Advertisement

இருட்டில் உருவம் தெரிய ஆர்யன் விளக்கை போட்டு பார்க்க, ருஹானா கண்ணீருடன் அமர்ந்திருப்பது கண்டு பதறியவன் “ஏன் அழறே?” என்று வினவ, அவள் அதற்கு பதில் சொல்லாமல் “அம்ஜத் அண்ணா தூங்கிட்டாரா?” என கேட்டாள். அவன் ஆமென தலையசைத்தான்.

“நீங்க உங்களையே குற்றம் சாட்டிக்காதீங்க. நீங்க நல்ல சகோதரன். உங்க கூட இருக்கறவங்க எப்பவுமே துன்பப்பட மாட்டாங்க, ஏன்னா அவங்களை பாதுக்காக்க நீங்க எதுவும் செய்வீங்க” என்று சொல்லி படிக்கட்டில் ஏறி சென்றாள்.

‘என்னுடன் இருப்பவர்கள் என்னால் துன்பப்படுவார்கள், அதனால் நெருங்காதே’ என அவன் அப்போது சொன்னதை தவறு என நிரூபணம் காட்டி செல்கிறாள் என புரிந்து கொண்டவனுக்கு பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது.

கரீமா கிடைக்காமல் சிறிதுகூட கண்மூடாமல் அங்கேயே விழித்து அமர்ந்திருந்தவனுக்கு காலையில் ருஹானா காபி கொண்டுவந்து தந்தாள். அப்போது வாசல் மணிசத்தம் கேட்க, நஸ்ரியா கதவை திறக்க செல்ல, “என் மேல கோபப்படாதீங்க” என்று ருஹானா சொல்ல, ஆர்யன் புரியாது பார்த்தான்.

தன்வீர் ஒரு பெட்டியுடன் உள்ளே வர, புரிந்து கொண்டு அவளை முறைத்தான் என்றாலும் தன்வீரை வரவேற்றான். “காவல் துறைக்கு தெரியாமல் தான் நான் வந்திருக்கேன். கவலைப்படாதீங்க, ஆர்யன்! அடுத்து உங்களுக்கு போன் வரும்போது அவன் எங்க இருந்து பேசுறான்னு கண்டுபிடிச்சிடலாம்” என்று சொன்ன தன்வீர் பெட்டியை திறந்து வேலையை ஆரம்பித்தான்.

பணத்துடன் ரஷீத் அங்கே வர, தன்வீர் “பணம் வாங்கிட்டு பெரும்பாலான கடத்தல்காரங்க கடத்தினவங்களை கொன்னுடுவாங்க” என்று சொல்ல, ருஹானா பயந்துபோய் “ஏன்?” எனக் கேட்டாள்.

“ஏன்னா அவங்க அடையாளம் சொல்லிடக்கூடாதுன்னு தான். நாம பணத்தை பகடையா வச்சி அவங்களை பிடிப்போம். அப்போ தான் கரீமா மேடமை உயிரோட காப்பாத்த முடியும்” என்றான்.

“எல்லாம் செட் செய்திட்டேன். போன் வந்தா நீங்க பேச்சுவார்த்தையை சில நிமிடம் நீட்டி பேசுங்க” என தன்வீர் சொல்ல, எந்த அழைப்பும் வரவில்லை.

நிமிடங்கள் பரப்பரப்பாக கடந்தன. பதற்றமாக நடந்த ஆர்யனுக்கு தண்ணீர் கொண்டுவந்து கொடுத்த ருஹானா, கிடைத்த தனிமையில் அவனிடம் மன்னிப்பு வேண்டினாள். “நீ செய்தது சரியான செயல்” என ஆர்யன் ஏற்றுக்கொண்டான்.

கடத்தல்காரனிடம் இருந்து அழைப்பு வர, ஆர்யன் கரீமாவிடம் பேசவேண்டும் என கேட்டான். அதை மறுத்துவிட்டு திரும்பவும் இடத்தை சொல்லாமல் பணம் தயாரா என்று மட்டும் கேட்டு மிராஸ் போனை வைத்துவிட்டான். கரீமாவிடம் இருந்து ஒரு விஷயமும் உரிக்க முடியவில்லை போலும். அதற்கு அவகாசம் வேண்டியே நேரத்தை இழுத்தடிக்கிறான்.

