Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 135

கடத்தல்காரர்களிடமிருந்து தகவல் வந்தால் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு தன்வீர் பிடிபட்டவனோடு காவல்நிலையம் சென்றுவிட, கரீமாவிற்காக கவலைப்பட்ட ஆர்யனுக்கு ருஹானா நம்பிக்கை அளிக்க, இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ருஹானா தயக்கமின்றி தன் கையை பற்றுவது கண்டு வியந்த ஆர்யனுக்கு அவள் துணையில்லாமல் சிரமமான இக்காலத்தை கடந்திருக்க முடியாது எனவும் அவனுக்கு தோன்றியது.

சிறையிலிருந்து வந்த ஜவேரியாவின் ஆணையின்படி மிராஸ் ஆர்யனுக்கு அழைத்து குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கே பணம் கொண்டுவருமாறு கேட்க, ஆர்யன் பணத்துடன் அங்கே விரைந்து கிளம்பினான். அவனுக்கு முன் ஓடிய ருஹானா அவனை கார் கதவை திறக்கவிடாமல் அடைத்துக்கொண்டு நின்றாள். “தனியாவா போகப்போறீங்க?”

“விவாதத்துக்கு இப்போ நேரமில்ல. வழி விடு!”

“என் இடத்துல நீங்க இருந்தா என்னை தனியா போக விடுவீங்களா?”

“கண்டிப்பா மாட்டேன். ஆனா என்னால இப்போ உன்னை கூட்டிட்டு போகமுடியாது. நீ வரேன்னு சொன்னா நானும் போகமுடியாது. இன்னொருமுறை உனக்கு இடர் வர நான் விடமாட்டேன். ஆனா நான் இங்கயே இருந்தா அண்ணியை மீட்கமுடியாது. என்னை இக்கட்டுல தள்ளாதே! என்னை போகவிடு!”

சிறிது யோசித்த ருஹானா எட்ட இருந்த பாதுகாவலனை அழைத்தாள். ஓடிவந்த அவன் பணிவுடன் “சொல்லுங்க, மேடம்!” என்றான். ஆர்யன் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, ருஹானா பாதுகாவலனிடம் “உங்க துப்பாக்கியை கொடுங்க!” என்று கேட்டாள்.

அவன் தயங்கி, ஆர்யனின் முகம் பார்க்க அவனோ ருஹானாவிடமிருந்து பார்வையை திருப்பவில்லை. ஆர்யனை பார்த்தபடியே ருஹானாவிடம் துப்பாக்கியை கொடுத்த அவன் தன் பழைய இடத்துக்கு சென்று நின்றுகொண்டான்.

“இந்த முறை… பாதுகாப்பு இல்லாம உங்களை நான் அனுப்பமாட்டேன்” என்று அவள் கலக்கமாக சொல்ல, ஆர்யன் அவளைத்தான் யோசனையாக பார்த்திருந்தான்.

எப்போதும் துப்பாக்கி வைத்திருந்த அவனிடமிருந்து அதை விலக்க அவள் பட்டபாடும், கொள்கைமுடிவாய் துப்பாக்கியை தொடக்கூடாது என அவன் முடிவெடுக்க காரணமாக அமைந்தவளே இன்று அதை தருவதும் அவனுக்கு வியப்பையே தந்தன.

“உங்களுக்கு எதுவும் ஆகிட… காயம் படக்கூடாது” என்று சொன்னவளின் கையிலிருந்து அவன் துப்பாக்கியை எடுக்க, அவள் அதை விடுவித்தாள் இல்லை.

நீட்டிய துப்பாக்கியை விடாமல் அவன் கண்களில் கெஞ்சுதல் பார்வையை பதித்த ருஹானா “நான் உங்ககிட்டே கேட்கறது ஒன்னே ஒன்னுதான். தயவுசெய்து நீங்க எச்சரிக்கையா இருக்கணும். நீங்களும், கரீமா மேடமும் பாதுகாப்பா திரும்பி வந்துடுங்க. நானும் அம்ஜத் அண்ணாவும் உங்களுக்காக காத்திருப்போம். வந்ததும் இதை திருப்பி கொடுத்துடுங்க. கவனமா இருங்க!” என்றாள்.

“நிச்சயமா! நான் உயிரோட பாதுகாப்பா திரும்ப எனக்கும் நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கு” என்று சொன்ன ஆர்யன் துப்பாக்கியை வாங்கி இடுப்பில் செருகிக்கொண்டான்.

