Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 134

“ஆர்யன்! வந்துட்டியா? நான் உனக்கு ஒன்னு காட்டணும். வா வா! இந்த பூச்செடி பார்த்தியா? இது உறைஞ்சி போய் வாடி இருந்ததுல? இப்போ பாரு! புது துளிர் விட்டுருக்கு” என்று அம்ஜத் மகிழ்ச்சியோடு அழைக்க, ஆர்யனும் ஆவலோடு அருகே சென்றான். “தெரியுது அண்ணா!”

“இந்த செடி பிழைச்சிடுச்சி. நீ எப்படி? ருஹானாட்ட மன்னிப்பு கேட்டுட்ட தானே?” என்று அண்ணன் சந்தேகமாக கேட்க, தம்பி ஆமென தலையாட்டினான். சந்தோசமாக அம்ஜத் “இப்போ பாரு ருஹானாவோட முகமும் இந்த பூப்போல மலர்ந்திடும்!” என்று சிரிக்க, ஆர்யன் அந்த செடியை பார்த்துக்கொண்டே நின்றான்.

——–

பொறுமை கடலினும் பெரிது எனும் சையத்தின் அறிவரையை கேட்டு ஆர்யன் உடைத்த பேனாவை ஒட்டவைக்க மீண்டும் முயற்சி செய்து தோற்க, ருஹானா சாராவிற்கு உதவியபடி வாகிதாவிடமிருந்து சமையலில் மனதை திருப்ப முயன்றாள்.

பெரிய கத்திரிக்காயின் உள்ளே மசாலா பொதிந்து செய்த ஆர்யனுக்கு பிடித்த கார்னியாரிக்கை ஓவனில் இருந்து ருஹானா வெளியே எடுக்கும்சமயம் அங்கே வந்த ஆர்யன் ”கார்னியாரிக் செய்றியா?” என்று மகிழ்வுடன் கேட்க, அவள் சங்கடத்துடன் புன்னகைத்தாள்.

அப்போது அவன் போன் அடித்தது. “ஆர்யன் அர்ஸ்லான்! கவனமா கேளு! உன்னோட அண்ணி இப்போ எங்ககிட்டே இருக்கா!”

“என்ன? யார் நீ?”

“பேசாதே! ஒரு மில்லியன் தினார் எங்களுக்கு வேணும். என்னோட போன் காலுக்காக காத்திரு. போலீஸ்க்கு போனா உன் அண்ணியோட பிணம் கூட உனக்கு கிடைக்காது.”

“என்னை மிரட்ட உனக்கு என்ன தைரியம்?” அவனுக்கு பதில் சொல்லாமலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது.

“கரீமா மேடமை கடத்திட்டாங்களா?” என்று ருஹானா பயத்துடன் கேட்க, “ஆமா, பணம் கேட்டு மிரட்டாறங்க” என்றான் ஆர்யன் கோபத்துடன்.

——–

ஒரு பாழடைந்த கிடங்கில் கைகள் கட்டப்பட்டு கிடந்த கரீமா பயந்து நடுங்கியபடி இருந்தாள். உள்ளே ஒரு பெண் வர, கரீமா குரலெடுத்து கத்தினாள்.

“என்ன நினைச்சிட்டு இதை செய்றீங்க?  என்னை விடுங்க! ஆழம் தெரியாம காலை விடுறீங்க! நான் கரீமா அர்ஸ்லான்!”

“உங்களை சந்தித்தது எனக்கு மிக சந்தோசம், கரீமா அர்ஸ்லான்!” என்று சொன்ன அந்த பெண் கரீமாவின் கன்னத்தில் மாறி மாறி ஓங்கி அடித்தாள். அடிதாங்காமல் கரீமா கீழே விழுந்தாலும் அவளை இழுத்து ஒரு பலகையின் மேல் அமர வைத்தவள் தொடந்து அடித்துக்கொண்டே இருந்தாள்.

