Advertisement

காலையில் அறைக்குள் வந்த இவான் “சித்தப்பா! நீங்க ஏன் கவலையா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். சித்தி சொல்லிட்டாங்க. உங்க சண்டைக்கு நீங்க தான் காரணமா?” என்று கேட்டான்.

“உன் சித்தி சரி தான் சிங்கப்பையா!”

“சித்தப்பா! நான் கூட நஸ்ரியா அக்கா கூட ஒரு தடவை சண்டை போட்டேன். அப்புறம் அவங்க கிட்ட ஸாரி சொல்லிட்டு கையை இப்படி வச்சேன்” என இவான் இருவிரல்களை வட்டமாக்கி காட்டினான். “அப்புறம் அக்கா அதை இப்படி சேர்த்துவிட்டாங்க. நாங்க பழம் விட்டுக்கிட்டோம்.”

‘இதுபோல எளிதா இருந்தா நல்லாருக்குமே!’ ஆர்யன் மனதில் ஓடியது.

“அப்படியா?” பக்கத்திலிருந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டான்.

“ஆமா சித்தப்பா! மன்னிப்பு கேட்டா உடனே சமாதானம் தான்.”

“சரி அக்னிசிறகே! நீ எங்களைப்பற்றி கவலைப்படாதே. சாப்பிடப் போ!”

இவான் ஆர்யனை அணைத்து முத்தமிட்டு செல்ல, ஆர்யனின் முகம் மலர்ந்தது.

———

“மெதுவா வா அன்பே! கீழே விழுந்துடப் போறே!”

“சித்தி! நான் சித்தப்பாட்ட பேசிட்டேன். அவர் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கும்போது நீங்க இப்படி செய்து அவரை மன்னிச்சிடணும். சரியா?” என வட்டமாக்கிய விரல்களை அழுத்திக் காட்டினான்.

‘உயிரே போவதாக இருந்தாலும் ஆர்யன் மன்னிப்பு கேட்க மாட்டான்’ என்று சையத் பாபா ஒருமுறை இவளிடம் சொன்னது ருஹானாவிற்கு மறக்கவில்லை என்றாலும் தன் உயிரை காப்பாற்ற வேண்டி ஆர்யனின் எதிரி யாசினிடம் அவன் மன்னிப்பு கேட்டதும் அவளுக்கு நினைவு இருந்தது.

யோசனை கலைந்த ருஹானா “நீ எங்களைப்பற்றி கவலைப்படாதே. சாப்பிடப் போ!” என்று ஆர்யனைப் போலவே சொன்னாள்.

——–

அண்ணனிடம் யோசனை கேட்க அவனை நாடி சென்ற ஆர்யனை பார்த்ததும், மண்டியிட்டு செடியை பார்த்துக்கொண்டிருந்த அம்ஜத் முகத்தை திருப்பிக்கொண்டான். இது போல எப்போதும் செய்திருக்காத அண்ணனை நினைத்து பெருமூச்சு விட்ட ஆர்யன் அவனே மெல்ல பேச்சை துவங்கினான்.

“நீங்க சொன்னது சரிதான் அண்ணா! நான் உங்க பேச்சை கேட்கல.”

“நீ ருஹானாவை கஷ்டப்படுத்திட்டே! அவ கவலையா இருந்தா நமக்கு அமைதி இல்ல, நிம்மதி இல்ல. இங்க வலி எளிதில் மறையாது, ஆர்யன்!” என அம்ஜத் நெஞ்சை காட்டி திரும்ப திரும்ப சொல்ல, அவனுக்கு எதும் பாதிப்பு நேர்ந்துவிடுமோ என பயந்த ஆர்யன் அவனை அமைதிப்படுத்த அணைக்க வந்தான்.

