Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 137

படம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஆர்யனால் அப்படி இருக்க முடியுமா? புன்னகையுடன் படத்தில் ஆழ்ந்திருந்த ருஹானாவை பார்த்தான். அந்தோ பரிதாபம்! அவள் இவன் பக்கம் பார்வையை திருப்பவில்லை.

எட்டி அவளுக்கு பிடித்த வால்நட் சாக்லேட்டை எடுத்தான். அதை பிரித்து பாதி உறையை மடித்து அவளிடம் நீட்டினான். “சாக்லேட் உருகிடப்போகுது!” பலவிதங்களில் சாக்லேட்டுகள் இருக்க, அதே வால்நட் சாக்லேட்டில் இன்னொன்றை தனக்கு எடுத்துக்கொண்டான்.

“சின்ன குழந்தை போல உணர வைக்கறீங்க!” என்று அவனை பார்த்து கொஞ்சிய ருஹானா, சாக்லேட்டை சுவைத்துக்கொண்டே திரையை பார்த்து கண்களை விரித்தாள். “பாருங்க, இதான் படத்தோட முக்கியமான சீன். இந்த பொண்ணு அவன் வீட்டுக்கு போகப்போறா. ஆனா அவன் அங்க இல்ல..”

“ம்ஹூம்! நீ முன்னாடியே கதை சொன்னா சுவாரஸ்யம் கெட்டுப்போகுமே!”

“அச்சோ.. ஸாரி! நான் கதையோட ஒன்றி போயிட்டேன்” என்று கண்களை சுருக்கி மன்னிப்பு கேட்க, அவன் சிரிப்புடன் பரவாயில்லை என்பது போல சாக்லேட்டை பிரித்தான்.

“ஆமா, உங்களுக்கு படம் பிடிக்குதா?” சந்தேகமாக கேட்டாள்.

“நல்லா போகுதே! ஆனா இந்த பையனுக்கு அறிவே இல்ல. அழகான பொண்ணோட மனசை உடைச்சிட்டான்.”

“சரிதான், ஆனா அதுக்கு அப்புறம் அவளோட மதிப்பு அவனுக்கு தெரிஞ்சிடும். அவளை தேடி..” என்று சொல்லிக்கொண்டே வந்தவளுக்கு திடீரென ஒன்று உறைக்க, கோபம் வந்தது. “இருங்க, நீங்க இப்போ என்ன சொன்னீங்க?”

“அவளோட இதயத்தை உடைச்சிட்டான்.” ஆர்யனுக்கு அவளின் முகமாறுதல் ஏனென்று புரியவில்லை.

“இல்ல, அதுக்கு முன்னாடி… அழகான பொண்ணா? அவளை அந்த அளவுக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா?” கோபமாக அவள் கண்களை உருட்ட, ஆர்யன் உண்மையில் பயந்து போனான்.

“ம்ம்.. அப்படி இல்ல..  அதாவது… அழகுன்னு நான் சொன்னது நல்ல பொண்ணுன்னு…” என்று சமாளித்தான். ஆனாலும் அவள் அவனை முறைத்துக்கொண்டு தான் இருந்தாள். யோசித்தவன் “நீ என்மேல பொறாமைப்படுறியா?” என உல்லாசமாக கேட்டான். அவளின் உரிமைப் பொறாமை கண்டு அவனுக்கு அத்தனை ஆனந்தம்.

“இல்லயே!” என தோள்களை குலுக்கிய ருஹானா “ஆனா அந்த பையன் கம்பீரமா இருக்கான்னு நான் சொன்னா…” என்று கோபமாக சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு ஷணத்தில் அவன் பதட்டமடைந்தான். “சொல்லாதே!”

ஆர்யன் வேகமாக கோபமாக சொன்னதை கேட்டு ருஹானாவிற்கு கோபம் போய் குறும்பு முளைத்தது. “வந்து.. அவன் திறமையை தான் பாராட்ட செய்றேன்.”

அதுவும் பொறுக்கவில்லை அவனுக்கு. “அப்படியும் செய்யாதே!” இன்னும் அவன் கோபம் தணியவில்லை எனவும் அவள் தணிந்து போனாள். “சரிதான்! சொல்லமாட்டேன்.”

அவனின் மனநிலையே மாறிவிட்டது. “ம்ஹூக்கும்… இதுக்கு திகில்படமே பார்த்திருந்திருக்கலாம்” என வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டான்.