அவனை பார்த்தபடியே ருஹானா வழிவிட்டு விலக, ஆர்யன் காரை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

———

சிறையில் சல்மா ஆர்யனுக்கு எப்படி தகவல் அனுப்புவது என தீவிரமாக யோசித்துக்கொண்டு இருக்க, தற்செயலாக குலாம் எனும் பெண்கைதியும் மறைவாக அலைபேசியில் செய்தி அனுப்புவதை பார்த்துவிட்டாள். அவளிடம் கெஞ்சிய சல்மா கூடிய சீக்கிரம் குலாமிற்கு நிறைய பணம் தருவதாக ஆசைகாட்டி, சல்மாவிடம் எஞ்சியிருந்த நல்ல உடைகள் சிலவற்றை தந்து அவளின் அலைபேசியை வாங்கிக்கொண்டாள்.

காரை ஓட்டிக்கொண்டிருந்த ஆர்யன் சல்மா அனுப்பிய குறுஞ்செய்தியை படித்துவிட்டு தன்வீருக்கு அழைத்தான். “தன்வீர்! எனக்கு இப்போ ஒரு குறுஞ்செய்தி வந்தது. மாவு தொழிற்சாலைக்கு பக்கத்தில இருக்கற மலை மேல அண்ணியை கொலை செய்யப்போறதா தகவல் வந்திருக்கு.”

“அது உங்களுக்கான வலையா இருக்கலாம், ஆர்யன்!”

“ஆனாலும் என்னால அங்க போகாம இருக்க முடியாது,  தன்வீர்!”

“யாரோ உங்களை ஏமாத்துறாங்க. அவசரப்படாதீங்க! யோசிங்க!”

“தன்வீர், நீ கேஸ் ஸ்டேஷனுக்கு போ! நான் மலைக்கு போறேன். அதான் சரி!” என்று சொல்லிவிட்டு ஆர்யன் காரை திருப்பினான்.

——–

விடுதலை செய்கிறேன் என கரீமாவை மிராஸ் தன்னோடு அழைக்க, அவள் அதை நம்பாமல் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தாள். கோபமடைந்த மிராஸின் கையாள் அவளை அங்கேயே கொன்றுவிடலாம் என துப்பாக்கியை அவள் தலைமேல் வைத்தான்.

“டேய்! உனக்கு அறிவில்ல? இங்கயே சுட்டீனா பிணத்தை யார் அப்புறப்படுத்தறது? அது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியுமில்ல? மலை மேல கூட்டிட்டு போய் உருட்டி விட்டுடலாம். நமக்கு வேலை மிச்சம்” என மிராஸ் சொன்னதை கேட்ட கரீமாவிற்கு உயிர்பயம் வாட்ட, நடுநடுங்கிப் போனாள்.

“தயவுசெய்து என்னை கொன்னுடாதீங்க! உங்களுக்கு எவ்வளவு பணம் வேணுமோ தரேன்!”

“வாயை மூடு!”

“எனக்கு சாகவேணாம். என்னை விட்ருங்க. ப்ளீஸ்!” ஆணவம் படைத்த கரீமா கெஞ்சி கதறினாள். மிராஸின் காலில் விழுந்தாள்.

“சத்தம் போடாதே!” இருவரும் அவளை குண்டுகட்டாய் தூக்கி காரில் ஏற்றினர். “என்னை விடுங்க, ப்ளீஸ்! உதவி! உதவி! என்னை காப்பாத்துங்க!” அவளின் கெஞ்சல் மூடிய காரின் வெளியே கேட்காமலேயே போயிற்று.

காரோடு கூட்டாளி கீழே நிற்க, மிராஸ் கரீமாவை மலையுச்சிக்கு இழுத்து சென்றான்.

“நான் உங்களை காட்டிக்கொடுக்க மாட்டேன்! என்னை விட்டுங்க!”

“ஆக கரீமா அர்ஸ்லான் தன்னோட சக்தியை இழக்கறாங்க. கரீமாவின் கதை முடிந்தது” என அவன் சிகரத்தில் அவளை மண்டியிட வைத்து துப்பாக்கியை உயர்த்த கரீமா கண்களை மூடிக்கொண்டாள்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும் கரீமா குனிந்து தன் நெஞ்சை பார்த்தாள். அங்கே இரத்தம் எதும் வராமல் போகவே நிமிர்ந்து பார்க்க, மிராஸ் தோளில் இரத்தம் வழிய சுருண்டு விழுந்தான்.

