Advertisement

மறந்துவிட்ட தன் செல்பேசியை எடுக்க வந்த ஆர்யன், வரவேற்பறையில் நின்று ருஹானா போன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டான்.

“……..இதான் பர்வீன் அம்மா நடந்தது. நீங்களும் எங்க கல்யாணம் நிஜம்ன்னு சொன்னீங்க, இப்போ இவரும் அப்படியே சொல்றார். ஆனா நான் என்ன செய்றது? எல்லாமே வேகமா நடந்தது. ஃபார்மாலிட்டிக்காக நிக்காஹ் செய்தோம். மத்தவங்க போல எங்களுக்கு எதுவும் நடக்கல. அவங்க சந்திப்பாங்க பேசுவாங்க பழகுவாங்க நேசிப்பாங்க.”

“ஆனா நாங்க முதல்ல ஒருத்தரை ஒருத்தர் வெறுத்தோம். அப்புறம் திருமணம் செய்துக்கிட்டோம். இப்போ இப்படின்னா…..”

“என் வயசுக்கு எனக்கு இதெல்லாம் தெரியவேயில்ல. இதுக்கு முன்ன இப்படி உணர்ந்ததும் இல்ல. யார்கூடவும் டேட்டிங், நட்பு அப்படி பழக்கமும் இல்ல. நார்மல் கணவன் மனைவி எப்படி நடந்துக்குவாங்கன்னு கூட எனக்கு தெரியாதே!”

சம்பிரதாயமாக நடந்த திருமணம்

அவநம்பிக்கையால் தத்தளித்து

துருவ நட்சத்திரக் காதல் வழிகாட்ட

உண்மைக்கரையை அடைந்தபின்

தெளிந்த ஆணின் ஆசை மனது

அதை நிஜமணமாக்க விரும்ப..

படபடக்கும் பெண்ணின் இயல்பாய்

நாணத்துடன் அச்சப்படுகிறது நெஞ்சம்

அகத்தை பகிராது மஞ்சத்தை பகிர!

———

“அவ சொல்றதும் சரிதான்” என்று ஆர்யன் படுக்கையறையில் குழப்பமாக நடக்க, ருஹானா உள்ளே வந்தாள். “நீங்க இன்னும் தூங்கலயா?”

“நான் உன் பதிலுக்காக காத்திருக்கேன்னு சொன்னேனே!”

“நான் மறக்கல. நீங்க காத்திருக்கீங்கன்னும் எனக்கு தெரியும்”

“உன்னோட பதிலை தெரிஞ்சிக்கறத்துக்கு முன்னாடி நான் உன்கிட்டே சில விஷயங்கள் சொல்லணும். எனக்கு உன்னோட பயமும், குழப்பமும் புரியுது.”

“நாம அதிரடியா நிக்காஹ் செய்துகிட்டோம். மூச்சுவிடக்கூட முடியாம அடுத்தது நிகழ்ச்சிகள் நடந்துட்டே இருந்தது. நமக்குள்ள பேசி தெளிவுபடுத்திக்க நிறைய இருக்கு. உன்னோட பயம் நியாயமானது தான். எனக்கு உன்னை புரியுது. இப்போ நாம விட்டது எல்லாம் நான் செய்ய நினைக்கறேன், உன்னோடு! நமக்காக மட்டும் நேரம் செலவழிக்க ஆசைப்படறேன். நமக்கு நெறைய இருக்கு, அனுபவிக்க! ஒவ்வொன்னா தொடங்குவோம்” என்று அவன் கைநீட்ட, அவள் அதை பற்றிக்கொண்டாள்.

“காலத்தை நான் பின்னாடி எடுத்திட்டு போகப்போறேன், நம்ம ரெண்டு பேருக்கு மட்டும். உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிக்கப் போறேன். நாளை தான் நம்மோட புதுவாழ்க்கையின் முதல்நாள். நாளைக்கு டேட்டிங் போவோம், நம்ம ரெண்டுபேரும் புதுசா சந்திப்பது போல. நீ என்ன சொல்றே?” என்று ஆர்யன் கேட்க, ருஹானா மகிழ்வோடு தலையாட்டினாள்.

“நல்லா தூங்குங்க” என்று கட்டிலிற்கு சென்று படுத்துக்கொண்டாள். இனம்புரியாத மயக்கத்தில் அவளுக்கு உறக்கம் வர மறுக்க, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

——–

புரண்டு படுத்த ருஹானாவின் உடலில் வெப்பநிலை அதிகரிக்க, குளிராடையை கழட்டி போட்டாள். ஆர்யன் நன்கு தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு அவனை அருகே சென்று பார்க்கும் ஆவல் எழ, செருப்பு அணியாமல் மெல்ல நுனிக்காலில் நடந்து அவன் அருகே சென்று மண்டியிட்டாள்.

