Advertisement

“குட்மார்னிங் சித்தி! சாக்லேட் அக்கா பத்தி சித்தப்பா சொன்னார். நீங்க வருத்தமா இருக்கீங்கன்னு சொன்னார். எனக்கும் அவங்களை பிடிக்குமே! எனக்கும் கவலையா தான் இருக்கு. ஆனா அவங்க சீக்கிரமா குணமாகிடுவாங்க, சித்தி! நாம அவங்களுக்காக துவா செய்வோம்.”

அணைத்துக்கொண்டு முத்தமிட்ட இவானின் கன்னத்தில் ருஹானா தானும் முத்தம் தந்தாள். “கண்டிப்பா செய்வோம் கண்ணே!”

“வாங்க சித்தி! நாம சேர்ந்து சாப்பிடலாம்” என்று இவான் ருஹானாவை ஆர்யனின் அறைக்கு அழைத்து செல்ல, அங்கே காலை உணவு பரிமாறப்பட்டு இருந்தது.

“இவான் தான் இங்க..” என்று ஆர்யன் இழுக்க, தன்னை சகஜமாக்க இவான் மூலமாக ஆர்யன் செய்தது அது என புரிந்துகொண்ட ருஹானா “பரவாயில்ல” என்றபடி அவர்கள் இருவருடன் இணைந்து கொண்டாள்.

“வாசிம் அங்கிள் வாகிதா அக்காவை காதலிக்கிறார் தானே சித்தி?”

“அது உனக்கு எப்படி தெரியும், தேனே?”

‘நாம அங்கே தங்கியிருந்தோமே சித்தி அப்போ வாகிதா அக்கா முட்டைல குடைமிளகாய் போட்டுட்டாங்க. வாசிம் அங்கிள்க்கு அது பிடிக்காதுல? ஆனாலும் அதை சாப்பிட்டார். நீங்க என்னை தூங்க சொல்லும்போது எனக்கு பிடிக்கலனாலும் நான் தூங்கப் போவேன். அப்படித்தானே நேசிக்கறவங்க சொன்னா நமக்கு பிடிக்கலன்னாலும் செய்வோம் இல்லயா, சித்தி?”

ஆர்யன் யாசினிடமும், தன்னிடமும் மன்னிப்பு கேட்ட நிகழ்வுகளை நினைத்தபடி ருஹானா பதில் பேசவில்லை.

“ஆமா அக்னிசிறகே! நாம நினைச்சே பார்க்காத செயலைக் கூட நாம விரும்பறவங்களுக்காக செய்வோம்”

———

“சல்மா டியர்! எப்படி இருக்கே?”

“இப்போ தான் அழகுநிலையத்துல இருந்து வந்தேன். கொஞ்ச நேரத்துல ஸ்பாக்கு கிளம்பிடுவேன்.”

“சல்மா! இப்படி பேசாதே! உனக்கு இங்க எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு எனக்கு புரியுது. போனதடவை நீ ரொம்ப பேசிட்டே! என்னால தாங்கமுடியல! நான் செய்தது எல்லாமே நம்ம ரெண்டுபேருக்காவும் தான். நானும் உன்னை நினைச்சி கவலைப்பட்டுட்டு தான் இருக்கேன். மாளிகைல தனிமையா உணர்றேன்.”

கரீமாவின் இந்த பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிய சல்மா இப்போது இல்லையே! மேசையின் மறுபக்கம் இருந்த கரீமாவின் கையை சல்மா எட்டிப்பிடித்தாள்.

“நானும் உன்னை நினைச்சி கஷ்டப்படுறேன், அக்கா! அறுசுவை விருந்து சாப்பிடும்போது சிரமமா இருக்கும்ல? பஞ்சு மெத்தைல புரளும்போது எவ்வளவு வலிக்கும்ல?”

கரீமாவின் முகம் மாற, பக்கத்து மேசையில் இருந்த ஜவேரியா, வெளியே இருந்து தன்னை பார்க்க வந்திருந்த தன் கூட்டாளி மிராஸிடம் கரீமாவை அடையாளம் காட்டினாள். மிராஸும் கரீமாவை நன்றாக பார்த்துக்கொண்டான்.

சல்மா “நீ ஒரு பொழுதுபோக்குக்காக என்னை நினைக்கறே! நான் இங்க அழுக்கு மனிதர்களோட வாழுறேன், கொடுமைகளை அனுபவிக்கறேன். உனக்கு  விளையாட்டா இருக்கா? ரெண்டுபேரும் எல்லாம் சேர்ந்து செய்தோம். நான் சிறையில, நீ மாளிகைல! என்ன நியாயம் இது?” என அடக்கப்பட்ட கோபத்துடன் வினவினாள்.

