Advertisement

“எல்லா நிகழ்ச்சியும் ரத்து செய், ரஷீத்! அதைவிட அதிக முக்கியமான வேலை எனக்கு இருக்கு. ஆனால்லாம் இல்ல. ஒரு வாரம் எல்லாத்தையும் தள்ளிப் போடு” என்று சொல்லி அவன் போனை அடைக்க, அதை கேட்டுக்கொண்டே போர்வையை மடித்துக்கொண்டு இருந்த ருஹானா புன்னகைத்தாள்.

“அப்போ இன்னைக்கும் நீங்க ரெண்டுபேரும் வெளிய போறீங்களா?” அவள் சந்தேகமாக கேட்கவும் அவனுக்கு பகீர் என்றது.

“எனக்கு மெசேஜ் அனுப்பறேன்னு சொல்லியிருக்கா. அவ வரமாட்டான்னு நீ நினைக்கிறியா? அவ வருவா தானே?”

“தெரியலயே! செய்தி தானே அனுப்பறேன்னு சொன்னா? உறுதியா வருவேன்னு சொல்லலயே?” என்று அவள் குறும்புடன் சொல்ல, ஆர்யன் பாவனைகளை கைவிட்டு நேரிடையாகவே கேட்டான். “நாம இன்னைக்கு சந்திப்போமா, இல்லயா?”

குனிந்து முடியை சரிசெய்துகொண்டே “இவான் எழுந்துருப்பான்” என்று சொல்லி வெளியே சென்றுவிட்டாள்.

குழப்பமான ஆர்யன் ‘என்ன, இத்தனை தீவிரமா விளையாடுறா?’ என்று கேட்டுக்கொண்டான்.

———–

“ஹலோ! எல்லாம் தயாரா? ஆள் ஏற்பாடு செய்திட்டியா?”

“ஆமா கரீமா மேடம்! விபத்து போல செய்திடுவான். போலீஸ்ல பிடிபட்டாலும் விபத்தை அவன் தான் செய்தான்னு சொல்வான். நம்மள காட்டி கொடுக்க மாட்டான்.”

“சரி, நான் அவளை வெளிய அனுப்பறேன். நீங்க காரியத்தை முடிங்க.”

———-

“சித்திக்கு உதவி செய்ற அளவுக்கு என் செல்லம் வளர்ந்திட்டானே!” என்று ருஹானா பாராட்ட, உணவு மேசையில் ஒவ்வொன்றாக இவான் கொண்டு போய் வைத்தான்.

“எப்படி இருக்கே?” ஆர்யனின் குறுஞ்செய்தி ருஹானாவிற்கு வந்து விழ, பழம் வெட்டிக்கொண்டு இருந்தவள் கத்தியை கீழே வைத்துவிட்டு போனை எடுத்தாள்.

‘முன்ன விட நல்லா இருக்கேன்’ என மனதில் நினைத்தவள் “குட். நீங்க?” என்று அனுப்பினாள்.

அலுவலக அறையில் அலைபேசியை பதட்டமாக பார்த்தபடி இருந்த ஆர்யன் அதை வேகமாக எடுத்தான். “நானும்! அப்புறம் நாம இன்னைக்கு பார்க்கலாமா? நீ ஒன்னும் தெளிவா சொல்லலயே?”

“எங்க வீட்டு பெரியவர் என்கூட இருக்கார். நாம மெசேஜ் அனுப்பிக்கறோம்ன்னு அவருக்கு தெரிஞ்சா வம்பாகிடும். எப்படியாவது அவரை ஏமாத்திட்டு நான் வரப் பார்க்கறேன்.”

“அப்போ உன் தகவலுக்காக நான் காத்திருக்கேன்” என்று ஆர்யன் முகத்தில் சிரிப்புடன் பதில் அனுப்பினான்.

ருஹானாவின் முகத்திலும் அதே சிரிப்பை கண்ட இவான், குக்கர் விசில் அடிப்பது கூட உணராமல் சித்தி போனில் மூழ்கி இருப்பது கண்டு யோசித்தான்.

“சித்தி! சித்தி! முட்டை அதிகமா வெந்துட போகுது.”

ஓடிவந்து அடுப்பை நிறுத்திய ருஹானா “என்னோட சிந்தனை எங்கயோ போய்டுச்சி, கண்ணே!” என்றவள் தண்ணீரில் குக்கரை வைத்தாள்.

