Advertisement

“நஸ்ரியா! நீ வந்ததை நான் கவனிக்கலயே!”

“நான் கவனிச்சேனே! நீ புது அழகோட ஜொலிக்கறே! முகத்துல சந்தோசம் மின்னுது.”

“வானிலை நல்லா இருக்கே, அதனால இருக்கலாம்.”

“போயேன்! ஆர்யன் சார் உன்னை மகிழ்வா வச்சிருக்கார், அதான் காரணம்.”

“அப்படியா?” என அவள் வெட்கப்பட, அவளின் வெட்கத்தை ரசித்தபடி ஆர்யன் கதவருகே வந்து நின்றான், எப்போதும் போல.

“ஆமா, எனக்கு உங்களை பார்த்தா பழைய காவிய சினிமால வர்ற ஜோடிகள் போல தோணும்.”

“நிஜமாவா, நஸ்ரியா?” என முகம் சிவந்த ருஹானா “பழைய படங்கள் எப்பவுமே சிறப்பு தான், இல்லயா? எங்க அம்மா அப்பாவோட காதல் கூட அப்படித்தான். என் அம்மாவை நான் பார்த்தது இல்ல. அப்பா சொல்லி தான் அவங்க காதலோட சிறப்பு எங்களுக்கு தெரியும். நீண்ட மாதங்கள் காத்திருப்புக்கு அப்புறம் ஒரு பேக்கரியில தான் அவர் அம்மாட்ட காதலை சொன்னாராம்.”

“ஆஹா! நிஜமான ரொமாண்டிக் காதலர்கள், ருஹானா!”

“பேரன்பு பேக்கரின்னு அதோட பேரு. முன்னாடி படங்கள்ல கூட அது வந்திருக்கு.”

“பேக்கரி பேரே அழகா இருக்கே, ருஹானா!”

“ஆமா நஸ்ரியா! சின்னவயசுல என்னையும், அக்காவையும் அப்பா அங்க கூட்டிட்டு போயிருக்கார். ஆனா இப்போ அது இல்ல. மூடிட்டாங்க.”

“அடடா!” என நஸ்ரியா வருத்தப்பட, அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஆர்யன் மகிழ்ந்தான். ஒரு எண்ணம் உதயமானது.

———–

ருஹானா பரிசளித்த பேனாவும் பேப்பரும் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்த ஆர்யன் நீண்டநேர யோசனைக்குப்பின் ‘ருஹானா அர்ஸ்லானுக்கு…’ என எழுதினான். “இல்ல.. இது நல்லா இல்ல.. ஆபிஸ் கடிதம் போல இருக்கு” என்று அதை கசக்கி குப்பையில் போட்டான்.

‘மெஹ்ரபா!’ அதுவும் திருப்தி இல்லை, அதுவும் குப்பைக்கே.

‘உன்னை பார்த்த நிமிடம் முதல்…’ அவளை அவளின் வீட்டில் பார்த்த தருணம் நினைவுக்கு வந்தது. இவானை அவள் ஏமாற்றி அழைத்து சென்றதும், இவன் கோபாவேசமாக சென்று அவளை முறைத்ததும் நேற்று நடந்தது போல தான் அவனுக்கு தோன்றியது.

அந்த தாளும் குப்பைக்கூடைக்கு போனது. இப்படியே குப்பைகள் சேர “என்னால முடியாது” என்று பேனாவை மூடி வைத்துவிட்டான்.

ஒளித்து வைத்திருந்த ருஹானாவின் புகைப்படத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டான்.

———

உள்ளே வந்த ருஹானா குப்பைக்கூடை நிறைந்து வழிந்திருப்பதை பார்த்து வெளியே சிதறிக் கிடந்தவைகளை எடுத்து உள்ளே போட்டாள். அதில் ஆர்யனின் கையெழுத்தை பார்த்து ஆர்வம் தாங்காமல் சுற்றிலும் ஒரு பார்வையை ஓட விட்டு தயக்கத்துடன் ஒன்றை எடுத்து படித்தாள்.