“நான் வெளிய இருந்து தான் ஆகணும், சல்மா! நான் எத்தனை லாயர்ஸ் பார்க்கறேன்னு உனக்கு தெரியுமா? பணத்தை தண்ணியா செலவழிக்கறேன். நானும் உள்ள இருந்தா இதெல்லாம் முடியுமா? என்னை நம்பு சல்மா! சீக்கிரமே உன்னை வெளிய எடுத்துடுவேன்.”

“சரி அக்கா! நான் ஏதோ ஆற்றாமைல பேசிட்டேன். நான் என்ன பேசுறேன்னே எனக்கு தெரியல.”

“என் மேல நம்பிக்கை வை, சல்மா டியர்! எல்லாம் சரியாகிடும்.”

“ஆமா அக்கா! இன்னைல இருந்து எல்லாம் மாறிடும்.”

———

வாகிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ருஹானா கோமா நிலைக்கு சென்றுவிட்டாலும் அவளின் உடல்நிலை சீராக இருப்பதாக சொல்லி, எப்போது வேண்டுமானாலும் அவளுக்கு நினைவு திரும்பலாம், நம்பிக்கையை இழக்கவேண்டாம் என்றும் சொல்லி சென்றார்.

வாசிம் மருத்துவமனையின் பக்கவாட்டிற்கு சென்று தனிமையில் அமர, தன்வீர் ஆர்யனிடம் நண்பனை பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். சையத்தும் அவர்களுடன் அமர்ந்திருந்தார்.

“கமிஷனர் தன்னோட காதலை ரொம்ப காலமா வாகிதாட்ட சொல்லாம வச்சிருந்தார். நல்லவேளை அவ உணர்வா இருக்கும்போதே சொல்லிட்டார். நாம நிறைய நேரம் இருக்கும்னு நினச்சிட்டு இருப்போம். ஆனா சில வினாடிகள் போதும், எல்லாத்தையும் இழக்க” என்ற தன்வீர் ருஹானாவின் அருகே நின்ற நஸ்ரியாவை பார்த்தான்.

நஸ்ரியாவிடம் தன் காதலை கூடிய விரைவில் தெரிவித்துவிட வேண்டும் என் முடிவெடுத்துக் கொண்டவன் “உங்க பிரச்சனை என்ன ஆச்சு, ஆர்யன்? ருஹானாட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா?” என்று கேட்டான்.

“இல்ல, தன்வீர்! நான் நினைச்சதை விட அவளை ரொம்ப புண்படுத்தி இருக்கேன். ஆனா நான் முயற்சி செய்திட்டே இருக்கேன்” என்று ஆர்யன் சொல்ல, அவன் தோளில் தட்டிய தன்வீர், அங்கே வரும் தன் காவல்துறை நண்பர்களிடம் பேச எழுந்து சென்றான்.

தனிமையில் வெறித்து அமர்ந்திருந்த வாசிமை பார்த்து உள்ளம் நெகிழ்ந்த ஆர்யன் “அவனோட இடத்துல என்னை வச்சி பார்க்கறேன், சையத் பாபா! என்னால நினைச்சி கூட பார்க்க முடியல. அவளுக்கு எதும் நடந்தா என்னால உயிர் வாழவே முடியாது. இவன் எப்படி சமாளிக்கப் போறான்?” என்று கவலைப்பட்டான்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை நினைத்த சையத், தம்பியின் வேதனை அண்ணனை வாட்டுவதை கண்டு “உன்னோட எதிரியா இருந்தவன் துக்கத்துல உடன்பிறப்பு போல மாறிட்டான், இல்லயா? ஆனா அவன் துக்கத்தை நாம வாங்க முடியாதே! சில வார்த்தைகள் ஆறுதலா பேசலாம். அமைதியா சேர்ந்து உட்கார்றதே கூட போதும்” என்று சொல்ல, ஆர்யன் எழுந்து வாசிமை நோக்கி சென்றான்.

இருவரின் சண்டையை பற்றி தெரிந்த வாசிமின் நண்பன் ஒருவன் “அர்ஸ்லான் ஏன் அங்க போறார்?” என ஆர்யனை தடுக்க விழைய, ஆர்யனை பற்றி சமீபமாக புரிந்துகொண்ட  தன்வீர் “விடு, ஒன்னும் ஆகாது. நம்மால தான் கமிஷனர்கிட்டே போக முடியல. அவர் பேசிட்டு வரட்டும்” என்றான்.

