Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 136

ஜவேரியா ஒளித்துவைத்த இடத்திலிருந்து அவளின் போனை எடுத்த சல்மா, அதில் கரீமா பேசிய ஒலிப்பதிவை தேட, ரொட்டிகளை பிரித்து வெண்ணெய் தடவியபடியே குலாம் அவளை மறைத்துக்கொண்டு நின்றாள்.

சல்மா அதை கண்டுபிடித்த பின்னர் குலாம் அவளின் அலைபேசி எண்ணை அதில் இட, ஒலிப்பதிவு இடமாற்றமாகிக் கொண்டிருந்தது. “சீக்கிரம்!” என குலாம் அவசரப்பட, “நான் என்ன செய்ய? இணையத்தொடர்பு மெதுவா இருக்கு” என சல்மா படபடப்புடன் போனை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, குளிக்க சென்றிருந்த ஜவேரியா உள்ளே வந்துவிட்டாள்.

சல்மா சட்டென்று ஜவேரியாவின் போனை பெரிய ரொட்டியின் இடையே செருக, உணவு மேசையில் அமர்ந்த ஜவேரியா, “ரொட்டிக்கு நடுவுல என்ன வைக்கறே?” என கேட்க, இருவருக்கும் குலை நடுங்கியது.

“என்ன, காதுல விழலயா?” என்று கேட்ட ஜவேரியா “எனக்கு நிறைய சீஸ் வச்சி ரொட்டி தா” என கேட்கவும், தப்பித்த சல்மா கண்களை மூடி நிதானப்படுத்திக் கொண்டாள். “இதோ, நான் வேற ரொட்டில வச்சி தரேன், ஜவேரியா அக்கா! இதுல வெண்ணெய் தான் இருக்கு. இதை நீ சாப்பிடு குலாம்” என போனோடு ரொட்டியை அவளிடம் கொடுத்து அனுப்பிய சல்மா “நான் உங்களுக்கு சீஸ் நல்லா தடவி தரேன், ஜவேரியா அக்கா” என புது ரொட்டியை கையில் எடுத்தாள்.

குலாம் நடுங்கியபடியே ஜவேரியாவின் முதுகுக்கு பின் அவளின் போனில் அனுப்பிய விவரங்களை அழித்துவிட்டு ஏற்கனவே ஜவேரியா வைத்திருந்த இடத்தில் போனை வைத்துவிட்டாள்.

——–

கரீமாவிற்கு சல்மா அனுப்பிய குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது.

‘நீ சீக்கிரமா என்னை இங்க இருந்து விடுவிச்சி மாளிகைல சேர்த்துக்கணும், அக்கா! இல்லனா நான் இதை ஆர்யனுக்கு அனுப்பிடுவேன். என்னோட சேர்ந்து நீயும் அழிஞ்சி போ!’

சல்மாவின் செய்தியை படித்த கரீமா, அவள் அனுப்பியிருந்த குரல்பதிவை கேட்டு சர்வமும் ஆடிப்போய் நின்றாள். அவளின் சதித்திட்டங்கள் அனைத்தும் அவளுடைய சொந்தக்குரலில் கேட்க அவளுக்கு நாராசமாக இருந்தது.

“எப்படி உன்னால இதை செய்ய முடிந்தது, சல்மா! எப்படி?” என்று கத்திய கரீமா செய்தி வந்த அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, அந்த தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

என்ன செய்வது என புரியாமல் கரீமா கதிகலங்கி நின்றாள்.

———

வரவேற்பறையில் தூங்கி எழுந்து தாமதமாக உணவருந்த வந்த இருவருக்கும் தனிமை கொடுத்து பணியாட்கள் விலக, ருஹானா “உங்களுக்கு பிடித்தது போல காளான் ஆம்லேட் செய்திருக்கேன்” என்று சொல்ல, ஆர்யன் வருடிய கன்னத்தின் மென்மையை ரசிக்க, அவளும் மயங்கியே நின்றாள்.

“இங்கயே சாப்பிடலாமா?” என்று அவன் கேட்க, சமையலறையின் சிறியமேசையில் இருவரும் சேர்ந்தே அனைத்தையும் எடுத்து வைத்து அமர, உணவு உண்ணாமல் அவன் அவளையே பார்த்து அமர்ந்திருக்க, கூச்சப்பட்டுக்கொண்டு “ஜாம் கொண்டு வரேன்” என ருஹானா எழுந்தாள்.

