Advertisement

அப்போது அங்கே வந்த ஜாஃபர் ஒரு இனிப்பு பலகாரத்தை இருவர் முன்னும் வைத்துவிட்டு “சார்! நீங்க சொன்னபடி” என்று சொல்லி சென்றான்.

“சாப்பிட்டு பாரு!”

ஒரு கரண்டி வாயில் வைத்தவள் கண்களை மூடி அனுபவித்தாள். “அதே சுவை! எங்க அப்பா கூட போய் சாப்பிட்டது நினைவு வருது. ரொம்ப சந்தோசமா இருக்கு.”

“இனிய உணவு!”

“என்னோட அம்மா இதை சாப்பிட்டதும் அவங்க முகம் மலர்ந்ததை பார்த்து அப்பா முடிவு செய்தாராம், இப்படி சின்ன விஷயத்துக்கு கூட மகிழ்ச்சியாகற இந்த பெண் தான் என் மனைவி!”

“அப்போ நீ உன்னோட வாழ்க்கையில எடுத்த முடிவுகள்ல எது சிறந்ததுன்னு நினைக்கறே?” என்று கேட்டுவிட்ட ஆர்யன், ருஹானா யோசிப்பதை பார்த்து “நான் தீவிரமான கேள்வி கேட்டுட்டேன்னு நினைக்கறேன்” என்றான்.

அவனை திருமணம் செய்ய முடிவெடுத்தது தான் சிறந்த முடிவு என்று அவள் சொல்வாள் என்ற ஏதிர்பார்ப்போடு ஆர்யன் அவசரப்பட்டான்.

“இல்ல, ஆனா முதல் டேட்டிங்ல இந்த ஆழமான கேள்வி அதிகப்படின்னு எனக்கு தோணுது.”

“சரி தான், உனக்கு எந்த இசை பிடிக்கும்?”

“எனக்கு எது கேட்க நல்லா இருக்கோ அது எல்லாம் பிடிக்கும். பறவையோட குரல், மழை சத்தம்… அது கூட எனக்கு இசை தான்.”

பதில் சொல்லிவிட்டு அவள் சாப்பிடுவதில் கவனம் செலுத்த, சோகமான ஆர்யன் “உனக்கு எதும் என்கிட்ட கேட்க இல்லயா?” என்றான்.

“சரி, நீங்க எப்போ ரொம்ப சந்தோசமா இருப்பீங்க?”

“நான் அன்பு வச்சிருக்கவங்க கூட இருக்கும்போது…” என்றவன், “அப்புறம்.. சொல்லு. உனக்கு என்ன நிறம் பிடிக்கும்?” என்று கேட்டான்.

“நீலம். ஏன்னா அது வானம், கடல், நம்பிக்கையோட நிறம். உங்களை நான் கேட்கவே வேணாம், உங்களுக்கு என்ன நிறம் பிடிக்கும்னு?” என்று சொல்லவும் அவளுடன் சேர்ந்து ஆர்யனும் சிரித்தான்.

“கருப்பு!” இருவரும் சேர்ந்தே கூறினார்கள்.

“நீங்க சாப்பிடவே இல்லயே?”

“உனக்கே தெரிஞ்சிருக்கும், எனக்கு இனிப்பு அவ்வளவா பிடிக்காதுன்னு.”

“லேசா ருசி பாருங்களேன்! நம்ம முதல் சந்திப்பு தானே இது!”

“நல்லா இருக்கு” என்று ஒரு கரண்டி மட்டுமே சாப்பிட்ட ஆர்யன் “உனக்கு எப்படிப்பட்ட சினிமா பிடிக்கும்? முதல்ல உனக்கு சினிமா பார்க்க பிடிக்குமா, பிடிக்காதா?” என வினவினான்.

“எனக்கு புராதனம் எல்லாமே பிடிக்கும். இந்த பேக்கரி.. சினிமாவும் அப்படித்தான். பழைய காதல் படங்களை விரும்பி பார்ப்பேன். அதும் கருப்பு வெள்ளை படம்னா அதோட சிறப்பே வேற! உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்?”

கண்கள் பளபளக்க முகம் மின்ன அவள் பேசும் அழகில் தொலைந்திருந்த ஆர்யன் அவள் கேள்விக்கு பதிலையும் தொலைத்துவிட்டான். அவனின் மயக்கத்தில் பெருமிதமாக உணர்ந்த அவள் புன்னகையுடன் இனிப்பை சுவைத்தாள்.

