” என்று சிரித்தபடி சொல்லி சென்றான்.

கடித உறையில் ‘ருஹானாவிற்கு!’ என்று ஆர்யனின் கையெழுத்தில் பார்க்கவும் அவளின் முகம் பிரகாசமானது. உறையை பிரித்து உள்ளே இருந்த தாளை எடுத்து படித்தாள்.

‘உன் மோதிரத்தை கண்டுபிடிக்க முடியாததால் நீ வருத்தமாக இருக்கிறாய், எனக்கு தெரியும். எனக்கும் உன்னை கண்டுபிடிக்க நெடுங்காலம் ஆனது, முடிவில்லா நாட்கள் போல…”

படித்ததும் “என்ன இது? விடுகதை போல இருக்கே?” என்றவள் மீண்டும் படித்தாள். முகத்தில் மின்னல் பளிச்சிட “முடிவீலி!” என்றவள் மேசையை திறந்து அதை எடுத்தாள். அதன் கீழே முன்னதைப் போலவே ஒரு கடித உறை இருந்தது. ஆவலுடன் அதை எடுத்து படித்தாள்.

‘உன்னை நான் கண்டுபிடித்தபோது எனக்குள்ளே அடர்ந்த இருள் இருந்தது. ஆனால் அது உன்னை அச்சமூட்டவில்லை. அந்த இருட்டுக்குள்ளும் ஆழமாக சென்று உண்மையான என்னை நீ கண்டுபிடித்தாய்!

ஆனாலும் உன்னோடு நான் பலமாக சண்டையிட்டேன். உன்னிடம் வெற்றி அடைந்தேன் என்று நான் நினைத்துக்கொண்டாலும் உண்மையில் உன்னிடம் தோற்றுத்தான் போயிருக்கிறேன். உன்னை நோக்கி நான் எய்த கணைகள் அனைத்தும் திரும்பி என் நெஞ்சை தான் தாக்கின. என் இதயம் பாய்ந்த அந்த அம்பின் பெயர் உன் காதல்!’

“அம்பின் பெயர் உன் காதல்!” கடைசி வரியை வாய்விட்டு படித்தவள் மற்ற கடிதங்களை கட்டில் மேல் வைத்துவிட்டு வெளி அறைக்கு ஓடினாள். அங்கே மாட்டப்பட்டிருந்த ஆர்யனின் வில்லில் செருகப்பட்டிருந்த கடிதத்தை எடுத்தாள்.

‘உன் சின்ன புன்னகை உலகத்தின் சொத்துக்களை விட மதிப்பு வாய்ந்தது. சின்ன விசயங்களும் நம் வாழ்வில் பெரிய பலமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் என்னால் மறக்கமுடியாதது, சிறைச்சாலையின் கம்பிகளுக்கு நடுவேயும், மருத்துவமனையின் மேல்மாடியிலும் நாம் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயம்!’

ருஹானா யோசிக்கவேயில்லை. “காபி!” என்று சத்தமாக சொன்னாள், சிரிப்புடன். தடதடவென படிக்கட்டில் இறங்கி சமையலறைக்கு சென்றவள் காபித்தூள் டப்பாவின் பின்புறம் இருந்த ஆர்யனின் காதல் கடிதத்தை எடுத்தாள்.

‘நாம் சண்டையிட்டு போராடிய நம்முடைய உரிமை! நம் இருவரையும் சேர்த்து வைத்த நமது பொக்கிஷம்!’

“இவான்!” என்று ஆனந்த கண்ணீருடன் வெளியே வந்தவளுக்கு இவான் சிரிப்புடன் ஒரு கடிதத்தை நீட்டினான். அவன் கன்னத்தில் முத்தமிட்டு அதை வாங்கி படித்தாள்.

‘இருளிலும் நீ எனக்காக போராடி என்னை மீட்டு என் கைப்பிடித்து வெளிச்சத்துக்கு அழைத்து வந்தாய். எனக்கான வழியை காட்ட உனக்கு  நன்றாக தெரிந்திருக்கிறது. நீ தான் என் திசைக்காட்டி!’