இவானை சாப்பிடவைக்கும்போது மீண்டும் அவள் அலைபேசியில் செய்தி வந்த ஒலி.

“ரெண்டு மணி ஷோ சினிமாக்கு ஏற்பாடு செய்திட்டேன்.”

“சரி, நான் வந்துடறேன்.”

கன்னங்கள் ஆப்பிளை போல பளபளக்கும் ருஹானாவை பார்த்து இவான் “சித்தி! நீங்க சந்தோசமா இருக்கீங்களா?” எனக் கேட்டான்.

“ஆமா, அன்பே! ரொம்ப!”

“நீங்க யாரு கூட சாட்டிங் செய்றீங்க? சித்தப்பா கூடவா?” என்று அவன் கேட்க அவளால் பொய் சொல்ல முடியவில்லை.

“சித்தப்பா மேல தானே இருக்கார்? நேர்லயே போய் பேச வேண்டியது தானே?”

“வந்து.. முக்கியமா ஒன்னு கேட்டார். அதுக்கு பதில் சொன்னேன். அவ்வளவு தான் கண்ணே!”

அப்போது கரீமா உள்ளே வர “தேநீர் வேணுமா கரீமா மேம்?” என கேட்டாள்.

“வேண்டாம், ருஹானா டியர்! வீட்டுக்குள்ளயே அடைப்பட்டு எனக்கு போரடிக்குது. என்கூட வெளிய வாக்கிங் வர்றீயா?”

“எனக்கும் ஆசை தான். ஆனா இவானோட நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கு. அதனால நான் அதிகமா வெளிய போக கூடாதே!”

“ஒஹ்! நான் மறந்திட்டேன் டியர்! நான் சாராவை கூட்டிட்டு போறேன்.”

———–

அறையின் முன் நின்று கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்ட ருஹானா உடையையும் தலைமுடியையும் சரி செய்து கொண்டாள். ஆழ மூச்சை இழுத்து விட்டவள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அலுவலக அறை சோபாவில் அவளுக்காக காத்திருந்த ஆர்யன், அவளை பார்த்ததும் சந்தோசமாக எழுந்தான். “அப்பாடா! கோபக்கார பையன்கிட்ட இருந்து தப்பிச்சி வந்திட்டியா?”

“ஆமா, கஷ்டம் தான். கதை சொல்லி அவரை தூங்க வச்சிட்டு ஓடி வந்துட்டேன். நாம என்ன படம் பார்க்க போறோம்?” என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.

“திகில் படம் பார்க்கலாம்னு நினைக்கறேன்.”

“எனக்கு அந்த மாதிரி படங்கள் பார்க்க பயம்” என்று அவள் முகம் சுருக்கினாள்.

“நான் கூட இருக்கும்போது உனக்கு என்ன பயம்?”

“ஆனாலும் திகில் படம் வேணாம். நாம வேற பார்க்கலாம்” என்று அவனை நெருங்கி அமர்ந்து மடிக்கணினியில் அவள் தேட, அவளின் அண்மையும், நறுமணமும் மறைந்திருந்த அவனின் உணர்வுகளை தட்டி எழுப்பின.

அவனின் ஆழமான பார்வையை உணர்ந்த ருஹானாவின் கை நடுங்க, அவள் கையை பிடித்துக்கொண்டான். “ஏன் உன் கை சில்லுனு இருக்கு?” என்று அவன் கேட்க, “வெளிய பனி” என்றவள் பேச்சை மாற்றினாள்.

“பழைய படம் பார்க்கலாமா? ஆனா உங்களுக்கு போரடிக்கும்னா வேற படம்…”

“அதெல்லாம் இல்ல. நீ என்கூட இருக்கும்போது எனக்கு போரடிக்குமா, என்ன?”

அவன் கேள்வியில் நெகிழ்ந்தவள் கவனத்தை கணினியில் பதித்தாள். “இதோ! இது ரொம்ப நல்ல காதல் படம். மறுபடியும் நான் உங்களோட பார்க்க போறேன்” என்று அவள் சொல்ல, “காதல் படமா?” என்று அவன் மீண்டும் கேட்க, அவள் ஆமென சொல்லி தலையை குனிந்து கொண்டாள்.

“ப்ரஜெக்டர் வேலை செய்யல. நாம லேப்டாப்லயே பார்க்கலாமா?”