அவள் கையை பிடித்து தடுத்த ஆர்யன் “வேணா! எல்லாம் இருக்கே!” என்றான். அவனின் தொடுகை அவளின் நாணத்தை கூட்ட, அவன் பார்வையை சந்திக்காமல் அவள் உண்ணத் துவங்கினாள்.

அப்போதும் அவன் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்திருக்க, “ஏன் நீங்க ஆம்லேட் சாப்பிடல? நல்லா இல்லயா? நான் கருக்கிட்டேன் தானே? வேற செய்றேன்” என மீண்டும் எழப் போனாள்.

மறுபடியும் அவள் கையை பற்ற வாய்ப்பு வாய்க்கப்பெற்ற ஆர்யன் அதை தவறவிடவில்லை. “நம்ம ரெண்டு பேரை தவிர இங்க மற்ற எதுவும் முக்கியமில்ல” என்றவன் அவளின் சங்கடத்தை உணர்ந்து, எழுந்துசென்று சமையலறையின் இருபக்க கதவுகளையும் மூடினான்.

ருஹானாவின் பயம் அதிகரிக்க, அவனின் அருகாமையில் அவளின் இதயம் தடதடக்க, அவள் தொண்டையை செருமிக் கொண்டாள்.

மீண்டும் அவள் அருகே அமர்ந்து கையை பிடித்துக்கொண்டவன் “இப்போ நாம இங்க தனியா இருக்கோம். எல்லாமே அதிக அழகா இருக்கு. நாம் மட்டும்… அதாவது இதான் முதல்முறை நாம தனியா சாப்பிடுறது. நாம சேர்ந்து சாப்பிடுற முதல் காலை உணவு” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல, அவளுக்கு குரலே எழும்பவில்லை.

“ஹூஹூம்! முதல்முறை..”

“இனி இப்படித்தான் எல்லாம் இருக்கப்போகுது. நாம சேர்ந்து தனியா… அடுத்தவங்களோட இருக்கும்போதும் நாம மட்டும் தனியா.. நான் என்ன சொல்றேன்னா.. நாம என்ன செய்யலாம்னு சிலது யோசித்து வச்சிருக்கேன். நீ…? நீ எதும் யோசனை வச்சிருக்கியா?” அவன் பேச்சிலும் தடுமாற்றம்.

“நான்..”

“இன்னைக்கு என்ன செய்யலாம்?” மெல்லிய புன்முறுவல் அவன் முகத்தில்.

“எனக்கு தெரியலயே! மத்தவங்க என்ன செய்வாங்களோ?”

“உனக்கு அது விருப்பமோ அது! நீ ஆசைப்படறது செய்யலாம். வாக்கிங் போகலாம். அன்னைக்கு மீன் பிடிக்க நாம போகலயே, நீ விருப்பப்பட்டா அதுக்கு போகலாம்.” அவன் அடுக்கிக்கொண்டே போக, அவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொண்டன.  “வந்து…”

“இல்லனா வெளிய சுத்தலாம். கார்ல ஏறி நீண்ட பயணம் போலாம்!”

அவனின் கேள்வியான பார்வையிலிருந்து தப்பிக்க “சரி, நான் யோசிச்சி சொல்றேன்” என்ற ருஹானா, பற்றிய அவன் கையிலிருந்து தன் வலக்கையை உருவாமல் இடது கையால் முள்கரண்டி கொண்டு ஒரு பழத்துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.

கண்களில் அவள் முழுதும் நிறைந்ததால் அவனின் வயிறும் நிறைந்தது போல, ஆர்யன் ஒரு கவளம் கூட உண்ணவில்லை.

                                        ————

அலட்சியமாக எதிரே வந்து அமர்ந்த சல்மாவை பார்த்ததுமே கரீமா கோபத்தில் எகிறினாள். “உனக்கு மூளை பிசகிடுச்சா? நான் உன்னோட அக்கா!”

“நீ என்ன எனக்கு செஞ்சியோ அதேதான் நான் செய்றேன், உனக்கு.. என் அக்காவுக்கு.”