———–

மேசையில் கவிழ்ந்து கிடந்த கரீமாவை அம்ஜத் காபி குடிக்க அழைக்க, கரீமா கோபத்துடன் எரிந்து விழுந்தாள். “உன் அமைதி என்னால் கெடவேண்டாம்” என்று அம்ஜத் அகன்றுவிட, போனை எடுத்த கரீமா தன் கையாளுக்கு அழைத்து அவன் செய்யவேண்டியதை ஆணையிட்டாள்.

“காரை கொண்டு போய் அவ மேல வேகமா ஒரே மோதல் தான். விபத்து போல தெரியணும்.”

———

“நான் மகிழ்ச்சியா…” என்று ஆர்யன் தொடங்க, ருஹானா “நன்றி, இங்க என்னை கூட்டிட்டு வந்ததுக்கு! எனக்கு மிக மகிழ்ச்சி!” என்றாள்.

“இல்ல, இல்ல! நான் தான் உனக்கு நன்றி சொல்லணும். உன்னோட வாழ்க்கையில மறுபடியும் என்னை சேர்த்துக்கிட்டதுக்கு.. எனக்கு இன்னொரு வாய்ப்பு தந்ததுக்கு” என்று சொன்ன ஆர்யன் மேசை மீது இருந்த அவளின் இருகைகளையும் பிடித்துக்கொண்டான்.

தயக்கங்கள் அத்தனையும் விலக, உரிமையுடன் ஆர்யன் சொந்தமாக ருஹானாவின் கைகளை பற்ற, அவளும் அவன் விரல்களோடு இணைத்துக் கொண்டாள். இருவரும் காலம் நேரம் மறந்து கண்களால் கவிதை எழுதலானர்.

———–

சிறையின் கொடுமை தாங்க முடியாமல் உடனே வெளியே கொண்டுவர வேண்டுமென சல்மா அக்காவிற்கு போன் செய்து நச்சரிக்க, ருஹானாவை மாளிகையை விட்டு தனியாக வெளியே அனுப்ப என்ன வழி என்று கரீமா தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தாள்.

———-

“லேட்டாகிடுச்சு, நான் கிளம்பறேன்!”

“நான் உன் வீடு வரை வரேன்!”

“இல்ல, என் அக்கா மகன் இவான் உங்களை பார்த்துட்டான்னா கஷ்டமாகிடும். அவன் ரொம்ப கண்டிப்பானவன். நீங்க யார்னு அவன் கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?”

“அதை நான் பார்த்துக்கறேன். நம்ம உறவு வளர எதையும் நான் எதிர்கொள்வேன். உன்னோட அக்கா மகன் அபாயமானவன் தான், எனக்கு தெரியும். ஆனா நான் அவனுக்கு பயப்பட மாட்டேன்.”

சிரிப்பை மறைத்துக்கொண்டு ருஹானா எழுந்து கொள்ள, ஆர்யனும் எழுந்து கொண்டு அவளுக்கு ஒரு சிறிய பெட்டியை கொடுத்தான். “என்ன இது?”

“என்னோட சின்ன பரிசு. நல்லவேளை உனக்கு பழைய படம் பிடிக்குது. இதும் அது தொடர்பானது தான். தற்செயலாக நான் வாங்கினது நல்லதா போச்சி” என்று அவன் சொல்ல, பெட்டியை திறந்த ருஹானா வியப்பாக பார்த்தாள்.

ஒரு பழையகால கிராம போன் ஒலிபெருக்கியுடன் இசைக்க, அவள் அதை ஆவலாக பார்க்க, அவன் அவளை ஆசையாக பார்த்தான்.

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நன்றி!” என்றவள் அதற்கு சாவி கொடுக்க அது மீண்டும் இசை பாடியது.

“வா, உனக்கு நேரமாச்சே!” என ஆர்யன் அழைக்க, அவள் அதை பெட்டியில் வைத்து மூடினாள். அவள் கையை பிடித்துக்கொண்ட ஆர்யன் மாளிகையின் அந்தப் புறத்தில் இருந்து அவர்களின் அறைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்தான்.