“உங்களுக்கு என்ன வேணும்? ஏன் இப்படி என்னை கொடுமைப்படுத்துறீங்க? ஆர்யன் வந்தான்னா நீங்க தொலைஞ்சீங்க! என்னை காப்பாற்ற கண்டிப்பா வருவான்” என்று கரீமா கதறியும், அவள் அடிப்பதை நிறுத்தவில்லை.

ஆர்யனுக்கு இவன் செய்வதெல்லாமே தீங்கு தான். எப்படி வெட்கமே இல்லாமல் அவன் இவளை காப்பாற்ற வருவான் என எதிர்பார்க்கிறாள்?

ஆனால் அவனும் எப்படி போகாமல் இருப்பான்? பேரன்பு கொண்ட அண்ணனின் மனைவி அல்லவா இவள்? கரீமாவின் கரிய உள்ளத்தை பற்றி அறியாதவன் தானே அவனும்?

ஆர்யன் ரஷீத்திற்கு விவரம் சொல்லி “சல்மாவை பார்க்க போயிருந்தபோது தான் கடத்தி இருக்காங்க. நம்ம எதிரிகள் யாசின், காதிர், ஷாரிக், இன்னும் எல்லாரையும் கண்காணி, ரஷீத்! யார் இதை செய்தாங்கன்னு உடனே கண்டுபிடி! அப்படியே வங்கியிலருந்து பணத்தையும் எடுத்து வை” என்று போனை வைக்க, ருஹானா மெல்ல கேட்டாள்.

“தன்வீர்ட்ட சொல்லலாமா?”

“இல்ல, நானே பார்த்துக்கறேன்!”

———

“நமக்கு நிறைய நேரம் இருக்கு. உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும். நாம இங்க தான் இருக்கப் போறோம்” என்ற கடத்தல்காரி கரீமாவை அடித்த கையை உதறிக்கொண்டாள். “எனக்கு சோர்வாகுது, ஆனா அடிக்க அடிக்க நல்லா இருக்கு.”

“போதும், தயவுசெய்து நிறுத்துங்க!”

“ஏன் உனக்கு போரடிக்குதா? அழுகையை நிறுத்து! இல்லனா இன்னும் அடிப்பேன்” என்றவள் “இப்போ நான் போறேன். தனியா அழுதுக்கோ! காலைல வரேன்” என்று அந்த பெண் இவளை கீழே தள்ளிவிட்டு சென்றாள்.

———-

கரீமாவை தேடிய அம்ஜத்தை, முக்கிய சந்திப்பு ஒன்றிற்கு கரீமா  சென்றிருப்பதாக கூறி ருஹானா சமாதானம் செய்து அவனுக்கு மருந்து கொடுத்து அமைதிப்படுத்தினாள்.

அதை பார்த்துக்கொண்டே சற்று தள்ளி சென்ற ஆர்யன் ரஷீத்திற்கு அழைத்து விவரங்கள் கேட்டான். “காதிரோட ரகசிய இடங்கள் ரெண்டு பார்த்தாச்சி, ஆர்யன்! இன்னும் நகரத்தை விட்டு வெளிய ஒன்னு இருக்கு. அங்க நான் போறேன்” என்று சொல்ல, “சரி, நான் ஷாரிக் கோடவுனுக்கு போய் பார்க்கறேன்” என்றான்.

அறைக்கு சென்று கிளம்பி வந்த ஆர்யனை பார்த்த அம்ஜத் “கரீமாவை கூப்பிடப் போறியா, ஆர்யன்?” என கேட்டான்.

“ஆமா அண்ணா! நான் போய் கூட்டிட்டு வரேன்!”

“ஆமா, ஆமா, அதான் சரி! நீ போய் சீக்கிரம் கூட்டிட்டு வந்துடு!” என்று அம்ஜத் சொல்ல, ஆர்யன் வெளியே சென்றான்.

“ஜாஃபர் அண்ணா! பார்த்துக்கங்க” என்று சொல்லி ருஹானாவும் அவன் பின்னோடு ஓடினாள்.