மிகச்சரியான இடத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சில வினாடிகள் மிராஸ் பேசியதை வைத்தே தன்வீர் எந்த பகுதி என கண்டுபிடித்தவன் அந்த பகுதியில் இருந்த அவனுக்கு தெரிந்த காவல் துறைக்கு தகவல் சொல்லும் நபரிடம் சமூக விரோதிகள் உலவும் மறைவான இடத்தை பற்றி விசாரிக்க சொன்னான்.

அவனுக்கு வந்த முகவரியை ஒரு தாளில் எழுதிய தன்வீர் “அடுத்த போன் வந்தா போதும். சரியான இடம் தெரிஞ்சிடும்” என்றான். அப்போது வேறுவேலை விஷயமாக தன்வீரின் அலைபேசியில் அழைப்பு வர, போனில் பேசியவாறே பின்பக்க தோட்டத்திற்கு சென்றான்.

அவன் எழுதிய முகவரியை பார்த்துக்கொண்ட ஆர்யன் “நான் அங்க போய் தேடி பார்க்கறேன்” என்று வெளியே கிளம்ப, ருஹானா அவனை தடுத்தாள்.

“இருங்க, தன்வீரும் வரட்டும்!”

“தன்வீர் போலீஸ்ன்னு தெரிஞ்சா அண்ணியை அவன் கொன்னுடுவான்” என்று அவன் வேகமாக வெளியேற, ருஹானா அவனுக்கு முன் ஓடிச்சென்று காரில் அமர்ந்து கொண்டாள்.

“கீழ இறங்கு. நான் உன்னை ஆபத்துல சிக்க வைக்க மாட்டேன்” என்று ஆர்யன் உறுதியாக மறுக்க, “உங்க கூட இருக்கும்போது எனக்கு ஒரு ஆபத்தும் வராது” என்று அவனை விட திண்ணமாக ருஹானா சொல்ல, ஆர்யன் வாயடைத்து போனான்.

ஆர்யனின் கார் வெளியே செல்வதை கண்ட தன்வீர் அலைபேசியில் ருஹானாவை அழைத்தான். “ருஹானா! எங்க போறீங்க?”

“நீ எழுதி வைத்த பகுதிக்கு தான்” என்று சொல்லிவிட்டு வேறு எதும் பேசாமல் ருஹானா போனை வைத்துவிட, தன்வீர் அவன் காரை எடுத்து அவர்களை பின்தொடந்தான்.

———-

நிடா என்னவெல்லாமோ பேசி கரீமாவை பலவீனப்படுத்தி தகவல்களை கறக்க முயன்றாள். இறுதியில் “நீயென்ன பெரிய இவளா? இவர்கள் பெரிய தாதாக்கள். உன்னால எதுவும் செய்ய முடியாது. உன்னைவிட சக்தி வாய்ந்தவர்களைலாம் கொன்னு தூக்கி போட்டு இருக்காங்க. உனக்கும் அதே கதி தான்” என்று அவள் பயத்தை தூண்டி அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தினாள்.

“என்னை யார்னு நினைச்சே? சேரியில பிறந்து மாளிகை ராணியாகி இருக்கேன். எப்பேர்ப்பட்ட ஆர்யன் அர்ஸ்லானையே என் கைக்குள்ள வச்சிருக்கேன். அவனுக்கே என்னோட குறுக்குபுத்தி சாமர்த்தியத்தை பத்தி தெரியாது. உனக்கு எப்படி தெரியும்? என் வழில குறுக்கிடறவங்களை எத்தனை சாமர்த்தியமா நான் அகற்றியிருக்கேன், தெரியுமா? அம்மாவை கொன்னு பையனை அனாதையாக்கி அவனை ஆசிரமத்துக்கு அனுப்பினேன். இன்னும் அவ தங்கச்சின்னு ஒருத்தி இருக்கா. அவளையும் கூடிய சீக்கிரம் துரத்தி விட்ருவேன். கோடிக்கணக்கான சொத்துக்கு நான் தான் அதிபதி. என்னை யாராலும் கொல்லமுடியாது. என்னை எப்படியும் ஆர்யன் காப்பற்றிடுவான். அதுக்கு அப்புறம் இவங்களைலாம் என்ன செய்றேன், பார்!”