அவன் கைகளை கோபமாக தட்டிவிட்ட அம்ஜத் “இங்க பார்! இந்த பூச்செடியை நான் நேத்து உள்ள எடுத்து வைக்க மறந்திட்டேன். என்ன ஆச்சு பாரு! பனியில உறைஞ்சிடுச்சி! அதோட மலர்ச்சியை இழந்துடுச்சி! இதை உன்னால காப்பாத்த முடியுமா? இந்தா!” என்று அதை அவனிடம் திணித்தான்.

“நீ பெரிய ஆர்யன் அர்ஸ்லான்! நிறைய பணம் வச்சிருக்கே! உன்கிட்டே எல்லாம் இருக்கு!  இதை காப்பாத்து பார்க்கலாம்!” அண்ணனின் இந்த ஆவேசத்தை எதிர்பார்க்காத ஆர்யன் திகைத்து நின்றான்.

‘நான் அதுகிட்டே மன்னிப்பு கேட்கறேன், என் தப்பு, மன்னிச்சிடுன்னு கெஞ்சறேன். செடிக்கு நான் பேசுறது கேட்கும், ஆர்யன்! என்னை அதுக்கு புரியும். அதுக்கு உயிர் இருக்கு.  இலைகள் கண்ணீரை போல உதிரும்” என்று உதிர்ந்த இலையை எடுத்து ஆர்யனிடம் தந்தான்.

“ருஹானா மலரை போல, ஆர்யன்! அவளோட வேர்கள் உன்னோட நிலத்துல இருந்தது. நீ அதை தூக்கி வீசிட்டே, ஆர்யன்!  எனக்கு தெரியும், நீ மன்னிப்பு கேட்க மாட்டே!  தண்ணியில்லாம அவ செத்துடுவா! பிடிச்சி வளர மண் இல்லாம அவ உயிர் பிரிந்திடும். நம்மோட அமைதி அவளோடயே போய்டும்! நீ நம்ம அமைதியை கெடுத்திட்டே!” என்று அம்ஜத் கோபமாக சொல்ல, ஆர்யன் அவனை நெருங்கி கைகளை பிடித்தான்.

“சரி அண்ணா! நான்…”

அவனை ஒரு உதறு உதறி எழுந்துக்கொண்ட அம்ஜத், “என்ன நீ? எனக்கு தெரியும், ஆர்யன்! நீ ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கு தெரியும். அப்பா எப்பவும் மன்னிப்பு கேட்பார். அம்மா அதை மதிக்கவே மாட்டாங்க. அதான் நீ இப்படி இருக்கே! ஆர்யன் அர்ஸ்லான் மன்னிப்பு கேட்க மாட்டான். ஆனா நம்ம அமைதியை கெடுத்துடுவான்” என குற்றஞ்சாட்ட, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆர்யன் விலகி நடந்தான்.

அவனை நோக்கி அம்ஜத் “ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கோ, ஆர்யன்! நீ நம்ம அப்பா இல்ல! ருஹானா நம்ம அம்மா இல்ல! இதை புரிஞ்சிக்கோ!” என்று கத்த, ஆர்யன் அதிர்ந்து நின்றான்.

——–

ருஹானா தந்த காபியை வாங்கிக்கொண்ட வாகிதா “ருஹானா! முன்கூட்டியே சொல்லாம வந்ததுக்கு என்னை மன்னிச்சிடு!” என்று சொல்ல, “என்ன வாகிதா! நீ என் தங்கை தானே? எப்போ வேணும்னாலும் இப்படி வரலாம். அதோட சந்தோஷ செய்தியோட வந்திருக்கே! வாசிம் உன்னை திருமணம் செய்ய கேட்கப் போறார். எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?” என்று ருஹானா வாகிதாவின் கையை பிடித்தாள்.

“ஆனா எனக்கு பயமா இருக்கு, ருஹானா! அதான் உன்னை பார்க்க வந்தேன்.”