“நான் வரேன்!” என்று அவள் காரில் ஏற ஆர்யன் மறுத்தான். “வேணாம், அபாயமான விவகாரம் இது.”

“நானும் வருவேன்!” என்று ருஹானா பிடிவாதம் பிடிக்க, அவளுடனே ஒவ்வொரு இடமாக தேடி அலைந்த ஆர்யன் இடையிடையே போன் செய்து ரஷீத் மற்றும் அவன் ஆட்களையும் தேட வேண்டிய இடங்களுக்கு அனுப்பினான்.

அடுத்து யாசின் இடங்களுக்கு செல்லப்போவதாக ஆர்யன் ரஷீத்திடம் சொல்ல, அந்த பேரை கேட்டதும் ருஹானாவிற்கு அவள் கடத்தப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் நினைவு வர, திகிலடைந்து ஆர்யனை பார்த்தாள்.

அவளை இரக்கமாக நோக்கிய ஆர்யன் “நீ மாளிகைலயே இருந்திருக்கலாம்” என்றான். “இல்ல, நாம சேர்ந்தே போகலாம். அந்த ஆளுங்க என்னை உயிரோட புதைச்சாங்களே, அவங்க கிட்டே கரீமா மேம் மாட்டியிருந்தா?” என்று அவள் நடுங்க, அவள் கையை பிடித்து அவளை நிதானத்துக்கு கொண்டு வந்தான்.

அவளை காரில் அமரவைத்துவிட்டு சென்ற ஆர்யன் யாசினின் ஆளை பிடித்து அடித்து மிரட்டியும், அந்த மறைவிடத்தில் தேடி பார்த்தும் கரீமா கிடைக்கவில்லை.

சோர்வுடன் காருக்கு வந்த  ஆர்யனிடம் “ஒன்னும் தகவல் கிடைக்கலயா?” என ருஹானா கேட்க, இல்லையென தலையாட்டினான். இவள் தலைவி போல காருக்குள் அமர்ந்துகொண்டு தகவல்கள் கேட்க, அவன் ஓட்டுனரும் அடியாளுமாக ஓடி ஓடி வேலைகள் செய்து அவளுக்கு விவரம் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

“அண்ணி எங்க கடுமையான நாட்கள்ல  கூட இருந்திருக்காங்க. இப்போ இருக்கறது போல இல்ல, அண்ணன் மனநிலைமைல மோசமா இருந்தார். அம்மா திரும்பி வருவாங்கன்னு வாசல்லயே உட்கார்ந்து இருப்பார். இரவெல்லாம் கெட்டகனவு கண்டு கதறி அழுவார். அப்பப்ப நரம்பு தளர்ச்சியும் மனப்பிறழ்வும் ஏற்படும். அவரை அறையில வச்சிட்டு மூடிட்டு போவோம்.”

“அப்புறம் எப்படி உங்க அண்ணி அவரை சந்திச்சாங்க?”

“அவங்க வீட்டுவேலை செய்யறதுக்காக தினமும் எங்க வீட்டுக்கு வருவாங்க. எப்படி நடந்ததுன்னு எனக்கு தெரியாது, யாரையும் கிட்ட சேர்க்காத அண்ணன் அவங்களோட தோழமையானார். அவங்க வர்ற நேரம் அவங்களை எதிர்பார்த்து ஜன்னல்ல பார்த்துட்டு இருப்பார். அவங்க கிட்டே அவரை விட்டுட்டு நானும் சின்ன அண்ணனும் வேலைக்கு போவோம்.”

“அதுக்கு அப்புறம் அவங்க கல்யாணம் செய்துக்கிட்டாங்களா?”

“ஆமா, அண்ணி தான் அண்ணனுக்கு பக்கபலம்.  அதனால தான் அவங்க சிறுபிள்ளைத்தனமா எதும் செய்றதை நான் பொருட்படுத்த மாட்டேன். அவங்க செலவு செய்யற பணம் விஷயத்துலயும் கண்டுக்க மாட்டேன். அவங்களுக்கு ஏதாவது ஆனா அண்ணன் அவ்வளவு தான்” என ஆர்யன் மனம் கலங்கினான்.

