Advertisement

“ஹல்லோ மிஷால்! என்ன நடந்தது? இங்க எனக்கு ஒண்ணுமே ஓடல! ஆர்யன்ட்ட என்ன சொன்னே?”

“கரீமா மேம்! நான் உங்களை காட்டிக்கொடுக்கல. உங்களை பத்தி அவன்கிட்டே எதுவும் சொல்லல.”

“நன்றி மிஷால்! நீ இவ்வளவு நல்லவனா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல. நம்ம எல்லாருக்கும் நல்லது செய்திருக்கே! என் பேரை சொல்றதால யாருக்கும் எந்த பயனும் இல்ல. ஆனாலும் எனக்கு ஆச்சரியம் தான். நீ என்மேல கோபமா இருப்பேன்னு நினைச்சேன்.”

“கோபம் தான்! உங்க திட்டத்தால தான் நான் ருஹானாவை இழந்தேன். ஆனா நீங்களும் உங்க தங்கையை இழந்திட்டீங்க. அதனால உங்களை விட்டுட்டேன்!”

———-

மருத்துவமனையின் வாசலில் ஆர்யன் காரை நிறுத்த, ருஹானா உள்ளே செல்ல தயங்கினாள். “என் அக்கா உங்க அண்ணனை நிக்காஹ் செய்துக்கிட்ட பின்ன நாங்க பிரிஞ்சிட்டதா உணர்ந்தேன். என் அப்பாவோட கோபம் அப்படி! அதுக்கு அப்புறம் அக்கா இல்லாமலே ஆறு வருஷம் வளர்ந்தேன். இப்பவும் ரெண்டு சகோதரிகளை பார்த்தா எனக்கு கண்ணீர் வந்துடும். வாகிதா என் உடன்பிறப்பு போல!”

அவள் கண்ணீரை துடைத்த ஆர்யன் அவள் முடியை ஒதுக்கி விட்டு “நாம போகலாம்” என்று ஆறுதலாக உள்ளே அழைத்து சென்றான்.

அறுவை சிகிச்சை அறையின் வாசலில் நின்ற தன்வீரிடம் ஓடிய ருஹானா “தன்வீர்! என்ன ஆச்சு?” எனக் கேட்டாள்.

“இன்னைக்கு கமிஷனர் அவளை சந்தோசமா வெளிய கூட்டிட்டு போனார், அவளை திருமணம் செய்ய கேட்க.  அவ அண்ணன் சிறையில இருந்து தப்பிச்சி இருக்கான். அந்த  ராஸ்கல் அவளை பின்தொடர்ந்து போயிருக்கான். கமிஷனருக்கு வாகிதா யெஸ் சொல்லி அவர் மோதிரம் போடும்போது அவளை சுட்டுட்டான்” என்று அழுத தன்வீரை கட்டிக்கொண்ட ருஹானா அவன் தோள்களை தட்டிக்கொடுத்தாள்.

“கமிஷனர் அவளை ரத்தவெள்ளத்துல ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்த்திருக்கார். இப்போ உயிருக்கு போராடிட்டு இருக்கா!”

“கமிஷனர் வாசிம் எங்க?” என்று ஆர்யன் கேட்டான்.

“நாங்க சொல்ல சொல்ல கேட்காம அவனை தேடி போயிருக்கார். அவரோட ஒரு காவல்படையும் போயிருக்கு.”

———–

சிறையில் சல்மாவிற்கு பெரும் தொல்லைகளை கொடுத்தார்கள், அங்கே ஏற்கனவே இருந்த தண்டனை பெற்ற குற்றவாளிகள். அவர்களின் அனைத்து வேலைகளையும் அவளையே செய்ய வைத்தனர்.

அக்காவின் திருமணத்திற்கு பின் சொகுசாக வாழ்க்கையை நடத்திய சல்மாவிற்கு, இலண்டனில் படித்தவளுக்கு, அதிகாரம் செய்தே பழகியவளுக்கு அந்த சூழ்நிலை குமட்டலை தந்தது.

அவளது உடைகளை எடுத்து அணிந்துகொண்டனர். தடுத்த அவளின் கன்னத்தில் அடித்தாள், அங்கே தலைவி போல இருந்த ஜவேரியா. அவளுக்கு பயந்துக்கொண்டு அவள் ஆணைகளுக்கு கீழ்படிந்து அவள் கால்களை சுத்தம் செய்துக் கொண்டிருந்த சல்மா, மனதிற்குள் அக்காவை கண்டபடி திட்டித் தீர்த்தாள்.

———

படையுடன் சென்ற வாசிம் துப்பாக்கியுடன் மறைந்திருந்த வாகிதாவின் அண்ணனை பிடிக்க முயல, அவன் சுட்டுகொண்டே தப்பிக்க பார்க்க, அவனை வாசிம் சுட்டுக்கொன்றுவிட்டு மருத்துவமனைக்கு திரும்பினான்.