“துருவ நட்சத்திரம்!” என்றவள் அதை அவனிடமே கொடுத்துவிட்டு வாசல் கதவை திறந்து வெளியே காலடி எடுத்து வைக்க, நடைபாதை மெழுகுவர்த்திகளால் ஒளிவீசிக் கொண்டிருந்தது. தரையில் வண்ண மெழுகுவர்த்திகள் வழிகாட்ட, அந்த பாதையில் அவள் குதூகலத்துடன் நடக்க, அது அவளை பின்பக்க தோட்டத்திற்கு அழைத்து சென்றது.

பாதையில் முடிவில் உள்ளம் கொள்ளை கொள்ளும்வண்ணம் ஆர்யன் நின்றிருந்தான். மனம் ஆனந்தத்தில் மூழ்க, முகம் உவகையில் பூரித்திருக்க ருஹானா அவன் முன்னே சென்று பேச்சின்றி நின்றாள்.

அவனும் வானுக்கு கையை உயர்த்தி மின்னிக்கொண்டிருந்த வடதுருவ நட்சத்திரத்தை அவளுக்கு சுட்டிக் காட்டினான்.

“நீ எனக்கு துருவ நட்சத்திரத்தை காட்டினதுல இருந்து நான் எப்பவும் அதை பார்ப்பேன். நான் தொலைந்து போகாம இருக்க எனக்கு அது வழிகாட்டும். சில சமயம் நான் தப்பான வழியில போயிருக்கேன். உன்னையும் அந்த இருட்டு சாலையில இழுத்திருக்கேன். ஆனா நான் எப்போ வானத்தை பார்த்தாலும் உன்னோட நட்சத்திரம் அங்க இருந்து சரியான பாதையை எனக்கு சொல்லும். அது தான் என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கு.. இந்த தருணத்திற்கு.. உன்கிட்டே….”

மனம் திறந்து அவன் வார்த்தைகளை கொட்ட, ருஹானாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பொழிந்தது.

“என்னோட எல்லா வழிகளும் உன்னை நோக்கி தான். அதை நான் புரிஞ்சிக்கிட்டேன். நீ தான் என்னோட ஒரே பாதை. இதுக்கு மேல நான் நேரத்தை வீணாக்க விரும்பல. ஆகையால் இந்த பாதையில நீ என்னோடு வருவியா, ருஹானா? எப்போதும் என்கூடவே… என்னோட மனைவியாக?” என்று கேட்ட ஆர்யன் அவளுடைய மோதிரத்தை காட்டினான்.

நெக்குருகி போனவள் “யெஸ், வருவேன்!” என்று ஆத்மார்த்தமாக சொல்ல, அவள் கையை பிடித்து மோதிரத்தை அணிவித்துவிட்ட ஆர்யன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.

ருஹானா! நான் உன்னை காதலிக்கிறேன்என்று அவள் காதில் சொன்னான். அவளும் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். அவன் நிம்மதியாக நாடியை அவள் உச்சந்தலையில் பதித்துக்கொண்டான்.

தூரத்தில் நின்று இவர்களை பார்த்துக்கொண்டிருந்த கரீமா இயலாமையில் தத்தளிக்க, அவள் பின்னால் வந்து நின்ற நஸ்ரியா “ஆர்யன் சார் எத்தனை ரொமாண்டிக்! தேவதை கதைகள்ல வர்ற மாதிரி இருக்கு! இன்ஷாஅல்லாஹ் இவங்க பிரியாம இருக்கட்டும்” என்றவள்  “ரொம்ப அழகா இருக்காங்க தானே?” என்று கரீமாவிடம் கேட்டாள்.

கரீமா திரும்பி அவளை ஒரேபார்வை தான் பார்த்தாள். நஸ்ரியா உள்ளே ஓடிவிட்டாள்.

——–

அறையில் இரவுஉடை மாற்றி வந்த ருஹானா தங்களது திருமணப்புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனிடம் கேட்டாள். “இதனால தான் என் மோதிரத்தை ஒளிச்சி வச்சீங்களா?”

“சிலமணிநேரம் மறைத்து வச்சேன், நீ காலம்பூரா போடுறதுக்காக. அது தப்பா?”