அவனை பார்த்து அவள் ஒரு மோகன முறுவலை வீச, அவன் மனம் மெல்ல இதமடைய, சாக்லேட்டை கை மாற்றிக்கொண்டவன் ஓரக்கண்ணால் அவளை பார்த்தபடி வலதுகையை மெதுவாக அவள் தோளை சுற்றிப் போட்டான். அதற்கு மேல் எங்கே அவள் படத்தில் கவனம் செலுத்த?

அவள் அவன் முகத்தை ஏறிட, அவன் படத்தில் கவனம் போல காட்டிக்கொண்டான். இலேசாக தன்னோடு அவளை இழுக்க, அவள் மேலும் அவன் முகத்தை பார்க்க, “உனக்கு எதுவும் வேணுமா?” என்று எதும் தெரியாதது போல கேட்டான்.

அவள் வெட்கத்துடன் இல்லையென தலை அசைக்க, தைரியம் வரப்பெற்றவன் நெருக்கமாக அணைத்தான். அவளும் அவன் தோளில் தலையை சாய்த்துக்கொண்டாள். மகிழ்ச்சியில் மனம் குத்தாட்டம் போட,  அவள் தலைமேல் கன்னத்தை பதித்தான்.

கைகளில் இருக்கும் சாக்லேட் கரைய, அவர்களும் இனிப்பாக உருகிக்கொண்டு இருந்தனர்.

———-

சிறையில் ஜவேரியாவின் சித்ரவதைகள் அத்துமீற, கழிவறையை சுத்தம் செய்துவிட்டு வந்த சல்மா குலாமின் போனை பிடுங்கி கரீமாவை அழைத்து நாளையே அவளை அங்கிருந்து விடுவிக்க வேண்டுமென மிரட்டல் விடுத்தாள்.

———

கண்களை மூடி அவள் கூந்தலின் வாசனையை உள்ளே இழுத்து சேமித்து வைத்துக்கொண்ட ஆர்யன் அவளுடன் ஒட்டிக் கொள்ள, அவன் இதயம் ஜிவ்வென வானில் உயர்ந்து பறந்தது.

அவள் மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்க, வலதுகை அவளை அணைத்திருக்க, இடதுகையால் அவள் நாடியை பிடித்து தூக்கி பார்த்தவன் அவளின் கண்ணீரைக் கண்டு “நீ அழறியா என்ன?” என்று வியப்பாக கேட்டான்.

தலையை ஆட்டியவள் “சோகமான முடிவு!” என்றாள். அவள் கூந்தலை ஒதுக்கி கண்ணீரை துடைத்துவிட்டவன் “இது வெறும் சினிமா தானே? இதுக்கு போய் அழுவாங்களா?” என்றான். படத்தின் நாயகன் மீது இவன் பொறாமைப்பட்டதை மறந்துவிட்டானோ?

“ஆனா பார்க்க கஷ்டமா இருக்கு. அவ இறந்திட்டாளே! அவங்க ஒன்னு சேரமுடியாது” என்று வருத்தமாக சொன்னவளின் கன்னம் வருடியவன் “அவங்க சேர்ந்திட்டா அது உண்மை காதல் கிடையாது” என்று சொல்ல, “இப்படித்தான் நீங்க நினைக்கறீங்களா? காதலர்கள் இணைந்திட்டா காதல் இல்லாம போகுமா?” எனக் கேட்டாள்.

“அது சினிமால தான் அப்படி நடக்கும். ஆனா நீயும் நானும் உண்மை” என்று அவன் சொல்ல, அவள் முகத்தில் மெல்லிய புன்னகை உதயமாக ஆமென்று தலையாட்டினாள்.

சோக புன்னகையிலும் அவளின் அழகு அவன் உள்ளத்தை கொள்ளை கொண்டது. அவனையறியாமல் அவளின் இதழில் முத்தமிட குனிந்தான். அவன் எண்ணம் புரிந்துகொண்ட ருஹானா “க்கும்..“ என சட்டென கணினியை அவன் மடிக்கு மாற்றி விலகினாள்.

அவளின் தயக்கம் புரிந்த ஆர்யனும் “நீ இவானை பார்க்க போகணுமா?” என்று அவளுக்கு முந்திக்கொண்டு கேட்க, “ஆமா, வந்து… அவனுக்கு ஏதாவது தேவைப்படலாம்” என்று எழுந்து கொண்டாள்.

“சரி, அவரை காக்க வைக்காதே! நீ வந்ததுக்கு நன்றி! இனிமையா பொழுது கழிந்தது!” என்று அவனும் எழுந்து கொண்டான்.

