Advertisement

ஜவேரியா சல்மாவிடம் “பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாங்க. இன்னைக்கு சாயந்தரம் பணத்தை வாங்கிட்டு உன் அக்காவை ஒப்படைச்சிடுவோம்” என்று சொல்ல, அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“இல்ல, இல்ல, இன்னும் ஒரு நாள் போகட்டும்.”

“அதுவரைக்கும் உங்க அக்காவை வச்சி ஊறுகாயா போடுறது? இன்னும் என்ன செய்ய சொல்றே? அவ கை, காலை உடைக்கவா?”

“என்ன செய்யணும்னு நான் சொல்றேன்.”

——-

அம்ஜத் ஆர்யனுக்கு போன் செய்து கரீமாவை அழைத்துகொண்டு வருகிறானா என்று கேட்க, “அண்ணி முக்கியமான வேலையில இருக்காங்க. நான் வெளிய காத்திட்டு இருக்கேன் அண்ணா!  சீக்கிரம் கூட்டிட்டு வரேன்” என்று அம்ஜத்தை அமைதியாக்க ஆர்யன் பலவாறு சிரமப்பட்டு பேசி வைத்தான்.

ருஹானாவிடம் “அண்ணனோட உயிரும் இப்போ ஆபத்துல இருக்கு” என்று ஆர்யன் பயப்பட, ருஹானா கரீமா கிடைத்துவிடுவாள் என்று நம்பிக்கையூட்டினாள்.

ரஷீத் “ஹல்லோ ஆர்யன்! ஒரு தகவல் கிடைச்சிருக்கு. பெரிய மீன் ஒன்னு மாட்டியிருக்குன்னு கடத்தலை தொழிலா செய்ற சமூக விரோதிகள் சிலர் பேசிக்கிட்டாங்களாம். அது கரீமா மேடமா தான் இருக்கும். அவங்களை எங்க வச்சிருக்காங்கன்னும் நம்ம ஆளுங்க கண்டுபிடிச்சிட்டாங்க. உங்களுக்கு அந்த இடம் பற்றிய தகவலை அனுப்புறேன்” என்று சொல்லவும், ரஷீத் சொன்ன திசையில் ஆர்யன் காரை பறக்க விட்டான்.

———

“எது நடந்தாலும் நீ காரை விட்டு வெளிய வரக்கூடாது” என்று ருஹானாவிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்ற ஆர்யனுக்கு கரீமாவின் இரத்தம் தோய்ந்த மோதிரம் மட்டுமே கிடைத்தது.

காருக்கு வந்து ருஹானாவிடம் அதை காட்டிய ஆர்யன் “நாம தாமதமா வந்துட்டோம். அண்ணியை இங்க தான் வச்சிருந்திருக்காங்க. இப்போ வேற இடத்துக்கு மாத்திட்டாங்க” என்று துக்கமாக சொல்லும்போது மிராஸின் அழைப்பு வந்தது.

“அர்ஸ்லான்! நாங்க கேட்ட பணம் கொடுக்காம எங்களை பின்தொடந்து வர்றியா? இப்போ உனக்கு அபராதம் ஐந்து மில்லியன் தினார். உன் அண்ணி வேணுமா வேணாமான்னு நீயே முடிவு செய்துக்கோ!”

அவன் பேசும்போதே கரீமாவை அடிக்கும் சத்தமும் அவளின் அலறலும் கேட்டது. “ஆர்யன்! என்னை காப்பாத்து! பணம் கொடுத்துடு!”

“ரெண்டு மணி நேரத்துல போன் செய்றேன். அங்க வந்து பணத்தை கொடு” என்று ஆர்யனுக்கு பேச வாய்ப்பளிக்காமல் மிராஸ் போனை வைத்திருந்தான்.

“இது என்னோட தப்பு. அவங்க போன் அழைப்புக்கு நான் காத்திருக்கல. நானா ஏதோ செய்திட்டேன். என்னோட தவறால இப்போ அண்ணன் உயிர் போகப்போகுது” என்று ஆர்யன் காரின் சக்கரத்தில் முஷ்டி கொண்டு அடித்தான்.

“இதுல உங்க தப்பு ஒன்னும் இல்ல. நீங்க அவங்களை மீட்க தானே பார்த்தீங்க?”