அவளின் பெயரை பார்க்கவும் அவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. சிரித்தபடி “எனக்கு கடிதம் எழுதி பார்த்திருக்கார்” என்றவள் அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

கதவு திறந்து ஆர்யன் உள்ளே வர, அவள் அதை உள்ளே போட்டுவிட்டு கூடையை கையில் தூக்கிக்கொண்டாள். அதை பார்த்து அதிர்ந்து போன ஆர்யன் அவள் அருகே விரைந்து வர, ருஹானா “குப்பைக்கூடை நிறைஞ்சிருக்கு, கொட்டிட்டு வரேன்” என்று நகர்ந்தாள்.

“அது நஸ்ரியா பார்த்துப்பா” என்று ஆர்யன் அதை அவள் கையிலிருந்து பிடுங்கிக் கொள்ள, சிரிப்பை மறைத்துக்கொண்ட ருஹானா வெளியே சென்றாள்.

———-

கட்டிலுக்கு வந்த ருஹானா தனக்காக காத்திருந்த கடிதத்தை பார்த்து ஆச்சர்யமும், ஆனந்தமும் கொண்டாள். ஆவலாக அதை எடுத்தவள் அவனின் அழகிய கையெழுத்தை ரசித்தாள். நின்றுக்கொண்டே படிக்க ஆரம்பித்தவள் அவன் எழுத்தின் தாக்கத்தில் கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள்.

உன் பெயரிலேயே எல்லாமும் அடங்கி இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.. 

நீ என் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வந்தாய்.. 

என் அனைத்து இருட்டுக்களையும் விரட்டி என் வாழ்வில் ஒளியேற்றினாய்.. 

ஆரம்பத்தில் நீ என்னை பயமூட்டும் முரடனாக பார்த்தாய்.. அது எனக்கு தெரியும்.. 

என் பெயரே அப்படித்தானே.. உடைக்க முடியாதவன்.. 

அப்படித்தான் நானும் நினைத்தேன், நீ வரும்வரை.. 

உனக்கு பின்னே எல்லாமே மாறி விட்டது.. 

நானே வியக்கும்படி அப்படியே கற்றுகுட்டியாய் காதலில் நுழைந்து விட்டேன், உன்னோடு.. 

உன்னை சந்திக்கும்முன் ஆழமாய் நிம்மதி பெருமூச்சு விட்டதே இல்லை நான்.. நீ அதனை எனக்கு உணர்த்தினாய்..

வெளிப்பார்வைக்கு நான் பாறையை போன்றவன்.. 

உள்ளேயோ எரியும் நெருப்பு… 

அது நீ புன்னகை செய்யும் ஒவ்வொரு முறையும் கொழுந்து விட்டு எரிகிறது..

நான் அதை மேலும் எரிய விட்டால் அது உலகை பொசுக்கி விடும்.. தொடுபவரையும் எரித்துவிடும்..

அப்போது உன் குரலைஉன் அன்பு குரலை கேட்கிறேன்..  

எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்… 

மெல்ல ஆர்யன்! மெல்ல… 

இனி நீ உலகத்தை எரிக்க வேண்டிய அவசியம் இல்லை.. 

அவளோடு புது உலகை உருவாக்கு… 

அவள் ஒரு அபூர்வ மலர், உன் இருட்டில் பூத்த மலர்.. 

நீயே அவளுக்கு காவல்.. அவள் தடுமாறினால் நீ அவளை தாங்கி பிடி.. 

அவள் அழ நேர்ந்தால் ஓடி சென்று அவள் கண்ணீரை துடை… 

அவள் புன்னகைக்க எதிராக உள்ள எல்லா தடையும் உடை..

நான் நினைத்து கூட பார்க்காத ஒரு அற்புத கதையை நீ எனக்காக உருவாக்கினாய்.. அதில் நானே நாயகன்.. 

உனக்காக நான் அந்த கதையை உண்மையாக்குவேன்..

வாழ்க்கை முழுவதும் என் காலைவேளைகளை உன் புன்னகையால் ஒளிர வைக்க நீ வருவாயா?’

ஆர்யனின் மனதின் குரலை கேட்ட ருஹானா மெய்மறந்து அமர்ந்திருக்க, ஆர்யன் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான். அவளை எதிர்ப்பார்ப்போடு அவன் நோக்க, ருஹானா ஆனந்த கண்ணீருடன் “நான்… என்ன சொல்ல..? எனக்கு… அற்புதமா இருக்கு. அருமை! அருமை! இதுக்கு நான் நல்ல பதில் தரணும்” என்றாள்.