“பரவால்ல, நாம இப்படியே பார்க்கலாம்” என்று அவள் சொல்ல, “இரு, ஒரு நிமிடம்!” என்று சொல்லி ஆர்யன் போனில் பேசி வைக்க, ஜாஃபர் ஒரு ட்ராலியை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான்.

பாப்கார்ன், சாக்லேட், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் என எல்லாம் அதில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவள் ஜாஃபருக்கு நன்றி சொல்ல, அவன் “இனிய உணவு” என சொல்லி வெளியே சென்றான்.

“சினிமா தியேட்டர்ல கிடைக்கற ஐஸ்க்ரீம் இது. நீங்க எல்லாத்தையும் யோசித்து செய்திருக்கீங்க! தியேட்டர்ல படம் பார்க்கற மாதிரியே இருக்கு” என்று ஆர்யனை அவள் அதிசயமாக பார்க்க, ‘உனக்காக இது கூடவா நான் செய்ய மாட்டேன்?’ என்பது போல அவன் அவளை பார்த்தான்.

ருஹானா குளிர் பானங்களையும் பாப்கார்ன் கிண்ணத்தையும் பக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டாள். “நான் ரெடி!”

“ஆரம்பிக்கவா?” என்று கேட்டு ஆர்யன் இயக்கிவிட்டு அவள் மேல் உரசும்படி நெருங்கி அமர்ந்தான்.

தொட்டுக்கொண்டு இருக்கும் தோள்களை சங்கடமாக பார்த்த ருஹானா “ம்க்கும்…” என குரலை மீட்டுக்கொண்டுவந்து “சத்தம் குறைவா கேட்குதே!” என்றாள்.

“நான் என்னன்னு பார்க்கறேன். ஸ்பீக்கர் வேலை செய்யல போல” என்று சொன்ன ஆர்யன் கணினியை பரபரப்பாக ஆராய்ந்து பார்த்தான். அவன் முயற்சி தோல்வியில் முடிய, அவன் முகத்தில் சோகத்தை கண்ட ருஹானா “இருக்கட்டும், விடுங்க! இப்படியே பார்க்கலாம்” என்றாள்.

பக்கத்திலிருந்த காதணி பாடியை எடுத்த ஆர்யன் “இதுல கேட்கலாம். ஆனா ஒரே ஒரு ஹெட்போன் தான் இருக்கு” என்று சொல்ல, ருஹானா “நல்லது தான், இதுல கேட்டுக்கலாம்” என்று சிரிப்புடன் சொன்னாள்.

இழந்த மகிழ்ச்சியை திரும்ப பெற்ற ஆர்யன் “இந்த தொழில்நுட்ப கோளாறுகளுக்காக நான் வருத்தப்படறேன். நான் முன்னமே எல்லாம் சரிபார்த்திருக்கணும்” என்றான்.

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, மகிழ்ச்சி தான்! நாம சேர்ந்து இருக்கறது தான் முக்கியம்” என்று ருஹானா அவன் மகிழ்ச்சியை மேலும் கூட்ட, “ஆமா, அதான் முக்கியம்!” என்றவன் மடிக்கணினியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான்.

ஒரு தலையணையை அவன் முதுகுக்கு பின் வைக்க, ருஹானா “உங்க முதுகு வலிக்குதா?” என வருத்தப்பட்டாள்.

“அது பத்தி கவலைப்படாதே! ரெண்டு நாள்ல சரியாகிடும். அங்க பாரு, படத்தை மிஸ் செய்திடாதே!”

இருவரும் ஆளுக்கொரு காதில் காதணி பாடிகளை மாட்டிக்கொள்ள, அது அவர்களை மேலும் ஒன்று சேர்த்து நெருக்கியது. அந்த இன்ப அவஸ்தை தாளாமல் அவள் பாப்கார்னை எடுக்கப் போக, அவனும் அதே நேரத்தில் கிண்ணத்தில் கைவைக்க அவள் கையை எடுத்துக் கொண்டாள்.

பாப்கார்னை எடுத்த ஆர்யன் ஒன்றை அவளுக்கு ஊட்டிவிட்டான். அவளும் வெட்கத்துடன் அதை வாங்கிக் கொண்டாள். அவள் அவனை நாணத்துடன் பார்க்க, அவன் அவளை காதலாக பார்க்க, அங்கே ஓடும் சினிமா படத்தை பார்ப்பது யார்?

(தொடரும்)

Advertisement