Advertisement

புயல் காற்றில் விளக்காகவே

                               அத்தியாயம் – 133

ஆர்யனின் அலுவலகத்தில் மிஷாலை ஒரு நாற்காலியில் அமரவைத்து இருவர் பிடித்துக்கொண்டிருக்க, கோபமாக உள்ளே நுழைந்த ருஹானாவை பார்த்ததும், மிஷால் திமிறி “ருஹானா!” என எழ முயன்றான். அவனை அவர்கள் அழுத்திப்பிடிக்க, ரஷீத் ருஹானாவின் பின்னால் நின்றான். ஆர்யன் வாசலிலேயே நின்று கொண்டான்.

மிஷாலை வெறுப்புடன் நோக்கிய ருஹானா “நீ என்னோட சின்ன வயது தோழன், மிஷால்! நாம ஒன்னா விளையாடி இருக்கோம். ஒரே தட்டுல சாப்பிட்டு இருக்கோம்” என்று தொடங்க, “ருஹானா! நான் உனக்கு எல்லாம் சொல்றேன்” என மிஷால் பேச, அவள் அவன் பேசியதை காதில் போட்டுக்கொள்ளவில்லை.

“எப்படி உன்னால எனக்கு இதை செய்ய முடிந்தது? எப்படி? அவ்வளவு மோசமானவனா நீ? இந்த மாதிரி கேவலமான திட்டங்கள் போடற அளவுக்கு எப்போ மாறினே? வெட்கமா இல்ல உனக்கு? இத்தனை வருஷங்கள் பழகியும் உன்னை எனக்கு தெரியவே இல்லயே!”

“ருஹானா! இது எல்லாமே நான் உனக்காகத்தான் செய்தேன். அவன்கிட்டே இருந்து உன்னை காப்பாத்தத்தான் செய்தேன்.”

“இல்ல, நீ என்னோட சந்தோசத்தை பறிச்சிட்டே! என் வாழ்க்கையை அழிச்சிட்டே! என் குடும்பத்தை நாசமாக்கிட்டே!” என்று ருஹானா அழுகையோடு கத்த, ஆர்யன் மனம் வேதனை அடைந்தது.

“அந்த ஆளோட பிடியிலருந்து உன்னை விடுவிக்க நினைச்சேன். உனக்காக நான் எதுவும் செய்வேன்! செய்தேன்! இதுக்காக நான் வருத்தமும் படல. ஏன்னா நான் உன்னை காதலிக்கறேன்” என்று மிஷால் சொன்ன வினாடி ருஹானா அவன் முகத்தில் காரி உமிழ்ந்தாள்.

“வாயை மூடு! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே! நான் உன் குரலை கேட்க விரும்பல. உன் முகத்தையும் பார்க்க விரும்பல. என் அப்பாக்கு மாரடைப்பு வந்தபோது ஹாஸ்பிடல்ல சேர்த்து அவர் உயிரை ஒருமுறை நீ காப்பாத்தினே! அதுக்கான நன்றிக்கடனை இப்போ நான் தீர்த்துட்டேன். இங்க இருந்து போய்டு! இனிமேல் என் கண்ணு முன்னால வந்திராதே!” என்று சொல்லி அவள் திரும்பி வெளியே நடக்க, ஆர்யன் தலையை குனிந்துகொண்டான்.

“ருஹானா!” என மிஷால் கத்தி கூப்பிட, அவள் திரும்பியும் பார்க்கவில்லை.

ருஹானா அர்ஸ்லானாக அவள் தைரியமாக மிஷாலிடம் நடந்துகொண்டவிதத்தில் அசந்துவிட்ட ஆர்யன் மிஷாலை விட்டுவிடும்படி சொல்ல, ரசீத்திற்கு அளவுகடந்த ஆச்சரியம்.

குடும்பத்தில் ஒருத்தியான சல்மாவை காவல்துறையிடம் ஒப்படைத்து தண்டனை வாங்கி கொடுத்த ஆர்யன், ருஹானாவின் ஒரே வார்த்தைக்காக, அதுவும் அவனிடம் நேரிடையாக சொல்லாத வார்த்தைக்காக, அவன் அறவே வெறுக்கும் மிஷாலை ஒன்றும் செய்யாமல் விடுவது ரஷீத்திற்கு உணர்த்தியது இதைத்தான். ருஹானாவின் சொல்மீது ஆர்யனுக்கு இருக்கும் மதிப்பு, ருஹானாவின் மேல் அவன் கொண்ட காதல்!

என்றுமே ருஹானாவை தவறாக நினைக்க முடியாத ரஷீத்திற்கு, இப்போது ஆர்யன் விரும்பும் ருஹானாவின் மேல், துரோகம் செய்தவனை புறந்தள்ளி கம்பீரமாய்  நடந்து செல்லும் ருஹானாவின் மேல் பெருமதிப்பு ஏற்பட்டது.