“பயப்படாதே வாகிதா! கமிஷனர் வாசிம் நல்லவர்ன்னு எல்லாருக்கும் தெரியுமே! நீ உனக்குள்ள இந்த கேள்விகளை கேட்டுக்கோ! அவரோட இருக்கும்போது உனக்கு சந்தோசமா இருக்கா? அவர் கவலைப்படும்போது உனக்கும் கவலையா இருக்கா?” என ருஹானா கேட்க, வாகிதா ஆமென தலையசைத்தாள்.

ருஹானா கேள்விகளை கேட்கும்போதே வந்துவிட்ட ஆர்யன் ஜன்னலுக்கு வெளிப்புறமாக அவர்கள் பேசுவதை கேட்டப்படி நின்றான்.

“உன்கிட்டே பொய் சொல்லியிருக்காரா? உன்கிட்டே இருந்து எதையாவது மறைச்சி இருக்காரா? அவர் தெரிஞ்சே உன்னை புண்படுத்தி இருக்காரா?”

ஆர்யன் முகம் இருள, வாகிதா இல்லையென தலையாட்டினாள் வேகமாக.

“அது எப்படி முடியும், ருஹானா? உலகத்திலயே அதிகமா நேசிக்கறவங்களை எப்படி துன்பப்படுத்தி பார்க்க முடியும்? என் கண்ணுல கண்ணீரை பார்த்தா அவர் துடிச்சிடுவார்.”

‘அப்படினா நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி வாகிதா. உன்னோட மதிப்பு அவருக்கு தெரிஞ்சிருக்கு. எனக்கு தெரிஞ்சு காதல் இதுதான். உன் முகத்துல அது எனக்கு தெரியுது. கமிஷனர் உன்னோட நல்ல மனதை புரிஞ்சி வைச்சிருக்கார். அவரோட மனசோட அதை சேர்க்க விரும்பறார்.”

“நன்றி ருஹானா! என் குழப்பமெல்லாம் தீர்ந்தது.”

———-

சமையலறைக்கு வந்த ருஹானா அங்கே ஆர்யன் அமர்ந்திருப்பதை பார்த்தவள் வெளியே செல்லப் போனாள். பின் மனதை மாற்றிக்கொண்டு காய்கறிகளை எடுத்து கழுவ ஆரம்பித்தாள்.

“நானும் மேல இருந்து தான் விழுந்தேன். நானும் சுக்குநூறா தான் உடைந்தேன்!” அமர்ந்த இடத்திலிருந்தே அவன் பேச, அவள் காய்கறிகளை நறுக்கிக்கொண்டே கேட்டாள்.

‘நான் தான் அவரை காதலித்தேன். என்னோட ஆகாயகோட்டையிலிருந்து கீழே விழுந்தேன். இவருக்கு என்ன?’ என மனதில் கேட்டுக் கொண்டவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை.

“என்னாலயும் தான் முதல்ல நம்ப முடியல. வேற யாரை பற்றியதா இருந்தாலும் கடந்து போயிருப்பேன். நீ ங்கறதால என்னால முடியல. எனக்கு ஆத்திரம் வந்தது. என்னோட திசைக்காட்டியை பெருங்கடல்ல தொலைச்சிட்டேன்” என்றபடியே எழுந்து அவள் அருகில் வந்தான்.

“எனக்கு தெரிந்த ஒரே உணர்ச்சி கோபம். அதால என்னையும் நான் காயப்படுத்திக்கிட்டேன்” என்று அவன் சொல்லவும், கோபமான ருஹானா “ஏன் உங்களுக்கு என்ன காயம்?” என்று கேட்டாள்.

‘ஏன்னா என்னோட இதயத்துல தானே நீ இருக்கே. உன்னை காயப்படுத்தினா என் இதயமும் வலிக்கும் தானே?’ அதை வெளியே சொல்லமுடியாதவன் “நான் ரொம்ப நம்பின நீ என்னை முட்டாளாக்கிட்டேன்னு நினைச்சிட்டேன். நான் எதிர்பார்க்காத நேரத்துல என் முகுதுல  நீ குத்திட்டேன்னு கஷ்டமாகிடுச்சி. புரிஞ்சதா உனக்கு?” என்றான்.