வாசிமின் அத்தை தௌலத் வாகிதாவின் இரத்தக்கறையுடன் இருந்த வாசிமை கட்டிக்கொண்டு அழுதார். வாசிம் எதுவும் பேசாமல் கண்ணீர் விடாமல் இறுக்கமாக இருப்பது ஆர்யனின் மனதை ஏதோ செய்தது.

ருஹானாவும் ஆர்யனும் அவன் அருகே சென்று அவனுக்கு ஆறுதல் சொல்ல, வாசிம் தலையாட்டினாலும் அவனுக்கு அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை.

வாசிம் தனியாக வெளியே செல்ல, அவன் பின்னால் செல்லப் போன தன்வீரை ஆர்யன் தடுத்தான். “அவர் தான் வாகிதாவோட நிலைமைக்கு காரணம்னு புலம்புறார்” என தன்வீர் சொல்ல, ஆர்யன் “அந்த குற்ற உணர்ச்சில இருந்து மீளுறது கஷ்டம். நான் அதை உணர்ந்து இருக்கேன், எனக்கு தெரியும். கொஞ்சம் அவரை தனியா விடு, தன்வீர்!” என்றான்.

தௌலத் பலவாறு புலம்பி அழுவதை பார்க்க பொறுக்கமுடியாத ருஹானா தண்ணீர் குடிக்க நகர்ந்து சென்றாள். அவளுக்கு பாதுகாப்பாக ஆர்யன் சென்று அவளுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்தான்.

“எனக்கு வாசிமை நினைத்து அழுகையா வருது. நீங்க சொன்னீங்களே வாசிமின் வேதனையை பற்றி…”

“ஆமா, அந்த வலியை என்ன செய்றதுன்னு தெரியாது. எதாவது செய்யணும்னு உள்ள துடிக்கும், நாம நேசிக்கறவங்களை திரும்ப வரவைக்க! ஆனா ஒன்னும் முடியாது” என்று ஆர்யனும் வேதனையோடு சொல்ல, ருஹானா அவனுக்கும் சேர்த்து இரக்கப்பட்டாள்.

அவன் அவள் கைகளை பிடிக்க வர, முகத்தை துடைத்தப்படி நகர்ந்து சென்றுவிட்டாள். ஆர்யனுக்கு காத்திருப்பது கடினப்பாதை தான்.

———

அறுவை சிகிச்சை முடிந்தும் வாகிதாவிற்கு உணர்வு திரும்பவில்லை. மருத்துவர்கள் அவர்கள் முயற்சியை தொடர, சில மணி நேரத்திற்குப்பின் ருஹானா, “நாம போகலாம், இவான் தேடுவான்” என்று ஆர்யனை அழைத்தாள்.

இருவரும் தௌலத்திடம் விடைபெற, அவர் “அவங்க மகிழ்ச்சியா குடும்பம், குழந்தைன்னு இருக்கறதை பார்த்துட்டு சாகணும்னு நான் இருந்தேன். எவ்வளவு சந்தோசமா போனாங்க. இத்தனை காலம் அவங்க அன்பை மூடி மூடி வச்சிருந்தாங்க. வாழ்க்கை ரொம்ப சின்னது. இன்னைக்கு இருக்கறவங்க நாளைக்கு இல்ல. நல்லவேளை இப்பவாது காதலை சொல்லிகிட்டாங்களே! அந்த காதலே அவளை எழுப்பிவிடும்” என்று புலம்பினார்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, ருஹானா அவரை தேற்றினாள். ஆர்யன் “உங்களுக்கு என்ன தேவைனாலும் உடனே கூப்பிடுங்க!” என்று சொன்னவன் தன்வீரிடமும் உயர்சிகிச்சைக்கு எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் வாகிதாவை அழைத்து செல்ல ஆவன செய்வதாக சொல்லி, ருஹானாவை கூட்டி சென்றான்.

————

மிஷால் தன் உணவுவிடுதியில் பணிபுரியும் வாகிதாவை பற்றி கேள்விப்பட்டு அவளை பார்க்க மருத்துவமனைக்கு வர, தன்வீர் அவனை வாசலிலேயே வழிமறித்தான்.

“ஹாஸ்பிடல் அமைதியை கெடுக்க வேணாம். நீ ருஹானாக்கு செய்தது எனக்கு தெரியும். உன்னை அடிச்சி வெளிய தூக்கி போடுவேன். ஆனா இங்க யாருக்கும் எதுவும் தெரியாது. நீயாவே வெளிய போய்டு. எங்க யார்கிட்டயும் இனி பேச்சுவார்த்தை வச்சிக்காதே” என்று மிரட்டி அனுப்பி வைத்தான்.