சற்று தள்ளி துப்பாக்கி ஏந்திய ஆர்யன் நின்று கொண்டிருந்தான்.

———

அம்ஜத்திற்கு புதுவகையான செடிகளை பற்றி இணையத்தில் காட்டிய ருஹானாவால் என்ன சமாதானம் செய்தும் அவனை சமாளிக்க முடியவில்லை. “ருஹானா! கரீமா வந்துடுவா தானே?”

அவள் கலக்கத்துடன் தலையாட்ட, அம்ஜத் “நீயும் பயப்படறே! பயத்தை மறைக்கறே! கரீமாவுக்கு எதாவது கெட்டது நடந்திருந்தா.. அவளை நான் மறுபடியும் பார்க்க முடியாம போனா.. இப்படி என் மண்டைல ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு. அதை என்னால நிறுத்த முடியல. நான் என்ன செய்ய?” எனக் கேட்டான்.

அவள் பதிலை எதிர்பாராமல் அம்ஜத் சோபாவில் அமர்ந்து நிலையில்லாமல் ஆடிக்கொண்டே “நீ ஆர்யன் மேல கோபமா இருக்கலாம். அவனோட சண்டை போடலாம். ஆனா ஆர்யனுக்கு கெடுதல் நடந்திட்டா உன்னால மூச்சு விடமுடியுமா?” என கேட்க, ருஹானா இல்லையென தலை அசைத்தாள்.

“அப்படித்தான் எனக்கு கரீமாவும். அவள் வரலனா நான் இல்ல” என்று அம்ஜத் கலங்க, அவன் கைகளை பிடித்துக்கொண்ட ருஹானா “நான் அவரை நம்புறேன், அம்ஜத் அண்ணா! என்ன தடை வந்தாலும் அவர் வாக்கை காப்பாத்துவார். உங்களுக்காக அவர் கரீமா மேடமை கூட்டிட்டு வந்திருவார். நாம காத்திருப்போம்னு அவருக்கு நல்லா தெரியும். நீங்க கவலைப்படாதீங்க!” என்றாள்.

ஆர்யனுக்கு போன் செய்ய தயங்கிய ருஹானா தன்வீருக்கு அழைப்பெடுத்தாள். அவன் அதை ஏற்கவில்லை எனவும் அம்ஜத் அமைதியிழந்தான். “எதோ கெட்டது நடந்திருக்கு” என அவன் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தான்.

அப்போது வாசற்கதவு திறந்து ஆர்யனும் கரீமாவும் உள்ளே வர, இருவருக்கும் உயிர் மீண்டுவர, எழுந்து அங்கே சென்றனர்.

உதடு கிழிந்து, முகம் வீங்கி, இடதுகை விரல்கள் ஒடிந்து மாவுக்கட்டுப் போட்டிருக்க, நெற்றியில் காயம், உடலெங்கும் இரத்தக்கட்டுகள் என வந்த கரீமாவை அம்ஜத் பாய்ந்து சென்று அணைத்துக்கொண்டான். “கரீமா! நீ நல்லா இருக்கியா?”

“எனக்கு ஒன்னுமில்ல, டியர்” என கரீமா யாரையும் கண்ணெடுத்து பாராமல் பேச, அவள் காயங்களை தடவி பார்த்த அம்ஜத் அவள் நெற்றியில் முத்தமிட்டான். கரீமாவை ஒரு நொடியே நோக்கிய ருஹானா ஆர்யனை நன்றி பெருகும் விழிகளால் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

“நீ உன் வாக்கை காப்பாத்திட்டே! என் உயிரை எனக்கு திருப்பி கொடுத்துட்டே! நன்றி ஆர்யன்!” என்று அம்ஜத் தம்பியை கட்டிக்கொண்டான்.

“அண்ணா! சின்ன விபத்து தான். ஆனாலும் அண்ணிக்கு ஓய்வு தேவை. நீங்க மாடிக்கு கூட்டிட்டு போங்க. அவங்களை பார்த்துக்கங்க” என அண்ணனுக்கு பொறுப்பை ஒப்படைத்து அவனை திசைமாற்றி விட்டான்.