நிடாவின் திட்டம் பலித்தது. கரீமா பேசியவற்றை அப்படியே ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த கருவியின் இயக்கத்தை நிறுத்தி மறைத்து வைத்துக்கொண்டாள்.

———

நகரத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் காரை கொண்டுவந்து நிறுத்திய ஆர்யன் “இதான் அந்த தகவல் சொல்லி சொன்ன கிடங்கு” என்றான்.

“ஆனா இங்க தான் கரீமா மேம் இருக்காங்கன்னு தெரியாதே!”

“நான் போய் பார்க்கறேன்” என்று ஆர்யன் இறங்க முற்பட, ருஹானா அவன் கையை பிடித்து தடுத்தாள். “இருங்க, தன்வீர் வரட்டும்!”

“அதுக்குள்ள அண்ணியோட உயிருக்கு ஏதாச்சும் ஆயிடுச்சான்னா என்ன செய்றது?”

“தயவுசெய்து போகாதீங்க!” என்று சொல்லி பார்த்தவள் அவன் கீழே இறங்குவதுகண்டு அவளும் இறங்கப்போக “வராதே! நீ காருக்குள்ளேயே உட்கார்ந்திரு. என் பின்னால வந்திராதே!” என எச்சரித்துவிட்டு ஆர்யன் உள்ளே சென்றான்.

“அல்லாஹ்! அவருக்கு உதவி செய்ங்க! அவரை காப்பாற்றுங்க!” என்று பிரார்த்தனை செய்தபடி ருஹானா அமர்ந்திருந்தாள்.

உள்ளிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கவும் “அச்சோ! அவர்கிட்டே துப்பாக்கி இல்லயே!” என்று பாய்ந்து ஓடினாள்.

அங்கே கீழே சுருண்டு கிடந்த உருவத்தை பார்த்து “இல்ல..” என கத்திக்கொண்டே அருகே ஓடியவள் அது வேற யாரோவென அறிந்தும் செயலற்று நின்றாள்.

அவள் பின்னால் இருந்து தொட்டதை உணர்ந்து பயந்து கண்ணீருடன் அவள் திரும்ப, ஆர்யன் கோபமாக “உன்னை வராதேன்னு சொல்லிட்டு தானே வந்தேன்? உனக்கு ஏதாவது ஆகிருந்தா?” என்று அவன் பேசவும், அவள் சுயநினைவடைந்து பாய்ந்து அவனை மிக இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

ஆர்யன் இழந்த அவனின் சொர்க்கம் மீண்டும் கிடைத்ததுபோல உணர்ந்தான். உடலில் புது இரத்தம் பாய அதுவரை அசைவின்றி நின்றவன் மெல்ல அவளை இலேசாக அணைத்து அவளை தட்டிக்கொடுத்தான்.

மூடிய கண்களில் நீர் வடிய, அவன் இருப்பை உணர ருஹானாவிற்கு பல நிமிடங்கள் தேவைப்பட்டது. மெல்ல விலகிய ருஹானா “அல்ஹம்துலில்லாஹ்! நான் ரொம்ப பயந்துட்டேன், உங்களுக்கு ஆபத்துன்னு…” என மூச்சுக்கு திணற, அவள் முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்தினான். “பயப்படாதே! எனக்கு ஒன்னுமில்ல.”

அவனை மேலும் கீழும் ஆராய்ந்தவள் “உங்களுக்கு எங்கயாவது அடிபட்டுடுச்சா? துப்பாக்கி சத்தம் கேட்டதும் உங்களை தான் சுட்டுட்டாங்களோன்னு கலங்கிட்டேன்” என சொல்ல, அவளின் பயம் அவனுக்கான கலக்கம் அவனின் மனதை தொட்டது. ஆர்யன் இல்லையென தலையாட்டினான்.