தன்வீர், வாசிம், வாகிதாவின் நட்பும் தன் காதலோடு பறிபோனது குறித்து நொந்துக்கொண்டே மிஷால் வெளியே நடந்தான்.

———

கடற்கரையில் ஆர்யன் காரை நிறுத்த, ருஹானா “ஏன் இங்க நிறுத்திட்டீங்க?” எனக் கேட்டாள். “நீ துயரமா இருக்கே! கடல் காற்று மனசை கொஞ்சம் லேசாக்கும்” என்று அவன் சொல்ல, இருவரும் இறங்கி சிறிது தூரம் நடந்தனர்.

“இப்போ பரவால்லயா?”

‘வாழ்க்கை எத்தனை குரூரமானது. காலைல தான் என்னை பார்க்க வந்தா. எவ்வளவு சந்தோசமா இருந்தா. இப்போ இப்படி ஆகிடுச்சே!”

தேனிலவையும், நீலநிற ஃபைலையும் நினைத்து பார்த்த ஆர்யன், “நாம எப்போ ரொம்ப சந்தோசமா இருப்போமோ, அப்போதான் நம்மை சோதனை தாக்கும். எப்போ இக்கட்டு வரும்னு யாருக்கு தெரியும்? அதனால தான் நாம எதையும் நாளைக்குன்னு தள்ளிப்போட கூடாது. நாளைன்னு ஒன்னு வரலைனா என்ன செய்றது?” என்றான்.

“உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை பாதையில என்ன நினைப்போட நடக்கமுடியும்?”

“நம்பிக்கை!” என ஆர்யன் சொல்ல, ருஹானா முகத்தை சுருக்கினாள். “அவநம்பிக்கையை கோட்டையா கட்டி வாழ்ந்த நான் தான் இதை சொல்றேன். ஏன்னா அந்த கோட்டைல எந்த உயிர்ப்பும் இல்லன்னு நான் உணர்ந்துட்டேன்” என்று சொன்ன ஆர்யன் காரில் ஏறிக்கொண்டான்.

ருஹானாவும் உள்ளே வந்து அமர, “நம்பிக்கையோட இருப்போம்! வாகிதா திரும்பி வருவா!” என்று காரை எடுத்தான்.

———-

அடாவடி தலைவி ஜவேரியா தனது பல்செட்டை சுத்தம் செய்யும்படி சொல்ல, சல்மாவிற்கு வாந்தி வந்தது. ஜவேரியா சல்மாவின் கழுத்தை நெறிக்க, மூச்சுக்கு திணறிய சல்மா “உங்களுக்கு நிறைய பணம் கிடைக்க ஒரு வழி சொல்றேன்” என்று ஆசை காட்டினாள்.

“என் அக்காவை கடத்தினா உங்களுக்கு கோடிக்கணக்கான பணம் கிடைக்கும். உங்களுக்கு சிறைக்கு உள்ள இருக்கற சக்தியை போல வெளியவும் இருக்குன்னு நான் தெரிஞ்சிகிட்டேன்.”

“உன் சொந்த அக்காவையா? உன்னை நான் சரியா புரிஞ்சிக்கலயே! இதுல உனக்கு எவ்வளவு வேணும்?”

‘இல்ல, எனக்கு எதும் வேணா! அவளுக்கு சரியான பாடம் கத்து கொடுத்தா போதும். அவ எங்க போவா, எப்போ போவான்னு எல்லா தகவலும் நான் உங்களுக்கு தரேன்!”

“உன் அக்கா என்ன செய்தா உன்னை?”

“என் வாழ்க்கையையே கெடுத்துட்டா. அவளால தான் நான் இங்க இருக்கேன். இப்போ நான் திருப்பி கொடுக்கறேன்” என்ற சல்மாவின் கண்கள் பழிவாங்கும் வெறியில் பளபளத்தன.

———

சாரா இவானுக்கு உணவளித்து உறங்க வைத்ததை அறிந்து கொண்ட இருவரும் உணவை மறுத்து படிக்கட்டில் ஏறி சென்றனர். “எனக்கு சோர்வா இருக்கு. நான் போய் தூங்கறேன்” என்று ருஹானா சொல்ல, ஆர்யன் சரியென தலையாட்டினான்.

படிக்கட்டில் தன்னோடு நடந்து வந்தவள் தளர்வாக படிக்கட்டில் அமர்வதை பார்த்த ஆர்யன் “என்ன ஆச்சு?” என பதறினான். ஆர்யன் அளித்த விளக்கங்களும், முக்கியமாக அவன் மன்னிப்பும் அதன்பின் வாகிதாவிற்கு நடந்த விபத்தும் அங்கே நடந்த பேச்சுகளும் ருஹானாவை பலவீனப்படுத்தி இருந்தன.