ஆர்யன் வாசிமின் அருகே சென்று அமைதியாக நிற்கவும், அவனே தன் வலியை ஆர்யனிடம் இறக்கி வைத்தான். “எனக்கு அடிபட்டு இருக்கலாம்ல? நான் கோமால இருந்திருக்கலாமே? வாகிதா என்னை நல்லா கவனிச்சி இருப்பாளே! நான் அவகிட்ட சொல்ல வேண்டியது இன்னும் நிறைய இருக்கே! நீங்க என்ன செய்திருப்பீங்க, அர்ஸ்லான்? நீங்க நேசிக்கறவங்க உங்ககூட இல்லாம உங்களால மூச்சு விட முடியுமா?”

ஆர்யனுக்கு ருஹானாவை கல்லறையில் சவப்பெட்டியிலிருந்து மீட்டது நினைவுக்கு வந்தது. அவளை காப்பாற்றி தந்த இறைவனுக்கு கண்மூடி நன்றி சொன்னான்.

வாசிமின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாத ஆர்யன் “எதும் தேவைன்னா…” என்று ஆரம்பிக்க, “எனக்கு வாகிதா தான் வேண்டும்” என்ற வாசிம் நடந்து வந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வாகிதாவை கண்ணாடி ஜன்னலில் பார்த்துக்கொண்டு சிலையென நின்றான். அவன் பார்வை வாகிதாவின் மேல் மட்டுமே நிலைத்திருப்பதை கண்டு ஆர்யன் அவனை விட்டு நகர்ந்து வந்தான்.

அவனிடம் வந்த ருஹானா “நீங்க வாசிம்கூட பேசினதை நான் கேட்டேன். இந்த பிரிவால வாசிம் மனம் கனத்து கிடக்கும். வாகிதா எழுந்து வருவான்ற நம்பிக்கை மட்டும் அவரை வழிநடத்தும்” என்றாள்.

“சிலசமயம் பிரிவை விட வேற காரணத்தாலயும் மனம் கனமாகும்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானா அவனை யோசனையாக பார்த்தாள்.

———–

“அக்கா கிளம்பிட்டாளே? அவளை கடத்திட்டாங்களா?” என்று சல்மா பரபரப்பாக கேட்க, திருட்டுத்தனமாக கையில் அலைபேசியை மறைத்து வைத்திருந்த ஜவேரியா “செய்திருப்பாங்க. இன்னும் தகவல் வரல” என்றாள் அதை பார்த்தபடி.

“அவளை நல்லா அடிக்க சொல்லுங்க. சாகவிடாம அடி விழணும். நான் படறதை போல ரெண்டு மடங்கு அவ அனுபவிக்கணும்” என்று சல்மா வெறுப்போடு சொல்ல, ஜவேரியா அவளை விசித்திரமாக பார்த்தாள். “நீ அவளோட சொந்த தங்கை தானே?”

———–

ஆர்யன் சையத்தை காரில் வீட்டிற்கு சென்று இறக்கிவிட, அவர் “காதல்ல பொறுமை முக்கியம் மகனே! உன்னோட காதலை தெரிவிக்க சிறந்த வழி பொறுமை தான். காதல் நீ ஏற்படுத்தினது இல்ல, அல்லாஹ் மனிதர்களுக்கு கொடுத்தது. அல்லாஹ் தரும் எல்லா பரிசுகளைப் போல காதலும் மனிதர்களின் பண்பை வளர்க்கும். நல்லவனாக்கும். காதல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்” என்று எடுத்து சொன்னார்.

“நீ அவளுக்காக துப்பாக்கி குண்டை உன்மேல வாங்கினே! அவளை மகிழ்விக்க என்ன செய்ய முடியுமோ எல்லாம் செய்தே! இது அமைதியா இருக்கவேண்டிய தருணம். பொறுத்திரு! கடல் அமைதியா இருக்கும்போது ஆழ்கடல் முத்து எளிதா கிடைக்கும். காத்திரு! நீ செய்யக்கூடியது அது ஒன்னு தான்.”

———–

ஜவேரியா சொன்னபடி மிராஸ் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சல்மாவின் காரின் மேல் தன் கார் கொண்டு மோதினான். கரீமாவின் கார் ஓட்டுனருக்கு அடிபட்டு அவன் மயங்கி சரிந்தான். மிராஸ் தன் ஆட்களுடன் சென்று துப்பாக்கி முனையில் பின்னிருக்கையில் இருந்த கரீமாவை இழுத்துக்கொண்டு வந்து தன் காரில் ஏற்றினான்.

“என்ன முட்டாள் தனம் இது! பெரிய தப்பு செய்றீங்க! நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? நான் கரீமா அர்ஸ்லான்! ஆர்யன் அர்ஸ்லானோட அண்ணி! நீங்க உயிர் பிழைக்கணும்னா என்னை விட்டுடுங்க!”

(தொடரும்)

Advertisement