Advertisement

கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, திரும்பி பார்த்த ஆர்யன் பேருவகை கொண்டான். படுக்கையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்த ருஹானாவின் கையில் ஒட்டி தைக்கப்பட்ட சிவப்புநிற இதயத்தின் வடிவிலான தலையணையும் இருந்தது.

“நேரமாகிடுச்சே! நான் உங்க படுக்கையை தயார் செய்றேன்” என்று அவள் சொல்ல, உள்ளத்தின் பூரிப்பில் அவன் நகராது நின்றான்.

“நீ திரும்பி வந்திட்டே!”

“ஆமா, வந்துட்டேன்!”

ஆர்யனின் பார்வை குட்டிதலையணைக்கு போவது கண்ட ருஹானா “நீங்க தான் இதை இணைத்தீங்க. நான் இல்ல! நீங்க மன்னிப்பு கேட்கலனா நான் மனம் உடைஞ்சி தான் இருந்திருப்பேன். நாம மதிப்பு கொடுக்கற பொருள் உடைந்தாலும் அதை தூக்கி போட்டுட முடியாது” என்றவள் படுக்கையை சோபாவில் வைத்துவிட்டு “அது அது அதன் இடத்துல இருக்கறது தான் நல்லது” என்று பூடகமாக சொல்லி தலையணையை கட்டிலில் வைத்தாள்.

ஆர்யன் பேனாவை ஒட்டவைக்க, ருஹானா இதயத்தலையணையை செப்பனிட, இருவரும் இணைந்து அவர்களின் வாழ்வை ஒன்றாக இணைக்கின்றனர்.

ருஹானா அவனுக்கு படுக்கையை விரிப்பதை பார்த்த ஆர்யன் அவளிடமிருந்த போர்வையின் ஒரு நுனியை பற்றிக்கொண்டு “நாம சேர்ந்தே செய்வோம்” என்றான்.

இன்னும் தனித்தனி படுக்கையா என்ற கேள்வி நமக்கு தான் எழுகிறது. ஆனால் அவள் அவனை மன்னித்து அவர்கள் அறைக்குள் வந்ததே அவனுக்கு போதுமானதாக, நிறைவாக இருந்தது.

ருஹானா சென்று படுக்கையில் படுக்க, ஆர்யன் அவளை பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பது அவளுக்கு கூச்சத்தை கொடுக்க, அவள் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

என்றாலும் ஆர்யன் படுக்காமல் அவளையே பார்த்திருந்தான். ஆழ்ந்த தூக்கத்தில் புரண்ட ருஹானா தலையணையை அணைத்துக்கொண்டே திரும்பி படுக்க, ஆர்யன் வசதியாக அமர்ந்துக்கொண்டு அவளின் மதிமுகத்தை மனதில் நிரப்பிக்கொண்டான்.

பின் அவள் அருகில் சென்று மண்டியிட்டவன் கட்டிலின் பக்கவாட்டுமேசையை திறந்து அவர்களது திருமணப்பதிவு சான்றிதழை எடுத்தான். எடுத்துக்கொண்ட பின்னும் அவளின் அருகாமையிலிருந்து சிரமப்பட்டே அவனால் நகரமுடிந்தது.

———-

காலையில் கண்விழித்த ருஹானா அவன் அதேநிலையில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக பார்த்தாள்.

“உனக்கு கனவு வந்ததா?”

“அது உங்களுக்கு எப்படி தெரியும்?”

“நீ சிரிச்சிட்டே தூங்கிட்டு இருந்தே!”

“ஆமா, நல்ல கனவு தான். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லாவும் தூங்கினேன்” என்று புன்னகையோடு சொன்னவள் “நீங்க சோர்வா தெரியறீங்க. சரியா தூங்கலயா?” என்று கேட்டாள்.

“தூங்க முடியல! ஆனா நல்ல கனவு காண எனக்கு தூக்கம் அவசியமில்ல” என்றான், விழித்திருக்கும்போதும் அவளை விழிநிரப்பியதே போதும் எனும் திருப்தியுடன்.