அவன் கையிலிருந்து தன் கையை உருவிக்கொண்ட ருஹானா “நம்ம ஏரியாவுக்கு வந்துட்டோம். வேற யாரும் பார்க்கும்முன்ன வீட்டுக்கு போய்டலாம்” என்றாள்.

“நாளைக்கு நாம சந்திப்போமா?” மிக்க ஆவலோடு அவன் கேட்டான்.

“சிரமம் தான். இவான் பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கேனே! முடிந்தா நான் மெசேஜ் செய்றேன்.”

“சரி, நீ கிளம்பு! லேட்டாகப் போகுது” என அவன் சொல்ல, அவள் அறைக்குள் சென்றாள்.

கீழே சென்ற ஆர்யன் பேக்கரி ஏற்பாடுகள் குறித்து ஜாஃபருக்கும், ரஷீத்திற்கும் நன்றி தெரிவித்தான்.

———–

இரவு உடை மாற்றி கட்டிலில் வந்து அமர்ந்த ருஹானா கிராமபோனின் சாவியை திருகி அதை ஒலிக்க விட்டு மனநிறைவோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

கதவை தட்டிவிட்டு ஆர்யன் உள்ளே வர, “வந்துட்டீங்களா? எப்படி போச்சி உங்க நாள்?” என்று கேட்டாள்.

“அருமையா இருந்தது. நாங்க மகிழ்வா நேரம் செலவிட்டோம். அவளுக்கும் சந்தோசமா இருந்திருக்கும்னு தான் நினைக்கறேன்” என்று சொல்லியபடியே மேல்கோட்டை கழட்டிவிட்டு சோபாவில் அமர்ந்தான். “உன்னோட பொழுது?”

“பரவாயில்ல!” என அவள் சொல்லவும் அவனுக்கு ஏமாற்றமாகிவிட்டது. அதே வேளை மோசமாக இல்லையே என்ற நிம்மதியும் ஏற்பட்டது.

“அவ்வளவு தானா?” என்று கேட்டவன் “அப்புறம்?” எனவும் கேட்டான்.

அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் “அதாவது.. முதல் சந்திப்புலயே அவரை பற்றி எல்லாம் தெரியாது, இல்லயா? இன்னும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டா தான் எதுவும் சொல்ல முடியும்” என்றாள்.

“ம்.. அப்போ திரும்பவும் சந்திக்க போறே தானே?”

தானே மாட்டிக்கொண்ட ருஹானா கண்களை சுழற்றினாள். “வந்து.. அப்படித்தான் நினைக்கறேன்.”

“அப்போ அவனை உனக்கு பிடிச்சிருக்கு, தானே? இல்லனா திரும்ப அவனை பார்க்க நினைக்க மாட்டே, இல்லயா?”

“ஆமா, எனக்கு பிடிச்சிருக்கு. என்கிட்டே கனிவா நடந்துக்கிட்டார். எனக்கு பிடிச்ச பேக்கரிக்கு கூட்டிட்டு போனார். இந்த பரிசு கொடுத்தார்” என்றெல்லாம் அவள் சொல்ல, இப்போது தான் ஆர்யன் முகம் மலர்ந்தது.

“நல்லது. நல்ல பையனா தான் தெரியுது. நீ அடிக்கடி பார்த்து பழகலாம். அவனும் உன்னை போலவே நினைக்கலாம்.”

“இருக்கலாம்” என்றவள் மேலும் பேச்சை வளர்ப்பது அபாயம் என உணர்ந்து “எனக்கு தூக்கம் வருது” என்று சொல்லி படுத்துக்கொண்டாள்.

———

காலையில் வழக்கம்போலவே தூங்கும் அவள் முகம் பார்த்தே எழுந்த ஆர்யன் “உஃப்!” என்று முதுகை பிடிக்க, அந்த சத்தம் கேட்டு எழுந்த ருஹானா பதறிப்போய் அவன் அருகே வந்தாள். “என்னாச்சு? முதுகு பிடிச்சிக்கிச்சா?”

“ஏதோ தப்பா திரும்பிட்டேன் போல.”

“சோபால படுக்கறதால தான் இப்படி. நீங்க இன்னைல இருந்து கட்டில்ல படுங்க. நான் சோபால படுத்துக்கறேன்.”

“பெருசா ஒன்னும் இல்ல, விடு.”

போனில் ரஷீத் அழைக்க, ருஹானா போனை கொண்டுவந்து அவனிடம் தந்தாள்.

Advertisement