“எனக்கு என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா? சாகப் போனேன். ஆர்யன் சரியான நேரத்துக்கு வந்திருக்கலனா என் உடம்பு கூட கிடைச்சிருக்காது. நீ செய்றது என்னன்னு உனக்கு புரியுதா?”

“என்ன செய்தேன்றதை விடு. ஏன் செய்தேன்னு பாரு! நீ புத்திசாலித்தனம்னு நினைச்சி போட்ட திட்டம் வேலை செய்யல. அந்த குப்பை ருஹானா ஜெயிச்சிட்டா! அவளை குறைவா எடை போட்டுட்டே! அவ உன்னை ஒன்னுமில்லாம செய்திட்டா! நீ அவ மேல தான் கோபத்தை காட்டணும், என்மேல இல்ல! ஏன்னா அவ தான் இப்போ அர்ஸ்லான் மாளிகையோட எஜமானி! அங்க நீ பைத்தியக்காரனோட மனைவி மட்டும் தான்.”

“சல்மா!”

“கத்தாதே! நான் சொன்னதை செய். நீ தான் இதெல்லாம் செய்தேன்னு ஆர்யனுக்கு தெரிந்தா, அவன் என்ன செய்வான்னு நான் உனக்கு சொல்ல வேண்டியதில்ல!”

“நான் சீக்கிரமே உன்னை விடுவிக்கிறேன். நீ மடத்தனமா எதுவும் செய்திடாதே! அந்த டேப்பை முதல்ல அழி! இல்லனா நாம ரெண்டு பேரும் அழிஞ்சிடுவோம்.”

“எனக்கு இழக்க எதுவும் இல்ல, கரீமா மேடம்! எனக்கு காத்திருக்க பொறுமையும் இல்ல. என்னை சீக்கிரம் விடுதலை செய்! அதான் உனக்கு நல்லது! இல்லனா என்னோட சேர்ந்து சாக தயாரா இரு, என் அன்பு அக்கா!”

———

கோபமாக வீட்டுக்கு வந்த கரீமா குளிராடையை சோபாவில் வீசி எறிந்தாள். “சாரா! ஒரு எனக்கு பழச்சாறு!” என நின்ற இடத்திலேயே கத்தியவள் சமையலறை கதவு மூடப்பட்டு இருப்பதை கண்டு யோசனையாகி அருகே சென்று மெதுவாக கதவை திறந்தாள்.

அந்த அழகான தருணத்தில் ருஹானாவின் கையை பற்றியிருந்த தனது கையை விடுவித்த ஆர்யன் ரொட்டியில் வெண்ணெய் தடவி அவளுக்கு ஊட்டிவிட்டு அவள் கடித்த மீதியை அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். உச்சகொதிநிலையையும் தாண்டி கரீமாவின் உடம்பே வெந்து போனது. ‘அவள் எஜமானி. நீ பைத்தியத்தின் மனைவி’ என்று சல்மா சொன்னது நிதர்சனம் என அவளுக்கு புரிந்தது.

மூர்க்கமாக படிக்கட்டில் ஏறி அறைக்குள் சென்ற கரீமா கைப்பையை விட்டடித்தாள். மேசையில் இருந்த ஒப்பனை பொருட்களை கீழே வீசினாள். “எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா. இந்த மாளிகையை.. ஆர்யனை.. எல்லாமே! டேமிட்! நான் எதாவது செய்யணும். அந்த நச்சுப்பாம்போட தலையை நசுக்க ஒரு வழி தேடி கண்டுபிடிச்சாகணும்.”

———

ருஹானா ஏதோ சொல்ல வர, ஆர்யன் போன் சத்தமிட்டது. “இது முக்கியம் இல்ல, நீ சொல்லு” என அவன் சொல்ல, அது திரும்பவும் அவனை அழைத்தது.

“நீங்க எடுத்து பேசுங்க” என்று ருஹானா சொல்ல, அவன் அதை எடுத்துக்கொண்டு முன்கதவு திறந்து வெளியேற, பின்கதவை திறந்துகொண்டு நஸ்ரியா மெல்ல உள்ளே வந்தாள்.

சுற்றுப்புறம் மறந்து ருஹானா சிரிப்புடன் லயித்திருக்க, நஸ்ரியா குறும்பு சிரிப்புடன் “ருஹானா!” என அழைத்தாள்.

Advertisement