“ஒன்னும் ஆகாது, பயப்படாதீங்க! பெட்டிக்குள்ள என்னோட கடைசி மூச்சை நான் விடப்போற சமயத்துல நீங்க வந்து என்னை காப்பாத்தினீங்க! இப்பவும் அதே நடக்கும்” என ருஹானா அவனுக்கு ஊக்கம் தந்தாள்.

விடாது கருப்பாய் தொடர்ந்தவளை

சொந்த சூனியமே மறைத்து தாக்க

விட்டது தொல்லை என விடமுடியாது

கபட நாடக வேடதாரியை அறியாத

அன்பு உள்ளங்கள் பரிதவித்து தேடி

அலைகின்றன அப்பாவி அண்ணனுக்காக!

———

காணொளியில் கரீமாவை சித்தரவதை செய்வதை சல்மாவிற்கு காட்ட அவள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.

“உன்னோட காலை உணவு வந்துடுச்சி. அடி, உதை, குத்து, வெட்டு இதான் மெனு” என்று ஒரு பெண் அங்கே கரீமாவை கட்டையால் அடிப்பதை பார்த்து சல்மாவிற்கு முகம் கொள்ளா சிரிப்பு.

“இன்னும் அடிக்கட்டும்! நல்லா வாங்கி கட்டிக்கோ! ஏன்னா கேட்கறே? நீ செய்தது தான் உனக்கு திரும்பி வருது” என்று கரீமாவிற்கு கேட்காது என்றாலும் சல்மா இங்கே உற்சாகமாக கத்த, ஜவேரியாவுக்கு திரும்பவும் அதே சந்தேகம்.

“நெஜமா சொல்லு, அவ உன் சொந்த அக்கா தானா?”

“எனக்கு வேண்டாத அக்கா!”

ஆம், சல்மா சொல்வது சரி தான்! கரீமா செய்த கர்மங்கள் தான் அவளுக்கு திரும்ப வருகிறது.

தஸ்லீம்மீது அவதூறு பரப்பியது, மாடியிலிருந்து தள்ளி தஸ்லீமை கொன்றது, இவானை குளிர்வாகனத்தில் ஏற்றிவிட்டது, சமூகசேவை நிறுவனத்தில் பொய்ப்புகார் அளித்தது, இவானின் மனநிலையை பாதித்தது, அவளின் தேவைக்கேற்ப அம்ஜத்திற்கு மனபிறழ்வுகள் வர வைத்தது, சல்மாவின் காதலை கெடுத்து அவளின் சுயநலத்திற்காக பயன்படுத்தியது, மிஷாலின் மனதில் நஞ்சை விளைவித்தது, ருஹானாவிற்கு செய்த கணக்கிலடங்காத இரக்கமற்ற தீமைகள், ஆர்யன் ருஹானாவின் உறவை கெடுக்க செய்த சதிகள், இவை அனைத்திற்கும் இந்த அடிகள் போதுமா?

வன்முறைக்கு பதிலாக வன்முறை என்பது சரியில்லை என்றாலும் கரீமா செய்த குற்றங்களில் ஒன்று கூட மன்னிப்பிற்கு அருகதை பெற்றவை அல்லவே!

———

அலுப்பில் ருஹானா இருக்கையில் சாய்ந்தே உறங்கிவிட, தன் கோட்டை கழட்டி அவளுக்கு போர்த்திவிட்ட ஆர்யன் அவளுடனான அண்மை அவனுக்கு ஆறுதல் தருவதை உணர்ந்தான்.

சிறிது நேரம் தேடுதல் மறந்து அவளை பார்த்துக்கொண்டே அவன் இருக்க, உள்ளத்தின் இறுக்கங்கள் தளர்ந்து நிம்மதி பரவ, “நான் தூங்கிட்டேனே? விடிஞ்சிடுச்சே! எதும் தெரிஞ்சதா?” என்றபடி ருஹானா விழித்தாள்.