இல்லையென அவள் தலையாட்ட, அவளை நெருங்கி வந்து அவள் கையை பிடித்த ஆர்யன் “உனக்கு நினைவு இருக்கா, திருமணத்துக்கு முந்தின இரவு நான் உன்னை பார்க்க வந்தேனே, உன் கையில மருதாணி சிவந்து இருந்ததே?” என்று கேட்டான்.

“ஆமா, எனக்கு அது ஆச்சரியம் தான். ஏன்னா அப்போ எல்லாமே ஃபார்மாலிட்டி தானே?”

“நீ அந்த திருமணத்துக்கு சரின்னு சொன்னபோது இந்த பாதை எங்க முடியும்னு யோசிச்சியா?”

“என்னோட எண்ணத்துக்கு அங்க இடமே இல்லயே! என்ன நடக்குதோ அப்படியே நான் போயிட்டு இருந்தேன். எனக்கு சந்தேகங்கள் இருந்தாலும் போற பாதையில போயிட்டே இருந்தேன். விதி என் பாதையை தீர்மானித்தது.”

“நானும் அதை நம்பறேன். உன்கூட நான் சண்டை போட்டேன். ஏன்னா உன்னோட ஒளி எனக்கு பழக்கம் ஆகல, அதுக்கு எனக்கு நேரம் எடுத்தது. ஆனா நீ தளர்ந்து போகல. உன்னோட தைரியம், பொறுமை, உறுதி என்னை எனக்கே அடையாளம் காட்டுச்சி. உன்னோட அழகான பெரியகண்களில் தெரிந்த நம்பிக்கை என்னை திசை திருப்பிடுச்சி.”

ருஹானா சிரிக்க, ஆர்யன் அவள் கூந்தலை ஒதுக்கிவிட, அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

“உனக்கு எப்படி? உன் பாதையின் முடிவில என்னை போல ஒரு காட்டுமிராண்டி இருப்பான்னு நீ எதிர்பார்த்தியா?”

“இல்ல, ஆனா நீங்க அந்த முகமூடில மறைந்து இருந்தீங்க. அப்புறம் உங்க ஓட்டை தாண்டி உங்க  நிஜமுகத்தை நான் பார்த்தேன். இவான் மேல, அம்ஜத் அண்ணா மேல நீங்க காட்டும் பாசம்.. இதான் உங்களோட உண்மை முகம்னு தெரிஞ்சிகிட்டேன்.”

ஆர்யன் அவளை இன்னும் நெருங்கி அவள் கன்னத்தை வருட “ம்க்கும்… நேரமாகிடுச்சி. தூங்க போகலாம்” என்று அவள் சொல்லவும், அவனும் விலகி சோபாவிற்கு சென்றுவிட்டான்.

குனிந்து போர்வையை எடுக்கும்போது அவன் முதுகை பிடிக்க, “உங்க முதுகு இன்னும் வலிக்குதா?” என்று ருஹானா கவலையுடன் கேட்டவள் “நீங்க கட்டில்ல படுங்க” என்று அவன் கையில் இருந்த போர்வையை வாங்கினாள்.

“ம். பரவாயில்ல… இன்னைக்கு தானே கடைசி நாள்? இன்னைக்கு உன்னோட மருதாணி இரவு.

பேக்கரில நம்மோட முதல் டேட்டிங். அப்புறம் முதல் சினிமா பார்த்தோம். தோட்டத்தில உன் சம்மதத்தையும் வாங்கிட்டேன். ஒன்னு ஒன்னா எல்லாமே நிறைவா செய்திட்டோம்.

காலையில ஃபார்மாலிட்டிக்காக திருமணம் செய்த ஜோடியா இல்ல, உண்மையான தம்பதியா நாம் எழுந்துப்போம்.

இன்னும் ஒன்னே ஒன்னுதான் மீதி இருக்கு. அது நம்ம தேனிலவு! அதுவும் நாளைக்கு இரவு… இங்க… நம்ம அறையில…”

ருஹானா கையிலிருந்த போர்வையை தவறவிட்டாள்.

(தொடரும்)

Advertisement