ருஹானா அதை கண்டுகொள்ளாமல் சோபாவில் கிடந்த அவர்களது சான்றிதழை பார்த்துவிட்டு “ஏன் தூங்கல? எதும் பிரச்சனையா?” என வினவினாள்.

“பிரச்னைன்னு ஒன்னும் இல்ல. ஆனா சரிசெய்யவேண்டியது சில இருக்கு. அதைத்தான் யோசித்திட்டு இருந்தேன். சிலது மாத்தவும் செய்யணும்.”

அப்போது இவான் கதவை திறந்து உள்ளே வந்தான். “சித்தி! நீங்க இங்கயா இருக்கீங்க? நான் உங்க அறையில தேடினேன். உங்க சண்டை முடிஞ்சதா? இனிமேல் கோபமா இருக்கமாட்டீங்களே?”

மருத்துவர் தனது நோயாளிகளை அக்கறையுடன் கவனமாக ஆராய்வதுபோல, இவான் எப்போதும் இவர்களை பரிசோதித்துக்கொண்டே இருக்கிறான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ருஹானா “ஆமா, தேனே! இனி சண்டை இல்ல” என்று அவனைப் பார்த்துக்கொண்டே சொன்னதும் ஆர்யனுக்கும் பரவசமானது.

“அப்போன்னா இது தான் மிக மிக மிக அழகான காலைப்பொழுது” என்று கைகளை சிரிப்புடன் விரித்த இவான் “இனி எப்பவும் சண்டை போடக்கூடாது, சரியா?” என்று கேட்டான். “போடமாட்டோம், அக்னி சிறகே! சத்தியமா!” என்று ஆர்யன் சொல்ல, இருவரையும் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.

”வேற வேற அறையில் இருக்காதீங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இருங்க. ஒரே தலையணையில் உங்க அன்பு வளரட்டும்” என்று பெரிய மனிதன் போல இவான் சொல்ல, ருஹானா நாணம் கொண்டு தலைகுனிய, ஆர்யன் சந்தோஷ முறுவலுடன் “இன்ஷாஅல்லாஹ்!” என்றான்.

———

கண்ணாடி முன் நின்ற கரீமா தனது அகோரமுகத்தை பார்த்து பொருமினாள். “நீ கரீமா அர்ஸ்லானா? எவ்வளவு பெருமையோடு உலா வந்தே! பூச்சியை காலடியில போட்டு நசுக்கறதுபோல உன்னை சிதைச்சிட்டாங்களே!”

முகத்தின் வீக்கங்களையும், காயங்களையும் மறைக்க ஒப்பனை செய்ய முயன்றாள். அது அவலட்சணத்தை இன்னுமே அதிகப்படுத்தியது.

அப்போது அம்ஜத் அங்கே வந்து அவளை சாப்பிட அழைத்தான். கரீமா கோபத்தை அடக்கிக்கொண்டு அவளுக்கு பசிக்கவில்லை என்றும் ஓய்வெடுக்க போவதாகவும் தெரிவித்தாள். அம்ஜத் விடாது அழைத்தான். ருஹானா, ஆர்யனுடன் சேர்ந்து உணவுண்ணலாம் என அவன் ஆசைகாட்ட, அது அவள் கோபத்தை விசிறிவிட்டது.

அவனிடம் எதும் சொல்லமுடியாமல் அவனுடன் கீழே வந்து உணவு மேசையில் அமர, பணியாட்கள் அவளின் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு தன் முகத்தை காட்டாமல் குனிந்துகொண்டே நன்றி சொன்னாள்.

இவான் இருவரின் கையை பிடித்தபடி குதித்துக்கொண்டு அங்கே வர, ஆர்யன் அருகே அமர்ந்த ருஹானா ஆர்யனுக்கும், இவானுக்கும் உணவு பரிமாற, அப்படியே தம்பதியினரின் காதல் பார்வைகளும் பரிமாறப்பட, ஓரக்கண்ணால் பார்த்த கரீமாவிற்கு உடல்வலியை விட அதிகவலி ஏற்பட்டது.