“இல்ல, நான் உன்னை வீட்ல விடுறேன்” என்று ஆர்யன் காரின் சக்கரத்தை தொட, அவனின் கையை பிடித்து தடுத்தாள். “வேணா, நான் உங்களோட இருக்கேன்!”

அவளின் ஸ்பரிசம் அவனின் உடலை கதகதப்பாக்க, உள்ளே உள்ளதை மறைத்து அவளின் நலன்நாடி அதற்கு எதிர்பதமாக பேசினான். “நீ எதுக்கு? நீ என்கூட இல்லனாலும் நான் இதே தான் செய்யப்போறேன்! நீ தேவை இல்லயே! ஏன் பிடிவாதம் பிடிக்கிறே?”

“நீங்க தேடி அலைஞ்சிட்டு இருக்கும்போது என்ன ஆனதோன்னு என்னால வீட்டுல இருக்க முடியாது. முன்ன நீங்க சிறையில இருந்தப்பவும் நான் உங்களை பார்க்க வந்தேன், நீங்க நிரபராதின்னு நம்பினேன்” என்று அவள் சொல்ல, பேசும் அவளின் கண்களை பார்த்தபடி அவன் இருந்தான்.

“இப்பவும் என்னால எந்த உபயோகமும் இல்லனாலும் உங்ககூட இருக்க விரும்பறேன், நீங்க அவங்களை கண்டுபிடிச்சிடுவீங்க என்ற நம்பிக்கையோட..”

ஆர்யன் அவளின் நம்பிக்கையில், பிணைப்பில் வியப்பாக பார்க்க, ரஷீத் அலைபேசியில் அழைத்து அவன் கண்டுபிடித்தவற்றை பகிர்ந்து கொண்டான்.

“ஆர்யன்! கரீமா மேம் போன காரை கண்டுபிடிச்சிட்டோம். டிரைவருக்கு அடிபட்டு அந்த பக்கம் போனவங்க ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க. இப்போ தான் அவனுக்கு மயக்கம் தெளிந்திருக்கு. அவனுக்கு நடந்தது எதும் தெரியல.”

“சரி, நீ அந்த இடத்தோட முகவரி அனுப்பு. நான் அங்க வரேன்” என்று சொல்லிய ஆர்யன் ருஹானாவிடம் “உன்னை மாளிகைல விட்டுட்டு நான் போறேன்” என்றான்

“இல்ல, நானும் வருவேன்” என தீர்மானமாக ருஹானா சொல்ல, வேறுவழியின்றி அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான்.

“இது நம்ம பழைய எதிரிங்க வேலை இல்ல. வேற யாரோ, ரஷீத்!” ஆர்யன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது கடத்தல்காரன் மிராஸ் அழைப்பு விடுத்தான்.

“ஆர்யன் என்னை காப்பாத்து!” என்று கரீமாவின் குரல் பின்னால் கேட்க, மிராஸ் பணம் தயாரா என கேட்டான்.

“இருக்கு, இன்னும் ஏன் தாமதிக்கிறீங்க?” என ஆர்யன் படபடக்க, “நான் மறுபடியும் போன் செய்து பணம் தரவேண்டிய இடத்தை சொல்றேன்” என்று மிராஸ் போனை அடைக்க, கரீமாவின் அழுகுரல் கேட்டு ஆர்யன் கவலைப்பட, ருஹானா அவன் கையை பிடித்து ஆறுதல் சொன்னாள்.

“நீங்க கரீமா மேடமை மீட்டுடுவீங்க. தைரியத்தை இழக்காதீங்க!”

“நான் அண்ணன்ட்ட சொல்லிட்டு வந்திருக்கேனே! அவர் எனக்காக காத்திருப்பாரே!”

———

தோட்டத்தை சரியாக பராமரிக்கவில்லை என புதுதோட்டக்காரனை திட்டுவது போல ஜாஃபர் அம்ஜத்தின் மனதை திசை திருப்பி, அவனை தோட்டவேலையில் ஈடுபடுத்தினான்.

———

Advertisement