“எனக்கும் அப்படித்தான்.”

“உனக்கு நேரம் இருந்தா, உன் அக்கா மகனை கவனித்ததுக்கு அப்புறம்… நாம இன்னொரு படம் பார்க்கலாம். என்ன சொல்றே?” அடுத்த வாய்ப்புக்கு தூண்டில் போட்டான்.

“சரி, நான் எப்படின்னு பார்க்கறேன்” என்று சொல்லி வெளியே வந்த ருஹானா துள்ளிக்குதிக்கும் நெஞ்சை பிடித்துக்கொண்டாள்.

“இதுக்கு எனக்கு மாரடைப்பு வரலனா எதிர்காலத்துல எப்பவுமே வராது” என்று பயமும், நாணமும் கலந்து சொல்லிக்கொண்டாள்.

———

சமையலறையில் பழச்சாறு தயாரித்து கொண்டிருந்த ருஹானாவிடம் பரபரப்புடன் வந்த கரீமா “ருஹானா டியர்! மருத்துவமனைல இருந்து போன் செய்திருந்தாங்க. தடுப்பூசி போட்டதுக்கு அப்புறம் இவான் ஒரு சத்து மாத்திரை சாப்பிடணுமாம், அவன் தூங்க போகறதுக்கு முன்ன. உன் எண்ணும், ஆர்யன் எண்ணும் அவங்களுக்கு கிடைக்கலயாம். அதான் மாளிகைக்கு போன் செய்து சொன்னாங்க” என்றாள்.

“அப்படியா கரீமா மேம்? ஆனா நாங்க போனபோது இதை பத்தி அவங்க ஒன்னும் சொல்லலயே!” என்று ருஹானா சந்தேகமாக கேட்க, கரீமா “அதுக்கு அப்புறம் ரிப்போர்ட் பார்த்துட்டு தேவைன்னு நினைச்சிருப்பாங்க. இந்தா! நான் அதோட பேரை எழுதி வச்சிருக்கேன்” என்று ஒரு துண்டு பேப்பரை நீட்டினாள்.

“சரி, நான் செக்யூரிட்டி கிட்ட கொடுத்து…” என்று கிளம்பிய ருஹானாவை தடுத்த கரீமா “ருஹானா டியர்! எனக்கும் அப்படியே ஒரு உதவி வேணும். எனக்கு ஏற்பட்ட கொடுமையால நான் அமைதியில்லாம தவிக்கிறேன். என்னால தூங்கவே முடியல. தூங்குறதுக்காக எனக்கும் மருந்து தேவைப்படுது. வேற யார்கிட்டேயும் அதை கேட்க எனக்கு வெட்கமா இருக்கு. நீ போனா எனக்கு அதையும் வாங்கி தருவியா?” என்று கேட்டாள்.

இரக்கப்பட்ட ருஹானா அவளின் சதிவலையில் விழுந்தாள். “சரி கரீமா மேம்! நானே போயிட்டு வரேன்!”

“நன்றி ருஹானா டியர்! இது ஆர்யனுக்கும் அம்ஜத்க்கும் தெரிய வேண்டாம். வீணா என்னை நினைச்சி வருத்தப்படுவாங்க” என்று அவள் கபடமாக சொல்ல, அது புரியாத ருஹானா “நான் சொல்லல. நீங்க கவலைப்படாதீங்க. அப்புறம்.. நீங்க வேற எதையும் யோசிக்காதீங்க. உங்களுக்கு எந்த ஆபத்தும் வராம அவர் காப்பாத்துவார்” என்று கள்ளமில்லாமல் கரீமாவிற்கு ஆறுதல் சொல்லி சென்றாள்.

கரீமா போனில் “அவ வெளிய வர்றா, வேலையை கச்சிதமா முடிங்க” என்று கொலையாளிக்கு சமிக்ஞை செய்தாள்.

——–

மாளிகையின் அலுவலஅறையில் அமர்ந்திருந்த ஆர்யன் கிடைத்த இடைவெளியில் வேகமாக வேலைகளை முடித்துக்கொண்டிருந்தான். பக்கவாட்டு மேசையில் ஒரு ஆவணத்தை வைக்க திரும்பியவன் அவன் தோளில் ருஹானாவின் ஒரு நீண்டமுடி ஒட்டிக்கொண்டிருப்பதை பார்த்தான்.