பலவித சிந்தனைகள் அவளுக்குள் ஓடினாலும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவள் ஒன்றுமில்லை என தலையாட்ட, ஆர்யனும் அவள் அருகே மரப்படிக்கட்டில் அமர்ந்தான்.

“அப்போ நாம பேசிட்டு இருந்தது பாதியில தடைப்பட்டு போச்சி. எனக்கு உங்களை புரியலன்னு நினைக்காதீங்க! உங்க மன்னிப்பு என்னை ஆழமா தொட்டுடுச்சி! ஆனா… என்னோட வாழ்க்கை சின்ன கூட்டுல பாதுகாப்பா இருந்தது. தனிமை, கோபம், கொடுமை, துரோகம் இதல்லாம் நான் அறியாதது.”

ஆர்யன் அவள் கண்களையே பார்த்திருந்தான்.

“உங்க அம்மா உங்க எல்லாரையும் மோசமா பாதிச்சிட்டாங்க. ஆனா எங்க அப்பா அப்படி இல்ல. சாப்பிடக் கூப்பிடும்போது தான் அவர் குரல் உயரும். ஆனா நீங்க வாழ்க்கையில நிறைய அடி வாங்கி வளர்ந்திருக்கீங்க! நீங்க யாரையும் நம்பக்கூடாதுன்னு இருந்திருக்கீங்க! எனக்கு நம்பறதை தவிர வேற எதுவும் தெரியாது!”

ஆர்யன் தலை தானாக கீழே குனிந்தது.

“நான் வளர்ந்த உலகம் உங்க உலகத்தை போல கிடையாது. ஆனா இப்போ எனக்கு உங்களை புரியுது. நான் உங்களை மன்னிக்கவும் ஆசைப்படறேன். முன்னாடி போலவே எல்லாம் இருக்கணும்னும் விரும்பறேன்” என அவள் சொல்ல, ஆர்யன் அவளை ஆர்வமாக பார்த்தான்.

“ஆனா…. திரும்பவும் காயப்பட்டுடுவேனோன்னு பயமா இருக்கு. மீண்டும் உங்களை நம்பி மீண்டும் புண்படுவேனோ? நான் உங்களைப்போல வலிமையானவள் இல்ல. இதேபோல இன்னொரு அடி வாங்கினாக்கூட நான் உயிரை விட்டுடுவேன்.  அதனால உங்க மேல எப்படி நம்பிக்கை வைக்கறதுன்னு எனக்கு தெரியல. எப்படி உங்களை மன்னிப்பேன்? எனக்கு தெரியல” என்ற அவள் அவனின் கண்களில் தெரிந்த ஏமாற்றத்தை தாங்கமுடியாமல் தலைகுனிந்து கொண்டாள்.

துன்பப் பெருமூச்சு விட்ட ஆர்யன் “ஆனா எனக்கு தெரியும்!” என்று சொல்ல, அவள் அவனை பார்த்தாள்.

“நான் எங்கயும் போகப்போறது இல்ல. அவசரம் இல்ல. உனக்கு என்னிடம் நம்பிக்கை வர்றவரை காத்திருப்பேன். எவ்வளவு காலம் ஆனாலும் பரவாயில்ல. நான் உனக்காக காத்திருப்பேன்! என்ன நடந்தாலும் உன்னோட நம்பிக்கையை பெற நான் போராடிட்டே இருப்பேன்! முன்னாடி போல எதுவும் இல்லன்னாலும் நான் அந்த நாளுக்காக காத்திருப்பேன்!”

பதில் பேசாமல் அவள் எழுந்து செல்ல அவனும் அவள் பின்னால் நடந்தான். அவளின் பழைய அறை வந்ததும் திரும்பி அவனை பார்த்தவள் “நீங்க சொல்றது சரிதான், முன்னாடி போல எதும் இருக்காது தான்! என்றாலும் உங்களுக்கு நன்றி, நீங்க கேட்ட மன்னிப்புக்கு! எனக்கு தெரியும், அது உங்களுக்கு எத்தனை கடினம்னு! தயவுசெய்து தெரிஞ்சிக்கோங்க, அது எனக்கும் எவ்வளவு முக்கியம்னு!” என்று சொல்லி திரும்பி நடந்தாள்.

இருவரும் தங்களின் அறைக் கதவருகே சென்று திரும்பி பார்க்க, ஆர்யன் “நான் தூங்க மாட்டேன். உனக்கு மனசு கஷ்டமா இருந்தா, வந்து… அதாவது… உனக்கு எதும் தேவையா இருந்தா… நான் இங்க தான் இருப்பேன்” என்று சொல்ல, அவள் தலையாட்டினாள்.

அறையினுள் சென்று கட்டிலில் அல்லாமல் சோபாவில் அமர்ந்த ஆர்யன் “இன்று இரவு மட்டும் இல்ல. உனக்காக எப்பவும் காத்திருப்பேன்” என்றான்.

——–

Advertisement