தடதடவென ஓடிவந்த தன்வீர் “ருஹானா! ஆர்யன்! நல்லா இருக்கீங்க தானே?” என கேட்க, ருஹானாவின் தோளை அணைத்தபடியே ஆர்யன் “ஆமா, எங்களுக்கு ஒன்னும் இல்ல” என்றான்.

“இவன்?”

“உயிரோட தான் இருக்கான். என்னை பார்த்ததும் சுட ஆரம்பிச்சிட்டான். நான் அவனை அடிச்சி மயக்கமாக்கிட்டேன். ஆனா அண்ணி இங்க இல்ல. எல்லா இடமும் தேடிட்டேன்.”

“அவன் சுட்ட குண்டு உங்க மேல பட்டுருந்தா?” என ருஹானா மீண்டும் அவனை சுற்றி பார்க்க, தன்வீர் “ருஹானா சொல்றது சரிதான். நான் வர்றவரை நீங்க காத்திருந்திருக்கலாம்” என்றான்.

“எல்லாம் வேகமா நடந்திருச்சி, தன்வீர்” என்ற ஆர்யன் ருஹானாவிடம் “இன்னும் பயப்படாதே! எனக்கு அடிபடல” என்று சொல்லி அவளை கையணைப்பிலேயே “வா, நாம வெளியே போலாம்!” என்று கூட்டி வந்தான்.

தன்வீர் மயங்கி கிடந்தவனை உசுப்பி விசாரணை மேற்கொண்டான்.

வெளியே வந்தும் அவளின் நடுக்கத்தை உணர்ந்த ஆர்யன் அவளின் குளிராடையை இறுக்கி போட்டுவிட்டான். “நான் சொல்லிட்டு தானே போனேன்? அப்புறமும் ஏன் உள்ள வந்தே? அபாயத்துக்குள்ள சிக்கியிருந்தா?” இருகைகளையும் பிடித்துக்கொண்டு கேட்டான்.

“நீங்களும் தானே அபாய வட்டத்துல இருந்தீங்க? துப்பாக்கி சத்தம் கேட்டதும் என்னால என்னை கட்டுப்படுத்த முடியல.”

“என் காரணமா உனக்கு அடிபட்டு இருந்தா?”

“இதுக்கு மேல நீங்க என்னை துன்பப்பட விடமாட்டீங்க” என்று அவள் சொன்ன சொற்கள் ஆர்யனின் மனக்காயங்களை நொடியில் ஆற்றியது.

———

சல்மா குளியலறையில் இருப்பது தெரியாமல் மறைவாக போன் பேசவந்த ஜவேரியா மிராஸ்ஸீக்கு அழைத்து அடுத்து செய்யவேண்டியவற்றை விவரித்தாள்.

“ஹலோ மிராஸ்! அந்த இடத்தை சீக்கிரம் காலி செய்ங்க. மிடாவை ஒலிப்பதிவு கருவியோட என்கிட்டே அனுப்பு. கரீமாவை மலையுச்சிக்கு கூட்டிட்டு போய் தள்ளிவிட்ருங்க. கவனம், அது தற்கொலை மாதிரி தெரியணும். அர்ஸ்லானை பணத்தோட பழைய கேஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்லு. அவனை அங்க பணத்தை வச்சிட்டு போக சொல்லு. அண்ணி வேணும்னு அவன் முரண்டு பிடிச்சா அவனையும் சுட்டு கொன்னுடு!”

பேசிமுடித்து குளியலறை கதவை திறக்க கைப்பிடியில் கைவைத்த ஜவேரியாவை அவசரமாக வார்டன் அழைப்பதாக சொல்லி ஒரு பெண் காவல் அதிகாரி அழைத்து சென்றார்.

உள்ளே உயிரை கையில் பிடித்துக்கொண்டு மூச்சு விடாமல் நின்ற சல்மா வெளியே வந்து “ஆர்யன்! அக்கா!” என அழுதாள்.

(தொடரும்)

Advertisement