அவன் முகத்தை அணுஅணுவாக ரசித்தவள், கண்மூடி அவனின் வாசனையை நுகர்ந்தாள். அவளின் மூச்சுக்காற்றில் விழித்துவிட்ட ஆர்யன் மெல்ல கண்திறந்தான். கண்மூடிய அவளின் மலர்முகம் மிக நெருக்கத்தில் தெரிய அவனின் இரத்தவோட்டம் அதிகரித்தது.

திரும்ப கண்களை அவன் மூடிக்கொள்ள, கண்விழித்த ருஹானா நுனிக்காலில் நடந்தே வெளியே சென்றாள். கதவு மூடும் சத்தம் கேட்டு சிரிப்புடன் எழுந்து அமர்ந்த ஆர்யன் அவளின் குளிராடையையும், காலணியையும் பார்த்தான்.

———

வெளியே கொட்டும் பனியை வேடிக்கை பார்த்து நின்ற ருஹானாவிற்கு தும்மல் வர, அவளை சுற்றி கம்பளியை “குளிர் அதிகமா இருக்கே! இதை போட்டுக்கோ” என்று போர்த்திய ஆர்யன் “என்ன செய்றே இங்க?” என்று கேட்டான்.

அவனை பார்த்து திடுக்கிட்ட ருஹானா “உள்ள புழுக்கமா இருந்தது. காற்றாட வெளிய வந்தேன்” என்றாள்.

“இந்த வானிலைல உனக்கு வேர்க்குதா?”

“ஆமா!”

“உனக்கு காய்ச்சல் அடிக்குதா?” என அவள் கன்னத்தை தொட்டு பார்த்தான்.

“இல்ல, எனக்கு தூக்கம் வரல. அதான் உங்களை எழுப்பக்கூடாதுன்னு இங்க வந்தேன்.”

“எனக்கும் தூக்கம் வரல. ஏதாவது சூடா குடிக்கலாமா? அதுக்கு அப்புறம் தூக்கம் வருதா பார்க்கலாம்” என்று சொன்ன ஆர்யன் அவள் காலடியில் கை காட்டினான். அங்கே அவள் செருப்பு இருக்க, சங்கடத்துடன் அதை அணிந்து கொண்டவள் சமையலறைக்கு சென்றாள். “நான் செய்றேன்!”

பின்னால் வந்த ஆர்யன் அவளின் தடுமாற்றத்தை ரசித்தபடி “ரெண்டுபேரும் சேர்ந்து செய்வோம். மூலிகை தேநீர் உனக்கு ஓகேவா?” என்றான்.

அர்த்த இராத்திரியில் இருவரும் ஒவ்வொன்றாக தேடி தேடி எடுக்க, ஒட்டியும் உரசாமலும் அவர்களின் நெருக்கம் இருவருக்குமே இன்பமாக இருந்தது. மூலிகைப்பொடியை அவள் வாசம் பிடிக்க, அருகில் நின்ற ஆர்யன் அவளின் சுகந்தத்தை உள்ளிழுத்தான்.

“சில வாசனைகள் எப்பவுமே மறக்க முடியாதவை” என்று அவன் சொல்ல, அவள் பதில் பேசமுடியாமல் நின்றாள்.

தயாரித்த தேநீரை வரவேற்பறைக்கு கொண்டுவந்தவர்கள் கணப்பின் எதிரே அக்கம்பக்கம் அமர்ந்துக்கொண்டனர்.

——–

ஆர்யனுக்கு முதலில் விழிப்பு வர, தன் தோளில் தொற்றிக்கொண்டிருந்த பைங்கிளியை பார்த்ததும் அவன் மனம் மிகுந்த உல்லாசம் கொண்டது. மாளிகையின் வரவேற்பறையில் நட்டுநடு சோபாவில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து விடியும்வரை உறங்கி இருந்தனர் இருவரும்.

தலைசாய்த்து அயர்ந்து தூங்கும் அவளை ரசித்தவன், நழுவிய கம்பளியை இழுத்து அவள் தோள்வரை போர்த்திவிட்டான். அவளும் தூக்கத்தில் அவன் கழுத்தில் தலையை புரட்டிக்கொண்டாள்.

அவள் முகத்தில் விழுந்த முடியை அவன் ஒதுக்கிவிட, இலேசாக கண்திறந்தவள் கனவு என நினைத்து அவனை பார்த்து மதுரமாய் புன்னகைத்தாள், இருக்கும் இடம் தெரியாமல்.

“குட் மார்னிங்! நல்லா தூங்கினியா?” என அவன் கேட்டதும் சுற்றுமுற்றும் பார்த்தவள் அவனுடன் தான் நெருக்கமாக இருப்பதை பார்த்து சடாரென எழுந்தாள். “யா அல்லாஹ்! இங்கயே தூங்கிட்டோமா?” என்றவள் “நேரமாகிடுச்சே, இவான் தேடுவானே!” என்று ஓடிவிட்டாள்.