“பெரியப்பா! உங்களுக்கு தெரியுமா? சித்தியும் சித்தப்பாவும் ஒன்னு சேர்த்துட்டாங்க. சித்தி சித்தப்பாவை மன்னிச்சிட்டாங்க. சித்தப்பா எப்பவும் சண்டை போடமாட்டேன்னு சத்தியம் செய்திருக்காங்க. இனிமேல் அமைதியோ அமைதி தான்” என்று இவான் சொல்ல, கரீமாவின் உள்ளே கொதித்தது.

எத்தனை பட்டும் இவளுக்கு புத்தி வரவில்லையே! ஆர்யன் சமயத்தில் வந்து அவள் உயிரைக் காப்பாற்றினானே எனும் நன்றி உணர்ச்சி கூட இல்லையே!

“ஆர்யன்! கரீமாவை நீ காப்பாத்தி கூட்டிட்டு வந்துட்டே. உங்களுக்கு நடுவுல இருந்த பிணக்கும் சரியாகிடுச்சி. நாம எல்லாரும் சேர்ந்து இருக்கோம். நம்ம அமைதியும் மீண்டும் வந்துடுச்சி” என்று அம்ஜத் சந்தோசமாக சொல்ல, ஆர்யனும் புன்னகை முகமாக தலையை மட்டும் அசைத்தான். இவனுக்கு மனைவியிடம் மட்டும் தான் மணிக்கணக்கில் பேசமுடியும் போல!

கரீமா அடிபட்ட கைநீட்டி உணவு பாத்திரத்தை எடுக்க சிரமப்பட, ருஹானா எழுந்து அவளுக்கு உதவி செய்தவள் பழசாற்றையும் அவள் அருகில் எடுத்து வைத்தாள். “எப்படி இருக்கீங்க, கரீமா மேடம்! இப்போ பரவாயில்லயா?”

“நான் நல்லா இருக்கேன்! நன்றி ருஹானா டியர்!”

‘பெரிய ஆபத்துல இருந்து தப்பியிருக்கீங்க. குணமாகறவரை கவனமா இருங்க. என்னை உங்க தங்கையா நினச்சிக்கங்க. உங்களுக்கு என்ன தேவைனாலும் என்கிட்டே சொல்லுங்க!”

கனிவாக அவள் உபசரிப்பது ஆர்யனுக்கு பெருமிதத்தை தந்தாலும், கோணல்புத்தி கொண்ட கரீமாவிற்கு ருஹானா வீட்டின் உரிமையை எடுத்துக்கொண்டது போல தோன்ற, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் “நான் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கறேன். களைப்பா இருக்கு” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

“பெரிய கஷ்டம் தாண்டி வந்திருக்கா. கொஞ்சம் நேரம் பிடிக்கும். கடந்து வந்துடுவா” என்று அம்ஜத் சொல்ல, ஆர்யன் “அண்ணி தைரியமானவங்க. எல்லாம் சரியாகிடும். நீங்க கவலைப்படாதீங்க, அண்ணா!” என்றான்.

ஆர்யன் இவானுக்கு மருத்துவமனை சென்று தடுப்பூசி போடவேண்டும் என நினைவுப்படுத்த, “எனக்கு லேசா பயமா இருக்கு, சித்தப்பா” என்று இவான் சொன்னான்.

“பயப்பட எதுவும் இல்ல, அன்பே! நானும் உன் சித்தப்பாவும் உன் பக்கத்தில தான் இருப்போம்.”

“சிங்கப்பையா! நீ சொல்லி இருக்கியே, சித்தியும் சித்தப்பாவும் உன் அம்மா அப்பாவை போலன்னு.”

“ஆமா, சொன்னேன்!”

“அப்போ உன் அம்மா அப்பா உன்கூட இருக்கும்போது நீ ஏன் பயப்படணும்?”