அதை கையில் எடுத்து தடவியவனுக்கு ருஹானா அவன் தோள்சாய்ந்ததும், அவன் முத்தமிட முயன்றதும் நினைவிலாட, முகத்தில் புன்னகை பூத்தது. அதன்பின் எங்கே வேலையை செய்ய? இனிய தருணத்தின் நினைவிற்காக அதை ஒரு சிறிய பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தியவன் அலைபேசியை கையில் எடுத்தான்.

“எங்க இருக்கே? ஏன் இங்க வரல? இவான் உன்னை போகவிடலயா?”

“நானே உங்களுக்கு போன் செய்யணும்னு இருந்தேன். ஹாஸ்பிடல்ல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க, இவானுக்கு ஒரு மாத்திரை கொடுக்கணும்னு. கடை மூடுறதுக்குள்ள அதை வாங்கிடலாம்னு போயிட்டு இருக்கேன்.”

“அதுக்கு ஏன் நீ போனே? ஜாஃபர்ட்ட சொல்லியிருந்தா யாரையாவது..”

“இல்ல, எனக்கு காற்றாட நடக்கணும் போல இருந்தது. அதான் வந்தேன். இன்னும் அரைமணிநேரத்துல திரும்பிடுவேன்.”

“எனக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ வர்றதுக்குள்ள நானும் அதை முடிச்சிடுறேன். ஆனா நீ சீக்கிரம் வா! லேட்டாக்கிடாதே!”

——–

“ஹல்லோ! மருந்து கடைக்குள்ள போயிருக்கா, கரீமா மேடம்! திரும்பி வரும்போது அவ கதையை முடிச்சிடுறேன்.”

“முழுசா முடிச்சிடு. ஹாஸ்பிடல் விவகாரம்லாம் வேண்டாம். அதுக்கு அப்புறம் என்னோட தொலைபேசி தொடர்புகளை உன் போன்ல இருந்து அழிச்சிடு.”

மருந்து வாங்கிக்கொண்டு திரும்பிய ருஹானா அங்கே ஒரு பெண்ணிடம் மலர்கொத்து ஒன்றையும் வாங்கிக்கொண்டு நடைபாதையில் நடந்தாள். அவள் சாலையில் மறுபக்கம் செல்வதை எதிர்பார்த்தபடி கார் ஒன்று அவளை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

நடைபாதையிலிருந்து இறங்கி அவள் சாலையை கடக்கும் சமயம் அந்த கார் வேகமெடுத்து அவளை மோதுவதற்கு வர, பக்கவாட்டு சந்தில் இருந்து வளைந்து வந்த கருப்பு டொயோட்டா அவள் முன்னே நின்றது. மோத வந்த கார் சுதாரித்து அவளை விட்டு விலகி கடந்து சென்றுவிட்டது.

காரிலிருந்து இறங்கிய ஆர்யனை பார்த்து ருஹானா புன்சிரிப்புடன் “வேலை இருக்குன்னு சொன்னீங்க, இங்க வந்து நிற்கறீங்க?” என்றாள்.

“என் வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சி. அப்படியே பார்த்தா மாளிகையே வெறுமையா இருக்கு. அதான் உன்னை வந்து கூட்டிட்டு போகலாமேன்னு வந்துட்டேன்” என்றபடி அவளுக்கு கார் கதவை திறந்துவிட்டு தானும் ஏறிக்கொண்டான்.

அவள் பெருமிதமாக சிரிக்க, அவன் “அப்புறம் இன்னொரு படம் பார்க்கலாம்னு நீ சொன்னே தானே? உன் நேரத்தை மிச்சமாக்கலாம்னு உன்னை கூட்டிப்போக வந்துட்டேன்” என்றான்.

அவள் எங்கே சொன்னாள்? இவன் தானே ஆசைப்பட்டு கேட்டான்?

“என் அக்கா மகன் எப்படிப்பட்டவன்னு உங்களுக்கே தெரியும். அவனுக்கு கோபமூட்டக்கூடாது. ரெண்டு நாளாவே அவனுக்கு சந்தேகம் வந்துடுச்சி. சூழ்நிலை சரியா இருந்தா நாம் படம் பார்க்கலாம்.” சிரிக்காமல் சொன்னாள்.

“சரி, வீட்டுக்கு போயிட்டு அவர் மனநிலை எப்படி இருக்குன்னு பாரு. அவர் உன்னை திட்டும்படி நான் நடந்துக்க மாட்டேன்” என்ற ஆர்யன் மலர்ந்த முகத்துடன் காரை வேகமாக செலுத்தினான்.

———

Advertisement