———

“என்னால இங்க இருக்கமுடியாது! நான் இந்த பாதாள சாக்கடையிலருந்து வெளிய போகணும்” என்று புலம்பியபடியே இருந்த சல்மா, அங்கே ரொட்டிகளை பிரித்து வெண்ணெய் தடவிக்கொண்டிருந்த குலாமை பார்த்து “எனக்கு நீ இன்னொரு உதவி செய்யணும்” எனக் கேட்டாள்.

குலாம் என்னயென கேட்க, “நான் ஜவேரியா போன்லருந்து குரல்பதிவை உன் போனுக்கு அனுப்பிக்கறேன். அப்புறம் என் அக்காக்கு அதை அனுப்பறேன்” என்று சொல்ல, குலாம் “முடியாது! நான் தரமாட்டேன்! ஜவேரியா என்னை உயிரோட புதைச்சிடுவா. நேரா உன் அக்கா போனுக்கே அனுப்பு” என்றாள்.

“அது முடியாது. என் அக்கா திருப்பி ஜவேரியா எண்ணுக்கு தொடர்பு கொண்டா எனக்கு பிரச்சனையாகிடும். உன் எண்ணுக்கு அனுப்பிட்டு அதை அழிச்சிடறேன், நீ கவலைப்படாதே!”

“இல்ல, என்னால முடியாது!”

“அப்போன்னா உன் போன்லருந்து தான் ஆர்யனுக்கு செய்தி அனுப்பினோம்னு நான் ஜவேரியாக்கு சொல்லிடுவேன். ரெண்டுபேரையும் அவ தலைகீழா தொங்கவிடட்டும்” என்று சல்மா குலாமை மிரட்ட, அவள் வெறுப்பாக “நன்றி கெட்டவள் நீ! உனக்கு போய் நான் உதவி செய்தேனே!” என்றாள்.

“நான் எவ்வளவோ செய்திட்டேன். உனக்கும் செய்றதால எனக்கு ஒன்னும் ஆகாது” என்று சல்மா அலட்சியமாக சொல்ல, வேறுவழியின்றி குலாம் ஒத்துக்கொண்டாள்.

———

“சாரா அக்கா! இவானுக்கு உணவு கொடுத்ததுக்கு நன்றி. நான் இன்னைக்கு அதிக நேரம் தூங்கிட்டேன்” என்று ருஹானா சொல்ல, சாரா குறும்புடன் புன்னகை செய்தார்.

பக்கத்தில் நின்ற நஸ்ரியா “ஆர்யன் சார் தோள்ல நீ தலை வச்சி தூங்கிட்டு இருந்தது பார்க்கவே ரம்மியமா இருந்தது” என்று சொல்லி சிரிக்க, அவளை சாரா இழுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

———

இணையத்தில் தேடி காதலர்கள் உறவை வளர்க்கும்விதங்களை படித்துக்கொண்டிருந்த ஆர்யன், காபி கொண்டுவந்த ஜாஃபரிடம் கேட்டான்.

“ஜாஃபர்! உங்க மனைவியை முதன்முதலா எங்க சந்திச்சீங்க? உங்க காதலை எப்படி சொன்னீங்க?”

“அவளை நான் ஒரு கல்யாணத்துல தான் பார்த்தேன். அவளை பார்த்த நொடி நான் காதல்ல விழுந்திட்டேன். இப்போ மாதிரி அப்போ உடனே காதலை சொல்லமுடியாது. சந்தர்ப்பங்களும் கிடைக்காது. பார்வைகள்தான் பரிமாறிக்கிட்டோம். ஒரு மாதம் கழித்து என் மனம் திறந்து ஒரு காதல்கடிதம் எழுதி ஒரு சின்ன பையன்கிட்டே கொடுத்துவிட்டேன். அவளும் என் காதலை ஏத்துக்கிட்டா. அப்புறம் அப்படியே பீச், பார்க், கபே, சினிமான்னு எங்க காதல் சுத்துச்சி….”

ஜாஃபர் புன்னகையுடன் சொல்ல, ஆர்வமான ஆர்யன் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தான்.

———

ஆம்லெட் செய்து கொண்டிருந்த ருஹானா நேற்றைய இரவை நினைத்து மெய்மறந்து நிற்க, அவளை தேடிவந்த ஆர்யன் அருகே வந்து அடுப்பை அணைத்து கருகும்முன் ஆம்லெட்டை காப்பாற்றினான்.

“நானே உங்களை கூப்பிட இருந்தேன். எல்லாரும் சாப்பிட்டுட்டாங்க. நீங்களும் நானும் மட்டும்தான்!”

அவள் கன்னத்தை வருடியவன் “ரொம்ப நல்லது!” என்றான்.

(தொடரும்)

Advertisement