“உன் சித்தப்பா சொல்றது சரிதான். நாங்க உன்னை எப்பவும் தனியா விட மாட்டோம், ஆருயிரே!”

———

“ஆர்யன் நாகப்பாம்போட ஆட்டத்துக்கு மதிமயங்கிட்டான். நான் இங்க அடிமேல அடி வாங்கிட்டு இருக்கேன். ஆனா அவங்க..” என்று கரீமா அறையில் பூச்சாடிகளை எட்டி உதைத்தாள்.

“இருக்கட்டும். நான் யார்னு காட்றேன் அவளுக்கு! அவ என்னோட தங்கையாம்! கேவலம்!”

———

காபி கொண்டுவந்து கொடுத்த சல்மா மீது ஜவேரியா கோபப்பட்டாள். “நீ சொன்ன காரியம் ஒன்னும் உருப்படியா நடக்கல. உன் அக்காவும் தப்பிச்சிட்டா. எங்களுக்கு தான் நஷ்டம்.”

“நான் என்ன செய்றது? நான் கைகாட்டி விட்டேன். நீங்க தான் எல்லாம் செஞ்சீங்க. அந்த ஒலிப்பதிவு….?” என்று சல்மா இலேசாக ஆரம்பிக்க, ஜவேரியா காபிக் கோப்பையை தட்டிவிட்டாள்.

“போதும், நிறுத்து! போலீஸ் மிராஸையும் அவன் ஆட்களையும் விரட்டிட்டு இருக்காங்க. கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலனா அர்ஸ்லான் அவங்களை சுட்டு கொன்னுருப்பான்.”

சூடான காபி கொட்டிய இடத்தை வலிதாங்காமல் ஊதிவிட்டு கொண்டிருந்த சல்மாவின் முடியை பிடித்து தள்ளிவிட்டாள் ஜவேரியா.

“பணமும் கிடைக்கல. நீ என்னன்னா ஒலிப்பதிவை கேட்டுட்டு வந்து நிக்கறே! ஓடிப்போ! ஆனா ஒன்னு… யார் அர்ஸ்லானுக்கு அந்த இடத்தை பத்தி சொன்னாங்களோ அவங்களை கண்டுபிடிச்சி கண்டந்துண்டமா வெட்டி நாய்களுக்கு உணவா போட்ருவேன்.”

நடுங்கிப்போன சல்மா அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

———

தடுப்பூசி போட்ட இடத்தை இவான் சாராவிடம் காட்ட, அவர் அவன் கையை பற்றி ஊதிவிட்டார். “சின்ன சாரோட எல்லா நோயும் பறந்து போகட்டும்.”

“ஆமீன்! நான் அழவே இல்ல, சாரா ஆன்ட்டி” என்று அவன் சொல்ல, சாரா அவன் கன்னத்தை தடவி முத்தமிட்டு சமையலறையை விட்டு நகர்ந்தார்.

“சித்தப்பா! நாம இன்னைக்கு வெளிய போகலாமா?” பழம் வெட்டிக்கொண்டிருந்த ருஹானாவின் அருகே நின்ற ஆர்யனிடம் கேட்டான். “இன்னும் ரெண்டு நாளைக்கு இல்ல சிங்கப்பையா!”

“நீயும் நல்லா சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமா வச்சிருக்கணும், அன்பே! அப்போ தான் வெளிய போகமுடியும்” என்று சொன்ன ருஹானா பழக்கலவையை அவனுக்கு கொடுத்தாள்.

“எல்லா பழங்களையும் எனக்கு கொடுத்துட்டீங்களே சித்தி? உங்களுக்கு ஒரு ஆப்பிள் தானே இருக்கு?”

அந்த ஆப்பிளை கையில் எடுத்த ஆர்யனுக்கு தேனிலவு நினைவு வர, அதை இரண்டாக வெட்டி ஒரு பாதியை ருஹானாவிற்கு கொடுத்தான். “நாம வாழ்க்கையை பகிர்ந்துக்கலாம்னு ஏற்கனவே உறுதி செய்திட்டோம் தானே?”