———-

சையத் கொடுத்த தேநீரை கலக்கியபடியே ஆர்யன் “சந்தோசமா இருந்திருக்கா, அவ அப்படித்தான் சொன்னா! என் குடும்பத்தை நாசமாக்கிட்டேன்னு சொன்னா! எங்க குடும்பம்!  நான் என்ன செய்வேன் சையத் பாபா?” எனக் கேட்டவன் தேநீர் கோப்பையை மேசையில் தள்ளிவிட்டான்.

பெருமூச்சு விட்ட சையத் “நீ தான் அதுக்கு தீ வச்சே! நீயே தான் கஷ்டமும் படறே! இது உனக்கான சோதனை! இப்போ சாம்பல்ல இருந்து புதுசா உருவாக்கு” என்றார்.

“நான் அவளைப்போல வலிமையா இல்ல. அவளோட இதயத்தை என்னால சரிசெய்ய முடியாது. இதயத்தோட மொழி எனக்கு தெரியல, சையத் பாபா!” என்று நெஞ்சில் குத்திக்கொண்ட ஆர்யன், “நானே இப்படி எரியறேன்னா அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? என்னால நினைச்சிக்கூட பார்க்க முடியல! என்னால என்னை மன்னிக்கவே முடியாது!” என மறுத்து தலையாட்டினான்.

“நீ செய்து தான் ஆகணும்” என்று சையத் சத்தமாக சொல்ல, ஆர்யன் விரல்களை மடக்கி மேசையில் குத்தினான். அவன் கையை பிடித்துக்கொண்ட சையத் “நெருப்பு சட்டை போட்டு இருக்கேன்னு நான் சொன்னேன் தானே?” என்று சொல்லி சுடும் தேநீரை அவன் கையில் கொட்டினார்.

“இப்போ உன் தோல் எரியுது தானே? அப்போ இதயம் எப்படி வலிக்கும்? இதுக்கு மருந்து போடலாம். அதுக்கு ஒரே மருந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்கறதுதான்! ரொம்ப காலமா உனக்கு உள்ள நீ வச்சிருக்கற பாறையை உடை! அதை வச்சி உங்களுக்கான ஒரு புது வீடு கட்டு! இப்போ போய் நீ உடைச்சதை எல்லாம் சரி செய்!”

———-

மேல்மாடி தோட்டத்தில் கவலையாக நிற்கும் ருஹானாவிடம் வந்த அம்ஜத் “உறைபனில நிக்காதே ருஹானா! நீ தான் இந்த வீட்டோட சூரியன்! நீ துன்பப்படாதே! உண்மையா ஆர்யன் உன்னை ரொம்ப நேசிக்கிறான்! எனக்கு நல்லா தெரியும்! அவனை நீ மன்னிச்சிடு!” என்றான்.

“நான் அவரை நம்பினேன், அம்ஜத் அண்ணா! அவரை சார்ந்து தான் இருந்தேன். ஆனா அவர் என்மேல நம்பிக்கை வைக்கல. நான் எப்படி அவரை மன்னிப்பேன்?” என்று அவள் கேட்க, அம்ஜத் பதில் சொல்ல முடியாமல் நிற்க, ஆர்யன் அங்கே வருவதை பார்த்ததும் அம்ஜத் உள்ளே சென்றுவிட்டான்.

ஆர்யன் பேச வந்தும் ருஹானா அவனை புறக்கணித்து முகத்தில் பிடித்தமின்மையை காட்டி திரும்பி நின்று கொண்டாள்.

கசப்பாய் கடிந்து பேசிவிடு!

எட்டி ஓங்கி அறைந்துவிடு!

வெறுப்பாகக் கூட பார்த்துவிடு!

உன் முகத்திருப்பலை என்னால் 

தாங்கிக் கொள்ளமுடியவில்லை!

அதற்குமுன் உன் பார்வையில்

ஓர் அந்நியப் படலம் தோன்றுகிறதே..

அதுதான் இன்னுமும் தாளவில்லை!

அவன் சொல்வதை கேட்பாள் எனும் நம்பிக்கையுடன் ஆர்யன் பேசினான். “நான் பெண்களை நம்பமாட்டேன்னு சத்தியம் செய்தவன். எந்த பெண்ணையும் நம்பினதும் இல்ல, நீ வர்றவரை. ஆனா நீ வந்ததும் தொட்டது எல்லாம் பொன்னாக்கினே! எல்லாரையும் குணமாக்கினே! இவான், என் அண்ணன், முக்கியமா என்னை…. நான் உன்மேல அளவுகடந்த நம்பிக்கை வச்சிட்டேன்.”

ருஹானா அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.

“அதுக்கு அப்புறம் அந்த ஃபைல் வந்தப்போ, என்னோட சத்தியத்தை மீறினதால தான் இதெல்லாம் நடக்குதுன்னு நான் நினைச்சிட்டேன். என் அப்பாவாகிட்டேனோன்னு நினச்சிட்டேன், அப்பாவைப் போல நம்பி ஏமாந்துட்டேன்னு நினச்சிட்டேன். நான் அதை நம்பியிருக்கக்கூடாது” என்று சொன்னவன், அதற்குப்பின் அவள் அறையில் கிடைத்த தங்கநகைகள், வங்கி அட்டை, ஆறு மாதமே செல்லுபடியாகும் சொத்தில் பங்கில்லை எனும் ஆவணம் என எல்லாவற்றையும் அவளுக்கு விளக்கி சொன்னான்.