அம்ஜத் அவளை அழைத்து செல்லவும், அதுவரை கண்ணால் பேசிக்கொண்டிருந்த இருவரும் நெருங்கினர். “அவங்களுக்கு ரொம்ப அடிபட்டு இருக்கு. ஏன் ஹாஸ்பிடல்ல தங்கவைக்கல?” என ருஹானா கேட்க, ஆர்யன் “அவங்க வீட்டுக்கு வரணும்னு சொல்லிட்டாங்க” என்றான்.

“அப்புறம் நீங்க… நல்லா இருக்கீங்க தானே? உங்களுக்கு ஒன்னும் அடிபடலயே?” என அவள் பதட்டத்துடன் வினவ, ஆர்யன் “நான் நல்லா இருக்கேன்” என்றான்

“உண்மையா தானா? நீங்க காயம்பட்டா கூட சொல்லமாட்டீங்களே!”

“இப்போதிலிருந்து என்னிடம் கேள்வி கேட்கறது நீயா இருந்தா, நான் எதையும் உன்கிட்டே இருந்து மறைக்காம சொல்லிடுவேன்” என்று அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்வையை பதித்தான்.

“நீங்க திரும்பவும் சாதிச்சிட்டீங்க! நீங்க கரீமா மேடமை மட்டும் இல்ல அம்ஜத் அண்ணாவையும் காப்பாத்திட்டீங்க! அவங்களுக்கு எல்லாம் பழையபடி திரும்பிடும்.”

“உனக்கும் பழையபடி எல்லாம் கொண்டு வரணும்னு தான் நான் ஆசைப்படறேன்” என்று அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல, அவள் தலையை குனிந்துகொண்டாள்.

“அப்புறம்.. துப்பாக்கியை அதோட சொந்தக்காரர்ட்ட சேர்த்துட்டேன்” என்று ஆர்யன் அதேகுரலில் சொல்ல, ருஹானா நிமிர்ந்து அவனை பார்த்து நன்றி சொன்னாள்.

———-

“நானும் எத்தனையோ விதமா முயற்சி செய்து பார்த்துட்டேன். ஆனா இது சேரவேமாட்டேங்குது ஜாஃபர்!” ஆர்யன் பேனாவை விரக்தியாக மேசையில் வைத்தான்.

“சீனதேசத்துல ஒரு பழக்கம் இருக்கு, சார்! அவங்க உடைந்த பொருட்களை தூக்கிப் போடுறது இல்ல. அது உபயோகித்தவரின் நினைவுகளை சுமந்துட்டு இருக்குன்னு அவங்க நம்புறாங்க. தங்கத்தை உருக்கி அதை ஒட்டி பாதுகாக்கறாங்க.”

“குப்பைல போக வேண்டிய பொருள் இப்போ மதிப்புள்ளதாகிடுது. அன்பால பத்திரமா போற்றப்படும் பொருளை விட சிறந்தது வேற எதுவும் இல்ல.”

“உடைந்த பொருள் உணர்த்தும் விஷயங்கள் பல. அது தூய அன்பை தெரிவிக்குது. கவனமா பொருட்களை கையாளணும்னு எச்சரிக்குது. உடைக்கப்பட்டு சரிசெய்யப்பட்ட பொருள் முன்பைவிட வலிமையா மாறுது.”

“உங்க கதையில இந்த பேனாவால எழுத வேண்டிய அத்தியாயங்கள் நிறைய இருக்கு. அதனால உங்க முயற்சியை நீங்க தளரவிடக்கூடாது” என்று நீளமாக பேசிய ஜாஃபர், சட்டைப்பையிலிருந்து லைட்டரை எடுத்துக் கொடுத்தான்.

ஆர்யன் உடைந்த பகுதிகளை லேசாக சூடேற்றி அதை ஒட்டவைக்க, அவனின் அத்தனை முயற்சிகளுக்குப்பின்  ருஹானா பரிசளித்த அவனின் பேனா ஒட்டிக்கொண்டது. நம்பமுடியாமல் அதை திருப்பி திருப்பி பார்த்த ஆர்யனின் முகம் மலர்ந்தது. வெளிமாடத்தில் அமர்ந்திருந்தவன் தலைநிமிர்ந்து ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வானை நோக்கினான். அங்கே துருவ நட்சத்திரம் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது.

இரட்டிப்பு சந்தோசத்துடன் படுக்கையறைக்கு உள்ளே நுழைந்த ஆர்யன் காலியாக கிடந்த கட்டிலையும், சோபாவையும் பார்த்து மனம் வாடி சோபாவில் அமர்ந்தான்.

———-

Advertisement