“என் தவறு தான்! நீ சொன்னது சரிதான். என் கூட இருக்கறவங்களுக்கு நான் துன்பம் தான் கொடுக்கறேன். உனக்கு… அண்ணனுக்கு… என்கிட்டே யாரும் வராதீங்க!” என்று ஆர்யன் உறுமினான்.

———-

மற்றுமொரு பாதாள கிடங்கில் அவர்கள் கரீமாவை கொண்டுவந்து தள்ள, “ஆர்யன் உங்களை கண்டுபிடிச்சிட்டான் தானே? அதனால தானே இடம் மாத்தியிருக்கீங்க? ஆர்யன் உங்களை துவம்சம் செய்திடுவான்” என்று கரீமா சத்தமிட, அவளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

“வீணா கத்தாதே! இவங்க நம்மை உயிரோட வெளிய அனுப்ப மாட்டாங்க!” என்று குரல் கேட்க, கரீமா திரும்பி பார்த்தாள். அங்கே நைந்த உடையுடன், கலைந்த முடியுடன் அழுக்காக ஒரு பெண் கட்டப்பட்டு கிடந்தாள்.

“நீ யார்?”

“என் பேரு நிடா. பணத்துக்காக என்னை கடத்தி வந்தாங்க. எத்தனை மாதமா நான் இங்க இருக்கேன்னு எனக்கே தெரியல.”

கரீமா பயந்துவிட்டாள். “உன்னை ஏன் கட்டி போட்டு இருக்காங்க?”

“பணம் கிடைச்ச பின்னாடியும் இவங்க என்னை விடல. என்னை கொல்லப்போறாங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. தப்பிக்க முயற்சி செய்தேன். அதான் சங்கிலில மாட்டிட்டாங்க” என்ற நிடா “இங்கிருந்து திரும்பி போக முடியும்னு நினைக்காதே. நம்ம பிணம் தான் வெளிய போகும்” என்று கரீமாவை மிரள வைத்தாள்.

——–

“உன் அக்கா செய்த குற்றங்களை எல்லாம் பேச வச்சி ரிக்கார்டர்ல பதிவு செய்றது அருமையான யோசனை. உனக்கு இவ்வளவு மூளை இருக்கும்னு நான் நினைக்கலயே!” என ஜவேரியா பாராட்ட, சல்மா பெருமிதமாக சிரித்தாள்.

“இதெல்லாம் என் அக்கா கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான். ஆனா அவ லேசுல வாயை திறந்து பேச மாட்டாளே!”

“நம்ம நிடா பெரிய அறிவாளி! எப்படியும் எல்லாம் கறந்துடுவா” என்ற ஜவேரியா “அப்புறம் உன் மச்சான் பெரிய தாதா போல? எங்க ஆளுங்களையே பிடிக்க நெருங்கி வந்துட்டான். சொன்ன பேச்சை கேட்க மாட்றான். அதுக்கு தண்டனையா இப்போ ஐந்து மில்லியனா தினார் கேட்டுருக்கோம்” என்று போகிற போக்கில் சொல்ல, சல்மா ஓடிச்சென்று அவளை வழிமறித்தாள்.

“யாரை கேட்டு இப்படி செய்தீங்க? என்னை ஒரு வார்த்தை கூட கேட்கல” என்று சல்மா குரல் உயர்த்த, ஜவேரியா அவள் கழுத்தை பிடித்தாள்.

‘யார்றா இவ? நான் எதுக்கு உன்னை கேட்கணும்? நீ கைகாட்டினதும் உன் வேலை முடிஞ்சது. நாங்க களத்துல இறங்கின உடனே இது எங்க திட்டம்.”

“நான் அப்படி சொல்லல, ஜவேரியா அக்கா!” என்று சல்மா அவள் காலை பிடிக்க, “இதே போல ஒழுங்கா பேசு! இல்லனா உன் நாக்கை பிடுங்கி உன்னையே சாப்பிட வச்சிடுவேன்” என்று மிரட்டி சென்றாள்.

———-

கரீமா இல்லாமல் இருவரும் வீடு திரும்ப, ஆவலோடு ஓடிவந்த அம்ஜத் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானான். அண்ணனின் படபடப்பை ஆர்யனால் சமாளிக்க முடியாமல் திணறினான்.