“அதுக்காக நான் பொறுமையே இல்லாம காத்திருப்பேன்” என்று ஆர்யன் சொல்ல, இருவரின் பார்வைகளும் காந்தமென கவர்ந்து நின்றன.

“இன்னைக்கு நம்மோட முதல் டேட்டிங். உன்னை நான் ஒரு அழகான இடத்துக்கு கூட்டிட்டு போறேன்.”

ஆர்யன் சொன்னதை கேட்டு சந்தோசப் படபடப்பான ருஹானா “ஆனா இவானோட நோய்த்தொற்று பயத்தால நாம கொஞ்ச நாளைக்கு வெளிய போகக் கூடாதே!” என்றாள்.

“கவலைப்படாதே! ரொம்ப ஒன்னும் தூரம் இல்ல. எட்டு மணிக்கு தயாரா இரு.”

“எங்க போறோம்?”

“நீயே நைட் பார்ப்பே!” என்று ஆர்யன் குறுநகை புரிய, ருஹானா வெட்கத்துடன் கடிதத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

போனை எடுத்து ரஷீத்திற்கு அழைத்த ஆர்யன் “ரஷீத்! நான் சொல்றது எல்லாத்தையும் கவனமா எழுதிக்கோ. ஒன்னு கூட விட்டு போகக்கூடாது” என்று பேசிக்கொண்டே போனான்.

———-

மாதுளம்பழ வண்ணத்தில் அழகு கவுனை அணிந்துகொண்டு மிதமான ஒப்பனை செய்துக்கொண்ட ருஹானா கண்ணாடி முன் நின்று எதிரே தெரிந்த அவளுக்கு சொல்லிக்கொண்டாள். “நிதானம்! நிதானம்!”

அறைக்கு வெளியே அவளுக்காக காத்திருந்த ஆர்யன் கருப்புநிற சூட்டில் கம்பீரமாக தெரிந்தாலும் பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தான். வெளியே வந்த அவளை பார்த்தவன் அவள் அழகில் பிரமித்து நின்றான்.

“நீ ரொம்ப அழகா இருக்கே!” என்று அவன் சொல்ல, முதன்முறையாக அவன் வாயிலிருந்து வந்த புகழுரையில் அவளுக்கு உச்சி குளிர்ந்தது.

தலையை குனிந்து கொண்டவள் “எங்க கூட்டிட்டு போறீங்கன்னு சொல்லவே இல்ல” எனக் கேட்க, அவள் கையோடு கை கோர்த்துக்கொண்ட ஆர்யன் “என்கூட வா!” என்று அழைத்து சென்றான்.

வீட்டின் பின்புறம் அவளோடு அவன் நடக்க, கதவை திறந்து எட்டிப்பார்த்த கரீமாவின் முகம் வெறுப்பில் வெந்து போனது.

ஆர்யன் கதவை திறந்துவிட்டு உள்ளே கைகாட்ட, உள்ளே நுழைந்த ருஹானா அதிர்ந்து நின்றுவிட்டாள்.

“யா அல்லாஹ்! என்னால நம்பவே முடியலயே! இது நான் சின்ன வயசுல போன அதே பேரன்பு பேக்கரி!”

அவளின் மகிழ்ச்சியை கண்டு ஆனந்தம் அடைந்த ஆர்யன் அவளை அமர வைத்தான். “நாம வெளிய போக முடியாததால நம்ம முதல் டேட்டிங்கை இங்க வச்சிக்கலாம்னு நினச்சேன். உனக்கு பிடிச்சிருக்கா?”

“ரொம்ப! ரொம்ப!” ருஹானாவின் மரகதகண்கள் மின்னின.

இருவரும் ஒரு மேசையின் இருபுறமும் எதிரே எதிரே அமர்ந்தனர்.

“ஆனா உங்களுக்கு எப்படி தெரியும், எனக்கு இது மனங்கவர் பேக்கரின்னு?”

“நீ நஸ்ரியா கூட பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். உன் அம்மா அப்பாக்கு இது முக்கியமான இடம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்…” என்றவனின் பேச்சை இடைமறித்தவள் “நமக்கும் சிறப்பானதா அமையட்டும்னு ஆசைப்பட்டீங்க!” என்றாள்.

தலையாட்டிய ஆர்யன் “முதல் டேட்டிங் மறக்க முடியாதது!” என்றான்.

Advertisement