“நல்லா புரியுது. நான் கஷ்டப்படுறது தான் உங்களை தாக்கிடுச்சோன்னு ஒரு வினாடி நான் தப்பா நினைச்சிட்டேன். சரி தான். நீங்களும் கஷ்டப்பட்டு இருக்கீங்க! ஆனா இப்போ நீங்க நிம்மதியா இருக்கலாம். நான் உங்களை முட்டாளாக்கலன்னு தெரிஞ்சிடுச்சில? உங்க முதுகுல குத்தினது நான் இல்லன்னு தெரிஞ்சிடுச்சில? சந்தோசமா இருங்க. இனிமேல் அவங்க அவங்க காயத்துக்கு அவங்களே மருந்து போட்டுக்கலாம்” என்று ருஹானா அவனை தாண்டி நடக்கப்போக, அவள் கைகளை பற்றி ஆர்யன் தடுத்தான்.

“என்னை புரிந்துகொள்! நானும் உன்னைப் போல தான்…”

“என்ன? என்னைப் போல என்ன?…”

இருவரும் மனதை திறந்திருப்பார்களோ என்னவோ ரஷீத் வந்து பின்னால் நின்று “தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்க, ஆர்யன்! மிஷால் கிடைச்சிட்டான். ஆபிஸ்ல வச்சிருக்கோம். அவனை என்ன செய்றது?” என்றான்.

முகத்தை துடைத்துக்கொண்ட ருஹானா “நான் அவன்கிட்டே பேசணும். நான் அவனுக்கு தண்டனை கொடுக்கணும்” என்று சொல்ல, “இல்ல, நீ..” என ஆர்யன் பேச வர “இந்த ஒன்னை மட்டுமாவது எனக்கு செய்ங்க” என்று அவள் கேட்க, அவன் அமைதியாக வழிவிட்டான்.

வேகமாக அவள் வெளியே போக, படிக்கட்டில் இறங்கிவந்த கரீமா “ருஹானா!” என கூப்பிட்டாள். ருஹானா காதில் வாங்காமல் வெளியே செல்ல, ஆர்யனும் விரைந்து அவனை பின்தொடர்ந்தான்.

“ஆர்யன் டியர்! என்ன நடந்தது?” என கரீமா குரல் கொடுக்க, யாரும் அவளுக்கு நின்று பதில் சொல்லவில்லை. அவர்களுக்கு பின் சென்ற ரஷீத்தை பிடித்து கரீமா வினவ, “மிஷால் மாட்டிகிட்டான். அவனை விசாரிக்கப் போறாங்க” என்று அவன் சொல்லிவிட்டான்.

கதிகலங்கிய கரீமா “அவன் என்ன சொன்னான்?” என கேட்க, “இன்னும் வாய் திறக்கல. ருஹானாட்ட எல்லாம் சொல்லிடுவான்” என்று ரஷீத் கூற, அவளுக்கு வயிறு பிசைந்தது.

“நான் தொலைந்தேன். மிஷால் எல்லாத்தையும் சொல்லப் போறான்” என திகிலடைந்து அவள் நிற்க, அம்ஜத் “என்ன கரீமா? உன் அமைதி கெட்டுப்போச்சா? நான் மருந்து எடுத்துட்டு வரவா?” என கனிவாக கேட்க, அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.

“எனக்கு இது முடிவுக்கு வரணும். என்னால முடியல. பழையபடி எல்லாம் மாறணும்.”

“அழாதே கரீமா! எல்லாம் மாறிடும். எல்லாருக்கும் அமைதி கிடைக்கும். நம்மோட பெரிய தோட்டத்தை யாரும் அழிக்க முடியாது” என்று அம்ஜத் அவள் முதுகை தட்டிக் கொடுத்தான்.

(தொடரும்)

Advertisement