அம்ஜத்தின் கையை பிடித்து அமர வைத்த ருஹானா, கரீமாவிற்கு இலேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கூறி “உங்களை இப்படி பார்க்க கரீமா மேம் விரும்புவாங்களா?” என்று கேட்டாள்.

அம்ஜத் இல்லையென மறுக்க ஜாஃபர் உதவியுடன் அவனுக்கு உடை மாற்றவைத்தவள் “நாம அவங்களை வரவேற்க மலர்கொத்து செய்யலாமா?” என்று தோட்டத்திற்கு அழைத்து சென்றாள்.

நிம்மதியான ஆர்யன் “ஹல்லோ ரஷீத்! எல்லாத்தையும் நிறுத்து. அவன் கேட்ட பணத்தை தயார் செய்!” என்று கட்டளையிட்டான்.

——-

ஆர்யனுக்கு உணவு கொண்டு வந்த ருஹானா “நீங்க தெம்பா இருந்தா தான் அம்ஜத் அண்ணா தைரியமா இருப்பார். சாப்பிடுங்க. கரீமா மேடமை போய் கூட்டிட்டு வரணும் தானே?” என்றவள் அம்ஜத் உணவு சாப்பிட்டு மருந்தும் எடுத்துக்கொண்டு உறங்குவதாக சொல்லி சென்றாள்.

செல்லும் அவளையே காதலுடன் பார்த்திருந்த ஆர்யன் அவள் சொற்படி சாப்பிட ஆரம்பித்தான்.

——–

“அவர் இப்படி இருக்கும்போது என்னால எதும் செய்யமுடியலயேன்னு எனக்கு வருத்தமா இருக்கு, ஜாஃபர் அண்ணா! ஆறுதல் வார்த்தைகளுக்கும் இப்போ பயன் இல்ல.”

“நீங்க கூட இருக்கறதே ஆர்யன் சாருக்கு பலம் தான். அவர் தன்னோட சக்தியை உங்ககிட்டே இருந்து தான் எடுத்துக்கறார்” என்று ஜாஃபர் சொல்ல, ருஹானா அவனுக்கு நன்றி உரைத்தாள்.

அறைக்கு சென்றவளுக்கு நெடுநேரம் புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. ஆர்யன் நிலையும் அப்படித்தானே இருக்கும் என எண்ணி அவனுக்கு ஆறுதல் சொல்ல அவனது அறைக்கு செல்ல வந்தவளுக்கு உள்ளே செல்ல மிகுந்த தயக்கம் ஏற்பட்டது.

மனம் மாற்றி அவள் அறைக்கு திரும்பும்போது அம்ஜத் அறை திறந்திருப்பது கண்டு அங்கே சென்றாள். சகோதரர்கள் இருவரும் கைகோர்த்தபடி கட்டிலில் அமர்ந்திருப்பது கண்டு வாசலிலேயே நின்றுவிட்டாள்.

“கதவு திறந்திருக்கட்டும் ஆர்யன். கதவு மூடினா கரீமா இல்லாத இந்த அறை எனக்கு சிறை போல இருக்கு.”

“சரி அண்ணா! அப்படியே இருக்கட்டும். உங்களுக்கு தூங்க மாத்திரை கொடுத்து இருக்கேன். இப்போ உங்களுக்கு தூக்கம் வந்துடும்.”

“கரீமா நாளைக்கு வந்துடுவா தானே? அதுவரைக்கும் நீ என்கூட இருப்பே தானே?”

“ஆமா அண்ணா! நான் எப்பவும் உங்க கூட இருப்பேன். வாங்க, படுங்க!”

“சின்ன வயசுல நீ எண்ணுவியே அதே போல எண்ணு ஆர்யன். நம்மோட கடினமான நேரம் அப்படியே கடந்து போகட்டும்.”

“ஒன்னு, ரெண்டு, மூணு…..” என்று ஆர்யன் எண்ண ஆரம்பிக்க, இருபது எண்ணும்வரை அங்கே இருந்த ருஹானாவால் அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை. கீழே வரவேற்பறைக்கு ஓடிவிட்டாள்.

தமையனுக்கு துணையாக ஆர்யனின் செயல் அவளின் நெஞ்சை உருக்க, அங்கேயே சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

———

Advertisement