“நீ அப்படிப்பட்டவளா இருக்கமுடியாதுன்ற ஒரு நினைப்புல தான் நான் இருந்தேன். ஆனா இதெல்லாம் என் காலை பிடிச்சி கீழே இழுத்திடுச்சி. என்னோட கோபமெல்லாம் இவ்வளவு நம்பிக்கை வச்ச நீ என்னை ஏமாத்திட்டியேன்னு தான்” என்றவன் பார்த்த ஆழமான பார்வை ருஹானாவின் நெஞ்சை ஊடுருவியது.

“மனசுல ஒரு சிறு ஓரம் நீ குற்றமற்றவன்னு சொல்லிட்டே தான் இருந்தது. அதனால தான் அந்த துப்பறிவாளனை விடாது தேடினேன். கடும்முயற்சி செய்து உண்மை தடயங்களை கண்டுபிடிச்சேன். இதுனால எல்லாம் நான் தப்பு செய்தவன் இல்லன்னு ஆகிடாது. நீ என்னை புரிஞ்சிக்கணும்னு தான் இத்தனையும் சொல்றேன்” என்று அவன் நீளமாக பேச, ருஹானா யோசித்துக்கொண்டே நின்றாள்.

“உனக்கு தெரியும், நான் ஏன் மன்னிப்பு கேட்கமாட்டேன்னு! என் வாழ்க்கையில ஒரே ஒரு முறை மன்னிப்பு கேட்டு இருக்கேன்! அவன்ட்ட! அது உனக்காக!” என்றபடி அவளை நெருங்கினான்.

“இப்போ உன்கிட்டே உளமார மன்னிப்பு கேட்கறேன்! இது நமக்காக! நம்ம ரெண்டுபேருக்காகவும்! உன்னால என்னை மன்னிக்க முடியுமா?” என்று ஆர்யன் பாவமாக கேட்க, அவனின் கசிந்து உருக்கும் குரலில் ருஹானாவின் கண்ணில் நீர் கசிந்தது.

ருஹானாவின் பதிலை எதிர்பார்த்து ஆர்யன் பதட்டத்துடன் காத்திருக்க, அவள் “நமக்காவா?” எனும் கேள்வியே கேட்டாள். ஆர்யன் “ஆமா, எப்பவும் நமக்காக தான்! முன்னாடியும் அப்படித்தான்! இப்பவும் அப்படித்தான்! இனிமேலும் அப்படித்தான்!” என அவசரமாக பேசினான்.

“நான் கண்ணீர் வடிச்சது எல்லாம் எனக்காக மட்டும் இல்ல. உங்களுக்காகவும் தான்! நீங்க விட்டுட்டு வந்த உங்க குழந்தைப் பருவத்துக்காகவும் தான். என்னால முடிந்தா இவானை அணைப்பதுபோல உங்க குழந்தைப் பருவத்தையும் அணைப்பேன். ஆனா…” என அவள் சொல்ல, இந்த வேதனையிலும் தன் குழந்தைப் பருவத்தை எண்ணி வருந்தும் அவளை எண்ணி அவன் உருக, ருஹானாவின் அலைபேசி அடித்தது.

ருஹானா எடுத்து பார்த்துவிட்டு வைத்துவிட, ஆர்யன் “ஆனா…” என எடுத்துக்கொடுத்தான்.

“ஆனா நான் உங்களைப் போல இல்ல…” என அவள் சொல்லும்போது திரும்பவும் மணியடித்தது. “தன்வீர் கூப்பிட்டுட்டே இருக்கான். எப்பவும் இப்படி செய்ய மாட்டான். பர்வீன் அம்மாக்கு எதுவுமா? நான் இந்த போனை எடுக்கறேன்” என்று சொல்லி காதில் வைத்தாள்.

“ஹல்லோ! தன்வீர்! எதும் கெட்டசெய்தி இல்லயே? என்ன சொல்றே? வாகிதாவா? யார் சுட்டது?”

ருஹானா அழுதுகொண்டே போனை வைக்க, ஆர்யன் விவரம் கேட்டான். “வாகிதாவை அவ அண்ணன் சுட்டுட்டானாம். என்னால நம்ப முடியல. நான் அங்க போகணும். வாசிம், தன்வீர் எப்படி இருக்காங்களோ? அவங்க பக்கத்துல நான் இருக்கணும்.”

‘நானும் வரேன், வா!”

“இன்னைக்கு காலைல தானே இங்க வந்தா. எவ்வளவு ஆசையா இருந்தா” என அவள் தள்ளாடிட, ஆர்யன் அவளை பிடித்து அழைத்து சென்றான்.

———-

Advertisement