ருஹானா புன்னகையுடன் ஆமென தலையாட்டி பழத்தை சாப்பிட, ஆர்யனும் சாப்பிட்டான்.

“என்னோட சாலட்ல கூட நீங்க எடுத்துக்கலாம்” என்றான் இவான் சிரிப்புடன்.

———

ருஹானா அவர்களின் கல்யாண புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்க, ஆர்யன் வழக்கம்போல பின்னால் வந்து நின்றான். அவள் அவளின் உருவத்தை தடவிக்கொடுக்க அவள் அருகே நெருங்கி வந்தான். அவளை பார்த்ததும் புகைப்படத்தை பின்னால் மறைத்த ருஹானா ஏதோ சொல்ல வர, ஆர்யன் கையை வைத்து அவள் வாயை மூடினான்.

“சிலசமயம் இதயம் ஓடுற வேகத்துக்கு நாம ஈடுகொடுக்க முடியறது இல்ல. இதயத்தோட ஓட்டத்துல நான் ரொம்ப பின்தங்கிட்டேன். இப்போ அதை ஈடுசெய்ய நினைக்கறேன். நீயும் அப்படித்தான்னு எனக்கு தோணுது.

நாம இவானுக்காக இந்த கல்யாணம்னு சொல்லிக்கிட்டோம். இது ஃபார்மாலிட்டின்னு சொன்னோம். நிறைய துன்பங்களை சேர்ந்தே அனுபவிச்சோம். மரணம் வரை போயிட்டு வந்தோம். ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்தோம். இது எதுவும் ஃபார்மாலிட்டி இல்ல.

கல்யாணம் ஃபார்மாலிட்டியாக இருந்தாலும் நாம இங்க நெஜமா தான் இருந்தோம்” என்று தன் நெஞ்சை தொட்டுக்காட்டிய ஆர்யன் “இப்போ நம்ம கல்யாணத்தை நிஜமாக்க நான் விரும்பறேன்” என்றான்.

ருஹானா பதில் சொல்லாமல் விழித்து நிற்க “சித்தி! தயிர் என் சட்டையில கொட்டிடுச்சி!” என்று இவான் உள்ளே ஓடிவந்தான்.

“வா, சட்டை மாத்திக்கலாம் கண்ணே!”

“சித்தி! ஏன் உங்க கன்னம்லாம் சிவந்து இருக்கு? உங்களுக்கு காய்ச்சலா?”

“ஒன்னுமில்ல, அன்பே! வா போகலாம்” என்று ருஹானா அவன் கைப்பிடித்து வெளியே கூடிப்போக, ஆர்யன் “நான் உன் பதிலுக்காக காத்திருக்கேன்” என்றான்.

இவானின் அறை வந்து அவனின் சட்டையை கழட்டி வேறு சட்டை அணிவித்துவிட்ட ருஹானாவின் காதில் ஆர்யனின் குரலே எதிரொலித்தது.

“சித்தி! தலைகீழா சட்டையை போட்டு இருக்கீங்க” என்று இவான் சிரிக்க, வெளியே நடந்து சென்ற நஸ்ரியாவை பார்த்த ருஹானா அவளை உள்ளே அழைத்தாள். அவளிடம் இவானை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு பின்பக்க தோட்டத்திற்கு சென்றாள்.

“கல்யாணத்தை நிஜமாக்கப் போறாரா? அப்படின்னா… திருமணமானவங்க போல நடக்கணுமா?” என வெட்கப் புன்னகையும் பயமுமாக அவள் தோட்டத்தில் நடைபோட, மேன்மாடத்தில் வந்து நின்ற ஆர்யன் அவளை பார்த்தான்.

அவனை பார்த்துவிட்ட ருஹானா “உன்னை பைத்தியம்னு நினைக்க போறார்” என்றபடி எலுமிச்சைபழம் பறிக்க வந்தது போல பாவனை செய்துவிட்டு இரண்டு பழங்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

———

Advertisement